சத்திய வசனம் பங்காளர் மடல்

(மார்ச்-ஏப்ரல் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நமக்காக ஜீவனைக் கொடுத்த நல்ல மேய்ப்பனாம் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இம்மட்டும் சத்தியவசன ஊழியப்பணிகளையும், நம்மையும் நமது குடும்பத்தையும் வழிநடத்திய தேவனை ஸ்தோத்திரிப்போம். இவ்விதழை தயாரித்து வெளியிடுவதற்கு தேவன் கிருபை செய்திருக்கிறார். பேப்பர் தட்டுப்பாட்டின்நிமித்தம் உரிய நேரத்தில் இவ்விதழை அனுப்ப இயலாததற்கு வருந்துகிறோம். இவ்விதழில் இடம்பெற்றுள்ள செய்திகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் அரசுத்தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காகவும், கல்வி இறுதியாண்டுத் தேர்வு மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எழுதும் எல்லாப் பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துவருகிறோம்.

தென்காசியிலும் சேலத்திலும் நடைபெற்ற லெந்து கால சிறப்பு தியானக்கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கூட்டத்தில் பங்குபெற்று சிறப்பித்தப் பங்காளர்களுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். சத்தியவசன ஊழியத்தின் தேவைகள் அனைத்தையும் கர்த்தர் அன்பு பங்காளர்கள் மூலமாக சந்தித்துவருகிறார். நீங்களும் புதிய பங்காளர்களை இவ்வூழியத்திற்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம். மேலும் உங்களுக்கு நன்கு அறிமுகமான கிறிஸ்தவ நண்பர்கள் சகவிசுவாசிகளின் முகவரிகளைத் தெரிவித்தால் அவர்களுக்கு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் சத்தியவசனம் சஞ்சிகையின் மாதிரி பிரதிகளை அனுப்பி வைப்போம்.

சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தொலைகாட்சி ஊழியத்தைத் தாங்கவும், You Tube சேணலில் இடம்பெற்றுவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இவ்விதழில் நானே நல்ல மேய்ப்பன் (இயேசு) என்ற தலைப்பில் பேராசிரியர் S.C.எடிசன் அவர்கள் வழங்கிய செய்தியும், அநாதி சிநேகம்! என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய சிறப்புச்செய்தியும், இயேசுவின் கரங்கள்! என்ற சிறப்புக் கட்டுரையும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நாம் அடையும் பலன்கள் என்ற தலைப்பில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் வழங்கிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் பழைய ஏற்பாட்டு வேதபாடம் தீயவரான அந்தியோகியஸ் எப்பிபானஸ் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தானியேல் புஸ்தகத்தின் தொடர் வேதபாடமும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும், இடம்பெற்றுள்ளது. இச்செய்திகளின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை தேவனுடைய நாம மகிமைக்காக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்