இவ்வளவுதானா கிறிஸ்துமஸ்!

சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2018)

சர்வ சிருஷ்டிகர், சர்வ வியாபகர், சர்வ ஞானமுள்ளவர், சர்வத்தையும் அறிந்தவர், சர்வத்தையும் ஆளுகை செய்கிறவர், ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்றெல்லாம் நமது தேவனைப் புகழுகிறோம். ஆம், அவரைப் புகழ வார்த்தைகள் ஏது!

இந்த தேவன், தமது கரத்தின் படைப்பாகிய மனிதன் பாவத்தில் விழுந்து தம்மைவிட்டுப் பிரிந்துவிட்டதால், கோபங்கொண்டு அவனை அழித்துவிடாமல், மீண்டும் அவனைத் தமது அண்டை சேர்த்துக்கொள்வதற்காக, தம்மோடு அவன் நித்தியமாய் வாழவேண்டும் என்றளவுக்கு அவனை நேசித்ததால், மனிதனுடைய பாவத்தின் பலனாகிய கோரமரணத்தின் பிடியிலிருந்து அவனை மீட்டெடுத்து புதுவாழ்வு அருளுவதற்காக பரிசுத்த இரத்தம் விலைக் கிரயமாகச் சிந்த வேண்டியிருந்ததாலும், தாமே மனிதனாக – இயேசுவாக பூமியில் வந்து பிறந்தார். டிசம்பர் 25ம் தேதி இயேசுவானவர் பிறந்த தினம் அல்ல என்றாலும், அவருடைய பிறப்பை நினைவுகூருமுகமாக வருடாவருடம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால் உண்மையிலேயே, “என்னை மீட்பதற்காகவே தேவன் மனிதனானார்” என்ற உணர்வுடன்தானா இந்தக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுகிறோம் என்பதற்கு உண்மை உள்ளத்துடன் நமக்கு நாமே பதிலுரைப்போமாக.

மறுபடியும் ஒரு கிறிஸ்துமஸ் காலம், மறுபடியும் இன்னுமொரு புதிய ஆண்டுக்குள் செல்லுகின்ற ஆரவாரம். இவை யாவுமே நமக்கு ஒரு சீசனாக, ஒரு காலமாக மாறிவிட்டது என்பதை மறுக்க முடியாது. காலம் வெகு வேகமாக ஓடி மறைந்துகொண்டிருக்கிறது. ஆண்டவருடைய வருகை வெகு சீக்கிரம் என்பதற்கான அறிகுறிகள், நம்மிலும், நமது வீட்டிலும், திருச்சபையிலும், நாட்டிலும், ஏன் உலகம் முழுவதிலுமே வெளிப்படையாகவே தென்பட ஆரம்பித்து வெகு காலமாகிவிட்டது என்பதையும் நாம் உணராமல் இல்லை. பூமி அதிர்வுகளும், நிலச் சரிவுகளும், வெள்ள அழிவுகளும், பெருங்காற்று, பெருமழை, உஷ்ணம், வறட்சி, பற்றியெரியும் தீ என்றும், மங்கிப் போகின்ற சுபாவ அன்பு, சண்டைகள், சச்சரவுகள், பிரிவினைகள், பித்தலாட்டங்கள் என்று ஏதோதோ பெருகியிருக்கிறது என்பதையும் நாம் அறியாமல் இல்லை. இயேசு தாமே தமது வாயினால் சொல்லிப்போன கடைசிக்கால அறிகுறிகள் யாவும் நிறைவேறிக்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். என்றாலும், நமது கிறிஸ்தவ வாழ்வில், கிறிஸ்துவுடனான வாழ்வில், கிறிஸ்துவுக்குள்ளான நமது அழைப்பில், அழைப்புப்பெற்ற உன்னத நோக்கத்தில் நாம் எங்கே நிற்கிறோம் என்பதைச் சிந்திக்கவே பயமாக இருக்கிறது!

