நற்செய்தியைக் கொண்டாடுவோம்
(நவம்பர்-டிசம்பர் 2018)

நான் கிளாஸ்கோவில் மரித்தால் என் உடலை புழுக்கள் உண்ணும். நான் கர்த்தருடைய உன்னதபணியைச் செய்து மடிந்துபோகும்போது என் உடலை புழுக்களும் பூச்சிகளும் உண்டாலும் அந்த மகாப் பெரிய உயிர்த்தெழும்நாளில் என் மீட்பர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்ததைப் போல எனது மகிமையின் சரீரத்தோடு நானும் எழுந்திருப்பேன்.


ஆரம்ப வாழ்க்கை

ஜான் பேட்டன் 1824 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் தெய்வ பயமிக்க பெற்றோர்களுக்குப் பிறந்தவர். ஜெபவீரரான அவருடைய தகப்பன் வாணிகம் செய்துவந்தார். அவர்களுடைய இல்லத்தில் ஓர் அறை “பரிசுத்த ஸ்தலம்” என்று அழைக்கப்பட்டது. ஒருநாளில் மூன்றுமுறை தகப்பனார் அவ்வறைக்குள் சென்று, தன் உள்ளத்தை தேவனுக்கு முன்பாக ஊற்றிவிடுவார். தன் குடும்பத்திற்காகவும் ஸ்காட்லாந்து நாட்டிற்காகவும், உலகம் முழுமைக்காகவும் ஜெபிப்பார். தகப்பனின் சிறந்த தெய்வீக ஜெப வாழ்க்கை ஜானுக்கு சவாலாக அமைந்தது. அவருடைய பிற்கால வாழ்க்கையில் தன் தகப்பனைப்போல கிறிஸ்துவோடு நடக்க தீர்மானிக்க உதவியது. ஜானின் தாயார் சிறந்த விசுவாசமும், பக்தியுமுள்ள பெண்ணாக விளங்கினார்.

பேட்டன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாள்முதல் அவருடைய உள்ளத்தில் தான் ஒரு மிஷனெரியாக வேண்டும் என்னும் ஆவல் இருந்தது. அதற்காகத் தான் அதிகம் படித்து வேத அறிவும் பெறவேண்டும் என்று உணர்ந்து ஏராளமான புத்தகங்களை ஓய்வு கிடைத்த நேரமெல்லாம் படித்தார். கொஞ்சக்காலத்தில் அவர் தன்னுடைய சம்பாத்தியத்தில் பணம் சேமித்துப் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானார். பேட்டன் டம்ஃப்ரீஸ் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது தன் அப்பாவின் தொழிலை விட்டுவிட்டுப் படிக்க அதிக நேரம் கிடைக்கக்கூடிய வேறு வேலை தேட நினைத்தார். அவருக்கு ஒரு நல்ல அரசாங்க வேலை கிடைத்தது. அவர் அந்த வேலையில் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் அவருக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதற்காக அவர் ஒரு சிறப்புப் பயிற்சி பெற நினைத்தால் அதற்கும் பணம் தருவதாகக் கூறினர். ஏழு ஆண்டுகள் அதிக காலமாகத் தெரிந்தது. அதற்குள் அவர் மிஷனெரி பணித்தளத்துக்குச் செல்ல விரும்பினார். அவர் அவர்களிடம், “நான் மூன்று அல்லது நான்கு வருடங்கள் உங்களுக்காக வேலை செய்கிறேன்” என்றார், அந்த நிறுவனத்தின் இயக்குனர், “ஏன் மூன்று அல்லது நான்கு வருடங்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜான், “நான் இன்னொரு எஜமானனுக்கு வேலை செய்ய என்னை ஒப்புக் கொடுத்திருக்கிறேன்” என்றார் .”யாருக்கு?” என்று இயக்குநர் கேட்டார். “என்னுடைய ஆண்டவராகிய இயேசுவுக்கு. நான் அதற்காக மிக விரைவில் ஆயத்தம் செய்ய வேண்டும்” என்றார் ஜான்.

