• Dr.வாரன் வியர்ஸ்பி •
(ஜனவரி-பிப்ரவரி 2023)

Dr.வாரன் வியர்ஸ்பி

அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் காணப்படும், பெந்தெகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியானவர் மனிதர்மேல் வந்து இறங்கியபோது, திருச்சபை ஆரம்பிக்கப்பட்டது என்று அறிவோம். அன்று முதல் ஒவ்வொரு விசுவாசியிலும் பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிறார் என்பதையும் அறிவோம் (ரோமர் 8:9). அவர் நம் ஒவ்வொரு வருடைய வாழ்விலும் ஆவியின் கனிகள் தர முயற்சிக்கிறார் (கலா.5:22,23). ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பரிசுத்த ஆவியானவர் ஆவியின் வரங்களைத் தருகிறார் என்றும் அறிவோம் (1கொரி.12). உண்மையிலேயே இன்று நமது திருச்சபையில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறாரா? என்பதை நாம் எப்படிக் கூறமுடியும்? என்பதே இன்று நம்மில் பலரிடம் காணப்படும் கேள்வியாகும்.

சபையில் நடக்கும் நிகழ்ச்சிகள் நல்லவையே. சபையின் வாழ்வுக்கு அவை தேவை. நம்முடைய ஓய்வுநாள் பள்ளி, பாடகர் குழு, வாலிபர் சங்கங்கள், ஆலய ஆராதனைகள் இவற்றுக்காக நாம் தேவனைத் துதிக்கிறோம். ஆனால், இவற்றை அடிக்கடி நாம் மதிப்பீடு செய்வது அவசியமாகும். பரிசுத்த ஆவியானவர் இவற்றில் கிரியை செய்கிறாரா என்று கேட்கவேண்டும் அல்லது ஆண்டவரால் அகதூண்டல் பெறாத காரியங்களை இவற்றின்மூலம் பிறப்பித்துக் கொண்டிருக்கிறோமா? நாம் கவனமாக இல்லாவிட்டால் உண்மையான ஊழியத்துக்குப் பதில் சடங்காச்சாரமான நிகழ்ச்சிகளாக இவையாவும் மாறிவிடும்.

இயேசு சிலுவை மரணத்துக்குப் போவதற்கு முன்னால், தமது சீஷர்களிடம் பரிசுத்த ஆவியானவர் வந்து எந்தெந்தக் கிரியைகளைச் செய்வார் என்று கூறினார். யோவான் 16ஆம் அதிகாரத்தில் இயேசு கூறிய வார்த்தைகளை நாம் தியானிக்கும்போது, நம்முடைய ஐக்கியத்தில் பரிசுத்த ஆவியானவர் தங்கிக் கிரியை செய்கிறார் என்பதற்கு ஆதாரம் காட்டவேண்டும்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தினால், நம்மிடத்தில் ஒரு வளரும் சாட்சி காணப்படும். இன்று பரிசுத்த ஆவியானவரின் பணிகளில் ஒன்று பாவிகளின் பாவத்தைக் குறித்துக் கண்டித்து உணர்த்துவதாகும். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யோவான் 16:8). நற்செய்தி அறிவிக்கப்படும்போது, வேதபாடம் கற்றுக்கொடுக்கப்படும்போது, இயேசுவைப்பற்றி இதுவரை அறியாதவர்கள், அவரே தங்கள் இரட்சகர் என்று தெரியாதவர்கள், இவர்களின் பாவங்கள் உணர்த்தப்பட்டு, இரட்சிப்பின் அவசியத்தை உணரும்படி செய்யப்படுவார்கள்.

நாம் இன்னும் சில கடினமான கேள்விகளைச் சந்திக்கவேண்டும்.

நம்முடைய சபையில் கடைசியாக ஒருவர் இரட்சிக்கப்பட்டபின் எவ்வளவு காலம் ஆயிற்று?

நாம் இரட்சகரைப்பற்றிச் சாட்சி கூற பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகிறோமா?

மற்றவர்களைக் குற்றவாளிகள், பாவிகள் என்று பெயர் சூட்டிப் பெயர் பெறவேண்டாம். மற்றவர்கள் நமது ஆலயத்துக்கு வந்து நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும், அவருடைய அன்பையும், இரக்கத்தையும், இரட்சிப்பையும் அறிந்துகொள்ள உதவுவதே நமது ஆலயத்தின் இலட்சியமாக இருக்கவேண்டும். கொஞ்சக் காலமாகவே கிறிஸ்தவர்களாக இருந்துவரும் நமக்கு இவை புரியும்.

1. பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்வாரானால், நம்முடைய வாழ்க்கை பரிசுத்தத்தில் வளர்ச்சி அடையும்.

பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தத்தைத் தருகிறார். நம்மிடத்தில் இருக்கும் தவறான மனநிலை களையும், பழக்கங்களையும் பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துவார். அதுவொரு நல்ல அறிகுறியாக இருக்கும். நல்லது என்று நாம் நினைக்கிற சிலவற்றைக் கைவிடும்படி அவர் நம்மைத் தூண்டுவார். எதற்காகவெனில் அதைவிடச் சிறந்த ஒன்றை நாம் பெற்றுக்கொள்ள அவர் நமக்கு வழிகாட்டுவார். கர்த்தருடைய ஆவியானவர் நம்மில் கிரியை செய்தால், அனுதினமும் நம்முடைய சாட்சி வளர்ந்து கொண்டேயிருக்கும்.

2. பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்வாரானால், நாம் சத்தியத்திலே வழிநடத்தப்படுவோம்.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் (வச.13). இங்கே சத்தியம் குறிப்பது என்னவெனில், இயேசு யார்? அவர் செய்த பணி என்ன? அவர் இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்? என்பவையாம். நானே சத்தியம் என்று இயேசு கூறுகிறார் (யோவான் 14:6). மேலும், தேவனுடைய வார்த்தையானது சத்தியம் என்றும் கூறுகிறார் (யோவா. 17:17).பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தும்போது, அவர் வேதவசனங்களை நமக்குப் போதிக்கவும் வழிகாட்டவும் பயன்படுத்துவார்.

நாம் இயேசுவைப் பின்பற்றும்போது, நமக்குப் பல நோக்கங்கள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. நாம் ஆண்டவருக்கு ஊழியஞ்செய்யும்போது, நாம் என்ன செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்று யோசித்துப்பார்க்க வேண்டியதில்லை. நமக்கு வேதாகமத்தில் அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. நாம் செய்ய விரும்பும் ஒவ்வொரு தீர்மானத்துக்கும் ஆவியானவர் நம்மை சத்தியத்தில் வழிகாட்டுவார்.

3. பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத் துவரானால், நாம் நமது லட்சியங்களையும் செய்யும் தீர்மானங்களையும் வேதாகமம் கூறும் அறிவுரைகளுக்கு ஒத்தவையாக இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்ப்போம்.

உதாரணமாக வேதாகமம் குடும்ப வாழ்க்கையை வெகுவாக ஆதரித்துப் பேசுகிறது. சபையின் நிகழ்ச்சிகளையும், கூட்டங்களையும் ஒழுங்கு செய்யும்போது குடும்பங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் இரவில் வீட்டில் இல்லாமல் வெளியே செல்ல வழிவகுப்பதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுகிறோமா?

சபைத்தலைவர்களும், பொறுப்பாளர்களும் சபையில் வரவு செலவுத்திட்டம் வகுக்கும்போது ஏழைகள் உதவிக்காகவும், தானதருமங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்து, அதற்கென்று பணக்கொள்கை வகுக்கின்றார்களா? ஈகை சம்பந்தமான வேதாகம அறிவுரைகள் பின்பற்றப்படுகிறதா? கர்த்தருடைய ஆவியானவர் நம்மை வழிநடத்தும்போது நம்முடைய செயல்களும், தீர்மானங்களும் வேதசத்தியங்களால் வழி காட்டப்படும்.

4. பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக நம்மில் செயல்படும்போது, நாம் ஆண்டவராகிய இயேசுவுக்கு மகிமையை ஏற்படுத்துவோம்.

பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை நன்கு தொகுத்துக் கூறும் வசனம் யோவான் 16: 14இல் உள்ளது. ஆகவே இயேசு இவ்விதமாக கூறுகிறார்: அவர் என்னை மகிமைப்படுத்துவார். பரிசுத்த ஆவியானவர் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர்தரும் ஒவ்வொரு ஆவிக்குரிய வரங்களும், அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உட்கருத்துக்களும் ஆகிய இவை அனைத்தும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாம மகிமைக்காகவே செய்யப்படும்.

பரிசுத்த ஆவியானவர் நம் கவனத்தைத் தமக்கு நேராக ஒருபோதும் திருப்புவதில்லை. அவர் நம் அனைவரது கவனத்தையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நேராகவே திருப்புகிறார். நாம் தீர்மானங்களைச் செய்யும்போது, எப்போதும் நாம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். நான் செய்யத் தீர்மானித்திருக்கும் இந்தக் காரியம் ஆண்டவருக்கு மகிமையைக் கொண்டுவருமா? இந்தக் கேள்வியை மறவாமல் நாம் கேட்போமானால் நம்மில் ஆவியானவர் கிரியை செய்கிறார் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளலாம். இயேசுமட்டுமே மகிமைக்குப் பாத்திரர்! நித்தியகாலம் வரை நிலைத்திருக்கும் காரியங்கள் அவரது மகிமைக்காக நாம் செய்யும் கிரியைகளே!

நாம் நமக்கு அழியாப் புகழும், பெயரும் பெற்றுவிட நினைப்போமானால், நம்முடைய சபைக்காகவும் நம்முடைய தொழிலுக்காகவும் நாம் நமது வாழ்க்கையிலிருந்து ஆவியானவரை விலக்கி விட்டுவிடுகிறோம். ஆனால், தேவனின் மகிமைக்காகக் கிரியைகளைச் செய்யும்போது ஆவியானவர் நம்மை ஆசீர்வதிப்பார்.

நம்முடைய சாட்சி வளர்ந்துகொண்டிருக்கிறதா? தேவனுடைய சத்தியத்தால் வழி நடத்தப்பட நாம் நம்மை ஒப்புக்கொடுக்கிறோமா? நம்முடைய வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியம் ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு மகிமை சேர்ப்பதாய் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் அளிக்கும் பதில்கள் நாம் செய்யும் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியானவர் உடன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றன.