சகோ.G.கிறிஸ்டியன் வெயர்ஸ்
(செப்டம்பர்-அக்டோபர் 2019)

இயேசு அவர்களை நோக்கி: அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார் (மத்.14:16-18).


ஒவ்வொரு விசுவாசியும் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டுமென்று நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆலோசனை கூறியுள்ளார். அங்கே நமது முதலீட்டை அழிக்கவும் திருடவும் முடியாது. அவருடைய இந்த ஆலோசனைக்கும் வாக்குறுதிக்கும் ஒரு சில விசுவாசிகளே செவி கொடுக்கின்றனர். ஏன்? நாம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை நம்புவதில்லையா? தேவனை நம்புவதற்கு தயங்குகிறோமா? தேவனை நம்பி அவருக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் அழிந்து போகக்கூடிய உலக பொக்கிஷங்களைச் சேர்ப்பதற்கு ஏன் அதிக ஆர்வம் காட்டவேண்டும்?

தேவனுடைய வேலையிலே முதலீடு செய்பவர்களுக்குக் கிடைக்கும் தெய்வீக பங்குத் தொகையைப் பற்றி தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது? பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில விளக்கங்களை நாம் இந்த செய்தியில் காணலாம். தேவனுடைய காரியங்களில் தங்களுடைய பங்கைச் செய்த அநேகர் பெரிய தெய்வீக ஈவுத்தொகையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரு சிறுமீன்களையும் வைத்திருந்த ஒரு சிறு பையனை நாம் அனைவரும் அறிவோம். அவன் அவற்றை இயேசுகிறிஸ்துவிடம் கொடுத்தான். அவர் அதைப் பன்மடங்காக்கி, பசியுடனிருந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போஜனம் அளித்தார்.

யோவான் 6ம் அதிகாரத்தில் இயேசுவின் சீடர்களில் ஒருவரான அந்திரேயா “இங்கே ஒரு பையன் இருக்கிறான். அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு” (வச.9) என்று கூறுகிறார். பசியுடன் இருந்த திரளான மக்களுக்கு அவைகளை வைத்து என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் “ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்” என்ற வினாவையும் உடனடியாக எழுப்பினார்.

இதே நிகழ்வை மத்தேயு பின்வருமாறு எழுதியுள்ளார்: “இயேசு அவர்களை நோக்கி: அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்” (14:18). அச்சிறுபையனிடமிருந்த அப்பத்தையும் மீன்களையும் தம்மிடத்தில் கொண்டு வருமாறு தெளிவாகக் கட்டளையிட்டார். அவர் அவைகளை வாங்கி முதலாவது பரம பிதாவுக்கு நன்றி செலுத்தி பின்னர் சீடர்களிடம் கொடுத்தார். அவர்கள் அவைகளை பந்தியில் அமர்ந்திருந்த மக்களுக்கு பரிமாறினார்கள். ஆச்சரியமான விதத்தில் ஒவ்வொருவரும் திருப்தியாகப் புசித்தபின் மீதியானவற்றை பன்னிரண்டு கூடைகள் நிறைய அடுத்தனர். இந்த நிகழ்வில் சில ஆச்சரியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளுகிறோம்.

தேவை உருவாகுதல்

முதலாவது அங்கே ஒரு பெரிய தேவை உருவானது. இயேசுவின் போதனைகளைக் கேட்ட 5000க்கும் மேலான மக்கள் அங்கே பசியோடு கூடியிருந்தனர். அவர்கள் நாள் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்கள். அவர்களிடையே நோயாளிகள் இருந்தனர். பலர் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல (9:36) குழப்பத்தோடும் பயத்தோடும் இருந்தனர். சரீரத்தில் வேதனையோடும் மனதில் கவலையோடும் பலர் இருந்தனர். மேலும் அது வனாந்தரமான இடமாயிருந்ததால் எந்த உணவும் கிடைக்கவில்லை (வச.15). அம்மக்கள் அனைவருக்கும் உணவு தேவைப்பட்டது.

“நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் (6:51) என்ற உண்மையை மக்களுக்கு விளக்குவதற்காகவே இயேசு இந்த அற்புதத்தைச் செய்தார். மோசே 40 வருடங்களாக வனாந்தரத்தில் வானத்திலிருந்து வந்த அப்பத்தினால் அனுதினமும் முற்பிதாக்களைப் போஷித்தார். ஆனாலும் அந்த அப்பத்தை சாப்பிட்ட அவர்கள் அனைவரும் மரித்துவிட்டனர். ஆனால் “மனிதர்களுக்கு நித்திய வாழ்வை அளிக்கவந்த ஜீவ அப்பம் நானே” என்று இயேசுகிறிஸ்து தெளிவாகக் கூறினார்.

