Dr.தியோடர் எச்.எஃப்.
(நவம்பர்-டிசம்பர் 2018)
அதிகாரம் 6: வெற்றிக்கு உதவும் காரணிகள்
இடைவிடாது ஜெபித்தல்
எபேசியர் 6:18 இல் “எந்தச் சமயத்திலும் ஜெபியுங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புடன் இருந்து ஜெபிக்கவேண்டும். இது தேவனோடு நமக்குள்ள ஐக்கியத்தையும், உறவையும் முறியாதபடி காக்கும். இது எப்போதும் ஜெபத்தொடர்புடன் தேவனோடிருத்தல். எப்போதாவது நெருக்கடி வரும்போது மட்டும் ஆண்டவரே, ஆண்டவரே என்று கிட்டிச் சேருவதல்ல. நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் தேவனிடம் ஜெபிக்கக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஜெபிப்பது நல்லது. அன்றாட வாழ்வில் நாம் நடமாடும்போதும், வேலை செய்யும்போதும் ஆண்டவரை நினைத்து, ஜெபித்துக்கொண்டே இருக்கலாம். ஆண்டவரின் நினைவுடன் எப்போதும் இருப்பதை இது காட்டுகிறது.
இடைவிடாமல் ஆவியில் ஜெபித்தல் என்பதில் இரண்டு முக்கிய கருத்துக்கள் உள்ளன. அவை:
1. ஆவிக்குரிய போராட்டத்தில் நம்முடைய அறியாமை, இயலாமை இவற்றைக் காட்டுகிறது. நமக்கு என்ன செய்வது என்று தெரியாது. நமக்கு எதையும் செய்ய வல்லமையும் இல்லை. இப்படிப்பட்ட ஜெபம் நீதிமொழிகள் 3:5,6 வசனங்களின்படி செயல்படுவதாகும். “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகு”.
2. நாம் முற்றிலும் தேவனையே சார்ந்திருக்கிறோம் என்று நமது சத்துருவாகிய சாத்தானுக்கு வெளிப்படுத்துகிறது. ஏனென்றால் நமக்கு தெய்வீக ஞானமும், வல்லமையும் இல்லை. ஜெபத்தின் மூலமாக நாம் “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுவோம்” (எபேசி.6:10).
‘ஜெப வீரன்’ என்று கூறுவது ஒரு முரணரை போலக் காணப்படும். கிறிஸ்துவிடம் விசுவாசி தன்னுடைய இயலாமையையும் பலவீனத்தையும் அறிக்கையிட்டு அவருடைய வல்லமையையும், ஞானத்தையும் வேண்டுகிறான். அதே வேளையில் அவன் சாத்தானிடம் கிறிஸ்துவுக்குள் இருக்கும் வல்லமையையும், வெற்றி வீரனின் இடத்தில் ஜெயங்கொண்டவனாயும் நிற்கிறான். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. கிறிஸ்துவின் வார்த்தைகளே அதை நமக்குக் காட்டுகின்றன. “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவான்15:5). எனினும் கிறிஸ்துவுக்குள் நம்மால் எல்லாவற்றையும் செய்யப் பெலனுண்டு. பவுல் கூறுவதைப் பாருங்கள்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13). ஜெபத்தின் மூலமாக கிறிஸ்துவுக்குள் நமது உரிமையைக் கோரும்போது, அவர் எப்போதும் நம்மை வெற்றியடையச் செய்வார். “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2கொரி. 2:14).
எபேசியர்6:18 “சகலவிதமான வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணவேண்டும்” என்று கூறுகிறது. எனவே “சகலவிதமான வேண்டுதல்கள்” பொதுவான விண்ணப்பம், தனிப்பட்ட விண்ணப்பம், நீளமான விண்ணப்பம், குறுகிய விண்ணப்பம், கேட்கக்கூடிய விண்ணப்பம், கேட்கமுடியாத விண்ணப்பம், வேண்டுதல் செய்கிற விண்ணப்பம், நன்றி கூறுகிற விண்ணப்பம் போன்றவைகளை நாம் ஏறெடுக்க வேண்டும். நம்முடைய வேதாகமம் கூறுகிறது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துககொள்ளும்” (பிலி.4:6,7).
ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருத்தல்
ஜெபத்தில் தேவனோடு நெருங்கி உறவாடுவது எப்படி என்று அறிந்துள்ள விசுவாசிகளைக் கண்டால் சாத்தானுக்கு அதிகப்பயம். ஏனென்றால் தேவனுடைய வல்லமை அவனுக்கு எதிராக அனுப்பிவிடப்படுகிறது என்பதை அவன் அறிவான். எனவே எந்த வகையிலாவது நம்மை ஆண்டவரிடம் ஜெபிக்கவிடாமல் தடுக்க முயற்சி செய்வான். நாம் பகலில் வேலை செய்து கொண்டிருந்தால், வேலையெல்லாம் முடித்து வீட்டுக்குச் சென்று, குளித்து, சிற்றுண்டி அருந்தி விட்டு சாவகாசமாக ஜெபத்தியானம் செய்யலாம் என்று நினைத்திருந்தால் நாம் அப்படி ஜெபிக்க ஆரம்பிக்கும்போது நமக்குக் களைப்பு, சோர்வு, தூக்க மயக்கம், மனத்தளர்ச்சி எல்லாம் வரும். சாத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்திக்கொள்ளுவான். ஜெபிப்பதைத் தடை செய்வான். தூங்கப்போகத் தூண்டுவான். நம்முடைய தேவைகளைக் கடவுளிடம் விண்ணப்பம் செய்வதைத் தாமதப்படுத்துவான். மேலும் சாத்தான் சந்தேகம், மனச்சோர்பு, மனத்தளர்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஜெபிப்பதற்கு இருக்கும் ஆவலைக் குறைத்துவிடுவான். இந்த முறைகள் சாத்தானுக்கு வெற்றியளிக்காவிட்டால் வேலையிடத்திலோ, வீட்டிலோ பிரச்சனைகளை உருவாக்கி, அதைப்பற்றிய கவலையை ஏற்படுத்தி ஜெபிப்பதற்குரிய மனநிலை உண்டாகாதவாறு பார்த்துக்கொள்ளுவான். இத்தகைய முயற்சிகளைச் சாத்தான் செய்யும்போதெல்லாம் நாம் உறுதியாய் அவனை எதிர்த்து நிற்கவேண்டும். “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும், ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மன உறுதியோடும், சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” (எபேசி.6:18). நாம் எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும். விடாமுயற்சியோடு எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு விசுவாசி கவனித்துக்கொண்டிருத்தல், விழிப்புடன் இருத்தல் போன்றவை வேதாகமத்தை விழிப்புடன் ஆராய்ச்சி செய்வதில் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் ஒரு காரியத்துக்காக நீண்ட காலமாக ஜெபித்துக் கொண்டிருக்கலாம். அந்த ஜெபத்துக்கு எப்போது பதிலளிக்கவேண்டும் என்று தேவன் அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? நம்முடைய பொறுப்பு, நாம் இடைவிடாமல் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கவேண்டும். அந்த ஜெபத்துக்கு நிச்சயமாக தேவன் பதிலளிப்பார் என்று பூரணமாக நம்பவேண்டும். தேவன் தமது சித்தத்தின்படி, தமக்கு உகந்தநேரத்தில் நம் ஜெபத்துக்குப் பதிலளிப்பார். தேவன் செய்யச் சித்தமான ஒன்றை நமக்குச் செய்வதாக நமது உள்ளத்தில் உணர்த்தியிருநதால், அதற்காக நாம் ஜெபிக்கக்கூடாது. ஆண்டவர் இதை எனக்குச் செய்வாரா? செய்யமாட்டாரா? என்று கவலைப்படவும் கூடாது. நாம் ஜெபிக்க வேண்டியது நம் கடமை. தேவன் நம் ஜெபத்துக்கு எப்படிப் பதிலளிக்கப் போகிறார் என்று விழிப்புடன் காத்திருக்கவேண்டும்.
எல்லா விசுவாசிகளுக்காகவும் ஜெபித்தல்
“மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் எபேசியர் 6:18 இல் கூறுகிறார். எல்லா விசுவாசிகளுக்காகவும் ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் நாம் எல்லோரும் ஆவிக்குரிய போராட்டத்தில் ஒன்றாக இணைந்துள்ளோம். எல்லா விசுவாசிகளும் கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையின் உறுப்பினர்கள். வேதாகமம் கூறுவதைப் பாருங்கள்: “ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்” (1கொரி. 12:26). நாம் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்யவேண்டும். குழு விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடுகிறவர்கள் எல்லோருடைய கவனத்தையும் பெறுவார்கள். எனினும் அவர்களுடைய வெற்றி முழுவதும் அக்குழுவானது ஒருமைப்பாட்டுடன் இணைந்து விளையாடுவதில்தான் இருக்கிறது. நாம் ஒவ்வொருவருக்காகவும் ஆவிக்குரிய போராட் டத்தில் ஜெபிப்போம். அப்பொழுது நாம் ஜெயங்கொண்டவர்களாய் இருப்போம்.
