எம்.எஸ்.வசந்தகுமார்

4 ஆம் பகுதி – தேவனுடைய வழிமுறையை அறிந்திருந்தான் (சங். 56:8)

அதிகளவு பயத்துடன் இருந்த தாவீது தேவனிடம் மன்றாடும்போது அவருடைய வார்த்தையின் மூலம் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும், கடந்த காலத்தில் அவர் எவ்வாறு தன்னை வழிநடத்தியுள்ளார் என்பதையும், அவருடைய வல்லமையையும் மாத்திரமல்ல, அவருடைய வழிமுறையையும் அறிந்திருந்தான். அதாவது, அவர் தம்முடைய பிள்ளைகள் துயரப்படும்போது அவர்களுக்காக என்ன செய்கின்றார் என்பதையும் அறிந்திருந்தான். உண்மையில், தேவனைப்பற்றி தாவீதுக்கு இருந்த இத்தகைய அறிவே, பயமும் துயரமும் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும், தன்னைப் பாதுகாக்கும்படி அவன் தேவனிடம் மன்றாடுவதற்கான காரணமாயிருந்தது. இதனால், தன்னுடைய துயரங்களையெல்லாம் தேவன் அறிந்தவராகவும், தன் மீது அவர் கரிசனை உள்ளவராகவும் இருப்பதாகத் தாவீது 8ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்:

“என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?“ (சங். 56:8).

அனுதினமும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் சகல காரியங்களையும் தேவன் அறிந்தவராகவும், அவற்றை ஒருபோதும் மறவாதவராகவும் இருப்பதை இவ்வசனம் சிறப்பான விதத்தில் அறியத்தருகின்றது. வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போதும், நெருக்கடியான சூழ்நிலைகளில் சிக்கித் தடுமாறும்போதும், நம்முடைய கஷ்டம் எங்கே தேவனுக்குத் தெரியப்போகிறது என்று மனிதர்கள் எண்ணுவது இயற்கை. ஆனால், நம்முடைய துயரங்கள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கின்றார். நம்முடைய மனதின் வேதனைகள் அனைத்தும் அவருக்கு நன்றாகத் தெரியும். இதை அறிந்திருந்த தாவீது “என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்“ என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வாக்கியத்தில் “எண்ணியிருக்கிறீர்“ என்னும் சொல், கணக்கியலோடு சம்பந்தப்பட்டது. சவுலுக்குப் பயந்து தாவீது எத்தனை தடவைகள் எங்கெல்லாம் சென்றானோ, அதையெல்லாம் தேவன் எண்ணிக் கணக்கெடுத்து வைத்திருந்தார். தாவீதுக்குக்கூட இது மறந்து போயிருக்கலாம். ஆனால், தேவன் ஒன்றையும் மறக்காமல் எல்லாவற்றையும் எண்ணி வைத்திருந்தார்.

இதைப்போலவே, நம்முடைய வாழ்விலும் அன்றாடம் நடைபெறும் சகல காரியங்களையும் தேவன் அறிந்திருப்பது மாத்திரமல்ல; அவற்றை எண்ணிக் கணக்கெடுத்து வைத்துள்ளார். இதனால், நான் படும் கஷ்டம், வேதனை, அலைச்சல் தேவனுக்கு எங்கே தெரியப்போகிறது என்று எண்ணி கலங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. தேவனுக்குச் சகலமும் நன்றாகத் தெரியும். அவர் நம்முடைய வாழ்வின் சகல காரியங்களையும், நாம் மிகவும் அற்பமாக எண்ணும் விஷயங்களையும் முக்கியமானதாகக் கருதுகின்றார். அவர் நம் “தலைமயிரைக்கூட எண்ணிக் கணக்கிட்டு வைத்திருக்கின்றார்“ (மத்.10:30). உண்மையில், அவரைப்போல நம்மீது அக்கறையும் கரிசனையும் உள்ளவர்களாக எவருமே இருக்கமுடியாது.

