• Dr.தியோடர் எச்.எஃப். •
(ஜனவரி-பிப்ரவரி 2023)

Dr.தியோடர் எச்.எஃப்.
5. நியாயப்பிரமாணத்தின் காலம்
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று 2 தீமோத்தேயு 3:16 கூறுகிறது. ஒரு சிலர் வேதாகமத்தின் சிலபகுதிகள் மற்றப் பகுதிகளைவிட அதிகமாக ஆழமான சத்தியத்தை அருளுகிறது என்று போதிப்பார்கள். உதாரணமாக பத்துக்கட்டளைகள் கற்பலகைகளில் தேவனுடைய விரலினால் எழுதப்பட்டதாகையால் மற்ற பகுதிகளைவிட மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள். மனித கரங்களால் எழுதப் பட்டவைகள் அவ்வாறு ஆவிக்கேற்ற எழுப்புதலைத் தராது என்று கூறுகிறார்கள்.
ஆனால், தேவன் அவருடைய வார்த்தைகள் அனைத்தும் தேவாவியினால் எழுதப்பட்டது என்று கூறுகிறார். தேவன் வேதவசனங்களை வெவ்வேறு முறைகளில் கொடுத்தது உண்மைதான். ஆனால், அவையெல்லாம் ஆவியானவரால் கொடுக்கப்பட்டவை. பத்துக்கட்டளைகள் தேவனுடைய விரலால் எழுதப்பட்டவை (யாத்.20, ஆதி. 31:18). வெளிப்படுத்தின விசேஷம் யோவானிற்கு தரிசனத்தில் கொடுக்கப்பட்டது. வேதாகமத்தின் மற்ற பகுதிகள்,
பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட மனிதர்களால் எழுதப்பட்டவையாகும். எல்லா வேதவசனங்களும், மனிதர்களுக்கு பிரயோஜனமாகக் கொடுக்கப்பட்டவையாகும்.
நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே கிறிஸ்து வந்தார் என்றும், அவற்றை அழிக்க வரவில்லை என்றும் சிலர் விசுவாசிக்கிறார்கள். ஆகவே நாமும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வேண்டுமானால், நாம் கிறிஸ்துவோடு ஒன்றாய் இருக்க வேண்டும். இப்படிப் போதிப்பவர்கள், நமக்காக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே கிறிஸ்து வந்தார் என்பதை புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள், நாம் தொடர்ந்து நியாயப்பிரமாணத்தை மீறுகிறோம். ஆனால் கிறிஸ்துவோ, அதை முழுவதுமாக நிறைவேற்ற வந்தார் (மத்.5:17,யோவா. 17:4).
மோசேயின் காலத்தில், யூத மக்களுக்கு நியாயப் பிரமாணம் எப்படி இருந்ததோ அதைப்போலவேதான் கிறிஸ்துவும், நியாயப்பிரமாணத்தோடு தொடர்புடையவர் என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம்.
அவர் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் வந்தார். அவர் ஜீவனோடிருந்த 33 ஆண்டுகளும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே செலவழிக்கப்பட்டது. கிறிஸ்து மாம்சத்தில் இருந்தபொழுது நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையுமாக செய்து முடித்தார். அவரது மரணத்தின்மூலமாக, அவர் தண்டனையை ஏற்றுக் கொண்டதினால், நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றிமுடித்தார் (கலா.3:13). கிறிஸ்து நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றி முடித்துவிட்டதால், நம்மேல் நியாயப்பிரமாணத்திற்கு எந்தவொரு அதிகாரமுமில்லை.
நியாயப்பிரமாணம் பற்றிய விளக்கங்கள்
தேவன் அவரது மகத்துவமான நிலைமையை யும், மனுஷனுடைய பாவத்தன்மையையும் வெளிப்படுத்தும்படியாக நியாயப்பிரமாணத்தை கொடுக்க வேண்டியதிருந்தது (ரோமர் 3:19,20).
நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுமுன்பே இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியேற வைத்தார்.
1. இஸ்ரவேலரை கானான் தேசத்திற்குள் அழைத்துச் செல்லுவதாக தேவவாக்குத்தத்தம் பண்ணினார்.