கடந்த நாட்களில் ஒரு வானொலி நிகழ்ச்சிக்காக வெவ்வேறு பருவத்தினருடன் தொலை பேசிமூலம் தொடர்புகொண்டு, “நான் ஒரு கேள்வி கேட்கிறேன், யோசிக்காமல், திட்டமிடாமல், பயப்படாமல், உங்கள் மனதிலுள்ள பதிலைப் பட்டென்று சொல்லுங்கள். உங்கள் பெயரை நான் வெளிவிடமாட்டேன்” என்று உறுதிமொழி கொடுத்துக் கேள்வியைக் கேட்டேன். கேள்வி இதுதான். “இது கிறிஸ்துமஸ் காலம். உலகம் முழுவதும் ஏதொவொரு விதத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காலம். கிறிஸ்துமஸ், அல்லது கிறிஸ்துமஸ் நாட்கள் உங்களுக்கு என்ன உணர்வை அல்லது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாட்கள் உங்கள் வாழ்வில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியதுண்டா?” இதுதான் கேள்வி. இதோ, அவர்கள் தந்த பதிலை உங்களுக்கு அப்படியே தருகிறேன். இவை சில உதாரணங்கள் மட்டுமே. அதற்காக எல்லாரும் அப்படியல்ல. என்றாலும் இதுவே இன்று அநேகருடைய மனதின் பிரதிபலிப்புகள் என்று சொன்னாலும் மிகையாகாது.

இது 9 வயதுள்ள ஒரு பெண்பிள்ளை, கொஞ்சும் தமிழில் இப்படிச் சொன்னாள்:

“டிசம்பர் 25ம் தேதி இயேசப்பா பிறந்த நாள்தானே. அப்ப. கிறிஸ்மஸ் நல்ல சந்தோஷம். எங்க வீட்டிலே நவம்பர் கடைசியிலேயே கிறிஸ்மஸ் மரம் வைச்சிடுவம். பிறகு புதுச் சட்டைகள், சாமான்கள், கடைக்குப்போய்… நல்ல ஐாலியாயிருக்கும். பிறகு சர்ச்சிலே நிகழ்ச்சிகள் இருக்கும். பரிசுகள் கிடைக்கும். பிறகு… ஆ, அப்பான்ரை ஊருக்கு அப்பம்மாவைப் பார்க்கப் போவம். அங்கை போயிட்டு வர, புதுவருசம் வந்திடும். நல்ல சந்தோசம். பிறகு பாடசாலை நினைவு வரும். எல்லா சந்தோஷமும் பறந்திடும்” என்று சொன்னபோது அவளுடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.

இது 13வயதுள்ள ஒரு பெண்பிள்ளை:

“எங்களுக்காக இயேசப்பா வந்து பிறந்ததை நாங்கள் நினைவுகூர்ந்து கொண்டாடுவம். சர்ச்சிலே எங்கடை டீச்சர் வேறு இடங்களுக்குக் கூட்டிப்போவா. போனமுறை சாமான்கள் பரிசுகள் எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு பிள்ளைகள் இல்லத்திற்குப் போனம். இயேசப்பா எங்களுக்காகத் தம்மைத் தந்தார் என்று சொல்லி, அங்கை இருந்த பிள்ளையளுக்கு பரிசுகள் கொடுத்தம்.” இவள் சற்றுத் தெளிவாகப் பேசினாள்.

இது ஒரு வாலிபப் பெண். இவளது வயது 21.

