சிலுவையில் அறையப்பட்டிருக்கிறாயா?

சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2019)

“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலா.2:20)


“இதுதானா கிறிஸ்தவ வாழ்வு” என்று கேள்வி எழும்பத்தக்கதாக நாம் நவீனத்தின் வலையில் சிக்கியிருக்கிறோம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு சபைப் பெண்கள் மத்தியில் போயிருந்தபோது, அவர்களுக்கு வேதத்தில் எத்தனை புத்தகங்கள் என்ற எண்ணிக்கைகூட தெரிந்திராத அவல நிலையைக் கண்டேன். இன்னும், கிறிஸ்தவ குடும்பத்திலே பிறந்து வளர்ந்த ஒருவர், வேத வாசிப்பை அலட்சியமாய் கணிப்பிட்டதைக் கேட்கத் திகைப்பாயிருந்தது. தேவன் சாட்சியாய், சபையார் சாட்சியாய் திருமண உடன் படிக்கையை முழு சம்மதத்தோடு அறிக்கையிட்டு விட்டு, விவாகரத்துக்காகக் காத்திருப்பவர்கள் பெருகிவருவதை என்ன சொல்ல! சபைகளில் குழப்பம்; குடும்பங்களில் உறவும், பாசமும் மங்கும் நிலை; தனிப்பட்ட ஜீவியமோ தவிக்கிறது. ஊழியங்கள் கேள்விக்குறியாகின்றன. உண்மையான அர்த்தம் நிறைந்த ஆராதனைகளைத் தேடி அலையவேண்டியிருக்கிறது. இதெல்லாம் ஏன்?

ஏன் என்று கேள்வி, தன்னிலை உணருகிறவனிடம்தான் எழும்பும். உணர்வடைய வேண்டும் என்றால் அமர்ந்திருந்து சிந்திக்க வேண்டும். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்? இங்கே என்ன செய்கிறேன்? இயேசுவை அறியாமல், அறிந்தும் ஏற்றுக்கொள்ளாமல், ஏற்றுக்கொண்டும் அவர் வழிநடக்காமல், நடக்க எத்தனித்தும் முடியாத எண்ணுக்கணக்கற்ற மக்கள் மத்தியிலும், மெய்த் தேவனாகிய ஆண்டவரை நான் அறிந்து ஏற்று அவரால் மீட்படைந்த நிச்சயத்தைப் பெற்றிருக்கிறேனே! இது எப்படி? இத்தனை கோடி ஜனங்கள் மத்தியில் அவர் என்னைத் தேடிவந்து, என்னை மீட்டுக்கொண்ட, அதாவது அவரை மீட்பராக நான் ஏற்று, விசுவாசித்து, அவரே என் தேவன் என்று அறிக்கையிடத்தக்கதாக ஆண்டவர் என்னை நேசிக்க நான் யார்? என் முந்திய வாழ்வின் அலங்கோலங்கள், அருவருப்புகளை அவர் எப்படிச் சகித்தார்? இன்று “நான் இயேசுவின் பிள்ளை” என்று அறிக்கையிடும்படிக்கு என்மீது அவர் பாராட்டிய கிருபைக்கு என்னதான் விலை? சிந்தித்திருக்கிறோமா?

மனப்பாரங்கள், ஏக்கங்கள், பயம், எதிர்பார்ப்பு என்று ஏராளமான காரியங்கள் நம் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கின்றன. இதிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால் நாம் தோற்றுப்போவது உறுதி. ஒவ்வொரு நாளும் நித்திரை விட்டு விழிக்கும்போது, “இன்றும் நான் இயேசுவின் பிள்ளை” என்று நினைத்துப் பாருங்கள். என் கடந்த காலத்தின் பாவங்கள் இன்று எங்கே? இன்றும், அப்பப்போ நான் விடுகின்ற தவறுகள், தடுமாறி விழுகின்ற பாவத்தடங்கள், இவற்றின் மத்தியிலும் இன்னும் நான் என் நேசரின் பிள்ளைதான் என்று நினைத்துப் பாருங்கள்; எவ்வளவு ஆச்சரியமாயிருக்கும்!