அன்றாடம் நம் வாழ்வில் நடைபெறும் சகல காரியங்களையும் எண்ணிக் கணக்கு வைக்கும் அளவுக்குத் தேவன் நம்மீது கரிசனை உள்ளவராக இருப்பதனால், துயரகாலங்களில் நாம் சிந்தும் கண்ணீர்த் துளிகளையெல்லாம் அவர் பெறுமதிப்பான முத்துக்களாகச் சேகரித்தும் வைத்திருக்கின்றார். அக்காலத்தில் மரித்தவர்களுக்காக அழுது புலம்புபவர்கள் தங்களுடைய துயரத்துக்கு அடையாளமாகத் தாம் சிந்தும் கண்ணீரைச் சிறு குப்பிகளில் சேகரித்து அதை சவப் பெட்டிகளில் அல்லது கல்லறைகளில் வைப்பது வழக்கம். அண்மைக் காலங்களில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோலினால் செய்யப்பட்ட இத்தகைய சில குப்பிகளைக் கல்லறைகளில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், துயரத்தில் அல்லது வியாதியில் இருப்பவர்களுக்கு ஆறுதலளிக்க வருபவர்களும் அச்சந்தர்ப்பத்தில் துயரத்தில் இருப்பவர் சிந்தும் கண்ணீரைச் சிறு தோற் குப்பிகளில் ஞாபகார்த்தமாகச் சேகரித்து வைப்பதும் அக்கால வழக்கமாயிருந்தது. உண்மையில், கண்ணீரைச் சேகரிக்கும் அக்கால பழக்கத்தைக் கருத்திற்கொண்டவனாகவே தாவீது, “என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்“ என்று தேவனிடம் தெரிவித்துள்ளான்.

தேவன் நம்முடைய கண்ணீரைக் காண்கிறவராகவே இருக்கின்றார். அழுது மன்றாடிய எசேக்கியாவிடம் “உன் கண்ணீரைக் கண்டேன்“ (2இராஜா.20:5) என்று தெரிவித்த தேவன், நம்முடைய கண்ணீரையும் காண்கிறவராக இருக்கின்றார். தேவனுடைய பார்வையில் நம்முடைய கண்ணீர் மிகவும் பெறுமதிப்பானதாக இருப்பதனால் நாம் சிந்தும் கண்ணீரையெல்லாம் அவர் சேகரித்து வைக்கின்றார். வனாந்தரத்தில் பிரயாணம் செய்பவன் ஒவ்வொரு துளி தண்ணீரையும் எவ்வாறு பத்திரமாகச் சேகரித்து வைப்பானோ, அவ்விதமாகத் தேவனும் நம்முடைய கண்ணீரை மிகவும் பெறுமதிப்பானதாகக் கருதி அவற்றையெல்லாம் சேகரித்து வைத்திருக்கின்றார்.