“கிறிஸ்துமஸ் என்றால், இயேசு எங்களுக்காக உலகில் வந்து பிறந்தார் என்ற எண்ணம்தான் வரும். அதை நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். “அப்போ, அதை நினைத்துத்தான் கொண்டாட்டங்களில் ஈடுபடுவாயா” என்று நான் கேட்க, “உண்மையைச் சொன்னால், அப்பிடியில்லை, எங்களுக்கு அது ஒரு கொண்டாட்டம் (இதை ஆங்கிலத்தில் Celebration என்றாள் அழகாக) அவ்வளவுதான்” என்று சொல்லிச் சங்கடப்பட்டுச் சிரித்தாள். “கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த உன்னுடைய வாழ்வில், விசேஷமாக இந்த கிறிஸ்துமஸ் காலங்கள் ஏதாவது ஆவிக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தயிருக்கிறதா” என்று நானும் விடாமல் கேட்க, அவள் அவசர அவசரமாக, “இல்லை. அப்பிடிச் சொல்வதற்கு எதுவுமே இல்லை” என்று சொல்லி நிறுத்திவிட்டாள்.

இப்போது ஒரு 23வயதுள்ள வாலிபன், இவனுடன் பேசியதை அப்படியே தருகிறேன்:

கேள்வி: மகன், டிசம்பர் என்றதும் உன் மனதில் என்ன தோன்றும்? பயப்படாமல் சொல்லு.

பதில்: டிசம்பர் இல்லை நவம்பர் வந்தாலே கிறிஸ்துமஸ்தான். ஆன்ட்டி என் பெயரைச் சொல்லிடாதேங்கோ. உண்மையைச் சொல்றேன். உடனே ஒரு holiday mood, party mood தான் ஆன்ட்டி வரும். மற்றது, friends, gifts இதெல்லாம் நினைவுக்கு வரும். மற்றது, கரோல். இரவிரவாக கரோல் பாடிக்கொண்டு வீடு வீடாகச் செல்லுவது எல்லாமே நல்ல jolly தான்.

கேள்வி: அப்போ இயேசு பிறப்பின் பாடல்களை நீங்கள் யாரும் உணர்ந்து பாடுவதில்லையா?

பதில்: எங்கே ஆன்ட்டி அந்தநேரம் உணர்வு வர்றது? எல்லாம் ஒரு சந்தோசம்தான். நாங்கள் எல்லாரும் சேர்ந்து, இரவு நேரம், ஒரு வாகனத்தில், பாட்டுக்கள் பாடிக்கொண்டு …போறது, சந்தோசம்தான்.

கேள்வி: அப்போ இயேசு பிறந்ததைக் குறித்து வேறை ஒன்றும் மனதில் வராதா?

பதில்: வரும். வரும் இயேசு ஏழையாகப் பிறந்ததாலை ஏழைகளுக்கு உதவி செய்யணும் என்ற எண்ணமும் வரும்.

கேள்வி: அதைவிட இயேசு ஏன் பிறந்தார் என்று இயேசுவை அறியாதவங்களுக்கு அறிவிக்கணும் என்கிற எண்ணம்?

பதில்: அது எப்பவும் செய்யலாம்தானே ஆன்ட்டி. ஆனா……

கேள்வி: சரி, இதுவரை இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாட்கள் உன் வாழ்வில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?

பதில்: உண்மையைச் சொன்னால் அப்பிடி எதுவும் இல்லை ஆன்ட்டி.

உரையாடலை முடிக்கும்போது, தன் பெயரைத் தவறியும் வெளியிடவேண்டாம் என்றான் இந்த வாலிபன். அவன் மனந்திறந்து உண்மை பேசினதால் நான் அவனைப் பாராட்டினேன்.

சரி, இனி பெரிய வயதினர் என்ன சொன்னார் கள் என்று சொல்லுகிறேன்:

