ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2019ஆம் ஆண்டில் நம்முடைய தேசத்தின் ஆளுமைப் பொறுப்பை நிர்ணயிருக்கிற அதிமுக்கியமான நாட்களில் நாம் வந்திருக்கிறோம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக நாம் ஜெபித்து வருகிறோம். “தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” (யோவேல் 2:21). தேசத்தில் அதிசயிக்கப்படதக்க மாறுதல்களை கர்த்தர் செய்யவேண்டுமென தொடர்ந்து ஜெபிப்போம். நிச்சயமாகவே கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

இவ்வாண்டின் அரசுத்தேர்வுகள், கல்வி இறுதியாண்டின் தேர்வுகளை எழுதின அனைத்து பங்காளர் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் ஜெபித்துள்ளோம். மேலும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் அனைத்து பிள்ளைகளும் நன்கு எழுதுவதற்கு வேண்டுதல் செய்கிறோம். கர்த்தர்தாமே சிறந்த ஞானத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அவர்களது மேற்படிப்புகளைத் தொடரச்செய்வதற்கு உதவி செய்வாராக. பங்காளர்கள் தங்களது ஜெப விண்ணப்பங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து உங்களுக்காக நாங்கள் பாரத்துடன் ஜெபிப்போம். இவ்வருட பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக்கொள்வதற்கும் நினைவூட்டுகிறோம்.

ஏப்ரல் 6ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை கிழக்கு தாம்பரம் Upper Room Prayer Hall இல் சத்தியவசன ஜெபக்கூட்டமாகவும் லெந்துகால சிறப்புக்கூட்டமுமாகவும் நடைபெறுகிறது. பேராசிரியர் எடிசன் அவர்கள் சிறப்புச் செய்தியளிப்பார்கள். சென்னையிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

இவ்விதழில் இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாடு மரணம், உயிர்த்தெழுதல் ஆகியனவற்றை சிந்திக்கும்படியாக செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. கெத்செமனே பூங்காவில் என்ற தலைப்பிலான செய்தியில் ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்படும் முன் நடந்த சம்பவங்களை விளக்கி Dr. உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ளார்கள். இயேசு சிலுவையில் மொழிந்த முதல் வார்த்தை பிதாவே! இவர்களுக்கு மன்னியும் என்ற தலைப்பில் பேராசிரியர் எடிசன் அவர்களும், மனந்திருந்தாத கள்ளன் என்ற தலைப்பில் சுவி. சுசி பிரபாகரதாஸ் அவர்களது செய்தியும் இடம் பெற்றுள்ளது, சிலுவை என்பது மாற்றம் செய்யும் இடம் அல்ல, மாற்றீடு செய்யப்படுகின்ற இடம் என்கிற ஆழ்ந்த சத்தியத்தை சிலுவையில் அறையப்பட்டிருக்கிறாயா? என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். மேலும் நன்மையானவைகளைப் பேசும் இரத்தம் என்ற தலைப்பில் சகோ. பழனிவேல் ஆபிரகாம் அவர்களது செய்தியும், உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதம் என்ற தலைப்பில் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்களது செய்தியும், திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் வழங்கிய குடும்பங்களுக்கான தொடர் செய்தியும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்