எபேசு சபையார் எல்லா பரிசுத்தவான்களுக்காகவும் ஜெபிப்பதோடு, தனிப்பட்ட முறையில் பவுலின் நலனுக்காகவும் ஜெபிக்கவேண்டும் என்று பவுல் விரும்பினார்; “சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்” (எபேசி.6:19,20).
பவுல் சிறைச்சாலையில் போடப்பட்டது சாத்தானுக்கு வெற்றி. ஆனால் ஆவிக்குரிய போராட்டத்திலிருந்து பவுலை வெளியேற்ற அவனால் முடியவில்லை. பவுலினால் தொடர்ந்து சாத்தானை ஜெபத்தினால் கட்டிப்போட முடிந்தது. மேலும் பவுல் மற்ற விசுவாசிகளுக்காகவும் ஜெபித்து வந்தார். பவுலின் உள்ளத்தில் இருந்த விருப்பமும், கவலையும் விசுவாசிகள் தனக்காக ஜெபிக்கவேண்டும் என்பதாய் இருந்தது. அப்பொழுதுதான் வாய்ப்புக் கிடைக்கும்போது சத்திய வார்த்தைகளை அவரால் தைரியமாய்ப் பேசமுடியும்.
நீங்கள் உங்கள் சபைப்போதகருக்காக ஜெபிக்கிறீர்களா? அவர்தான் போர்க்களத்தில் முன்னணியில் நிற்கிறார். ஏனென்றால் ஒரு திருச் சபையை வழிநடத்திச் செல்ல அவர் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, அழைக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டும் இருக்கிறார். அவர் ஒரு தலைவராய் இருப்பதால் சாத்தானின் மிகவும் தந்திரமான தாக்குதல்களுக்கு போதகர் ஆளாகிறார்.
ஒரு தலைவரை அவமானப்படுத்தச் சாத்தானால் முடியுமானால், அவனால் பலமக்கள் முன் கிறிஸ்தவத்தையும் அவமானப்படுத்தமுடியும். எந்தப் போதகருமே “எனக்கு எவருடைய ஜெபமும் தேவையில்லை” என்று கூறமுடியாது. அவருக்காக ஜெபிக்கும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரால் வேத சத்தியங்களைத் தைரியமாய் சபைகளில் பேச முடியும். ஒரு திருச்சபையில் காரியங்கள் சீர் கெட்டுப்போயிருக்குமானால், சபை மக்கள் தாங்கள் சபையின் போதகரைக் குற்றஞ்சாட்டுவார்கள். போதகர்களை வல்லமையான பேச்சாளர்களாக மாற்றும் சக்தி ஜெபத்திற்கு உண்டு என்னும் உண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அல்லது ஒரு மன்றாட்டு ஜெப வீரனின் மனநிலை பிரச்சனையாக இருக்கு மானால் அதையும் வல்லமையான ஜெபம் மாற்றிவிடும்.
பவுலின் ஒரே கவலை, நற்செய்தியளிக்க வாய்ப்புக் கிடைக்கும்போது, கொடுக்கத்தக்கதாக தேவனுடைய செய்தி தனக்குக் கிடைக்கவேண்டும் என்று கவலைப்பட்டார். எனவே அவர் விசுவாசிகளிடம் தனக்குச் செய்தியளிக்கும் வரத்துக்காக ஜெபிக்கக் கேட்டுக்கொண்டார். இந்த வசனத்தின் இன்னொரு மொழிபெயர்ப்பு, “நான் என் வாயைத் திறக்கும்போது பேசும்படியாக ஒரு செய்தி கிடைக்க வேண்டும். அப்பொழுது பொது இடத்தில் மக்கள் கூட்டத்தில் நம்முடைய நற்செய்தியின் வெளிப்படையான இரகசியத்தைக் கூறி அறிவிப்பேன்”. பவுலின் வேண்டுதல் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசத்தக்கதாக தேவனிடத்திலிருந்து ஒரு செய்தி கிடைக்கவேண்டும் என்பதாம். மேலும் அவனுடைய விருப்பமும் கோரிக்கையும், பொது மக்கள் மத்தியில் சத்தியத்தை “தைரியமாய்” பேசப் பெலன் வேண்டும். இதற்காகவும் விசு வாசிகள் ஜெபிக்க வேண்டும் என்று பவுல் விரும்பினார்.