இத்தனை மகத்துவமான வாழ்வைப் பெற்றிருக்கின்ற நாம் யார்? நமது பெறுமதிப்பு என்ன? நமக்காகச் செலுத்தப்பட்ட விலைக்கிரயம் என்ன என்பதையெல்லாம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அமர்ந்திருந்து சிந்திப்பானேயாகில், இன்று கூனிக்குறுகிப்போகின்ற நவீன கிறிஸ்தவ சமுதாயம் நிச்சயம் தலைநிமிர வாய்ப்புண்டு!

இயேசு நமக்குப் பதிலாளரா? பிரதிநிதியா?

“இயேசு சிலுவையிலே செய்து முடித்தது என்ன?” இந்தக் கேள்விக்குப் பல பதில்கள் எழுந்தன. “எனக்காகப் பாடுபட்டு மரித்தார். என் பாவங்களைச் சுமந்து தீர்த்தார். நான் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் மரித்தார். என்னை மீட்பதற்காகத் தம்மைக் கொடுத்தார்.” இன்னும் பல. அத்தனையும் சத்தியம். ஆனால், இதில் இன்னுமொரு பக்கமும் இணைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அங்கேதான், “இன்று நான் யார்” என்ற கேள்வியின் பதிலைக் கண்டுகொள்ள முடியும்.

இரண்டு உதாரணங்களை இரண்டு சம்பவங்களைக் கொண்டு உங்கள் முன் வைக்கிறேன்.

ஒன்று, ஒரு கூட்டத்திலே செய்தி கொடுக்க வேண்டியிருந்தது. திடீரென்று சில தடங்கல்கள் ஏற்பட்டதால் எனக்குப் போகமுடியவில்லை. ஆகவே, இன்னொருவரை அணுகி, அந்த அழைப்பை ஏற்றுப்போகும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நான் போகவேண்டிய இடத்திற்கு எனக்குப் பதிலாகச் செய்யவேண்டியதைச் செய்தார்.

இரண்டாவது, ஒரு தடவை டெல்லிக்குப் பயணம் சென்ற வேளையிலே, திரும்பிவரும் போது சென்னையிலே ஒரு ஆலயத்திலே செய்தி கொடுக்க அழைப்பு வந்திருந்தது. ஆனால் போன இடத்திலே ஒரு விபத்து ஏற்பட்டு, பற்கள் பாதிக்கப்பட்டதால் எனக்குப் பேச முடியாதிருந்தது. சென்னைக்குத் திரும்பியபோது, என் தொண்டையும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆகவே என்னுடன் வந்திருந்த ஒரு அருமையான மகளை ஆயத்தம் செய்து, ஆயத்தம் செய்திருந்த செய்தியை அவளுக்கு ஊட்டிவிட்டு, அவளிடம் சேலை இல்லாததால், என் சேலையை அவளுக்கு உடுத்தி என் பிரதிநிதியாக அனுப்பிவைத்தேன். அவளும் சென்றாள். “நீங்களே வந்ததுபோல நாங்கள் உணர்ந்தோம்” என்ற தகவலும் கிடைத்தது.

இந்த இரண்டு சம்பவத்திலுமுள்ள வித்தியாசத்தைக் கவனித்தீர்களா? முதலாவதில், எனக்குப் பதிலாக இன்னொருவர் சுயமாகச் செயற்பட்டார். இரண்டாவதிலே என் பிரதிநிதியாக இன்னொருவர்; அதாவது, நான் ஆயத்தப்படுத்திய தேவ செய்தி, என் உடுப்பு; என்னைப்போல, அதாவது அவளோடு நானும் கூடவே இருந்ததுபோல….. ஆம், அவள் எனக்குப் பதிலாக அல்ல, என் பிரதிநிதியாகவே அங்கே நின்றிருந்தாள். இப்போ சொல்லுவோம். இயேசு எனக்குப் பதிலாளராக மட்டுமா சிலுவையில் தொங்கினார்? அல்லது பிரதிநிதியாகவும் தொங்கினாரா?

நான் சிலுவையின் நிழலிலா? சிலுவையிலா?