தேவன் நம்முடைய கண்ணீரையெல்லாம் சேகரித்து வைப்பதினால், “அவைகள் உமது கணக்கில் அல்லவோ இருக்கிறது“ என்றும் தாவீது இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளான். மூலமொழியில் “கணக்கில்“ என்பது “புத்தகத்தில்“ என்றுள்ளது. இதனால், திருவிவிலியத்தில் இவ்வசனம், “இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?“ என்றும், இலகு தமிழ் மொழி பெயர்ப்பில் “அவை உமது பதிவேட்டில் அல்லவோ இருக்கின்றன“ என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஜேம்ஸ் அரசனின் மொழிபெயர்ப்பில் Are they not in thy book? என்றுள்ளது. இதைப்போலவே ஏனைய ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் இவ்வாக்கியம் உள்ளது. உண்மையில், நம்முடைய வாழ்வைப்பற்றிய விபரங்களைக்கொண்ட புத்தகத்தைத் தேவன் வைத்திருப்பதை இவ்வசனம் அறியத்தருகின்றது. இப்புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் மட்டுமல்ல (யாத். 32:32-33, சங்.69:28, 87:6, தானி.12:1), நாம் பிறப்பதற்கும் முன்பே நம்முடைய வாழ்வைப் பற்றிய சகல விபரங்களும் உள்ளன (சங். 139:16, வெளி.13:8, 17:8). தேவன் நம்முடைய அலைச்சல்களையும், கண்ணீர் சிந்திய சம்பவங்களையும் தம்முடைய புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதாகத் தாவீது கூறுகின்றான். மல்கியா தீர்க்கதரிசி இதைப்பற்றிக் கூறும்போது “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது“ என்று குறிப்பிட்டுள்ளார் (மல்.3:16). மல்கியாவின் காலத்தில் பெர்சிய அரசர்கள் தங்களுடைய இராட்சியத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளைப் புத்தகங்களில் பதிவு செய்வது வழக்கம். இதைப்போலவே தேவனும் நம்முடைய வாழ்வின் சகல காரியங்களையும் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதி அவற்றைப் பதிவுசெய்து வைத்திருப்பதாக மல்கியா சுட்டிக்காட்டுகிறார். இதை அறிந்திருந்த தாவீது, தன்னுடைய வாழ்வின் அன்றாட சம்பவங்களெல்லாம் தேவனுடைய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகின்றான்.

தேவன் ஆவியாக இருப்பதனாலும் (யோவா.4:24), தேவனுடைய வாசஸ்தலமான பரலோகம் ஆவிக்குரியதாக இருப்பதனாலும், தேவன் எழுதுவதையும் அவர் புத்தகங்கள் வைத்திருப்பதையும் சொல்லர்த்தமாக அல்ல, உருவக அடையாளங்களாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும். எழுதப்படுபவை அழியாதிருப்பது போலவே, தேவனும் நம் வாழ்வுச் சம்பவங்களையெல்லாம் ஒருபோதும் மறவாதவராய் இருக்கின்றார் என்பதையே அவருடைய புத்தகத்தைப்பற்றிய வேதாகமக் குறிப்புகள் அறியத்தருகின்றது. உண்மையில், தேவனுடைய ஞாபகப் புஸ்தகத்தைப்பற்றிய மல்கியாவின் குறிப்பு எஸ்தர் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எஸ்தரின் சரித்திரத்தில், அரசனைக் கொல்லுவதற்காக வகுக்கப்பட்ட சதித்திட்டத்தை மொர்தெகாய் வெளிப்படுத்தியபோது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் அச்சந்தர்ப்பத்தில் மொர்தெகாய்க்கு அரசன் எவ்வித வெகுமதியும் கொடுக்கவில்லை. ஆனால் நடந்த காரியங்கள் அனைத்தும் அரசத் தினக்குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டன (எஸ்.2:23). பிற்காலத்தில் அத்தினக்குறிப்பேட்டை வாசித்த அரசன், மொர்தெகாய்க்குச் செய்யத் தவறிய கனத்தைச் செய்தான் (எஸ்.6:1-11). இச்சம்பவத்தை அறிந்திருந்த மக்களுக்குத் தேவனைப்பற்றி கூறும் மல்கியா, அவரிடத்தில் ஞாபகப்புஸ்தகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மானிட அரசனைவிட தேவன் மேலானவராக இருப்பதனால், அவர் எதையும் மறந்துவிடமாட்டார். அவர் தம்முடைய ஜனங்களின் செயல்களை ஞாபகத்தில் வைத்திருந்து ஏற்றகாலத்தில் அவர்களுக்கு கனத்தையும் வெகுமதியையும் அளிப்பவராக இருப்பதை இதன்மூலம் மல்கியா அறியத்தருகின்றார். உண்மையில், “தேவனுடைய பதில் நடவடிக்கைக்காக நம்முடைய அலைச்சல்களும், கண்ணீர்களும் தேவனுடைய பிரசன்னத்தில் வைக்கப்பட்டுள்ளன“.