அன்று இயேசுகிறிஸ்து சந்தித்த திரளான மக்கள் பசி, பிணி மற்றும் குழப்பங்களுடன் இருந்தனர். அவர்கள் இன்றைய உலகமக்களுக்கு அடையாளமாக இருக்கின்றனர். இம்மக்கள் ஜீவ அப்பத்துக்காக ஏங்கி நிற்கின்றனர். ஆத்தும ஆகாரம் சந்திக்கப்படாமல் அநேக மனிதர்களும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். அதன் தேவையை அறியாமலும் உள்ளனர். ஜீவ அப்பத்தை ருசித்திராத அநேக ஆண்களும் பெண்களுமான ஜனங்களின் அவசரத் தேவையை கிறிஸ்தவர்களாகிய நாம் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

இயேசுவின் சீடர்களைப் போல நாமும் உலகத்தின் மிகப்பெரிய தேவையை நிறைவு செய்ய நிற்கிறோம். அவர்களைப் போலவே “ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்” (6:9) என்று அத் தேவையை சந்திக்க இயலாமல் திகைத்து நிற்கிறோம். சில வேளைகளில் நமது இருப்பு அத்தேவைகளுக்குப் போதுமானதாக காணப்படுவதில்லை. போஷிக்கப்படாத திரளான உலக மக்களுக்கு ஜீவ அப்பத்தைக் கொடுக்க வழியில்லை என்று எண்ணி சில வேளைகளில் சோர்ந்துபோகிறோம்.

அன்று இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் சந்தித்த சூழ்நிலையை சிறிது எண்ணிப் பாருங்கள். அவர்களுக்கு முன்பாக சுமார் 15,000 அல்லது 20,000 மக்கள் பசியோடு இருந்தனர். அவர்களுக்கு உணவு அளிக்கும் வழிமுறையும் அறியாதிருந்தனர். இவர்களுக்கு எவ்வாறு உணவு கொடுப்பது? அதை எங்கே காணலாம்? நாம் என்ன செய்யலாம்? என்ற கேள்வி அவர்களுக்கு எழுந்தது இயற்கையே. அவர்களில் ஒருவன் “இங்கே ஒரு பையன் இருக்கிறான். அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு” (வச.9) என்று கூறுகிறார். அத்தனை திரளான மக்களுக்கு ஐந்து அப்பங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும் என்ற வினா எழுந்ததில் வியப்பொன்றுமில்லை. மேலும் அவை வாற் கோதுமை அப்பங்களாக இருந்தன. அனைத்து அப்பங்களிலும் அவை சுவை குறைந்ததும் ஏழைகள் மட்டுமே சாப்பிடக்கூடியன. (மத்திய தரைக்கடல் பகுதியில் நான் அதை சாப்பிட்டிருக்கிறேன். எனவே அவை சுவையற்றவை என நான் உறுதியாகக் கூறமுடியும்.)

அச்சிறுவன் தன் கரத்தில் இருந்தவற்றை ஆண்டவராகிய இயேசுவின் கரத்தில் ஒப்படைத்தான். “அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” (மத்.14:18) என்ற இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தன்னிடமுள்ளதை அவன் மனமுவந்து கொடுத்தான். சந்தேகமில்லாமல் அவை அவனுடைய உணவுக்கானதல்ல. அந்த அப்பங்கள் பொதுவாக 9 அங்குலம் விட்டமும் இரண்டு அங்குலம் உயரமும் உடையனவாக இருக்கும். அந்த அளவுடைய வாற்கோதுமை அப்பங்கள் பொதுவாக இரண்டு பவுண்டு அல்லது அதற்கு மேலான எடையுள்ளதாகவும் இருக்கும். எந்த பையனும் இத்தகைய ஐந்து அப்பங்களைத் தனது உணவுக்காக சுமந்து கொண்டிருக்கமாட்டான். வாற்கோதுமை அப்பங்கள் ஏழை களின் உணவாக இருந்தது. அப்பையனின் தாயார் ஓர் ஏழை விதவையாக இருந்திருக்க வேண்டும். அந்த அப்பங்களை பசியான இருக்கின்ற மக்கள் கூட்டத்தில் விற்றுவர அனுப்பியிருக்கக்கூடும். அது அவர்களுக்கு ஒரு சிறிய வருமானத்தைத் தந்திருக்கும். அப்பையனின் தியாகமானது அவனுடைய உணவை மாத்திரமல்ல, அவன் குடும்பத்தினர் அனைவருடைய வாழ்வுக்கான வருமானமாக இருந்திருக்கலாம். “அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவனுடைய அப்பங்களை அவரிடம் ஒப்படைத்தான். அது பசியாயிருந்த மக்களுக்காக ஆண்டவரின் கரத்தில் அர்ப்பணித்த அவனுடைய முதலீடாகும்.