நாம் எத்தனை நாட்களுக்குத்தான் சிலுவையின் நிழலில், அதன் மறைவுக்குள் குளிர்காயப் போகிறோம்? மேலே நாம் பார்த்த விஷயத்தை மேலும் விளங்கிக்கொள்ள இரண்டு படங்களை நம் மனக்கண்கள் முன்பாகக் கொண்டு வருவோமாக.

முதலாவது படம்:

ஒரு நீண்டு உயர்ந்த சிலுவை! அதிலே இரத்தம் சொட்ட இயேசு தொங்குகிறார். இப்போ நான் எங்கே? கீழே சிலுவையண்டையில் நிற்கிறேன். அந்த சிலுவையின் நிழல் எனக்கு நிம்மதியைத் தருகிறது. இயேசுவின் பாடுகள் துக்கத்தைக் கொடுத்தாலும், என் முகத்தில் அமைதிப் புன்சிரிப்பு. “எனக்காக ஒருவர்” “நானோ தண்டனைக்குத் தப்பிவிட்டேன்” “எனக்கு விடுதலை”. உண்மைதான். இது சத்தியம்; இதுவே நமது விசுவாசம். என் பாவங்களைத் தாமே ஏற்று, என் இடத்திலே இயேசு மரித்தார் என்பதை விசுவாசித்து அறிக்கையிடும்போது என் இரட்சிப்பு வெளிப்படுகிறது. இந்த விடுதலையைத்தான் அறிவித்தும் வருகிறோம்.

ஆனால், இயேசு பரத்துக்கு ஏறியசமயம், சுவிசேஷத்தை அறிவிக்கின்ற பெரிய பொறுப்பைத் தமது சீஷருக்குக் கட்டளையிட்டதோடு நிறுத்தி விடவில்லை. “சகல ஜாதிகளையும் சீஷராக்கி…” (மத்.28:19) என்ற பெரிய பொறுப்பையும் கொடுத்தார். அப்படியானால், சுவிசேஷத்தை அறிவிக்கின்ற நான் முதலில் சுவிசேஷத்திற்குச் சாட்சியாகவேண்டியது அவசியமல்லவா! மேலும், நான் முதலில் கிறிஸ்துவின் சீஷனாகவேண்டும். சீஷன் என்றால் அவன் இயேசுவைப் பின்பற்றுகிறவன்; அவன், “தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும்” (மாற்.8:34). ஒரு கிறிஸ்தவனையும் சிலுவையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படியிருந்தும், இயேசு விடுதலை தந்தாரே; இன்னும் எனக்குப் பாடுகளா? பாடுகள்தானா கிறிஸ்தவ வாழ்வு? நாம் பிறரைப்போல மகிழ்ச்சியாய் இருக்க முடியாதா? இப்படியாகப் பல கேள்விகள் நமக்குள் எழாமல் இல்லை!

இரண்டாவது படம்:

இப்போ இரண்டாவது படத்தைக் கற்பனை செய்வோமா. நீண்டு உயர்ந்த ஒரு சிலுவை. அதிலே வேதனை நிறைந்தவராய், காயங்கள் பட்டு, இரத்தம் சொட்ட, தாகத்தால் நா வறண்டுபோக இயேசு தொங்குகிறார். அதனை உற்று நோக்குகிறேன். அவரோடு கூடவே சிலுவையில் அறையப்பட்டுத் தொங்குகின்ற இன்னொருவர் யார்? அது என்ன? ஆ! அங்கே இயேசுவோடு நானே காணப்படுகிறேன். என் பாவம், என் துரோகம், என் பழைய சுபாவம்; மொத்தத்தில் நான் அங்கே காணப்படுகிறேன். இயேசு எதைச் சுமந்தார்? என் பழைய சுபாவத்தை அல்லவா! அப்படியென்றால் இயேசுவோடு நானும் சிலுவையில் தொங்கவேண்டுமே! இதைக் குறித்து வில்லியம் மக்டொனால்ட் அவர்கள் எழுதிய வாக்கியங்களை அப்படியே தருகிறேன்:

“எனக்குப் பதிலாக மட்டுமன்றி என்னுடைய பிரதிநிதியாகவும் இயேசு சிலுவையில் மரணத்தைத் தழுவினார். அதாவது, எனக்காக அவர் அடைந்த மரணத்தில் நானும் மரித்தேன். அவர் அடைந்த மரணத்தில், நான் அடைந்த மரணத்தின் உண்மை அடங்கியிருக்கிறது. இதுகாறும் ஆதாமின் பிள்ளையாக இருந்தேன். எனது முந்திய வாழ்வின் பொல்லாப்பும், சுயமும் சிலுவையில் அறையுண்டன. தேவனின் கணக்கின்படி எனது மாம்சத்திற்குரிய சரித்திரம் சிலுவையில் முற்றுப் பெற்றது” என்கிறார்.

என்ன ஆழமான வார்த்தைகள். ஆம், இந்த இரண்டாம் சிலுவையிலே இயேசுவோடு என் பாவ சுபாவம், என் சுயம், அதாவது நானும் அறையப்பட்டுள்ளேன். என் பாவங்கள் இயேசுவோடு மரித்தது என்றால் நான் மரித்தேன் என்பதுதானே அர்த்தம். இப்போ தேவன் என்னை கிறிஸ்துவோடு மரித்தவனாகவே பார்க்கிறார். இப்போ நான் இயேசுவோடு மரணத்தில் இணைக்கப்பட்டுள்ளேன்.

சிலுவை மரணத்தின் பின்னர்……

சிலுவையுடன் எதுவும் முடிந்துவிடவில்லை. என் பதிலாளராகவும், என் பிரதிநிதியாகவும் மரித்த இயேசு அடக்கம் பண்ணப்பட்டபோது, என் பாவங்களும், அதாவது நானும் கூடவே அடக்கம் பண்ணப்பட்டேன். இனி “நான்” என்ற என் பழைய மனிதன் காணப்படமாட்டான். அவன் புதைக்கப்பட்டுவிட்டான். அப்படியானால் இதுதான் முடிவா? கிறிஸ்தவம் என்பது மரணத்துடன், அடக்கத்துடன் முடிந்துவிடுகிறதா? அதுதான் இல்லை!

கடைசிச் சத்துருவாகிய மரணத்தை வென்று இயேசு உயிர்த்தெழுந்தார். நமது பாவத்திற்காக, நமது பாவத்தைச் சுமந்து, நமது பிரதிநிதியாக மரித்து அடக்கம் பண்ணப்பட்டவர், அதே பாவத்துடனா எழுந்தார்? இல்லை! மரணத்தின் கூரை ஒடித்து, பாதாளத்தை ஜெயித்து கிறிஸ்து தமது மகிமையிலே உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அப்போ, அவரோடுகூட சிலுவையிலறையப்பட்டு, அவரோடுகூட அடக்கம் பண்ணப்பட்ட நான் எப்படி அதே பாவ சுபாவத்துடன் எழுந்திருக்க முடியும்? பழைய மனிதன் அழிக்கப்பட்டு, பாவத்தின் கோரப்பிடி முறித்தெறியப்பட்டு, கிறிஸ்துவுக்குள்ளான புதிய மனிதனைத் தரித்தவனாக, கிறிஸ்துவின் மகிமையில் நானும் எழுகிறேன். கிறிஸ்து எனக்குள், நான் அவருக்குள்; இனி நான் அல்ல, கிறிஸ்து எனக்குள் வாழுகின்ற வாழ்விலே எழுகிறேன், எழுந்திருக்கிறேன். இப்போ என் சரீரம் என் அடையாளத்தைக் காண்பிக்கிறது. என் வாழ்வோ இயேசுவையே அடையாளம் காட்டுகிறது.