நம்முடைய இன்றைய தேவை, நற்செய்தி எங்கும் தைரியமாகப் பேசப்படவேண்டும். மக்கள் நற்செய்தியைக் கண்டுகொள்ளாதபடிக்கு மக்களின் மனங்களைச் சாத்தான் குருடாக்கி விடுகிறான். “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2கொரி.4:4). எனவே நற்செய்தியினால் பலன் ஏதும் உண்டாக வேண்டுமானால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நற்செய்தியானது தைரியமாகப் பேசப்படவேண்டும். சிலர் மிகவும் குழம்பிப்போயிருக்கிறார்கள். “நற்செய்தி என்பது உண்மையில் என்ன?” இது அவர்கள் கேட்கும் கேள்வி. அவர்கள் நற்செய்தியை சமுதாயப்பணி பற்றிய செய்தியோடு ஒப்பிட்டுச் சமப்படுத்திப் பேசுகிறார்கள். மக்கள் இயேசுகிறிஸ்துவோடு தனிப்பட்ட நிலையில் தொடர்புகொள்ளும்போது, இதை அவர்களைச் சுற்றிலும் இருக்கும் சமுதாயத்தினர் உணருகிறார்கள். ஆனால் நற்செய்தியானது சமுதாயப்பணி அல்ல. நற்செய்தி என்பது இயேசுகிறிஸ்து பாவத்தின் பிராயச்சித்தத்தைச் செலுத்திவிட்டார். எவரும் பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நம்முடைய பணி இந்த நற்செய்தியை தெளிவாகவும் தைரியமாகவும் அறிவித்து, மக்கள் பாவம், இரட்சிப்பு இவற்றைப் புரிந்துக்கொள்ளச் செய்வதாகும். மக்கள் வேத அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் ஜெபிப்போமாக. வீழ்ச்சியடையாத மனுக்குலத்துக்கு இது தேவகிருபை. இதை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம் என்று தைரியமாகப் பிரசங்கிப்போம்.
எபேசியர் 6ஆம் அதிகாரம் 10 முதல் 20 வசனங்களில் கிறிஸ்துவை அறிந்துகொண்ட நமது உத்தவாதம், இயேசுகிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கும் ஜெயங்கொண்டவர்களின் நிலையைச் சாத்தானுக்கு எதிராகச் செயல் படுத்திக் காட்டவேண்டும். ஜெபத்தின் மூலம் சாத்தானின் வல்லமையைக் காட்டவேண்டும். கட்டுண்டிருக்கிறவர்களை விடுதலையாக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவில் நமக்கு வல்லமையும் அதிகாரமும் தரப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவுக்குள் நமது நிலையை உயர்த்திக் காட்டி, சாத்தானுக்கெதிராக ஜெயங்கொண்டவர்களாக வெற்றி வீரர்களாக நிற்கவேண்டும்.
முடிவுரை
எபேசியர்களுக்குப் பவுல் எழுதின நிருபத்தின் முடிவில் பவுல் முடிவுரையாகக் கூறியதுபோல, நாமும் கூறலாம்:
“அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்” (எபேசி. 6:21,22).
எபேசுவிலுள்ள விசுவாசிகள் மேல் பவுலின் கரிசனையும், நல்லெண்ணமும் பவுலைக் குறித்து அவர்கள் கவலைகொள்ளும்போது அவர்களை ஆறுதல்படுத்தும்படி தீகிக்குவை அனுப்பியதாக இப்பகுதியில் காண்கிறோம்.
பவுல் தன் ஆசீர்வாதத்தைக் கூறி தன் நிருபத்தை முடிக்கிறார். “பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும், விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்” (எபேசி. 6:23,24).
பவுல் எபேசியருக்கு இந்த நிருபத்தை எழுதியபோது ‘கிருபையும்’, ‘சமாதானமும்’ என்ற வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் (எபேசி.1:2). இதே வார்த்தைகளுடன் இந்த நிருபத்தின் மாற்றுரு வாக்கும் சத்தியங்களை ஏற்றுக்கொண்டவர்கள் மீது தேவனுடைய ஆசீர்வாதம் தங்கும்படியாக வேண்டி முடிக்கிறார். பவுல் குறிப்பிடும் சமாதானம், வெற்றிகளைச் சந்திக்கிறவர்களுக்கும் கிருபைகளை வேண்டி விண்ணப்பிக்கிறவர்களுக்கும் உரியது.
இயேசுகிறிஸ்துவை இரட்சகராகவும், மீட்பராகவும் அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிற நாம் அடிக்கடி எபேசியர் நிருபத்தை வாசித்து, கிறிஸ்துவுக்குள் நமது நிலையை அறிந்து பின் அதன்படி வாழ்க்கை நடத்துவோமாக. ஏனெனில் இந்த வாழ்க்கைதான் வளமான, சந்தோஷமான கிருபையும் சமாதானமும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும்.
மொழியாக்கம்: G.வில்சன்
(முற்றிற்று)