பிதாவே, இவர்களுக்கு மன்னியும்!

பேராசிரியர் S.C.எடிசன்
(மார்ச்-ஏப்ரல் 2019)

“அப்பொழுது இயேசு பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்” (லூக்கா 23: 34).


இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் சத்திய வசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இந்த லெந்து காலங்களில் நாம் தேவனை அதிகமாகத் தேடுகிறோம். அதிகமாக வேதத்தை வாசிக்கிறோம். அதிகமாக ஜெபம் பண்ணுகிறோம். இப்போது சிலுவையில் இயேசு சொன்ன அந்த ஏழு வார்த்தைகளில் முதல் வார்த்தையை தியானிக்க இருக்கிறோம்.

இயேசு சிலுவையில் செய்த முதல் காரியம், சிலுவையில் அறைந்தவர்களையும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் மன்னித்ததாகும். இயேசு ஏன் நம்மை மன்னிக்கிறார்? அதற்கு ஒரே காரணம்: அவர் நம்மில் வைத்த அன்பு!

ஒருவன் தவறு செய்யும் தன் பிள்ளையை கொன்றுபோடுவதில்லை. ஏனென்றால், அது அவனுடைய பிள்ளை. ஆகையால் அவன் அந்த பிள்ளையை மன்னித்து திருத்துகிறான். அதே வண்ணம், இயேசுவும் சிலுவையில் அதையே செய்தார். நாம் அவரால் உண்டானவர்கள்; நாம் அவருடைய பிள்ளைகள். எனவே நம்மேல் உள்ள அன்பினால் அறியாமல் செய்த பாவத்தை ஆண்டவர் நமக்கு மன்னிக்கிறார். இயேசு சிலுவையில் செய்த அதே ஜெபத்தை இன்றும் அறியாமல் பாவத்தில் இருக்கிற உங்களுக்காகவும் செய்து கொண்டிருக்கிறார்.

அருமையானவர்களே, நீங்கள் மனந்திரும்பி பாவ அறிக்கை செய்து பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். இயேசுதான் என் பாவத்தை மன்னித்துவிட்டாரே நான் இனி ஏன் பாவத்தைக் குறித்துக் கவலைப்பட வேண்டும். ஆண்டவர் தருகிற இந்த பாவ மன்னிப்பு நிபந்தனை அற்றது அல்ல. ஆண்டவர் தருகின்ற நீங்கள் பெற்றுக்கொண்ட மன்னிப்பை இழந்து போகவும் முடியும். இரண்டு விதத்தில் நீங்கள் அதை இழந்து போக நேரிடலாம்.

முதலாவது, தேவன் தருகிற மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதைப் புறக்கணிக்கலாம். இரண்டு சகோதரருக்குள் சண்டை வந்தபோது அண்ணன் சொன்னான்; நீ போடா, நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்று அவன் சொல்லலாம். உம்முடைய மன்னிப்பு எனக்கு வேண்டியதில்லை என்றும், என்ன செய்யணும் என்று எனக்குத் தெரியும் என்று சொல்லி அவன் போகலாம். அப்படியே நீங்களும் இயேசு உங்களை அழைத்து மன்னிக்கும்போது உம்முடைய மன்னிப்பு எனக்கு வேண்டாம். ஒருவேளை எனக்குப் பிழைக்க தெரியும் என்று நீங்கள் இன்றைக்கு இருக்கலாம். நீங்கள் அழிவைத் தெரிந்துகொள்ளுகிறீர்கள். இது மன்னிப்பைப் பெறாமல் அழிவதற்குரிய முதல் வழி.

இரண்டாவது, தேவனிடத்தில் மன்னிப்பை பெற்ற நான், எனக்கு விரோதமாக தப்பிதங்களைச் செய்கிறவர்களை மன்னிக்கவில்லையென்றால் நான் பெற்ற மன்னிப்பை இழந்து போவேன். வேதத்திலிருந்து ஒரு உவமையின் வாயிலாக இதை விளக்க விரும்புகிறேன். ஒருவன் தன் எஜமானிடத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தான். கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் சிறைக்குப் போகவேண்டிய நெருக்கடியில் எஜமானிடம் சென்று எனக்கு கொஞ்சம் நாள் தாரும், நான் கடனை கொடுத்து தீர்க்கிறேன் என்றான். அந்த எஜமானுக்குத் தெரியும், இவனால் திருப்பிக் கொடுக்கவே முடியாது என்று. ஆனாலும், தன்னிடத்தில் கெஞ்சிக்கேட்டதினாலும் அவனுக்கு அவகாசம் கொடுக்காமல் அவன் கடனை மன்னித்து அன்றைக்கு அவனை விடுதலையாக்கினான். இதுதான் நாம் அழுது ஜெபம் பண்ணும்போது தேவன் செய்கிற காரியமாயிருக்கிறது.