இப்போ சொல்லுங்கள், நாம் யார்? நமது பெறுமதிப்பு என்ன? இதைத்தான் ஞானஸ்நானத்தில் நாம் அறிக்கையிடுகிறோம். மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இம்மூன்றுக்கும் ஊடாகக் கடந்துவராதவன் தன் பெறுமதியை உணரான். ஆனால், இதற்கு வெறும் அறிவு போதாது. அன்றாட வாழ்வில் நாம் இதைச் செயலாற்றவேண்டும். உள்ளே இருக்குமானால் செயலில் வெளிப்படுவது கடினமாயிராது. உதாரணத்திற்கு ஒரு பாவ சோதனை நம்மை அணுகுகிறது என்று வைத்துக்கொள்வோம். முன்னர், அதை நாம் பார்ப்போம், கேட்போம், செய்வோம். ஆனால், ஒரு பிணத்தினால் பார்க்க முடியுமா செய்யத்தான் முடியுமா? ஆகவே, சோதனை என்னை அணுகும்போது, அது என்னை ஒரு பிணமாகப் பார்க்கவேண்டும். ஏனெனில் பாவத்துக்கு நான் இறந்து விட்டேனே. உலகம் என்னைப் பார்க்கும்போது இது ஒரு செத்த ஜடம் என்று பாாக்கவேண்டும். நானும் பாவத்தையும் உலகத்தையும் பார்க்கும்போது, அது எனக்குச் செத்ததாகத் தெரியுமானால் அங்கேதான் என் ஜெயக்கொடி பறக்கிறது. இதைத்தான் பவுல், “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது; நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்” (கலா.6:14) என்று எழுதியுள்ளார்.

கிறிஸ்தவ சுதந்திரம்

இப்படியிருக்க, “சுதந்திரம்” என்பதைக் குறித்து நமது அபிப்பிராயம் என்ன? நாடு சுதந்திரமடைந்தது, சிறையிலடைக்கப்பட்டவன் விடுதலையாகி சுதந்திரமடைகிறான், பள்ளிப் பிள்ளைகளுக்குச் சுதந்திரம். இவைதானா சுதந்திரம்? இவைதானா விடுதலை? இவை நாளை தலைகீழாக மாறாது என்பதற்கு என்ன நிச்சயம்? ஆனால் கிறிஸ்தவன் அடைகின்ற சுதந்திரம்தான் என்ன? சிலுவையில் பெற்ற விடுதலை, நாம் சுதந்தரமாகப் பாவம் செய்ய நம்மை அனுமதிக்குமானால் நம்மைப்போல பரிதபிக்கக்கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது.

பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தின் சாராம்சம் “கிறிஸ்தவ விடுதலை” பற்றியதே. நியாயப் பிரமாணத்தினின்றும், பாவத்தின் வல்லமையிலிருந்தும் ஒரு மனிதனுக்குக் கிடைக்கின்ற மகா பெரிய விடுவிப்பைக் குறித்தும், ஜீவிக்கின்ற ஆண்டவரை சுதந்திரமாக சேவிப்பதைக் குறித்துமே பவுல் பிரகடனப்படுத்துகிறார். இந்த சபையில் யூத கிறிஸ்தவர்கள், அதாவது முன்னர் பிரமாணத்தைப் பின்பற்றியவர்கள், இப்போது கிறிஸ்துவுக்குள்ளான பரிசுத்த விடுதலையைப் பெற்றவர்கள் அநேகர் இருந்தனர். புறவினத்தார் தேவராஜ்யத்துள் வருவதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்காகவே கலாத்தியருக்கு மெய்யான விடுதலை பற்றி பவுல் எழுதினார்.

நாம் கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசமே நமக்கு மெய்யான விடுதலை அல்லது சுதந்திரமாகும். நாம் பாவத்தால் கறைப்பட்டவர்கள் என்பதால் நம்மால் கட்டளைகளை பூரணமாக நிறை வேற்றமுடியாது. ஆகவே, தேவன்தாமே இயேசுவின் மூலமாக நமக்கு சுவிசேஷத்தைத் தந்தார். இந்த சுவிசேஷம் கிறிஸ்துவுக்குள்ளான புதிய சுபாவத்தை நமக்குத் தந்திருக்கிறது. இந்தப் புதிய சுபாவத்தை நாம் பெற்றுக்கொள்ள நமது வாழ்வில் ஒரு காரியம் நடந்தாகவேண்டும். அது என்ன?