இந்த சகோதரிக்கு வயது 36. டிசம்பர் வந்தாலே இவருக்கு பல சோலிகளாம். கரோல் பயிற்சிகள், ஞாயிறு பாடசாலை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் என்று பல. அதற்கும் மேலாக, இவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் shopping, கிறிஸ்மஸ் பார்ட்டி, gifts என்று இன்னும் பல. தங்கள் விசேஷங்களுக்கு உணவுப்பண்டங்கள் கொடுத்த அயலாருக்கு இவர் கிறிஸ்துமஸ்க்கு கேக் உட்பட உணவுப் பண்டங்கள் செய்து கொடுக்கவேண்டுமாம். இதை விட கணவருக்கு போனஸ் கிடைக்காவிட்டால் வங்கியில் கடன் போட்டு, முக்கியமாக கணவரின் பெற்றோருக்கு உடுப்புகள் வாங்குவாராம். அந்த நாட்கள் எப்படிப் பறக்கும், கையிலிருக்கின்ற பணம் எப்படிக் கரையும் என்றே தெரியாது என்றார் இவர். “அப்போ உங்கள் ஆன்மீக வாழ்வு குறித்து” என்று இழுத்தேன். அது எப்பவும் பார்த்துக்கொள்ளலாமே. இந்த டிசம்பரில் அது ஒன்றுக்கும் நேரம் கிடைப்பதில்லை என்றார் கொஞ்சம் துக்கத்தோடு.

இது இன்னுமொரு குடும்பத் தலைவி. இவர் எப்போ கிறிஸ்துமஸ் வரும், மலிவு விற்பனை வரும் என்று பார்த்திருப்பாராம். தன் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் உடுப்புகள் வாங்குவதற்கும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் இந்த நாட்களைத்தான் இவர் எதிர்பார்த்திருப்பாராம். “மற்றப் பிள்ளைகள் புதுச்சட்டை போட்டு ஆலயத்திற்கு வரும்போது எங்கடை பிள்ளைகள் பழசைப் போட்டுப்போவது சரியில்லைத்தானே” என்றார் இவர் சற்று சங்கடத்துடன். உறவினர் வீடுகளுக்குச் செல்லுவதும் இந்த நாட்களில்தானாம். Christmas visit என்று ஆங்கிலத்தில் இதைப் பெருமையாகக் குறிப்பிட்டுச் சொன்னார் இவர்.

இவர் கதை இப்படி என்றால் 72 வயது நிறைந்த மிகவும் துடியாட்டமான ஒரு தாயார் என்ன சொன்னார் தெரியுமா? “என் சின்ன வயசிலேயே என் இயேசு எனக்குள்ளே பிறந்திட்டார். எனக்கு எல்லா நாட்களும் கிறிஸ்துமஸ்தான். ஆனாலும், கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டம்தான். அயலாருக்கு உணவு செய்து கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துவதிலேயே நான் பிஸியாகிடுவேன்” என்றார் இவர். “அர்த்தமில்லாமல் உலகமே கொண்டாடுதே. இதைக் குறித்து…?” என்று கேட்க, “கொண்டாடட்டுமே. தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய இயேசுவைத்தானே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் மரம் வைத்தாலென்ன, கிறிஸ்துமஸ் தாத்தா ஆடினாலென்ன, எப்படியோ எல்லாரும் சந்தோஷமாயிருக்கட்டும்” என்றார்.

“அப்போ இயேசுவைப் பற்றி அவர்களுக்குச் சொல்லுவது?” என்று கேட்க, “அது எப்பவும் சொல்லலாம், இப்பவும் சொல்லலாம். அதிலே என்ன இருக்கிறது” என்றார்.

இயேசுவின் பிறப்பை நினைவுகூருகின்ற இந்த நாட்கள் உங்களில் விசேஷித்த தாக்கம் ஏதாவது ஏற்படுவதுண்டா என்று கேட்க, “அதென்ன, தாக்கம் அப்போதுதான் வர வேண்டுமா? எல்லாரும் சந்தோஷமாய் இருக்கிறார்கள், அதுபோதும்” என்றார் அவர். இந்த நாட்களிலும் ஒரு தொகை மக்கள் பயங்கரமான சூழ்நிலைகளிலும், மாறாத துயரத்துடனும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை இவரால் புரிந்துகொள்ள முடியவில்லையோ என்னவோ.

இறுதியில், வியாதிப்படுக்கையில் இருக்கிற ஒரு தாயார், இவர் வயது சுமார் 85 இருக்கும். என் கேள்விக்கு இவர் தந்த பதில் சற்று விசித்திரமாயிருந்தது.

