Dr.சாம் கமலேசன்
(நவம்பர்-டிசம்பர் 2018)

வியப்பளிக்கும் அழகிய சென்னை நகரத்தின் வீதிகளுக்கு நான் மாணவனாக சென்று இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்த நாட்களிலிருந்து, இந்நாள்வரை பாரதத்தில் உள்ள எந்த ஒருவரின் மனதையும் முக்கியமாக ஆட்கொண்டிருந்த சிந்தனை, “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்பதாகும்.

வேதாகமத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எழுதப்பட்டிருக்கும் விவரங்கள், விடுதலையளிக்கும் தேவனுடைய கிரியைகளை ஒன்றன்பின் ஒன்றாய் வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. முற்பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, நியாயாதிபதிகள், தாவீது, சாலொமோன் நாட்களிலும் பின் பாபிலோனில் சிறையிருக்கும்போது, கண்ணீரிலும் வேதனையிலும் ஊடாக தங்களை விடுவிக்கப்போகும் மீட்பரை, ஒரு மேசியாவை, எதிர்பார்த்த கனவு கண்ட நாட்கள்வரை, வேதாகமத்தில் எழுதியிருப்பது எல்லாம் மீட்பளிக்கப்போகும் ஒருவரைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுவதாய் இருக்கிறது. அதாவது, வேதாகமம் விடுதலையளிப்பதைப்பற்றிய செய்தியையே அறிவிக்கிறது. அதன்பின்னர் நாம் மேசியா என்று அழைப்பவரைப்பற்றிய விவரங்கள் கொண்ட சுவிசேஷங்களுடன் ஆரம்பித்து, வெளிப்படுத்தின விசேஷத்தின் மகிமையான தரிசனங்களுடன் முடிவடையும்வரை தீமையினின்று இரட்சிப்பைப்பற்றிய அறிவிப்புகளையே காண்கிறோம்.

மனிதனை தீமையினின்று இரட்சிப்பதைப் பற்றி வேதாகம அறிவிப்புகள் நான்கு கட்டங்களில் ஒன்றன்பின் ஒன்றாய் வெளிப்படுத்துகின்றன என்று நாம் அறியக்கூடும்.

முதல் கட்டத்தில், மக்கள் தங்கள் குற்றங்களை மற்றவர் மீது சுமத்திவிட்டு தாங்கள் விடுதலை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணினார்கள். முற்காலத்திய பாவ நிவாரண பலி ஆசரிப்பின் பொழுது, ஒரு வெள்ளாட்டுக் கடாவின் கொம்புகளை ஒரு துணியால் சுற்றினார்கள். (ஆரோன் தன் இரு கைகளையும் ஆட்டின் தலைமேல் வைத்து, அறிக்கை செய்ததால்) அந்தத் துணியில் முழு இஸ்ரவேல் ஜனத்தின் சகல பாவங்களும் அக்கிரமங்களும் இருந்ததாக எண்ணப்பட்டது. பின் அந்த ஆட்டை ஜனங்கள் குடியிருப்பதற்குத் தாண்டி வனாந்தரத்திலே போகவிட்டார்கள். மக்களுடைய பிரச்சனைகளையும், பாவங்களையும் இந்த ஆடு கொண்டு போய்விட்டது என்று பாவித்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆட்டைப் ‘போக்காடு’ என்று அழைத்தார்கள். ‘போக்காடு’வின் அடிப்படையான எண்ணம் மூடநம்பிக்கை கொண்டதும் பழங்காலத்தியதும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நாளையைப்போல நவீனமானதாகும். உண்மை என்னவென்றால், தினந்தோறும் நம்முடைய பாவத்தினின்று நம்மை விடுவித்துக்கொள்வதற்கு, சிறந்த வழியென்னவென்றால், நாம் செய்த குற்றத்தை வேறொருவரின் மீது போடுவதே.