2. இன்றைய மக்களைப்போலவே, இஸ்ரவேல் மக்களும் தேவனுடைய கிருபையினால் வழிநடத்தப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் எழுத்தினால் எழுதப்பட்ட கட்டளைகளையும், கற்பனைகளையும் விரும்பினார்கள். ஆகவே அவர்கள் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொள்வதிலும், அதில் தேவன் கொடுத்துள்ள கட்டளைகள் அனைத்தையும் கைக்கொள்ளுவதற்கு வாக்குக்கொடுப்பதிலும், அவர்கள் தேவனுடைய முழுமையுமான பரிசுத்தத்தன்மையை புரிந்துகொள்ளவில்லை.
நியாயப்பிரமாணமானது ஜனங்களை கிறிஸ்து வண்டை வழிநடத்தும் உபாத்தியாராயிருக்கிறது.
1. ஒரு மனிதன், நியாயப்பிரமாணம் என்ற கண்ணாடியில் அவனை உற்றுநோக்கினால், உண்மையாகவே அவன் நியாயப்பிரமாணங்கள் அனைத்தையும் கைக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை ஏற்றுக்கொள்வான்.
2. “தேவமகிமை அற்றவனாக” அவன் தன்னில் உணரும்பொழுது, (ரோ.3:23) அவன் தன்னை பாவியென்று உணர்ந்து, தன்னை இரட்சிக்கவல்லவராகிய கிறிஸ்துவண்டை வருகிறான் (கலா.3:24).
சட்டதிட்டங்களைக் கைக்கொள்வதின் மூலமாக மனிதனை நீதிமானாக்குவது தேவதிட்டமல்ல.
1. மனிதனுடைய விசுவாசத்திற்கு பலனாக தேவன் அவரது பரிபூரணமான இரட்சிப்பை அருளுகிறார் (ரோமர் 3:21,22; 4:5).
2. இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்கிறவன் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறான் (வச.22). இஸ்ரவேலருக்கு மட்டும்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.
இஸ்ரவேலர், வனாந்தரத்திலே அலைந்து திரிந்த பொழுது, அவர்களது கீழ்ப்படியாமையினாலே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து சிலுவையிலே மரித்ததின்மூலமாக நியாயப்பிரமாணத்தை முடித்துவைத்தார். அதுவரைக்கும் நியாயப்பிரமாணம் செயல்படுத்தப்பட்டு வந்தது. (எபே.2:11-13; ரோமர் 9;3,4).
நியாயப்பிரமாணத்திற்கும் கிருபைக்கும் இடையே உள்ள சில வித்தியாசங்கள்
1. நியாயப்பிரமாணம் ஓர் இன மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. கிருபை உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட்டது. (மத்.28:18-20).
2. நியாயப்பிரமாணம் ஒரே மொழியில்தான் கொடுக்கப்பட்டது (எபிரெய மொழி). கிருபை அனைத்து மொழிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது (அப்.2:8).
3. நியாயப்பிரமாணம் எருசலேம் என்ற ஒரே இடத்தில்தான் ஆராதனை செய்யவேண்டும் என்று கூறியது. கிருபையோ, ஆவியிலும், உண்மையிலும் மக்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தும், ஆராதிக்கலாம் என்ற வழியை திறந்து கொடுத்தது (அப்.1:8, யோவான் 4: 23,24).
நாம் அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று 1யோவான் 2:4இல் வலியுறுத்தபட்டிருப்பதால் மக்கள் சில சமயங்களில் குழப்பமடைந்து விடுகின்றனர். யோவான் தனது நிருபங்களில் குறிப்பிடுகிற பிரமாணம், பழைய ஏற்பாட்டின் காலத்தில் கொடுக்கப்பட்ட பிரமாணங்களையோ அல்லது மோசேயின் காலத்தில் கொடுக்கப்பட்ட பிரமாணங்களையோ பற்றிக் கூறவில்லை. அது 1 யோவான் 3:22,23இல் தெளிவாக விளக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பற்றிக் கூறுகிறது: அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.