இந்த இடத்தில் பவுலடியாரின் அறிக்கைகளை சற்றுக் கவனிப்பது நல்லது. “நாங்களோ சிலுவை யிலறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்” (1கொரி.1:23). “இயேசுகிறிஸ்துவை, சிலுவையிலறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (1கொரி.2:2). “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக” (கலா.6:14). இவ்விதமாக பவுல் தன்னுடைய நிருபங்களிலே கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து ஆணித்தரமாக எழுதியிருக்கிறதை நாம் காணலாம்.

கலாத்தியருக்கு எழுதிய நிருபத்திலே, “இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா.2:20) என்று எழுதிய பவுல், கிறிஸ்து தனக்குள் வாழுவதற்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதற்கு வசனத்தை நாம் முழுமையாகப் படிக்கவேண்டும். இந்த வசனத்தின் முன்வாக்கியம்தான் இந்தக் கட்டுரையின் மூலவார்த்தையாகும். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல. கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20).

“கிறிஸ்துவுடனேகூட சிலுவையிலறையப்பட்டேன்.” இதுதான் பவுலின் வெற்றியுள்ள வாழ்க்கையின் இரகசியம். நம்மால் இந்த வார்த்தையை ஆழ் மனதிலிருந்து கூறமுடியுமா?

நான் யார்?

“கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா.5:23). என் வாழ்வில் இது உண்மையா? ஏனெனில், விழுந்துபோன இந்த உலகில் நித்தமும் பாவ சோதனைகளும் துன்ப சோதனைகளும் நம்மை நெருக்கிக்கொண்டே இருக்கும். ஆகவே ஒவ்வொரு கணமும் நான் கிறிஸ்துவினுடையவன் மாத்திரமல்ல நான் கிறிஸ்துவையுடையவன் என்பதையும் நாம் நினைத்திருக்கவேண்டும்.

பிரியமானவர்களே, நாம் சாதாரணமானவர்கள்தான்; ஆனால் தேவனுடைய கைகளில் நாம் அசாதாரணமானவர்கள். கிறிஸ்துவுக்குள் நாம் புதிய வாழ்வு, புதிய நோக்கு, புதிய விருப்பம், புதிய சிந்தனை என்று எல்லா விதங்களிலும் நாம் புதியவர்கள். இப்படியிருக்க மாம்சத்தின் கிரியைகளுக்கு (கலா.5;:19-21) விழுந்துபோன ஆதாமின் சுபாவத்திற்கு நாம் இன்னமும் இடமளிக்கலாமா? சிந்திப்போம்.

இயேசு எனக்காகச் சிலுவையில் அறையுண்டார், எனக்காக அடக்கம் பண்ணப்பட்டார், எனக்காகவே உயிரோடெழுந்தார் என்பது என் விடுதலைக்கான விசுவாசம். இயேசுவோடுகூட நானும் சிலுவையில் அறையுண்டேன், அவரோடு அடக்கம் பண்ணப்பட்டேன், அவரோடு புதிய வாழ்வுக்குள் உயிர்த்தெழுந்தேன், இது இன்று என் வாழ்வு. உலகத்துக்கு நான் மரித்தவன், உலகம் எனக்கு மரித்தது, இது என் அன்றாடக வாழ்வு.

ஜார்ஜ் முல்லர் அவர்களின் அறிக்கை இது: “என் வாழ்வில் ஒருநாள் ஜார்ஜ் முல்லர் என்னும் நான் இறந்துவிட்டேன். அவருடைய விருப்பங்கள், எண்ணங்கள், சித்தங்கள் எல்லாம் இறந்துவிட்டன. இந்த உலகத்திற்கு நான் மரித்தேன். நண்பர்களாலும் உறவினர்களாலும் நான் சரி என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், தவறு என்று புறக்கணிக்கப்படுவதற்கும் மரித்துவிட்டேன்.” “தேவனாலே ஏற்றுக்கொள்ளப்பட்டவன்” என்று காண நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். இவ்விதமாக தான் இயேசுவோடு இணைக்கப்பட்ட உண்மையை அவர் தெளிவாகக் கூறியுள்ளார். நமது நிலை என்ன?

“சிலுவை என்பது மாற்றம் செய்யும் இடமல்ல; மாற்றீடு செய்யப்படுகின்ற இடம்”.

சத்தியவசனம்