நம் வீடுகளிலே நம்முடைய நாள் எவ்விதம் ஆரம்பமாகிறது? சாதாரணமாய் காலையில் ஜெபத்துடன் நாளை ஆரம்பிப்பதில்லை. இரவில் ஜெபத்துடனும் நாள் முடிவடைவதில்லை. ஆனால் இவ்விதம்தான் (ஜெபத்துடன்) நம் பெற்றோரும் இப்போதைய பாட்டியம்மா, தாத்தாமார் ஒவ்வொரு நாளையும் துவங்கவும், முடிக்கவும் செய்தார்கள். நமக்கோ நாள் அகில உலக செய்திகளைக் கேட்பதுடன் ஆரம்பமாகிறது. அதே அகில உலக செய்திகளைக் கேட்பதுடன் முடிகிறது. நாம் மற்றோருடைய பாவங்களையும், சீர்கேடுகளையும் கவனமாய்ப் பார்க்கிறோம். நம் பெற்றோர் சுய சுத்திகரிப்பிற்கும் பாவ பரிகரிப்பிற்கும் உபயோகப்படுத்தின அரிய நேரங்களைத்தான் நாம் சமூக கண்டனத்திற்கு செலவழிக்கிறோம்.

இயேசு பாவத்திற்கு எதிராய் செயல்பட்டார். ஆனால் பாவம் செய்யும் பாவிகளை நேசித்தார். நாமோ பாவியைப் போக்காடாகப் பண்ணக் கற்றுக்கொண்டு, பாவத்தை வைத்துக் கொள்கிறோம். இது நம்மை தீமையினின்று இரட்சிக்கவில்லை.

அடுத்ததாக, வேதாகமத்தில் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதைப் பற்றி அறியத்தரும் இரண்டாம் கட்டத்திற்குச் செல்லும்போது, மனிதன் தன்னுடைய சொந்த பிரயாசங்களினால் இரட்சித்துக்கொள்ள முயற்சி செய்வதைக் காண்கிறோம். அவன் சொல்லுவான்: இனிமேல் நாங்கள் எங்களுடைய வம்ச பாரம்பரிய குணங்களுக்காக எங்கள் பிதாக்களைக் குறை கூறமாட்டோம். எங்கள் சுற்றுப்புறங்களையும் குறை கூறமாட்டோம். இதற்கான பொறுப்பை நாங்களே ஏற்றுக்கொள்வோம். எசேக்.18:2இல் “பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழி” கூறப்பட்டிருக்கிறது. இது பிதாக்களின் பாவங்களுக்காக பிள்ளைகள் பாடனுபவிக்கிறார்கள் என்பதை மூதுரையாகச் சொல்லுவதாகும்.

நம்முடைய காலத்திலும் இந்தக் கருத்தும், விதிப்பயன் என்ற தத்துவத்தில் ஓரளவு வெளிப்படுத்தப்படுகிறது. நம்மீது எந்த சக்திகளும் அதிகாரங்களும் கிரியை செய்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் “இதோ நான் இதற்கு பொறுப்புடையவன், நான் பாவம் செய்திருப்பேனேயாகில், அதன் விளைவுகளை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று தைரியமாக நின்று சொல்லவேண்டியதிருக்கும். இது மிகவும் தைரியமான பேச்சாகத் தோன்றினாலும், நிச்சயமாக ஒருவர் உண்மையான நிலையைக் காட்டும் மேலான வழியாய் இருந்தாலும், நாம் தீமை புரிபவர் என்று அறிக்கையிட்டு அதனால் தீமையினின்று நம்மையே விடுவித்துக்கொள்வோம் என்று நினைத்தால், அது நடக்கக்கூடாத காரியம்.

வெறும் நன்னடத்தைமட்டும் போதாது. நன்னடத்தை நல்லதுதான். ஆனால், எபிரெய தீர்க்கதரிசிகள், நீதிநெறிமுறைகளில் சிறப்புற்றிருந்தபோதிலும் இரட்சிக்கப்படுவதின் முழு இரகசியத்தை அறியாதிருந்தார்கள். ஆகையால் வேதாகமத்தை ஆவியானவரின் ஏவுதலால் எழுதியவர்கள் நீதிநெறிமுறைகளுக்கும் மேலான எண்ணத்தை உடையவர்களாய் இருந்தனர்.

மூன்றாவது கட்டத்தில் நாம் பார்ப்பது பாவமில்லாத ஒருவர் பாவமுள்ளவர்களுக்காக கிரியை புரிவது. ஏசாயா 53 ஆம் அதிகாரத்தில் பிறருடைய மீறுதல்களுக்காக காயப்பட்ட ஒருவரைப் பற்றி வாசிக்கிறோம். இது இயேசுகிறிஸ்துவின் பிறப்பு, ஜீவியம், போதனை, மரணம், உயிர்த்தெழுதலினால் நிறைவேறியது. அதே ஏசாயா தீர்க்கதரிசிதான், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” என்று கூறினார். இது வல்லமையானதும் இரட்சிப்பைப் பற்றி விளங்கிக்கொள்வதில் உயர்ந்த கட்டமாயிருந்தாலும், தீமையினின்று இரட்சிக்கப்படுவதைப்பற்றி வேதாகமத்தின் விவரணையில் இன்னுமொரு கட்டத்திற்குச் செல்லவேண்டும். ஆகவே நாலாம் கட்டத்திற்குச் செல்வோம்.