கிறிஸ்துவின் புதிய பிரமாணம் அது அன்பின் பிரமாணம்
1. பிரமாணங்கள் அனைத்தையும் நிறைவேற்ற நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும் (ரோ. 13:10).
2. மனிதர்களுடைய இருதயங்களில் தேவ ஆவியானவர் ஊற்றப்பட்டிருக்கிறபடியினால், தேவனுடைய அன்பும் அவர்களுடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. அதனால் நாம் அவருடைய கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றவேண்டும் (ரோமர் 5:5).
3. கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவன் சாதாரண மனித அன்பைக் கொடுக்காமல், மிக ஆழமான தெய்வீக அன்பைக் கொடுத்துள்ளார். நாம் இதை உணரும்பொழுது, தூண்டப்பட்டு, தேவனுடைய பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.
4. இந்தக் கட்டளைகளைக் கைக்கொள்ளுவதன் மூலமாக தேவனோடும், உடன் மனிதர்களோடும் நமக்குள்ள உறவை சோதித்துக்கொள்ளலாம். கிறிஸ்துவின் அன்பை நிறைவேற்றுவதின் மூலமாக, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற இயலும்.
கிறிஸ்துவின் நிறைவேற்றப்பட்ட கிருபையினின்று நியாயப்பிரமாணம் வேறுபட்டதாக உள்ளது.
ரோமர் 8:2-4யையும், 2கொரி.3:7-9 யையும் கவனமாக வாசியுங்கள். நியாயப்பிரமாணத்திற்கும் கிருபைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டால், மிக ஆழமான, அர்த்தமுள்ள அதிகக் கனி கொடுக்கும் கிறிஸ்தவ அனுபவத்தைப் பெறலாம்.
காலத்திற்கு ஏற்றபடி நியாயப்பிரமாணமும், கிருபையும் வேறுபடுகிறது.
1. இஸ்ரவேலர், எகிப்தை விட்டு வெளியேறிய பின் சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது (யாத்.19:1,2;20:1-17). தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தானவர் வரும்வரை அவைகளில் கட்டளைகள் சேர்க்கப்பட்டன (கலா. 3:19, 16; யோவான் 1:17).
2. நியாயப்பிரமாணத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருந்தது. அதற்கு ஒரு ஆரம்பமும், முடிவும் இருந்தது.
3. நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்தவுடன் கிருபையின் காலம் என்ற ஒரு சிறப்பான காலம் வந்தது.
4. இயேசுவே, “நியாயப்பிரமாணத்தின் முடிவானார்” (ரோமர் 10:4). ஏனெனில் அவர் நியாயப்பிரமாணங்கள் அனைத்தையும் முழுமையுமாக செய்துமுடித்தார்.
i. நியாயப்பிரமாணத்தின் ஒழுக்கத்திற்கான கோட்பாடுகளை இயேசு தமது வாழ்க்கையில் நிறைவேற்றினார்.
ii. அவரது மரணத்தின் மூலமாக பலி செலுத்தக்கூடிய பிரமாணத்தை நிறைவேற்றினார். நமக்காக அவர் செய்துமுடித்த காரியங்கள் மூலமாக நன்மைகளை அடைகிறோம். நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து கிறிஸ்து நம்மை மீட்டுக்கொண்டார் (கலா.13:13).
iii. கிறிஸ்துவிற்குள்ளாக நாம் நியாயப்பிரமாணத்திற்கு மரித்துவிட்டோம். அதன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன (2:19).
iv. நமது வாழ்க்கையில் பாவத்தை மேற்கொள்ள நியாயப்பிரமாணத்தினால் நமக்கு உதவிச்செய்ய இயலவில்லை. ஆனால், தேவனுடைய கிருபை அதை செய்த முடித்தது (ரோ.6:14). கிருபையினால் தேவனின் சட்டங்களுடைய நிபந்தனைகளை நிறைவேற்ற நமக்கு தேவனின் வல்லமை கிடைக்கிறது.
பலியைக் குறித்த விஷயத்தில் நியாயப்பிரமாணமும் கிருபையும் வேறுபடுகின்றன.
