Dr. தியோடர் வில்லியம்ஸ்
(மார்ச்-ஏப்ரல் 2019)

கிறிஸ்தவ ஊழியத்தைப்பற்றி சாதாரணமாக நம் நடுவிலே இரண்டு தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று, கிறிஸ்தவ ஊழியம் என்பது நாமாக கிறிஸ்துவுக்கு செய்யும் ஏதோ ஒரு நன்மை என்று எண்ணிக்கொள்ளுகிறோம். அவரைப் பிரியப்படுத்த அல்லது அவரிடத்திலிருந்து ஏதாவது நன்மையைப் பெற்றுக்கொள்ள, புண்ணியம் சம்பாதித்துக்கொள்ள நாம் செய்வது ஊழியம் என்று எண்ணிக்கொள்கிறோம். நமக்குக் கிடைத்த சமயத்திலே ஏதோ அவருக்கென்று செய்கிறோம். அது அவருக்குக் கிடைத்த சிலாக்கியம் என்று எண்ணிக்கொள்கிறோம். ஒருவேளை நம்மில் சிலர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் உள்ளத்தில் எண்ணிக்கொள்வது என்ன? ஆண்டவரே என்னைவிட்டால் உமக்கு யாரும் கிடையாது, நான் இதோ பெரிய காரியங்களை உமக்கென்று சாதித்துவிடுகிறேன், உம்மை நான் பெரிய அளவுக்கு உயர்த்திவிடுகிறேன் என்று நாம் பெருமை பாராட்டிக்கொள்கிறோம். இது தவறான கருத்தாகும்.

இன்னொரு தவறான கருத்து, நம்முடைய சொந்த திறமைகளினாலும், தாலந்துகளினாலும் நம்மால் எதை சாதிக்கமுடியுமோ அதை சாதித்துக்கொள்வது கிறிஸ்தவ ஊழியம் என்று எண்ணுகிறோம். ஒரு அருமையான நண்பன் கூறினார்: “ஐயா, எனக்கு யாருடனும் சேர்ந்து உழைக்க முடியாது. என்னை ஒரு குழுவிலோ, ஒரு கமிட்டியிலோ போட்டுவிடக்கூடாது. ஆனால் என்னால் ஆனதை என் ஆண்டவருக்குச் செய்கிறேன். ஏதோ என்னுடைய சொந்த வழியிலே, என்னுடைய சொந்த முயற்சியிலே நான் அவருக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்கிறேன்” என்று சொன்னார். சொந்த வழியிலே, சொந்த முயற்சியிலே செய்வது ஊழியமல்ல.

கிறிஸ்தவ ஊழியம் என்பது என்ன? திருமறை அதைப்பற்றி என்ன கூறுகிறது? கிறிஸ்தவ ஊழியம் என்பது, ஆண்டவர் நம்மை என்ன செய்யச் சொல்லுகிறாரோ அதைச் செய்வதாகும். இதுதான் ஊழியம்! அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது, அவருடைய திட்டங்களிலே பங்கு பெறுவது. நாமாக ஏதோ எண்ணிக்கொண்டு, நமக்கென்று ஒரு ஊழியத்தை ஏற்படுத்திக்கொண்டு செய்வதல்ல. அதனால் ஏதோ புண்ணியம் சம்பாதித்துக்கொள்கிறோம், ஆண்டவருக்குக் கிடைத்த ஒரு பெரும் சிலாக்கியம் இது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது. நமக்குக் கிடைத்த சிலாக்கியம்: கிருபையாக அவர் நமக்கு கொடுத்த ஊழியமாகும். இந்த ஊழியமானது, அவர் எடுத்து நம் கையில் கொடுப்பது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நாமாக எடுத்துக்கொள்வது அல்ல.

அதுமட்டுமல்ல, எல்லா விசுவாசிக்கும் ஊழியம் உண்டு. இதுதான் திருமறையின் போதனை. கிறிஸ்தவ ஊழியன் என்று சொல்லும்போது முழு நேரம் ஊழியம் செய்கிறவர்கள் மட்டுமல்ல, ஊதியம் பெற்று ஊழியம் செய்கிறவர்கள் மட்டுமல்ல, எந்த வேலையிலே நாம் இருந்தாலும் விசுவாசிகளாய் நாம் இருப்போமானால் நாம் கிறிஸ்தவ ஊழியர்கள்தாம். நம்முடைய வேலையின் மூலமாகவும், வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியிலும், நாம் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறோம். இதுதான் கிறிஸ்தவ ஊழியம்! நம்முடைய சொந்த சாமர்த்தியத்தையோ, திறமையையோ சார்ந்தல்ல, அவருடைய வல்லமையை சார்ந்து செய்கிறோம். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு அவருடைய வல்லமை நமக்குள்ளும், நம் மூலமாகவும் கிரியையை சாதிப்பதுதான் கிறிஸ்தவ ஊழியமாகும். நாம் சாதிப்பதல்ல, அவர் நம் மூலமாக சாதிப்பது ஊழியமாகும். இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அப்படி உணர்ந்து கொள்ளும்போது, ஆண்ட வராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் நம்முடைய ஊழியத்திற்கும் எவ்வளவு உறவு இருக்கிறது, சம்பந்தம் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளுகிறோம். நம்முடைய ஊழியத்தின் வெற்றியின் இரகசியம்: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாகும். இதை கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலே 15ம் அதிகாரத்திலே பவுல் எடுத்துச்சொல்லுகிறார். 57வது, 58வது வசனங்கள்:

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப் பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக”.