இலாபப் பங்குத்தொகை

இந்த முதலீடு என்ன செய்வித்தது? அனைத்து மக்களும் அந்த அப்பங்களையும் மீன்களையும் திருப்தியாகச் சாப்பிட்டனர் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (யோவான்6:12). அப்பையனுடைய பங்கை இயேசு அற்புதமாகப் பெருகப் பண்ணி, கூட்டத்தினர் அனைவரும் தேவையான அளவு புசிக்கும்படிக் கொடுத்தார். ஒருவரும் பசியுடன் திரும்பிச் செல்லவில்லை. தன்னுடைய முதலீட்டை பயன்படுத்தி இயேசு தேவையுடன் இருந்த மக்களைப் போஷித்தார் என்பது அச்சிறுவனுடைய மனதில் நிறைவான மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. தனது வீட்டுக்குச் சென்று அந்த அற்புதத்தை தன் குடும்பத்தினருடன் பூரிப்புடன் பகிர்ந்திருப்பான் அல்லவா! உண்மையாகவே அனைவருக்கும் அது மிகுந்த சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் அளித்தது. திரளான மக்களுக்கு இயேசு கிறிஸ்து உணவளிக்க உதவியது ஏழைக் குடும்பமாகிய தங்களுடைய அப்பமும் தங்களுடைய மீனும் என்பது அவர்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும். அது மிகப்பெரிய இலாபப் பங்குத்தொகை அல்லவா!

இயேசுகிறிஸ்து சிறுவனின் கையிலிருந்த அப்பத்தை பெருகப்பண்ணி தங்களுடைய பசியை ஆற்றியது என்பதை மக்களும் அறிந்திருந்தனர். அவன் தனது அப்பத்தையும் மீனையும் அவர்களுக்காக தியாகம் செய்து ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்தான் என்பதையும் அறிந்த அநேகர் அச்சிறுவனை நன்றியுடன் பாராட்டியிருப்பர். இதுவும் சிறந்த இலாபப் பங்குத் தொகையாகும்.

அதுமாத்திரமல்ல, இயேசு தமது சீடர்களிடம் ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஜந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். அந்த அப்பங்கள் என்ன ஆயிற்று? அதைப்பற்றி வேதாகமம் குறிப்பிடவில்லை. அச்சிறுவன் சுமக்கும் அளவுக்கு அவனுக்கு கொடுத்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். மீதியை சீடர்களும் ஏழை மக்களும் எடுத்துச் சென்றிருப்பார்கள்.

உண்மையிலேயே இது ஒரு சிறந்த முதலீடு ஆகும். இயேசுவின் கரத்தில் அர்ப்பணித்த சிறுவனின் சிறிய முதலீடு பெரிய இலாபப் பங்குத் தொகையைக் கொடுத்தது. அது அவனுக்கு மாத்திரமல்ல, மற்ற ஜனங்களுக்கும் நன்மையைக் கொடுத்தது. நற்செய்தியை அறிவிக்க நீங்களும் நானும் நமது இரட்சகரின் கரங்களில் கொடுப்பது எதுவாயினும் அது உலகத்திலுள்ள மக்களின் ஆத்தும பசியை ஆற்றும் சிறந்த முதலீடாக அமையும். இம்மையில் அது நமக்கு நல்ல இலாபப் பங்குத்தொகையையும் மறுமையில் ஏராளமான பொக்கிஷங்களையும் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


நினைவுகூருங்கள்

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதற்கு நாம் அவருடைய வார்த்தையான வேதாகமத்தை முழுமையாக அறிந்திருக்கவேண்டும். ஏனெனில் வேதாகமமே தேவனையும் அவருடைய சித்தத்தையும் நமக்கு அறியத்தருகின்றது.