இதைக் கேட்டுக் கோபமடைந்த அந்த இயக்குனர் உடனே ஜானை வேலையிலிருந்து விலக்கிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட ஜான் படித்த பள்ளியின் முதல்வர், ஜானின்மேல் இரக்கம்கொண்டு நீ இங்கு படிக்கும்போது அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. உனக்கு வருமானம் தரும் வேலையில்லாததால் நீ இலவசமாகவே படிக்கலாம் என்றார். சில மாதங்கள் பேட்டன் ஒரு விவசாயிக்கு அறுவடையில் உதவி செய்யச் சென்றார். அது முடிந்ததும் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மறுபடியும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அவரது உடல்நிலை தேறியதும் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து ஒரு பள்ளி நடத்தத் தொடங்கினார். கொஞ்சம் பணம் சம்பாதித்ததும் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தன் படிப்பை முடிக்க நினைத்தார். கொஞ்சம் பணம் சேமித்ததும் மீண்டும் கல்லூரிக்குச் சென்றார். ஆனால் அவருடைய படிப்பு முடிவதற்குள் இவரிடமிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. தன்னை விட ஏழையான ஒரு மாணவனுக்கு ஜான் கொஞ்சம் பணம் கொடுத்து உதவியிருந்தார். அதை அந்த மாணவரால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. எனவே ஜான் படிப்பை முடிக்கு முன்பே கல்லூரியை விட்டு விலக வேண்டியதாயிற்று.

பின்னர் ஜான் ஒரு ஆலயத்தோடு சேர்ந்த ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். மாணவர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி இடங்கொள்ளாத அளவில் ஆகியதும் பள்ளியின் பெயர் புகழ் பெற்றது. எனவே பள்ளி நிர்வாகத்தினர் ஒரு அதிகக் கல்வியும், பயிற்சியும் பெற்ற ஆசிரியரை நியமிக்கத் தீர்மானித்தனர். இந்த வேலையை விட்டதும் ஜான் பேட்டன் கிளாஸ்கோ சிற்றி மிஷன் என்னும் ஒரு மிஷனெரி இயக்கத்தில் ஒரு மிஷனெரி ஆகும்படி அழைக்கப்பட்டார். அவர் இந்த வேலையை மகிழ்ச்சியுடன் ஏற்று, அதை நகரத்தின் மிகவும் பின்தங்கிய சேரிப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பத்து ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்தக் காலத்தில் இவர் ஒரு ஆலயத்தின் போதகராகவும் ஊழியம் செய்தார். இவைகளெல்லாம் இவர் பின்னால் பசிபிக் கடல் தீவுகளில் செய்யப்போகும் மிஷனெரிப் பணிக்கு நல்ல ஆயத்தமாக அமைந்தது.

பிற நாடுகளில் கிறிஸ்துவை அறியாது அழிந்து கொண்டிருக்கும் ஜன சமுதாயத்தைப் பற்றி பல ஆண்டுகளாக ஜானுக்கு மனபாரம் இருந்து வந்தது. நியூஹெப்ரிட்ஸ் என்னும் தீவுகளில் மிஷனெரி தேவையைப் பற்றிக் கேள்விப்பட்டார். வேறு யாரும் போக விரும்பாத நிலையில் தேவ அழைப்பு அவருக்குக் கிடைத்தது. “இதுவரை வேறு எவரும் ஒப்புக்கொடுக்காததால் நீயே எழுந்து உன்னை அர்ப்பணி” என்ற தெய்வ தூண்டுதலை ஜான் ஏற்றுக்கொண்டு தன்னை அர்ப்பணித்தார். அவருக்கு அறிமுகமானவர்களும் நண்பர்களும் ஏற்கெனவே நல்லதொரு திருப்பணியை இவர் செய்து வருகிறார். ஏன் இவர் மிலேச்சர்களிடம் செல்லவேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு வயோதிபர்: “போகவேண்டாம், இளைஞனே நரமாமிசப் பட்சிணிகள் உன்னைத் தின்று விடுவார்கள்” என்றார். அதற்கு ஜான் சிரித்தபடியே பதிலளித்தார்: “பெரியவரே, நீங்கள் வயதுசென்று சில நாட்களில் மரித்து அடக்கம் செய்யப்படலாம். மண்ணுக்கடியில் புழுக்கள் அரித்து சாப்பிடும். நான் கிறிஸ்து இயேசுவை கனப்படுத்தி கீழ்ப்படிந்து அவரைச் சேவிக்கும்போது மனிதர் சாப்பிட்டால் என்ன? புழுக்கள் அரித்தால் என்ன?” என்றார். ஜானின் பெற்றோர் அவரைத் தெய்வ நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து ஊழியத்தைத் தெரிந்துகொள்ளும்படி விரும்பினார்கள். ஜான் பேட்டன் தன் மனைவியுடன் நியூஹெப்ரிட்ஸ் செல்ல, 1858 ஆம் ஆண்டு கப்பல் ஏறினார். அப்போது அவருக்கு வயது 34.