1.நியாயப்பிரமாணம்
i. பிரதான ஆசாரியன், அனுதினமும் பலிசெலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை வரும் பாவ நிவாரண நாளிலே சிறப்பான பலி செலுத்த வேண்டும் ( எபி.9:7).
ii. பழைய ஏற்பாட்டு பலிகள், பாவத்தை நீக்காமல், தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றியது (எபி.10:11).
iii. “பாவநிவாரணம்” என்ற வார்த்தை, மனிதன் முழுவதுமாக தேவனோடு ஒப்புரவானான் என்று பொருள்படாது, “பாவநிவாரணம்” என்பது கிறிஸ்து அவரது சொந்த இரத்தத்தை சிந்தும்வரைக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பை தடுத்து நிறுத்தியது என்றே அர்த்தமுடையதாக உள்ளது. இப்பொழுது மனிதன் தேவனோடு முழுமையுமாக ஒப்புரவாகிவிட்டான் (சங்.85:2).
2.கிருபை
கிறிஸ்து பலியானது, பழைய ஏற்பாட்டின் பலிகளில் இருந்து வேறுபட்டது.
i. நமது பாவங்கள் அனைத்தையும் ஒரே முறையில் முழுமையுடன் நீக்கிவிட போதுமானது (எபி.10: 14).
ii. நாம் கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு ஒப்புரவாகிவிட்டபடியினால், நம்மை தேவனுடைய பிரசன்னத்தில் சேர்க்கிறது (எபி.9:26).
பழைய ஏற்பாட்டின் பலிகள் பாவத்தை மூடுவதற்கு போதுமானது என்று தேவன் கருதினார். ஆகவே பாவத்திற்காக ஜனங்களைக் குற்றப்படுத்தவில்லை. பாவங்கள் மூடப்படுவதுமட்டும், மனிதன் தேவனைக் காண போதுமானதாக இல்லை. பாவம் முழுவதுமாக நீக்கப்படவேண்டும். அதைக் கிறிஸ்து ஒருவரால்மட்டுமே செய்ய இயன்றது.
கிறிஸ்து பாவங்களின் நினைவையே அழித்துவிட்டார் (எபி.10:17). எந்தவொரு மனிதன், கல்வாரியில் கிறிஸ்து செய்துமுடித்த இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளாமல் வேறு வழியாக பரலோகத்திற்குள் நுழைய முயற்சித்தால் அவன் “கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்” (யோவான் 10:1).
நியாயப்பிரமாணமும் கிருபையும் அளிக்கும் செய்திகள் வேறுபட்டதாய் உள்ளது.
1. நியாயப்பிரமாணத்தின்படி தேவனை மனிதன் தேடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது (எரே. 29: 13) கிருபையின்படி, கிறிஸ்து இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தார் (லூக்.19:10).
2. நியாயப்பிரமாணம், நமது தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழுப்பலத்தோடும், அன்புகூர வேண்டும் என்று கூறுகிறது (உபா.6:5). கிருபையின்படி, தேவனுடைய அன்பு நமது இருதயங்களிலே ஊற்றப்பட்டிருக்கிறது.
i. நியாயப்பிரமாணத்தின்படி மனிதன் தேவனில் அன்புகூரவேண்டும் என்று கட்டளை கொடுக்கிறது. ஆனால் அவ்வாறு அன்புகூருவதற்கு நியாயப்பிரமாணம் எந்த ஒரு வல்லமையையும் அளிக்கவில்லை.
ii. கிருபையின் கீழ், தேவனுடைய அன்பு நமக்கு அருளப்பட்டுள்ளது. கிறிஸ்து இயேசுவின் ஜீவனின் மூலமாக நாம் அன்புகூர வேண்டும். “அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம் சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார் (ரோம.8:3). அவ்வாறு அவர் செய்ததினால், நமது இருதயத்தில் தேவனின் அன்பை பெற்றுக்கொள்ளச் செய்தார். இப்படியாக அவர் மூலமாக நியாயப்பிரமாணம் நிறைவேற்றப்பட்டு முடிந்தது.
இப்படியாக, தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்கிறவராயிருக்கிறார் (பிலி.2: 13).
மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan