தாயே! உன் தாய்மை தேவ ஈவு!

சகோதரி சாந்தி பொன்னு

கருவில் உருவெடுத்தபோது தன்னைக் கண்டவன் யார்?
கருவறையின் சுகம் இதுதான் என உணர்ந்தவன் யார்?
முன்னறிந்தவர் கடவுள் – நம் பிறப்பை
முன் உணர்ந்தவள் தாய்
படைத்தவர் பிள்ளையாக்க பரமன் தன்னை கொடுத்தார்
படைத்ததைப் பிறப்பிக்க தாய் தன்னைக் கொடுத்தாள்,
தாயே! உன் ஜீவன் எனக்குள்ளே பேசுகிறது!
நீ மறைந்தாலும் உன் அன்பு எனக்குள்ளே வாழுகிறது!
உன்னில் நான் கண்டது வெறும் தாய்மையும் அல்ல,
உனக்கு நன்றிசொல்ல – இது வார்த்தையும் அல்ல.
இயேசுவின் அன்பின் துளிகளைக் கண்டேன் உன்னில்!
இதயம் கனிந்து உனக்காய்
நன்றி சொல்வேன் உள்ளில் !

முழு உலகமும் கடந்த மே மாதம் 8ஆம் தேதியை அன்னையர் தினமாகக் கொண்டாடியது. தாய்மார் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதைப் பார்க்கிலும் தாய்மை கொண்டாடப்பட வேண்டியது என்பது மிகவும் பொருந்தும். இவ்வுலக வாழ்வில் தேவன் நமக்குப் பலவித உறவுகளைத் தந்திருக்கிறார். அத்தனை உறவுகளும் நாம் அனுபவிக்க மாத்திரமல்ல; அவற்றில் நாம் தேவனைக் காணவேண்டும் என்பதே தேவநோக்கம். அன்பின் அரவணைப்பு வேண்டுமானால் தாய், நட்பு வேண்டுமானால் நண்பன், ஆதரவு வேண்டுமானால் சகோதரன், இப்படியாக எத்தனை! ஆனால், அத்தனை உறவுகளையும் நாம் தேவனிடம் மொத்தமாகப் பெற்றுக் கொள்கிறோம். தேவன் நமக்கு தாயாய் தகப்பனாய் சகோதரனாய் நண்பனாய் ஆசானாய் இன்னும் எல்லாமுமாய் இருக்கிறார். அந்த ஒவ்வொன்றுக்கும் மாதிரியாய் உலக வாழ்விலே நமக்கு உறவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அருளப்பட்டுள்ள சகல உறவுகளுக்குள்ளும் கணவன் மனைவி உறவு மிக மேன்மையானது என்றாலும், ஒவ்வொரு உறவும் ஒவ்வொருவிதத்தில் விலைமதிப்பற்றவைதான்.

படைப்பில் ஆணும் பெண்ணும்:

ஆணும் பெண்ணுமாக மனுஷனைப் படைத்த தேவன், ஒவ்வொருவருக்கும் தனித்துவத்தையும் கொடுத்துள்ளார். ஆணுக்குள் வைக்கப்பட்ட பல காரியங்கள் பெண்ணுக்குள் இல்லை; பெண்ணுக்குள் இருக்கின்ற பல இயல்பான சுபாவங்கள் ஆணுக்குள் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றிணையும்போதுதான் தேவசித்தத்திற் கேற்ப ஒரு பரிசுத்த சந்ததியை உருவாக்க முடியும். தேவனுக்கேற்ற குடும்பத்தை சீரமைக்கமுடியும். ஒரு பிடி மண்ணிலிருந்து ஒரு ஆணைப் படைத்த தேவன், இன்னொரு பிடி மண்ணிலிருந்து பெண்ணைப் படைக்காமல் விட்டது என்ன? ஆம், மனுஷனின் விலா எலும்பிலிருந்து மனுஷியை அதாவது அவனுக்கேற்ற துணையைப் படைத்த தேவ ஞானம் அளப்பரியது! அவர்கள் தனித்துவம் உள்ளவர்களானாலும், அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்தவர்கள் என்பது விளங்குகிறது. அங்கேதான் அவரவர்களில் தேவன் வைத்திருந்த வித்தியாசமான நோக்கங்கள் வெளிப்பட்டன. ஒரு ஆண் தன் துணையைத் தனக்குரியவள் என்று அறிந்து, அன்புகூர்ந்து அவளுக்காகத் தன்னையும் கொடுக்கத்தக்கவனாகிறான். ஒரு பெண், முழுமனதோடு தன்னைத் தன் துணைவனுக்கு அர்ப்பணித்து அவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறாள்.

இருவருக்குள்ளும்தான் எத்தனை வித்தியாசங்கள்! பெண்ணுக்குள் இருக்கும் கருவறை ஆணுக்குள் இல்லை. ஆணுக்குள் இருக்கும் பெலன் பெண்ணுக்கு இல்லை. தாய்மையின் உயர்வும், பாலூட்டும் பக்குவமும், மார்பிலே சாய்த்து அன்பிலே வளர்க்கும் தன்மையும் தாய்மையால்தான் முடியும். பொறுப்பும் பாதுகாப்பும் தலைமைத்துவமும் தகப்பன் ஸ்தானத்தாலேதான் முடியும். இருவரும் இணைந்து செயல்படும்போது குடும்பம் எவ்வளவு அழகாக அமைகிறது. இப்படியாக தேவன் அமைத்த குடும்ப உறவில் அவரவர் தன்தன் பொறுப்பை உணர்ந்து நடந்தால் ஏன் தொல்லைகள்? அந்த வகையில் ஒரு தாயானவள் தான் ஒரு தாய் என்பதை உணருவதற்கு முன்னர் தான் ஒருவனுக்குத் துணைவி என்பதை முதலில் உணரவேண்டும். அதன் பின் அவள் தாயாகும்போது அந்தத் தாய் ஸ்தானத்தில் அவள் நிச்சயம் மேன்மையடைவாள். அவள் புருஷனின் இருதயம் அவளை நம்பும். அவள் பிள்ளைகள் எழும்பி அவளைப் பாக்கியவதி என்பார்கள்.

தாய் என்ற ஸ்தானம்:

தாய் உறவு தொப்புள்கொடி உறவு என்பார்கள். அது அறுக்கப்பட்டே ஆகவேண்டும். அறுக்கப்பட்டபின் பிள்ளை தனித்துவம் அடைகிறான் என்பது உண்மைதான். ஆனால், அந்த உறவு அத்துடன் முடிவதில்லை. ஏனெனில், அந்தத் தொப்புள்கொடி அறுபடும் முன்னர் அந்தத் தாய்க்கும் சேய்க்கும் ஏற்பட்ட உறவும், அந்த உறவின் நிமித்தம் அந்தத் தாய்மை தன்னையே அர்ப்பணித்துச் செய்து முடிக்கின்ற ஒப்பற்ற செயலும் வாழ்விலே மறக்கக்கூடிய காரியமா? இதை மறந்து எத்தனை பிள்ளைகள் ‘என்னை ஏன் பெற்றாய்‘ என்று தாயைப் பார்த்துக் கூசாமல் கேட்கிறார்கள். ‘தகப்பனை நோக்கி: என்னை ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!‘. (ஏசாயா 45:10)

ஒரு பெண் ‘மனைவி‘ என்ற ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்வது என்பது அவ்வளவு கடினம் அல்ல. ஆனால், அவள் ‘தாய்‘ என்ற ஸ்தா னத்தைப் பெற்றுக்கொள்வது என்பது தேவனால் கொடுக்கப்படுகின்ற ஈவு மாத்திரமே. ஒரு பெண் தாய்மை அடைவதில்தான் முழுமை அடைகிறாள் என்று சொல்லுவார்கள். அந்த முழுமை நிலைமை அடைய வேண்டுமானால் அது தேவனாலே மாத்திரமே முடியும் என்பதை எந்தத் தாய்தான் உணருகிறாள்! தேவன் தமது சாயலில் மனுஷனைப் படைத்தார் என்று விசுவாசிக்கிறோம். அதாவது தமது பண்புகளை அவர் நமக்குள்ளே வைத்துள்ளார். அதிலும், ஒரு தாய்க்குள்ளே அவர் வைத்திருக்கும் குணநலன்கள் சொல்லிமுடியாது.

“கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன். அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப் படுவீர்கள்; ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்“ (ஏசா 66:12,13).

அன்று இஸ்ரவேலுக்குக் கர்த்தர் கொடுத்த நம்பிக்கையின் வார்த்தைகள் இவை. இஸ்ரவேலுக்கு நம்பிக்கை கொடுக்கும்போது, கர்த்தர் தம்மை, ஒரு தாய் அன்புக்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதை நாம் கவனிக்கவேண்டும். ஒரு தாய் என்பவள் தேவனுடைய சில குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்ற ஒரு பாத்திரம். அதாவது தேவன் தமது சில பிரத்தியேகமான உன்னத பண்புகளை ஒரு பெண்ணுக்குள் வைத்திருக்கிறார். அந்தப் பெண் தாய்மையடையும்போது அந்த பண்புகளும் அவளுக்குள் வளர ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு சில வேதாகமப் பெண்களைப் பார்க்கலாம்.

மோசேயின் தாயாகிய யோகெபேத்:

மோசே அவள் பெற்றெடுத்த மகன். அந்தப் பிள்ளை தனக்குரியவன் என்றிருந்தும், தனக்குரிய தன் பிள்ளையை அந்தத் தாய் மூன்று மாதங்களின் பின்னும் தன்னோடு ஒளித்து வைத்திருக்க எண்ணாமல், ஒரு நம்பிக்கையோடே தண்ணீரிலே விட்டுவிட்டாள். அந்தப் பிள்ளைக்கு என்னவாகும் என்றே அன்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும் இத்தாய்மை தனக்குரியது என்றிருந்ததையே, தனக்கில்லாததுபோல ஒப்புக்கொடுத்துவிட்டது.

சாமுவேலின் தாயாகிய அன்னாள்:

பல இன்னல்கள் இழிநிலைகளுக்குப் பின்னர் தன் இருதயத்தை ஊற்றி ஜெபித்து, தன் ஜெபம் கேட்கப்பட்டது என்ற நிச்சயத்தைப் பெற்றுக்கொண்டபோது, தனக்கென்று பிறக்கப்போகின்ற பிள்ளையை, பிள்ளை பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று ஒப்புக் கொடுத்தவள் இவள். பின்னர் சொன்னதைச் சொன்னபடியே செய்துமுடித்தாள் இந்தத் தாய். இந்தத் தாய்மை இன்னொரு படி மேலானது.

இயேசுவின் தாயாகிய மரியாள்:

யோகெபேத், அன்னாள் இருவருக்கும் மேலான தாய்மை மரியாளுடையது. மரியாள், தனக்குப் பிறக்கப் போகிறது தனக்குரியது அல்ல என்று தெரிந்துகொண்ட அவள், அந்தக் குழந்தையை அல்ல; பிறக்கப்போகின்ற குழந்தைக்காக, பின்விளைவுகள் எதையும் கணக்கிடாமல், ‘இதோ, நான் அடிமை‘ என்று அவள் தன்னையே முழுமையாக அர்ப்பணித்தாள். முதல் இரு தாய்மாரின் வாழ்விலும் தாய்மை தனக்குரியதைத் தந்தது. ஆனால் மரியாளின் தாய்மையோ தன்னையே அர்ப்பணித்தது.

‘தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே….‘ (எபே.3:9) நம்மை மீட்கும்படி தமது ஒரேபேறான குமாரனை உலகிற்குத் தந்ததும், இயேசுவானவர் நமது பாவங்களுக்காக தம்மையே பலியாக ஈந்ததுமாகிய அந்த அன்பு ஈடு இணையற்றது; ஒப்பற்றது. ஆனாலும், அந்த அன்பின் சிறு துளிகளை இந்தத் தாய்மைகளில் நாம் காண்கிறோமே!

தாய்மையிலும் ஆண்டவர்:

பாவத்தில் மரித்துக்கிடந்த நமக்குப் புதிய ஜீவனைத் தந்து, புதிய மனுஷராக்கி, ஒரு புதுவாழ்வு தருவதற்கு ஆண்டவர் இயேசு தம்மையேக் கொடுத்தார். இதற்காக அவர் தமது ஜீவனையும் கொடுக்க பின்நிற்கவில்லை. அவரால் நாம் மறுபிறப்பை அதாவது ஒரு குழந்தை பிறக்கின்றதுபோல ஆவிக்குள்ளான ஒரு புதுவாழ்வைப் பெற்றோம். ஆண்டவர் இயேசு நம்மில் வைத்த அந்த அன்பு ஒப்பற்றது. இந்த அன்பை நாம் எப்படி உணருவது, அனுபவிப்பது? அதற்கு உதாரணமாக விளங்குவது ஒரு தாய்தான் என்றால் மிகையாகாது.

ஒரு மகப்பேற்று நிலையம் என்பது ‘சாவும் வாழ்வும் சந்திக்கின்ற இடம்‘ – இப்படியாக மகப்பேற்று நிபுணர் ஒருவர் எனக்கு அந்நாட்களிலே கற்றுக்கொடுத்ததை நான் மறப்பதில்லை. ஆம், ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவள் மரணத்தோடு போராடுகிறாள். தாயும் சேயுமாக இரண்டு ஜீவன்கள் அங்கே வாழ்வுக்காகப் போராடுகின்றன. தாயோ தன் ஜீவனையும் பாராமல், தன் குழந்தையை ஜீவனோடு பெற்றெடுக்க வேண்டும் என்பதிலேயே அதிக சிரத்தை எடுக்கிறாள். அதனால், தான் இழக்கக்கூடிய எதனையும் அவள் கணக்குப் பார்ப்பதில்லை. இதுதான் தாய்மையின் உன்னத நிலை.

ஆண்டவர் தம் ஜீவனைக் கொடுத்து நமக்குப் புதுவாழ்வு தந்தார். ஒரு தாய், தன் ஜீவனையும் பாராமல் இவ்வுலகிற்கு நாம் வருவதற்குக் காரணமாகிறாள். இந்தத் தாய்மை போற்றப்பட வேண்டியது மிக அவசியம் அல்லவா! நாம் பிறந்திராவிட்டால், நாம் கிறிஸ்துவின் அன்பையும் கண்டிருக்க முடியாது, அந்த நித்திய வாழ்வில் பிரவேசிக்கவும் முடியாது. நாம் இவ்வுலகில் பிறப்பதற்குக் காரணமான அந்தத் தாய்மைக்காக தேவனை ஸ்தோத்தரிப் போமாக.

போற்றப்பட வேண்டிய தாய்மை:

இப்போது சொல்லுங்கள், தாய்மை ஸ்தானம் என்பது எவ்வளவு மேலானது, கனத்துக்குரியது. இப்படியிருக்க, அந்த ஸ்தானத்தைக் கிருபையாக பெற்ற அருமைத் தாய்மாரே, உங்களைக் குறித்து தேவன் கொண்டிருக்கும் நோக்கம் என்ன, தேவன் உங்களில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? தாய் என்ற ஸ்தானத்தைத் தாம் அடைந்த பாக்கியத்தையோ, தாய்மையின் மேன்மையையோ உணராமல், அந்தத் தாய்மை போற்றப்பட வேண்டியது, அதற்கேற்ப வாழவேண்டுமே என்ற பொறுப்பும் இல்லாமல் எத்தனை தாய்மார், அர்ப்பணத்திற்குப் பதிலாக, சுயத்திற்கு அதாவது தங்கள் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தங்கள் குடும்ப உறவுகளைக் கட்டிக் காக்கவேண்டிய தாய்மாரே, தாம் பெற்றெடுத்த பிள்ளைகள், அதாவது தான் ஒரு தாய் என்ற ஸ்தானத்தை அடையக் காரணமாயிருந்த அந்த குழந்தைச் செல்வங்களையும் தவிக்க விட்டுவிட்டு, உறவுகளை உடைத்தெறிந்து விட்டு வெளியேறுகின்ற தாய்மார் எத்தனை! தங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையில் வளர்க்கவேண்டிய இந்த தாய்மாரே, தங்கள் பிள்ளைகளின் குற்றங்களை மறைத்து பிறர் பிள்ளைகளைக் குற்றப்படுத்துவதும், பிள்ளைகளுக்குப் போட்டி பொறாமை வளர தாய்மாரே காரணமாகுவதும் துக்கத்திற்குரிய விஷயம். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே வாழவிடாமல், பிள்ளைகள் வாழ்வைத் தாமே வாழ எத்தனிக்கும் தாய்மாரும் இருக்கிறார்கள். இன்று பல குடும்பங்களில் தாய்மாருக்குப் பிள்ளைகளே முதற் கடவுளாகவும் மாறிவிடுகின்றதையும் காண்கிறோம்.

தாய்மை என்பது தேவனருளிய ஈவு. அது கர்த்தராலே மாத்திரமே ஆகும். கர்த்தர் ஒரு ஸ்தானத்தை நம் வாழ்வில் அனுமதிக்கிறார் என்றால், அந்த ஸ்தானம், அதைத் தந்தவரை மகிமைப்படுத்தவேண்டுமே தவிர, அவர் தூற்றப்படத்தக்கதாக நாம் வாழக்கூடாது. ஒரு குடும்பம் தேவபயத்திலும் பக்தியிலும் தழைத்தோங்க வேண்டுமானால் தாயின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. ‘இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். தன் கைகளின் பிரயாசத்தால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்‘ என்று ஒரு குணசாலியான ஸ்திரீயைப்பற்றி நீதி.31ஆம் அதிகாரத்தில் பல காரியங்களை வாசிக்கிறோம். இன்று எத்தனை தாய்மார் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கிறார்கள்? எத்தனை தாய்மார் தங்கள் குடும்ப நலனுக்காக தங்கள் சொந்த சுகங்களை இழக்கத் தயாராக இருக்கிறார்கள். எது தாய், எது பிள்ளை என்று வேறுபாடு இன்றி உடையிலும் வாழ்க்கை நடையிலும் காணப்படுவது மிகவும் துக்கம். அந்நாட்களிலே தாய்மாருக்குள் இருந்த அர்ப்பணம் இந்நாட்களில் மிகவும் குறைந்திருக்கிறது. கிறிஸ்தவ குடும்பங்களிலேயே இது காணப்படுவதுதான் மிக மிக துக்கம்.

அந்நாட்களில் ஜான் வெஸ்லி போன்ற பல பிரமுகர்கள் உருவாகக் காரணமாயிருந்தது அவர்களது தாய்மார்தான். வேதாகமத்திலே தீமோத்தேயுவை உருவாக்கியது யார்? அவரது தாயும் பாட்டியும்தானே. இன்று தூங்கி வழியும் தாய்மாரும், உலக காரியங்களிலும் தங்கள் சொந்த அலங்காரங்களிலும் அதிக கவனம் செலுத்தும் தாய்மாரினால் எப்படி கர்த்தருக்கேற்ற வழியிலே பிள்ளைகளை வளர்க்க முடியும்? சமூக சேவை என்றும், ஊழியம் என்றும் தங்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்புவதால், அநேக தாய்மார் வீடுகளில் இருப்பதில்லை. குடும்பத்தில் கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை. இதனால் குடும்ப உறவுகள் சின்னாபின்னமாகின்றன. சேவை மனப்பான்மை நல்லதுதான். ஆனால் எதற்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்பதில் ஒவ்வொரு தாயும் கவனமாக இருக்க வேண்டும். பொறுமை தாழ்மை புரிந்துணர்வு விட்டுக்கொடுத்தல் அர்ப்பணம் தியாகம் இவை யாவும் படிப்புக்கும் எழுத்துக்கும் ருசியாகத் தான் இருக்கும். ஆனால் இவை வாழ்க்கையில் காணப்படாதபோது இந்த எழுத்துக்களால் என்ன பலன்? சாதாரணமாகக் கோபித்தால்கூட இன்றைய தாய்மாரினால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஒன்றில் புருஷனைவிட்டுப் பிரிந்துவிடுவார்கள்; சிலசமயம் குடும்பத்தையேப் பிரித்து விடுவார்கள். இன்னும் சிலசமயம், தமக்கென வேறு உறவுகளைத் தேடிக்கொண்டு போவதுதான் அதிக வேதனைக்குரிய விஷயம். பிள்ளைகளே தாய்மாருக்கு ஆலோசனை சொல்லுகின்ற சந்தர்ப்பங்கள்கூட இன்றைய கால கட்டத்திலே அதிகரித்திருப்பது துக்கத்துக்குரியது, சிந்திக்கப்பட வேண்டியது.

இயேசுவும் தாயும்:

இயேசு தமது மரணநேரத்திலும் தன் தாயாகிய மரியாளைக் கனப்படுத்தினார். அப்படியே பிள்ளைகளும் தங்கள் தாய்மாரைக் கனப்படுத்த வேண்டும் என்று சொல்லுவோம். நல்லதுதான், ஆனால் இதிலே ஒரு காரியத்தை நாம் கவனிக்க வேண்டும். மரியாள் என்ற தாய் தன் கன்னித்தன்மையை, நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுபோகக்கூடிய சூழ்நிலையை, தன் வாழ்வை, தன் நற்பெயரை, தன் எதிர்கால நம்பிக்கையை யாவையுமே அர்ப்பணித்தவள். மாத்திரமல்ல, தன் முதற் குழந்தையைப் பெற்றெடுத்த போதும், தொடர்ந்து நடந்த ஒவ்வொரு சம்பவங்களின் போதும், இறுதியில் சிலுவையின் அடிவாரத்திலே கண்ணீரோடும் புலம்பலோடும் நின்றிருந்த போதும் மரியாள் மெளனமாகவே இருந்தாள். எல்லாவற்றையும் தன் இருதயத்திலே போட்டு சிந்தித்துக் கொண்டிருந்த பொறுமையின் சின்னமாக விளங்கிய மரியாளின் தாய்மை எங்கே? இன்றைய நவ நாகரீகத் தாய்மை எங்கே? குழந்தைப் பேற்றைக்கூட தமது விருப்பப்படி நடத்தத் துணிகின்ற தாய்மாரை என்ன சொல்லுவது? மரியாளின் தாய்மை ஸ்தானம் கனத்துக்குரிய பாத்திரமாகவே திகழ்ந்தது. இயேசுவும் தன் மரணநேரத்திலும் அந்தத் தாயைக் கனப்படுத்தத் தவறவில்லை.

தாயே நீ ஒரு பிரதிநிதி:

என் அன்புத்தாய்மாரே, தாய்மை என்பது மிக மிக மேன்மை வாய்ந்தது. இந்த ஸ்தானத்தை எட்டாத எத்தனை பெண்கள் தங்களுக்குள் அழுகிறார்கள் என்பதை உங்களால் உணருவது கடினம்தான். ஒரு காரியத்தை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது. ‘நீங்கள் ஆண்டவரின் பிரதிநிதிகள்‘. நாம் ஆவிக்குள்ளாகப் பிறக்க ஆண்டவர் தம் ஜீவனைக் கொடுத்தார். அந்த ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாம் மாம்சத்திலே அதாவது ஒரு மனுஷனாகப் பிறக்க நீங்கள் உங்களைக் கொடுத்தீர்கள். இந்தத் தாய்மை எவ்வளவு உயர்ந்தது பார்த்தீர்களா!

இப்படியிருக்க, உங்களின் ஒவ்வொரு செய்கையும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய அன்பின் துளிகளைப் பிரதி பலிக்கவேண்டுமே! கிறிஸ்துவானவர் நமக்காக தம்மைக் கொடுத்த அந்த அர்ப்பணத்தின் சாயலைப் பிரதிபலிக்கவேண்டுமே! பிள்ளைகள் கர்த்தர் தந்த சுதந்திர ஈவுகள் என்பதை நினைத்து, அந்தப் பிள்ளைகளை தேவனுக்கேற்ற பயத்திலே வளர்க்க வேண்டிய பொறுப்பில் நீங்கள் பின் நிற்பீர்களானால் கர்த்தர் உங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைத்தவர்களாகிவிடுவீர்கள். நீங்கள் ஒரு யோகெபேத் ஆகவோ, அன்னாளாகவோ, மரியாளாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் உங்களை எப்படி இருப்பதற்காக அழைத்தாரோ அதை உணர்ந்து அந்த நிலையிலே தேவனுக்கு உத்தமமாக வாழுங்கள். இன்னல்கள் வரும்; சவால்கள் வரும். ஆனால் அவற்றை நீங்கள் மேற்கொள்ள உன்னத பெலனும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். உங்கள் வெற்றி வாழ்வை, உங்கள் தாய்மையை உங்கள் பிள்ளைகள் மாத்திரமல்ல, சந்ததியும் வாழ்த்தும். தேவனும் உங்களில் மகிழ்ந்திருப்பார். தாய்மை தேவனுடைய ஈவு. அதற்காக நாம் ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமாக. ஒவ்வொரு தாயையும், அவளுக்குள் இருக்கும் தாய்மையையும் நாம் வாழ்த்துவோமாக!

சத்தியவசனம்