நியூஹெப்ரிட்ஸ் நரமாமிசப் பட்சினியரின் தீவுக்கூட்டம்

நீண்ட, களைப்பை ஏற்படுத்திய பயணத்துக்குப் பின் ஜான் தம்பதிகள் டான்னா என்னும் தீவை வந்தடைந்தனர். அது மிகவும் ஆபத்தான காட்டுமிராண்டிகள் வாழ்ந்த தீவு. இந்த இளம் மிஷனெரிகள் சோர்ந்து போகவில்லை. ஆபத்து நிறைந்த இந்த இடத்தில்தான் நற்செய்திக்கு அதிக தேவை இருந்தது என்று உணர்ந்தனர். தேவன் அவர்களை இந்த வேலைக்காகத் தெரிந்தெடுத்து அழைத்திருந்ததால் இந்த அறைகூவல் நிறைந்த வேலையை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

அங்கு அவர் செய்த முதல்பணி, அந்த மக்களின் மொழியைக் கற்றுக்கொள்வதே. அவர் மக்கள் பேசுவதைக் கவனித்துக் கேட்டார். அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். அவர்களிடமிருந்து பொருட்களின் பெயர்களைக் கற்றுக்கொண்டார். அந்த மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து அந்த மக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஜான் எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்கவில்லை. கொஞ்சக் காலத்துக்குள் அவருடைய மனைவி மலேரியாவினால் மரணமடைந்தார். இரண்டு வாரத்துக்குப்பின் அவருடைய மகன் சிறிய பையனும் இறந்துவிட்டான். எனினும் ஜான் மனந்தளரவில்லை. அந்தத் தீவில் ஊழியம் செய்வதற்காகவே தேவன் அவரை அங்கே அனுப்பியிருப்பதாக நம்பினார். மனைவியையும், மகனையும் இழந்து தனி மரமாக நின்றார். அவரது வேதனைக்கு அளவில்லை. அவரால் தன்னுடைய ஊழியத்தை மறக்க முடியவில்லை.

உபத்திரவங்கள்

பல தடவைகளில் பேட்டனின் வாழ்க்கை ஆபத்துக்களில் சிக்கியது. அத்தீவு மக்கள் இயற்கை மரணம் உண்டு என்பதையே அறியாதிருந்தனர். பேய்களையும் முன்னோர்களின் ஆவிகளையும் வணங்கினர். அந்தக் கிராமத்தில் எவர் இறந்தாலும் அதற்குக் காரணம் அந்த மிஷனெரியே என்றனர். அவர்கள் ஜானிடம் “உன்னுடைய கடவுள்தான் இந்தச் சாவுக்குக் காரணம், அதனால் உன்னைக் கொல்லப் போகிறோம்” என்றனர். தீவுமக்கள் நற்செய்தியை நம்பி ஏற்பார்களானால் தங்களுடைய சகல ஆதிக்கமும் அழிந்துவிடும் என்று அங்குள்ள மந்திரவாதிகள் அறிந்து, இயற்கையின் சீற்றமும் இன்னல்களும் நேரும்போது, அதற்கு மிஷனெரிகளே காரணம் என்று சொல்லி அவர்களைக் கொலை செய்ய ஏவினர். அந்தப் பகுதியில் இருந்த இரண்டு கெட்ட பழக்கங்கள் – ஒன்று திருடுதல், மற்றொன்று பொய் சொல்லுதல்.

அந்த மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள் எதுவாயிருந்தாலும், ஜான் பேட்டனுடையதாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளுவார்கள். அதைக் கண்டுபிடித்துக் கேட்டால் “நாங்கள் எடுக்கவில்லை” என்று துணிகரமாகப் பொய் சொல்லுவார்கள். அந்தப் பொருளைக் கேட்டாலும் தரவுமாட்டார்கள். இதன் காரணமாகப் பேட்டன் தன்னுடைய ஊழியத்துக்கென்று கொண்டு சென்றிருந்த பல பொருட்களையும் உபகரணங்களையும் இழந்தார்.

ஜான் பேட்டனுடைய ஊழியம் ஆபத்துக்களும் துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. அவருக்கு அடிக்கடி பயமுறுத்தல்கள் வந்தன. அவருடைய நண்பர்கள்போலப் பழகியவர்களும் அடிக்கடி இவரை எதிர்த்துவிடுவார்கள். நான்கு வருடங்களாகத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டே ஊழியம் செய்தபின் சிறிதுகால ஓய்வுக்காக ஸ்காட்லாந்துக்குத் திரும்பிச்சென்றார். அங்கு தங்கியிருந்த வேளைகளில் பல ஆலயங்களுக்கும் சென்று நற்செய்தி அறிவித்துவிட்டுத் தன் பணித்தளத்தின் தேவைகளை எடுத்துக்கூறுவார். இளைஞர்களை மிஷனெரிகளாகப் பணியாற்ற வரும்படி அழைப்பார். மற்ற சபை மக்களை இந்த ஊழியத்தின் தேவைகளுக்காக உதாரத்துவமாகக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வார். இவரது அழைப்பை ஏற்று நான்கு இளைஞர்கள் மிஷனெரியாகப் பேட்டனுடன் சென்று அந்தத் தீவில் ஊழியம் செய்ய முன்வந்தனர்.

அனீவா தீவில் ஊழியம்

1865 ஜனவரியில் பேட்டன் அந்தத் தீவுக்குச் செல்ல ஆயத்தப்பட்டார். அப்போது அவர் தனியாகச் செல்லவில்லை. இதனிடையே அவர் மார்கரெட் ஒயிட்கிராஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்கள் இருவரும் டான்னா வுக்கருகில் உள்ள இன்னொரு சிறிய தீவாகிய அனீவாவில் சென்று ஊழியம் செய்தனர். அங்கேயும் ஆபத்துக்களும் துன்பங்களும் அவர்களை எதிர்நோக்கின. இங்கேயும் பேட்டன் ஒரு மொழியைக் கற்க வேண்டியதிருந்தது. டான்னாவில் அவர் கையாண்ட முறைகள் இங்கேயும் பலன் தந்தன. இங்குள்ள மக்களில் சிலருக்கு டான்னாவின் மொழி தெரிந்தது. அவர்களைப் பயன்படுத்திப் பேட்டன் இங்குள்ள மொழியைக் கற்றுக்கொண்டார். கடவுளுடைய கிருபையினால் அவர்கள் அந்தத் தீவிலுள்ள மக்களுடைய நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் பெற்றார்கள். நற்செய்தி ஊழியத்தைத் தீவு எங்கும் செய்தார்கள். ஆங்காங்கே ஏராளமான மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் எதிரிகள் இவர்களுடைய ஊழியத்துக்குத் தடையாக இருந்தார்கள்.

