திரு.பாபிங்டன்
(நவம்பர்-டிசம்பர் 2018)

மனித அவதாரம் ஒரு பரம இரகசியம். தேவன் மனிதனைச் சிருஷ்டிக்கச் சித்தம் கொண்டபோது அவருடைய முன்னறிவிப்பின்படி ஆதாமும், ஏவாளும் கீழ்ப்படியாமல் மனித வர்க்கத்தைப் பாவத்தால் கறைப்படுத்துவார்கள் என்று தெரியும். ஆகையால் அவர்களை பாவத்திலிருந்து இரட்சித்து, தம்முடன் திரும்பவும் ஐக்கியம் கொள்வதற்கு தேவன் ஒரு திட்டம் வகுத்தார்.

மனிதனை இரட்சிப்பதற்கு இன்றியமையாத சாதனம் இரத்தம் என்று தேவன் அவருடைய பூரண ஞானத்தில் தெரிந்தெடுத்தார். மிருகத்தினுடைய இரத்தமும், பாவக்கறை கொண்ட மனிதனுடைய இரத்தமும் இரட்சிப்பிற்கு போதுமானதல்ல என்று அவர் கருதினார். ஆகையால் குமாரனாகிய தேவன் இரட்சிப்பின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பரலோகத்தின் மகிமையை விட்டுவிட்டு பூமியில் பாவக்கறையற்ற மனிதனாய் அவதரித்தார். தன் பரிசுத்த இரத்தத்தைச் சிலுவையிலே சிந்தி, வெற்றிகரமாய் உயிர்த்தெழுந்து, மகிமையுடன் பரலோகம் சென்று, பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருந்து கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவருடைய இரத்தம் கொடிய பாவியையும் கழுவி, சுத்திகரித்து, மன்னித்து, பாவத்திலிருந்து விடுவித்து, இரட்சிப்பளிக்க வல்லமையுள்ளது என்பது வேத சத்தியம். எப்படி என்பது பரம இரகசியம்!

முன்னறிவிப்புகள்:

பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் மனித அவதாரம் எடுத்து உலகில் தோன்றுவார் என்பதை பல முன்னறிவிப்புகளினால் தெரியப்படுத்தினார்.

ஆரம்பத்திலேயே, ஆதாம் ஏவாளை வஞ்சித்த சாத்தானை நோக்கி, “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதி.3:15) என்று அவனை சபித்தார். இதுவே இயேசு என்ற பெயருடன் ஸ்திரீயின் வித்தாய் உலகத்திற்கு வரவிருந்த இரட்சகரைப் பற்றிய முதல் முன்னறிவிப்பு!

மற்ற அறிவிப்புகளாவன:

2. இயற்கையைக் கடந்த அற்புதமான கருத்தரிப்பினால் பிறப்பார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசா.7:14).

3. அவர் ஆபிரகாம் சந்ததியில் தோன்றுவார்: “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி.12:3).

4. அவர் தாவீதின் வம்சத்தாராக இருப்பார்: “உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின் மேல் வைப்பேன்” (சங்.132:11).

5. அவர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவராயிருப்பார்: “சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை” (ஆதி.49:10).

6. அவர் பெத்லகேமில் பிறப்பார்: “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா.5:2).

வேதாகமத்தில் இயேசுவானவரின் இரண்டு வருகைகளைப் பற்றியும் தீர்க்கதரிசனங்கள் உள்ளன. இயேசுநாதரின் காலத்தில் யூதர்கள் ஒரு ராஜாவை எதிர்பார்த்தார்கள். அவர்கள் முதலில் வந்த மேசியாவின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதலைப் பற்றி விவரிக்கும் ஏசாயா 53ஆம் அதிகாரத்தைப் போன்ற வேதாகமப் பகுதிகளைக் கவனிக்கவில்லை. இரண்டு மலைச் சிகரங்களுக்கு ஒப்பான அவரது முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடையேயிருந்த பள்ளத்தாக்கை அவர்கள் காணவில்லை; நாம் இருக்கும் காலம் அந்தப் பள்ளத்தாக்குதான்!

