• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(மார்ச்-ஏப்ரல் 2023)
கர்த்தருக்குள் அருமையான சத்திய வசனம் நேயர்களே, உங்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துதலைத் தெரிவிக்கிறோம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்ததினாலே நமக்கு கிடைக்கின்ற பயன்களும் பலன்களும் எண்ணிமுடியாதவை.
மத்தேயு 28:1-10 வரை நாம் வாசித்துப் பார்ப்போம். ஆண்டவராகிய இயேசு உயிரோடு எழுந்ததினாலே நம்முடைய கடந்தகால பாவ வாழ்க்கையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கிறது. ரோமருக்கு எழுதின நிருபம் 4:25ஆம் வசனம் பாருங்கள். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். இயேசு உயிரோடு எழுந்ததினாலே நமக்குப் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது. அப்போஸ் தலர் 4ஆம் அதிகாரம் 12ஆம் வசனம், நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
1. கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால் கடந்தகால நம் பாவத்திலிருந்து மன்னிப்பு கிடைக்கிறது.
1815ஆம் வருஷத்திலே இங்கிலாந்து நாட்டின் ராணுவம் வெல்லிங்டன் என்கிற பிரபுவின் தலைமையின் கீழாக நெப்போலியனோடு வாட்டர்லோ என்கிற இடத்தில் யுத்தம் செய்தார்கள். அந்த யுத்தத்தினுடைய முடிவை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாததினாலே யுத்தத்திலிருந்து வரக்கூடிய அந்த முதல் கப்பலிலே அங்கே வாசகங்கள், வெற்றியின் வாசகங்கள் அல்லது தோல்வியின் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். அப்பொழுது அந்த கப்பல் திரும்பிவந்தது. கண்காணிப்பாளர் ஒருவர் தூரத்திலிருந்து அதைக் கண்காணித்து வாசித்தார். அதில் Wellington defeated Enemies என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அங்கிருந்த பனியினாலே முதல் இரண்டு வார்த்தைகளை மாத்திரமே அந்த மனிதர் வாசித்தார். ஆகவே வெல்லிங்டன் தோற்கடிக்கப்பட்டார் என்ற செய்தியை எல்லாருக்கும் சொல்லிவிட்டார். எல்லாரும் கலங்கி அழுது புலம்பினார்கள். கொஞ்ச நேரம் கழித்து பனி விலகியது. அப்போது வெல்லிங்டன் எதிரிகளை ஜெயித்தார் என்ற வாக்கியத்தை வாசித்து அதைச் சொன்னபோது எல்லாரும் உற்சாகமடைந்தனர்.
அருமையான சகோதரனே சகோதரியே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு மரித்தபோது இதேபோல தான் சீடர்களுக்குள்ளே தொய்வும் தோல்வியும் ஏற்பட்டது. ஆனால் அவர் உயிர்த்தெழுந்தபோது எல்லாருக்குள்ளும் மனமகிழ்ச்சியும் ஆரவாரமும் ஏற்பட்டது. அருமையான என் சகோதரனே சகோதரியே, இயேசு உயிரோடு எழுந்ததினாலே நமக்கு ஆரவாரமான மகிழ்ச்சியின் செய்தி என்னவென்றால், கடந்தகால நமது வாழ்வின் பாவத்திலிருந்து மன்னிப்பு கிடைக்கிறது.
2. இயேசு உயிரோடு எழுந்ததினாலே இன்றைய வாழ்வுக்குரிய வல்லமை கிடைக்கிறது.
பாவமான இவ்வுலகத்திலே பாவம் செய்வதற்குரியச் சூழ்நிலையை ஜெயிப்பதற்கான வல்லமையை உயிர்த்தெழுந்த இயேசுவானவர் நமக்குத் தருகிறார். பிலிப்பியர் 4:13ஆம் வசனம், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு, வல்லமையுண்டு என்பதாக பவுல் எழுதுகிறார்.
அருமையான என் சகோதரனே சகோதரியே, எபிரெய நிருபம் இரண்டாம் அதிகாரம் 18ஆம் வசனம், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ஆகவேதான் அருமையானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலே புரிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி என்ன தெரியுமா, நடைமுறை வாழ்க்கையில் வருகிற பாவசோதனைகளை ஜெயிப்பதற்கு உயிர்த்தெழுந்த இயேசு நமக்கு உதவிசெய்ய வல்லமையுள்ளவராக இருக்கிறார். மகிமையுள்ளவராக இருக்கிறார். ஆகவே பயப்படாதிருங்கள், அவர் நடைமுறை வாழ்வுக்குரிய வல்லமையை தன்னுடைய உயிர்த்தெழுதல் மூலமாக உங்களுக்குத் தர ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். எனவே அவரண்டையிலே வாருங்கள்!
3. நமது இயேசுவானவர் உயிர்த்தெழுந்ததினால் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை நமக்கு உண்டாயிருக்கிறது.