‘பசும் புல்வெளி’ என்னும் ஒரு நாடகத்தில் தேவன் காபிரியேல் தூதனிடம் புலம்புவதைப் பார்க்கிறோம். தேவன் சொல்லுகிறார்: இவர்களை இரட்சிப்பதற்கு இன்னும் நான் என்னதான் செய்யமுடியும்? ஏனெனில் நான் ஒரு வெள்ளத்தை அனுப்பியிருக்கிறேன். கொள்ளை நோய்களை அனுப்பியிருக்கிறேன், தீர்க்கதரிசிகளை அனுப்பியிருக்கிறேன். ஆனபோதிலும், இவர்கள் பாவம் செய்கிறார்கள். இவர்களை இரட்சிக்க நான் என்ன செய்யக்கூடும்? பிறகு ஒசியா தீர்க்கதரிசி மேடையில் பிரசங்கிக்கிறான். வேதாகமம் படித்தவர் ஒவ்வொருவருக்கும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி ஒசியாவைத் தெரிந்திருக்கும். அவனுடைய மனைவி அவனுக்கு உண்மையாயில்லாதிருந்தபோது, அவன் இந்த முடிவுக்கு வந்தான். தன்னிச்சையின்படி நடந்த தன் மனைவியை நல்வழிக்கு கொண்டுவர அவன் பாடனுபவித்தது போல, தேவனும் தவறான வழியில் செல்லும் தம் பிள்ளைகளைத் திருப்பிக்கொண்டு வருவதற்கு பாடனுபவிக்கிறார் என்ற முடிவுதான். இது நடந்த பிறகு (நாடகத்தில்) தேவன் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கிப் பார்க்கிறார். அங்கே அவருடைய குமாரன் ஒரு சிலுவையைச் சுமந்து கொண்டு மலைமேல் ஏறுவதைக் காண்கிறார்.

இதுவே நமது நாடகத்தில் நாலாவது கட்டம். கிறிஸ்துமஸ் நாட்களில் ஆரம்பிக்கும் கதைதான் இது. இந்தக் கதை நம் ஆண்டவரின் பிராயச்சித்தத்திற்கும் உயிர்த்தெழுந்த திருநாள் (Easter) வரைக்கும் நீண்டு முடிகிறது. இதோ, தேவன் மகத்துவமானவரும், பெரியவரும், உயர்ந்த வரும், பரிசுத்தமானவருமான தேவன்! ஆனால் அவர் தூரமாய் விலகி, தனிமையான மேன்மையில் உட்கார்ந்திருக்கவில்லை. அவர் வருகிறார்! இவ்வுலகத்தை (அன்பினால்) கைப்பற்ற வருகிறார். நம் மத்தியில் நடமாடக்கூடிய ஒருவருடைய உருவத்தில் வருகிறார். நம்முடன் வாழ்ந்து, நூற்றாண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கும் உவமைகளுடன் மிக்க அழகாக, நமக்கு போதிக்கக்கூடியவராய் வருவார்.

கிறிஸ்துமஸ்! தேவன் நம்மோடிருக்கிறார்! இம்மானுவேல்! இதைத்தான் கிறிஸ்துமஸ் அன்று கொண்டாட கூடுகிறோம். நமக்குத் தேவையானது இதுதான் அல்லவா?

1. போக்காடு முறை தீமையினின்று நம்மை இரட்சிக்காது.
2. வெறும் நீதிநெறிமுறையும் நல்லொழுக்கமும் நம்மை இரட்சிக்காது.
3. பலமுள்ளோர் பலவீனரைத் தாங்குவதுகூட பற்றாததுதான்.
4. நம்மோடிருக்க வந்த தேவன் ஒருவரே தீமையினின்று இரட்சிக்கும் வழியாகிறார்.


உங்களுக்குத் தெரியுமா!

சபிக்கப்பட்டு நரகத்திற்கு பாத்திரமான பாவியை பரலோகத்தின் சுதந்திரவாளியாய் மாற்றுகிறபடியால்தான் அவர் அதிசயமானவர்!