இயற்கைச் சீற்றமும் இவர்களது பணிக்கு இடையூறாக அமைந்தது. ஒரு கொடிய சூறாவளி அடித்து, மரங்களை வேரோடு சாய்த்து குடிசைகளையெல்லாம் அடித்துச் சென்றுவிட்டது. எனவே மறுபடியும் பேட்டன் அந்தக் குடிசைகளையெல்லாம் கட்டிக்கொடுக்க வேண்டியதாயிற்று. இன்னொரு பிரச்சனை குளிக்கவும், குடிக்கவும், துணி துவைக்கவும் நல்ல தண்ணீர் வசதியில்லாத ஒரு தீவாக இருந்தது. எனவே பேட்டன் ஒரு நல்ல இடத்தில் கிணறு தோண்டத் தொடங்கினார். அந்தக் கிராமத்து மக்கள் இவரைப் பார்த்துச் சிரித்தார்கள். தண்ணீர் மழை மூலம் வானத்திலிருந்து வரும். இவர் மண்ணைத் தோண்டுகிறாரே, இவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது என்றார்கள். பேட்டன் முழு நம்பிக்கையுடனும் ஜெபத்துடனும் கிணற்றைத் தோண்டினார். வெகு ஆழம் தோண்டியபின் பேட்டன் ஒரு நாள் மண் ஈரமாய் இருப்பதைக் கண்டார். எனவே மறுநாள் கிராம மக்கள் அனைவரையும் கிணற்றருகே வந்து கூடச் செய்தார். அனைவரும் வந்து கூடினார்கள். சிறிது நேரத்தில் கிணற்றில் ஊற்று நீர் வந்தது. தண்ணீரை எடுத்து மக்களிடம் காட்டினார். மக்கள் அனைவரும், “ஆகா இது என்ன ஆச்சரியம்? மண்ணின் ஆழத்திலிருந்து மழை வருகிறதே!” என்றார்கள்.

அவர்கள் பேட்டனிடம், “இது எப்படி வந்தது?” என்றார்கள். அவர்களிடம் பேட்டன், “நமக்குத் தண்ணீர் இல்லை அல்லவா? அதற்காக நான் கடவுளிடம் வேண்டினேன். கடவுள்தான் இந்தத் தண்ணீரைத் தந்தார்” என்றார். தீவுத்தலைவன் ஆச்சரியத்தில் மூழ்கினவனாய் “யேகோவாவே உண்மைான தெய்வம்” என்று ஆரவாரித்தான்.

இவர் பலகாலம் செய்த நற்செய்திப் பிரசங்கங்களைவிட அதிக சாதனையை இந்தக் கிணறு செய்தது. ஏராளமான மக்கள் கர்த்தரின்மேல் நம்பிக்கை கொண்டு இயேசுவின் பிள்ளைகள் ஆனார்கள். அந்தத் தீவில் அதன் பின் மழையில்லாத காலங்களிளெல்லாம் அந்தத் தீவார் தாகத்தினால் சாகாதபடி இந்தக் கிணற்று நீர் அவர்களை அற்புதமாகக் காப்பாற்றியது. 1899 ஆம் ஆண்டு அனீவா மொழியின் புதிய ஏற்பாட்டை பேட்டன் பிரசுரித்தார். அந்த ஆண்டு முடிவிற்குள் 25 முதல் 30 தீவுகளில் மிஷனெரிகள் கிறிஸ்துவின் சாட்சிகளாய் மிலேச்சர்களான காட்டு மிராண்டிகள் மத்தியில் பணிபுரிய வந்துவிட்டனர். கிறிஸ்துவின் ஒளி பரவிற்று.

பேட்டன் இயேசுவை ஏற்றுக்கொண்ட விசு வாசிகளை அவர்களுடைய வீடுகளில் சந்தித்து அவர்களுடைய மொழியில் பேசி உற்சாகப்படுத்தி வந்தார். அப்பொழுது அனைவரும்கூடி ஆண்டவரைத் தொழுதுகொள்ள ஒரு ஆலயத்தின் தேவையை உணரச் செய்தார். அனைவரும் உற்சாகமாக ஒரு ஆலயத்தைக் கட்டியெழுப்பினர். முடிவுறுந்தருவாயில் ஒரு புயல் வந்து கட்டப்பட்ட ஆலயத்தைத் தரை மட்டமாக்கிற்று. அனைவரும் சோர்ந்து போயினர். அப்பொழுது அந்த மக்களின் தலைவர், “சிறுபிள்ளைகளைப் போல முறிந்துபோன வில்லுக்காகவும் அம்புக்காகவும் நாம் அழுதுகொண்டிருக்க வேண்டாம். நாம் நம் ஆண்டவருக்காக மிக உறுதியான ஒரு ஆலயத்தைக் கட்டி எழுப்புவோம்” என்றார்.