தேவன் நம்முடைய கண்ணீரையெல்லாம் சேகரித்து வைத்திருக்கின்றார். நம்முடைய வாழ்வின் சந்தோஷமான சம்பவங்களை மட்டுமல்ல, துயரகாலங்களில் நாம் படும் வேதனைகள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கின்றார். “உயிருக்குப் பயந்து உறவினர்களையும் நண்பர்களையும் விட்டு தனிமையில் அலைந்து திரிந்த தாவீதுக்கு இருந்த ஒரேயொரு ஆறுதல், தேவன் சகலவற்றையும் அறிந்திருக்கின்றார் என்னும் சத்தியமேயாகும்.“ இதைப்போலவே, இங்கிலாந்தில் அரசியலிலும் சபையிலும் அதிகளவு குழப்பங்கள் நிறைந்திருந்த காலத்தில் பல தடவைகள் இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் மாறி மாறிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தமான நிலையில் இருந்த “பிஷப் அஷர்“ (Archbishop Ussher 1586-1665) என்பவரை அவருடைய அலைச்சல்களில் ஆறுதல்படுத்திய வேதப்பகுதியாக 56ம் சங்கீதம் உள்ளது. துயரப்படுவோரின் கண்ணீரையெல்லாம் தேவன் சேகரித்து வைத்திருக்கிறார் என்னும் சத்தியம், 55 வருஷங்களாகச் சுவிசேஷத்தை அறிவித்து வந்த பிஷப் அஷருக்குத் தேவன் தன் மீது எவ்வளவு அக்கறையுள்ளவராக இருக்கின்றார் என்பதைக் காண்பித்தது.

பிஷப் அஷருக்கு மாத்திரமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் தாவீதின் வார்த்தைகள் ஆறுதலைத் தருவதோடு, நெருக்கடியான நேரங்களிலும் பயங்கரமான சூழ்நிலைகளிலும் தேவன்மீது நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. இதற்கு, தாவீதைப்போல நாமும் தேவனைத் தனிப்பட்டரீதியாக அறிந்திருக்கவேண்டும். அவருடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலம் அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கின்றார் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. நம் வாழ்வின் சந்தோஷமான நாட்களில் மாத்திரமல்ல, துயர காலங்களிலும் அவர் நம்மோடிருக்கின்றார். நாம் எதிர்நோக்கும் சவால்களையும், பிரச்சனைகளையும்விட அவர் பெரியவராகவும் வல்லமையுள்ளவராகவும் இருக்கின்றார். நெருக்கடியான சூழ்நிலைகளில் நம்மைத் தாக்கும் பிரச்சனைகளையும் நம்மை எதிர்க்கும் மனிதர்களையும் பார்த்து பயப்படாமல், இவற்றைவிட பெரியவராகவும் வல்லமையுள்ளவராகவும் இருக்கும் தேவனையே நாம் நம்பி வாழவேண்டும்.

“கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்“ (நீதி.16:20, எரே.17:7), “அவனைக் கிருபை சூழ்ந்து கொள்ளும்“ (சங்.32:10) என்று கூறும் வேதாகமம், “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்“ (நீதி.29:25) “அவனை எவராலும் அசைக்கமுடியாது“ (சங்.125:1) என்பதை அறியத்தருகின்றது. இதை அனுபவ ரீதியாக அறிந்திருந்த தாவீது, இதைப்பற்றி 27ம் சங்கீதத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளான். தாவீதைப்போல நாமும் தேவனை நம்பும் போது, 27ம் சங்கீதத்திலுள்ள பின்வரும் வார்த்தைகள் நம்முடைய வாழ்வின் அனுபவ சாட்சியாக மாறிவிடும்.

“கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்“ (சங் 27:1-3).