சத்திய வசனம் பங்காளர் மடல்

(ஜனவரி-பிப்ரவரி 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

உன்னதங்களிலுள்ள ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தாலும் நம்மை நிரப்பி வழிநடத்துகிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஆசீர்வாதமான ஒரு புதிய வருடத்திற்குள் பிரவேசிக்க கர்த்தர் கிருபைசெய்துள்ளார். இக்கால சூழ்நிலைகள் எவ்வாறாக இருப்பினும் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் பரமபிதா நம்மை போஷித்து வழிநடத்துவார். அவரை நோக்கி நாம் கூப்பிடும் நம்முடைய விண்ணப்பங்களின் சத்தத்துக்கும் அவர் மறுஉத்தரவு அருளிச்செய்வார். ஆகவே நாம் அதிகமாய் அவரது பாதத்தில் காத்திருப்போம்.

கடந்த ஆண்டு சத்தியவசன இலக்கிய பணியின் வாயிலாக அநேகர் தங்கள் வாழ்வில் ஆவிக்குரிய நன்மைகளைப் பெற கர்த்தர் உதவி செய்தார். தேவன் தங்கள் வாழ்க்கையில் பாராட்டிய உன்னத ஆசீர்வாதங்களை எங்களுக்கு எழுதித் தெரிவித்த அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கிறோம். கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். 2023ஆம் ஆண்டில் சத்தியவசன சஞ்சிகையில் வெளிவரும் செய்திகள், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள், மற்ற புத்தக வெளியீடுகளினாலும் தேவன் அநேகரை சந்திக்கவும் ஆசீர்வதிக்கவும் மன்றாடுகிறோம்.

2022ஆம் வருடத்தில் தியானபுத்தகத்தின் அட்டவணைப்படி ஒரு வருடத்திற்குள் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் உங்கள் பெயரைத் தெரியப்படுத்துங்கள். மார்ச்-ஏப்ரல் மாத தியான புத்தகத்தில் அவர்களது பெயர்களை பிரசுரம் செய்வோம். இந்த ஆண்டிலும் ஓராண் டிற்குள் வேதாகமத்தை வாசித்து முடிக்க உங்களை உற்சாகப்படுத்துகிறோம். சத்தியவசன வாட்ஸ்அப், இணையதளம், you tube, தொலைகாட்சி ஆகிய ஊடகங்களில் வெளிவரும் செய்திகள், தியானங்கள், நிகழ்ச்சிகள் யாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதித்து இவ்வூழியத் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் தங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

இவ்விதழில் புதுவருட செய்தியாக ஆரம்பமும் முடிவும் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய செய்தியும், நானே வாசல் (இயேசு) என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும், நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரின் தூய வழிகளை விவரித்து கர்த்தருடைய ஆவி எங்கு உண்டோ அங்கே… என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதிய செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் வார்த்தையில் வல்லமையுண்டு என்ற தலைப்பில் கர்த்தருடைய வார்த்தையின் வல்லமையை தியானித்து Dr.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய செய்தியும், கேள்விகள் என்ற தலைப்பில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் வழங்கிய செய்தியும், தானியேல் புஸ்தகம் தொடர் வேதபாடத்திலிருந்து உங்கள் ஜெபத்தை சாத்தான் தடுக்கும்போது.. என்ற தலைப்பில் 10ஆம் அதிகாரத்திலிருந்து சிறப்புச்செய்தியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப்பற்றிய சத்தியம் தொடர் வேதபாடமும், இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவருக்கும் ஆசீர்வாதமாக அமைய ஜெபிக்கும் …..

கே.ப.ஆபிரகாம்