மக்கள் திரண்டெழும்பி மிகவும் உற்சாகத்துடன் ஒரு பெரிய உறுதியான விசாலமான ஆலயத்தைக் கட்டிமுடித்து ஆண்டவருடைய நாம மகிமைக்கென்று பிரதிஷ்டை செய்தனர். அன்றுமுதல் அனைவரும் அந்த ஆலயத்தில் கூடி ஆண்டவரைத் தொழுதுகொண்டனர். ஆராதனைகள் நடத்தினர். 1869ல் பேட்டன் முதல் இராப்போஜன ஆராதனையை அங்கு நடத்தினார். ஜான் பேட்டன் அனீவா மக்களின் மொழியிலேயே ஒரு பாட்டுப் புத்தகத்தைத் தொகுத்து அச்சிட்டு அனைவருக்கும் வழங்கினார். அனைவரும் ஆராதனையில் பாடல்களைப் பாடிக் கடவுளைத் துதித்தனர். பேட்டன் தம்பதிகள் இரண்டு அனாதை விடுதிகளைக் கட்டி முடித்தனர். ஒன்று சிறுவர்களுக்கும், ஒன்று சிறுமிகளுக்கும். இங்கு தங்கிப் படித்து, வளர்ந்த அநேகர் பின்னாளில் ஆசிரியர்களாகவும் நற்செய்தி ஊழியர்களாகவும் ஆகி தங்கள் தங்கள் கிராமங்களில் நற்செய்தி அறிவிக்கும் ஊழியர்களாயினர். 1907 ஜனவரி 27ஆம் நாள் ஜான் ஜி பேட்டன் தனது 83வது வயதில் இந்த உலகத்தில் தனது பணியை முடித்தார். ஆனால் இவருடைய இடத்தில் இவர் செய்த ஊழியத்தைத் தொடர்ந்து செய்யும்படி வேறு மிஷனெரிகள் சென்று பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அவர்களுள் இவருடைய மகன் ஃப்ராங்கும் ஒருவர்.

இப்படிப் புதிய மிஷனெரிகள் வந்ததைக் கண்ட அக்கிராம மக்கள் ஆச்சரியப்பட்டு, “எங்கள் கிராமத்துக்கு வந்த மிஷனெரிகளைத் துன்புறுத்தினோம், துரத்தியடித்தோம், அவர்களுடைய வீடுகளை அழித்தோம், பொருட்களைக் கொள்ளையடித்தோம். எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் நாங்கள் திரும்பி வந்திருக்கவே மாட்டோம். இந்த மக்கள் இவ்வளவு துன்பங்களும் ஆபத்துக்களும் இருந்தபோதிலும் எங்கள்மீது அன்புகூர்ந்து இயேசுவைப் பற்றிச்சொல்ல வந்திருக்கிறார்கள். அவர்களுடைய தேவன் அவர்களை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுவாரானால் நாங்களும் அந்தத் தெய்வத்தையே வணங்கவேண்டும்” என்றார்கள். இவ்வாறு நியூ ஹெப்ரடீஸ் தீவில் ஜான் பேட்டன் ஆரம்பித்த மிஷனெரி ஊழியம் தொடர்ந்து நடைபெற்று ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களை ஆண்டவரின் தொண்டர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இன்று ஐந்து புராட்டஸ்டண்டு, மிஷனெரி இயக்கங்கள் நியூஹெப்ரிட்ஸ் தீவுகளில் பணி புரிந்து வருகின்றன. டான்னா தீவையும் சேர்த்து எல்லாத் தீவுகளிலும் ஜான் பேட்டன் அவர்களின் அயராத உழைப்பின் பயனாக ஏராளமான கிறிஸ்தவ மக்கள் இன்றும் கிறிஸ்துவை வணங்கிப் போற்றுகிறார்கள்.

மொழியாக்கம்: G.வில்சன்