“என் ஆண்டவரைச் சந்திக்கின்ற நினைவைவிட என் நினைவில் வேறு எதுவுமே இல்லை. எனக்கு இயேசு இருக்கிறார். அது போலவே என்னைப்போல இருக்கிற எல்லாருக்கும் இயேசு வேண்டும். நான் இதுவரை என் இயேசுவை மற்றவருக்குச் சொல்லவில்லை என்ற குற்ற உணர்வுடன் இருக்கிறேன். நீங்களாவது என் இயேசுவை அறியாதவர்களிடம் போய் அவரை அறிவியுங்கள்” என்று சொன்னபோது இவருடைய கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிர்த்து நின்றது.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் அருமை யான வாசகர்களே, உங்கள் மன எண்ணங்கள் என்ன? உங்கள் பதில் என்ன?

உங்களுக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்த டிசம்பர் 25ம் தேதிதான் இயேசு உலகில் வந்து பிறந்த நாள் அல்ல என்பது அந்நாட்களில் நமக்குத் தெரியாது; ஆனால், இன்று எல்லோரும் அதை அறிந்திருக்கிறோம். ஆனாலும் பாரம்பரியமான கொண்டாட்டங்களையும், முக்கியமாக தொடர்ந்து புதிய வருடம் பிறக்க இருப்பதாலும் இது ஒரு கொண்டாட்ட சீசனாகிவிட்டதுதான் உண்மை!

இயேசு எப்போ பிறந்தார் என்பதை மனுக்குலத்துக்கே மறைத்துப்போட்ட தேவஞானத்துடன் யாரால் எதிர்நிற்க முடியும்? மேலும், ஆரம்ப கால திருச்சபையில் இப்படியான பண்டிகைகள் கொண்டாடப்பட்டதாக வேதாகமத்தில் எங்கும் எழுதப்படவில்லை. ஏன்? அவர்கள் பண்டிகை கொண்டாடுகின்ற நிலைமையில் இருக்கவில்லை. இயேசுவோடிருந்த சீஷர்களுக்கும், முதலாம் நூற்றாண்டுக் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் நேரிட்ட துன்பங்களும் உபத்திரவங்களும் ஏராளம், அவற்றை வர்ணிக்க முடியாது. இதனால் அவர் கள் எருசலேமைவிட்டுச் சிதறடிக்கப்பட்டார்கள். என்றாலும் அவர்கள் தேடப்பட்டு மிகவும் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். என்றாலும் அவர்கள் தாங்கள் சிதறப்போன இடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் பெரிய கட்டளையாகிய சுவிசேஷ அறிவிப்பைப் பயமின்றிச் செய்தார்கள் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அதற்கும் முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, இயேசுவின் பெரிய கட்டளையை அவர்கள் தங்கள் பெரிய பொறுப்பாக எண்ணினார்கள். அத்துடன் சுவிசேஷம் அவர்களுடைய ஜீவனாயிருந்தது, அது அவர்களுக்குள் ஊறிப்போயிருந்தது. அடுத்தது, அந்த முதலாம் நூற்றாண்டிலேயே இயேசுவின் இரண்டாம் வருகை நிகழக்கூடும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தார்கள். ஆக, மொத்தத்தில் ஆரம்பகால கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு இயேசுவின் சுவிசேஷத்தைத் தவிர வேறு சந்தோஷமோ சிந்தனையோ கொண்டாட்டத்துக்கு நேரமோ இருக்கவில்லை.

ஆனால் இன்று நமது நிலைமை முற்றிலும் மாற்றமடைந்துவிட்டது. ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்தாலும், நாம் கிறிஸ்தவர்கள் என்று வெளிப்படையாக ஜீவிப்பதற்கு இன்று நமக்குச் சுதந்திரம் உண்டு. சுதந்திரமும் சொகுசுகளும் சேர, பலவித சோலிகள் நமது சிந்தனைகளைத் தம் பக்கம் இழுக்க, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்றுகூட சிந்திக்க நம்மால் முடிகிறதில்லை. ஆண்டவர் பரத்துக்கு ஏறியபோது கொடுத்த பெரிய கட்டளைக்கு இன்று நாம் என்ன முக்கியத்துவத்தை கொடுக்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப்பார்ப்பது நல்லது.

பண்டிகைகள் தேவனுக்குப் பிரியம் என்பதை வேதாகமத்தில் காண்கிறோம். “என் ஜனங்களைப் போகவிடு. அவர்கள் எனக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்று அன்று பார்வோனிடம் மோசேயை அனுப்பிய தேவன் தான் நமது தேவனும். ஆனால் அவரே பின்னால், உங்கள் பண்டிகைகளையும் மாதப்பிறப்புகளையும் வெறுக்கிறேன் என்றும் சொன்னார். இயேசுவின் காலத்திலும் பண்டிகைகள் முக்கியமாக பஸ்கா பண்டிகை தவறாமல் கொண்டாடப்பட்டது. இயேசுகூட தமது பன்னிரு வயதிலேயே பண்டிகைக்காக எருசலேம் போனார் என்று பார்க்கிறோம்.

கி.பி நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரசாண்ட மன்னனின் காலத்தில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தின் பின்னர், திருச்சபைச் சரித்திரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பண்டிகைகள் ஜொலிக்க ஆரம்பித்தன. காலம் செல்லச்செல்ல பண்டிகைகளின் அர்த்தங்களே மாறத்தொடங்கி, பின்னர் இது ஒருவகை சீசனாக மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சீசன் என்று சொன்னால் மனிதருடைய மனநிலையும் அந்த சீசனுக்கு ஏற்றபடி மாறி, பின்னர் அடங்கி விடுகிறது என்பதுதான் உண்மை.

இன்று கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்தவர்கள் மாத்திரமா அதில் ஈடுபடுகிறார்கள்? இல்லை. முழு உலகமும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது. ஆனால், உணர்வுடனா கொண்டாடுகிறார்கள்? இன்று உலகின் பல கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ்-ம் ஒன்றாகிவிட்டது; அது லாபம் ஈட்டும் சீசனாகிவிட்டது. கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாவும் இயேசுவின் பிறப்பின் நினைவுகூரலைக் கைப்பற்றிவிட்டன. பலவித நிகழ்வுகளும் சந்தோஷங்களும் திருச்சபையின் போக்கையே சிறைப்பிடித்துவிட்டன. இவ்விதமாக கிறிஸ்துவின் பிறப்பு மலிவானதானதற்கு யார் காரணம்? அல்லது என்ன காரணம்?

சற்று சிந்திக்கும்படி உங்களை அழைக்கிறோம். கிறிஸ்துமஸ் என்பது வெறும் கொண்டாட்ட சீசனா? மலிவு விற்பனைக்காலமா? மறுபக்கத்தில் நாம் யாரை மகிழ்விக்கிறோம்? பரிசுகள் யாருக்கு? இல்லாதவர்களுக்கா? அல்லது எல்லாம் நிறைவாயிருக்கிற நமக்கு பிரியமானவர்களுக்கா? பிறப்பைக் கொண்டாடுவோம்; ஆனால், அதன் கருப்பொருளை மையக்கருவைத் தொலைத்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாக இருப்போம். ஆண்டவருடைய வருகை மிக சமீபமாக இருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் சிந்திக்க வேண்டியவற்றை மறந்து வீணானவற்றில் திளைத்திருப்பது எப்படி? இதுதானா கிறிஸ்தவ வாழ்வு? இவ்வளவுதானா கிறிஸ்துமஸ்?

நமக்காவே தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலாகி, மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்திய ஆண்டவரை நாம் பிரதிபலிப்பது எப்படி என்பதை உணர்ந்து இந்நாட்களில் செயற்படுவோமாக. ஆமென்.

சத்தியவசனம்