அந்த மன்னிக்கப்பட்ட வேலைக்காரன் என்ன செய்தான்; அவன் வெளியே போனான். தன்னிடத்தில் நூறு ரூபாய் கடன்பட்ட ஒருவனை கண்டு அவன் தொண்டையை நெறித்து தருகிறாயா? இல்லையா? என்று அவனை மிரட்டினான். அவனைக் கொண்டு போய் சிறையிலே போட்டு விட்டான். அவன்கூட வேலை பார்த்தவர்கள் இதைப் பார்த்து தங்கள் எஜமானிடத்தில் சொன்னார்கள். எஜமான் கடும் கோபம் அடைந்து அந்த கொடிய வேலைக்காரனை அழைத்து, நான் உனக்கு இரங்கினதுபோல நீயும் அவனுக்கு இரங்க வேண்டாமோ என்று சொல்லி அவனையும் அவன் குடும்பத்தையும் சிறைச்சாலைக்குள் தள்ளிவிட்டான். இரக்கமில்லாத வேலைக்காரன் மன்னிப்பை இழந்துபோனான்.

நீங்களும் நானும் துணிந்து செய்யும் பாவங்களால் தேவனின் மன்னிப்பை இழந்து போக முடியும். மத்.18:35ஜ வாசிக்கலாம். “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்”. மன்னிப்பு நிபந்தனையற்றதல்ல; எந்த அளவினால் அளக்கிறோமோ அந்த அளவின்படியே நமக்கும் அளக்கப்படும். மனைவியின், கணவனின், நண்பனின் துரோகத்தை மறக்க முடியவில்லை, எப்படி மன்னிக்க முடியும் என்று பலர் கதறுகிறார்கள். ஒரு நடந்த சம்பவத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். இரண்டாம் உலகப் போரிலே ஜெர்மானியர்களின் கை ஓங்கி இருந்த பொழுது எதிர்த்த அநேக நாடுகளிலிருந்து யூதர்களையும் மற்ற பெண்களையும் பிடித்துக்கொண்டு வந்து ஏறக்குறைய 90,000 பேரை ரேவன்ஸ் புருக் என்னும் ஒரு கான்சன்ரேசன் கேம்பில் அடைத்து வைத்திருந்தார்கள்.

The Hiding Place என்னும் புத்தகத்தை எழுதிய ஹாரிடன் பூம் அதில் இருந்தார். அங்கு நடந்த ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறார். நான் அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். சித்ரவதையினால் மரித்த ஒரு சிறு பெண் அவள் உடைக்குள் இருந்து ஒரு தாள் அகப்பட்டது, அந்த தாளிலே ஒரு ஜெபம் இருந்தது. அந்த ஜெபத்தை நான் வாசிக்கிறேன்.

ஆண்டவரே, நன்மை செய்கிற ஆண்களையும் பெண்களையும் மட்டும் நினைவுகூராமல் எங்களை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்துகிறவர்களையும் நினைவுகூர்ந்து ஆசீர்வதியும். அவர்கள் எங்களுக்கு செய்யும் கொடுமையையும், எங்களை உபத்திரவப்படுத்தியதையும் நினையாதேயும். அதற்கு பதிலாக, அந்த உபத்திரவங்கள் எங்களில் உருவாக்கியிருக்கிற நற்கனிகளை நினைத்தருளும். பாடுபடுகிற எங்களிடையே உள்ள அன்பின் ஐக்கியம், பாடுகளில் தைரியம் பகிர்ந்துகொள்ளும் தன்மை, பெருந்தன்மையுள்ள இருதயம் ஆகிய இவையெல்லாம் இந்த உபத்திரவத்தினாலேதானே எங்களில் உருவானது. தேவனே, எங்களை உபத்திரவப்படுத்தினவர்களை நீர் நியாயம் விசாரிக்கும் நாளிலே எங்களில் உண்டான இந்த நற்கனிகளே அவர்களுக்கு மன்னிப்பாய் இருக்கட்டும் என்று ஜெபித்தாள்.

சகோதரனே, சகோதரியே, சித்ரவதையில் மரித்த பத்து வயது பெண்ணின் ஜெபம் இதுவாயிருக்குமென்றால், நம்முடைய ஜெபம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? பிள்ளைகளிடம் உறவினர்களிடம் நண்பர்களிடம் சண்டைபோட்டு மனக் கசப்போடு சந்தோஷமில்லாமல் வாழ்ந்து மற்றவர்களுடைய வாழ்வையும் கசப்பாக்குகிறோமா? மன்னிப்பதற்கு பெலன் கேட்டு ஆண்டவரிடம் ஜெபம் பண்ணுங்கள். உங்களுக்குள் தேவன் தங்கி வாசம் பண்ணுவார். இந்த வெளிப்பாடு அநேகரை தேவனண்டை நடத்தும்.

சத்தியவசனம்