நமது பிரயாசம் ஒருபோதும் விருதாவாயிராது. நமது ஊழியத்திலே ஜெயம் உண்டு, வெற்றி உண்டு. நம்முடைய ஊழியம் பெருகிக்கொண்டே இருக்கவேண்டும். ஏன்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிரித்தெழுந்தார்!

என் அருமையான சகோதரனே, சகோதரியே, உங்களுடைய விசுவாச வாழ்க்கையிலே ஆண்டவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறீர்களா? அவருக்கென்று ஊழியம் செய்கிறீர்களா? அவர் உங்களிலும், உங்கள் மூலமாகவும் செயல்படுவதற்கு நீங்கள் இடங்கொடுக்கிறீர்களா? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவர் இப்பொழுதும் உயிரோடிருக்கிறார் என்று நீ விசுவாசிப்பாயானால், உன்னுடைய ஊழியம் விருத்தியடைந்துகொண்டே இருக்கும், விரிவடைந்துகொண்டேயிருக்கும். அதுமட்டுமல்ல, அது கனி கொடுக்கும் ஊழியமாக, வெற்றியுள்ள ஊழியமாகவும் அமையும். ஊழியத்திலே வெற்றி ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்ததினாலே!

யோவான் 16வது அதிகாரம் 7 வது வசனத்தில் ஆண்டவர் தம் சீஷர்களுக்குச் சொன்ன ஒரு வார்த்தையைப் பார்க்கிறோம்:

“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்”

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து, மகிமையடைந்து பரலோகத்திற்குப் போவதைப்பற்றி இங்கு பேசுகிறார், அவர் பரத்திற்கு ஏறிப்போய் தேற்றரவாளனை அனுப்புவார், தேற்றரவாளன் என்ன செய்வார்? 8, 9, 10 வது வசனங்களில் பார்க்கிறோம்:

“அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந் தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்தும், கண்டித்து உணர்த்துவார்”.

பரிசுத்த ஆவியானவர் மக்களை கண்டித்து உணர்த்துகிறவர். ஆகையினாலேதான் அவர்கள் இயேசுகிறிஸ்துவண்டை திரும்புகிறார்கள். உயிர்த்தெழுதலினாலே கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும் இந்த உலகத்தை கண்டித்து உணர்த்துகிறார். அவரது செயல் மக்களை இரட்சிப்பதிலே காணப்படுகிறது.

இந்த ஆவியானவர் நம்மையும் பலப்படுத்துகிறார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததினாலே பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறார். அவர் தம்முடைய சீஷர்களை தம்முடைய மக்களை பலப்படுத்துகிறார். அப்போஸ்தலர் முதல் அதிகாரம் 8ம் வசனம் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை பெலப்படுத்துவதின் இரகசியம் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்தார். அதுமட்டுமல்ல, ஊழியத்தில் நமக்கு வரும் பலவிதமான உபத்திரவங்கள், இடையூறுகள் இவற்றைப்பற்றி தன் சொந்த அனுபவத்திலேயே பவுல் எழுதுகிறார். 2 கொரிந்தியர் முதல் அதிகாரம் 8வது வசனம்: “ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று” என்று கூறுகிறார். ஆம், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக அவ்வளவு பெரிய பாரமும், வருத்தமும் உண்டாயிற்று, ஆனால் அந்த பாரத்திலும் வருத்தத்திலும் அவரைக் காத்துக்கொள்வது யார்? உயிர்த்தெழுந்த கிறிஸ்து. அவருடைய வல்லமையினாலே அவர் காத்துக்கொள்ளப்படுகிறார். இதைத்தான் பவுல் கொரிந்தியருக்கு எழுதுகிறார். 2 கொரிந்தியர் 5: 6ல், “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” என்று கூறுகிறார். ஏன்? இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததினாலே அவர் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறார். அந்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கையினாலே வெற்றி உண்டு, என்பதை இவ்விதமாய் விளக்கிச் சொல்லுகிறார்.

அந்த உயிர்த்தெழுதலினால் உண்டான வெற்றியை 1 கொரிந்தியர் 15:57ல் இவ்விதமாய் சொல்லுகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”, மறுபடியும் 2 கொரி.2:14, “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”.

கிறிஸ்துவினாலே வெற்றி! ஏன்? கிறிஸ்துவின் வெற்றியினாலே நமக்கும் வெற்றி உண்டு.