மூன்றாவதாக நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் உயிர்த்தெழுந்த பிற்பாடு நமக்கு எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையைத் தருகிறார். இன்று அநேகருக்கு தங்களது எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால், ஆண்டவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையைத் தருகிறார். 1 கொரிந்தியர் ஆறாம் அதிகாரம் 14வது வாக்கியத்தை வாசித்துப் பாருங்கள். யோவான் 14ஆம் அதிகாரம் 1 மற்றும் இரண்டாம் வசனத்தை வாசித்துப் பாருங்கள்.
ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால் எதிர்காலத்திலே நித்தியத்திலே நமக்கென்று அவர் வாசஸ்தலத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். அருமையானவர்களே. ஒருவேளை எதிர்காலத்தின் நம்பிக்கை இல்லாமல் நீங்கள் வாழுகிறீர்களோ, பயப்படாதீர்கள்! உங்களுக்கு எதிர்காலத்தின் நம்பிக்கைக்குரிய அந்த செய்தியை ஆண்டவர் உயிர்த்தெழுதல் மூலமாக இன்றைக்கு உங்களுக்கு தந்துகொண்டிருக்கிறார்.
எரிக் பேக் என்கிற ஒரு மிஷனெரி இருந்தார். போர்ச்சுக்கல் என்கிற நாட்டிலே ஒரு மிஷனெரிப் பணியை நன்றாக செய்துவந்தார். அவருக்கு ஒரு மனைவியும் எட்டு பிள்ளைகளும் உண்டு. இரண்டாவது உலக யுத்தம் பயங்கரமாக நடந்து கொண்டிருந்தது. ஆகவே சபையார் சொன்னார்கள்: உங்கள் மனைவியையும் 8 பிள்ளைகளையும் தன் நாட்டுக்கு கப்பலில் செல்லும் உங்களுடைய சகோதரியுடன் அனுப்பிவிடுங்கள் என்றார்கள். அவரும் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் தனது சகோதரியோடு கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டார். அவர்கள் கப்பல் பயணம் செய்துகொண்டே இருந்தனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனையிலே பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தந்தி ஒன்று கிடைத்தது. அதிலே இருந்த செய்தியை அவர் தனது கைகளில் பற்றிக்கொண்டு சபையாருக்குச் சொன்னார்: என் மனைவி பிள்ளைகள் அனைவரும் தன் சொந்த வீட்டுக்குப் போய் பத்திரமாய் சேர்ந்துவிட்டனர் என்று சொன்னார்.
ஆராதனை முடிந்து விடைபெறும்போதுதான் அவருடைய மனைவி பிள்ளைகளும் சென்ற அந்த கப்பலானது நடுக்கடலில் மூழ்கி அமிழ்ந்து போனார்கள் என்பது தெரியவந்தது. போதகரை பார்த்து சபையார், ஐயா என்ன ஆனது என்று கேட்டனர். அவர் சொன்னார்: உண்மையாகவே எனது முழு குடும்பமும் தங்கள் சொந்த வீட்டுக்கு போய் சேர்ந்தார்கள் என்று.
அருமையானவர்களே, சொந்த வீடு என்பது நமக்கு எது என்றால் ஆண்டவருடைய ராஜ்யம், ஆகவே இந்த உலகத்தில் அல்ல; இன்னொரு உலகம் இருக்கிறது. அந்த தேவராஜ்யத்தில் நாம் சேரக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தான் அந்த மிஷனெரி என்னுடைய மனைவி எட்டு பிள்ளைகள் நித்தியத்தில் தங்கள் சொந்த வீட்டுக்கு போய்விட்டார்கள் என்று சொன்னார். தன்னுடைய மனைவியும் எட்டு பிள்ளைகளும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்ந்த அந்த நிச்சயத்தை அவர் சொல்ல ஆரம்பித்தார்.
அருமையான சகோதரனே சகோதரியே, நித்தியத்திலே நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நாம் இன்றைக்கு வியாதியிலோ, பிரச்சனையிலோ எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் நாமும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அவருக்காக வாழ்வோமோனால் மெய்யாகவே நமக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை இருக்கிறது; எதிர்காலத்தில் நமக்கென்று ஒரு வீடு இருக்கிறது; எதிர்காலத்தில் பரலோகம் இருக்கிறது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் அங்கிருந்து அவர் நம்மை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆகவே நமது எதிர்காலத்துக்குரிய நம்பிக்கையைத் தருகிறது யார் தெரியுமா? ஆண்டவராகிய இயேசு மட்டுமே.
உயிர்த்தெழுந்த ஆண்டவர், கடந்தகால பாவ வாழ்விலிருந்து பாவமன்னிப்பைத் தருகிறார்.
நமது நடைமுறை வாழ்க்கைக்குரிய வல்லமையைத் தருகிறார்.
எதிர்காலத்திற்குரிய நம்பிக்கையைத் தந்து நம்மை ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.
ஆகவே இயேசு உயிர்த்தெழுந்த திருநாளில் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை நாமும் நம்முடைய குடும்பமும் பெற்றுக்கொள்ள ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணிப்போம்.