வம்சவரலாறு:

புதிய ஏற்பாட்டின் ஆரம்பத்திலே இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரம் மத்தேயு 1:18-25இல் கொடுக்கப்பட்டுள்ளது. கன்னிகையாயிருந்த மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானாள். அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் (யோசேப்பு) அவளை அறியாதிருந்து அவருக்கு இயேசு என்று பேரிட்டான். இவ்விதமாக இயேசு பிறப்பதற்கு முன்னரே மரியாளும், யோசேப்பும் மணம் புரிந்ததால் யோசேப்பு அவருடைய சட்டப்பூர்வமான தகப்பனானான்.

பழைய ஏற்பாட்டிலே அநேக பகுதிகள் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்போகிற மேசியா அல்லது இரட்சகர், உலகத்திற்கு வரப்போகிறார் என முன்னறிவித்தன. மத்தேயு 1:17 லிலும், லூக்கா 7:23-38 லிலும் கொடுக்கப்பட்ட பெயர்களை நாம் முக்கியமற்றவை என்று அவைகளைக் கவனியாது கடந்து செல்வதுண்டு. ஆனால் இவைகள் யோசேப்பினுடைய வம்ச வரலாற்றையும், மரியாளுடைய வம்வரலாற்றையும் காட்டி, இயேசு கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பதற்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு என்பதை நிரூபிக்கின்றன.

இயேசுவானவருடைய ராஜரீக பரம்பரை, தாவீதிலிருந்து, சாலொமோன் வழியாக யோசேப் பிற்கும், நாத்தான் வழியாக மரியாளுக்கும் வந்தது. சாலொமோன் வழியில் வந்த கோனியா ராஜாவின் மீது தாவீதின் சிங்காசனத்தில் அவனுடைய சந்ததிகளில் ஒருவரும் ஒருபோதும் வீற்றிருக்கமாட்டார்கள் என்ற சாபம் இடப்பட்ட போதிலும், இயேசுவானவர் யோசேப்பின் உண்மையான வித்தாயிராமல் பரிசுத்த ஆவியானவரால் கர்ப்பந்தரிக்கப்பட்டதால், கோனியாவின் மேல் விழுந்த சாபத்திற்கு தப்புவிக்கப்பட்டார். மரியாள் நாத்தான் வழியில் தோன்றியதால் சாபம் இவளுடைய சந்ததிக் கிளையைப் பாதிக்காமல், இயேசுவானவர் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பதற்கு முழு உரிமை உண்டு என்று நிலைநாட்டுகிறது. மத்தேயு1:16 இல் யோசேப்பு இயேசுவைப் பெற்றான் என்று சொல்லாமல், “யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான். அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்” என்று சொல்லியிருப்பது, ஆண்டவர் மரியாள் மூலம்தான் பிறந்தார் என்பதை வேதம் முக்கியப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வம்சா வழிகளிலிருந்து இயேசுவானவரின் முன்னோர்களில் ஆபிரகாம், போவாஸ், தாவீது, யோசியா போன்ற பரிசுத்தவானகளும், யாக்கோபு, தாமார், ராகாப், ரெகோபெயாம், மனாசே போன்ற பாவிகளும் இருந்தார்கள் என்று காண்கிறோம். பாவிகளை இரட்சிக்கவே வந்ததால், பரிசுத்தமான இரட்சகர், பாவிகள் இருந்த பரம்பரையில் உதிப்பதைத் தவறாகவோ அவமானமாகவோ கருதவில்லை. அதேவிதம் தேவன் நம் முன்னோர்களின் சிறப்பியல்புகளையல்ல, இன்று நம்மில் காணப்படும் நற்சீலங்களில்தான் கரிசனையுள்ளவராயிருக்கிறார். நம் முன்னோர்களின் மகிமையைப்பற்றி பெருமையடிப்பதும் வீண். முன்னோர்களின் அவகீர்த்தியைக் கஷ்டப்பட்டு மறைக்க முயல்வதும், பயனற்றது. நாம் முளைத்தெழும்பின வேர்களை அல்ல, நாம் கொடுக்கும் கனிகளிலேதான் தேவன் கண்ணோக்கமாயிருக்கிறார்.