• பழைய ஏற்பாட்டு வேதபாடம்
• Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2023)
தானியேல்
11 ஆம் அதிகாரம்
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அநேக பரிசுத்த தீர்க்கதரிசனங்களை நாம் அறிவோம். ஆனால் நாம் அறியாத சில காரியங்களும் உண்டு. எதிர்கால நிகழ்வுகளைக் குறித்த தேவனுடைய வாக்குறுதிகளை அறிந்துகொள்வதில் நம் அனைவருக்கும் ஆர்வம் அதிகம். அவை யாவும் நிச்சயமாகவே நிறைவேறும் என்பதில் சந்தேகமேயில்லை. இயேசுகிறிஸ்து இந்த உலகில் தம்முடைய இராஜ்யத்தை நிறுவும்பொழுது சமாதானம் நிலவும்; ஏனெனில் அவர் சமாதான கர்த்தர்!
மனிதர்கள் உரைக்கும் தீர்க்க தரிசனங்களில் சில உண்மையாவதில்லை. நாம் அவர்களைக் கள்ளத்தீர்க்கதரிசிகள் என அழைக்கிறோம். “இதுதான் நடக்கப்போகிறது” என நான் அறிவேன் என்று அநேகர் கூறுவதுண்டு; ஆனால், அது நடக்காது. உதாரணமாக லிஸ் டெய்லர் என்பவர் ரிச்சர்ட் பாட்டன் என்பவரை விவாகரத்து செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக “நாங்கள் குறைந்தது பத்து ஆண்டுகளாவது இணைந்திருப்போம் என முன்னுரைக்கிறேன்” என்று கூறினார். ஆனால், ஐந்தே நாட்களில் அவர்கள் பிரிந்தனர்.
1948ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ட்ரூ பியர்ஸ்மன் என்ற கால்பந்தாட்டக்காரர் ஒரு செய்திமடலில் “ட்ரூமன் அல்ல டூவி என்பவரே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று நம்பிக்கையுடன் அறிவித்தார். ஆனால் நடந்ததை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.
அநேகர் இவைகள் நடைபெறும் என்று நம்பிக்கையுடன் கூறுவது நிகழ்வதில்லை. ஆகவே நீங்களும் நானும் தேவனுடைய வார்த்தை கூறுவது என்னவென்பதை அறிந்துகொள்வது அவசியம். தேவன் கூறுவது எதுவோ அது நிச்சயமாகவே நிறைவேறும். தானியேல் 11ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சில நாடுகளைப் பற்றி தானியேல் கூறியுள்ள தீர்க்கதரிசனங்களை நாம் ஆராய்வோம். அதிலிருந்து சில முக்கியமான முடிவுகளை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
“மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.” (தானி.11:1) தானியேலின் தீர்க்கதரிசனம் வசனம் 2இல் ஆரம்பமாகிறது. இது பெர்சியா மற்றும் கிரீஸ் தேசத்தைக் குறித்தவைகள். பெர்சியா என்பது உலகின் இரண்டாவது பெரிய சாம்ராஜ்யமாகும். கிரீஸ் என்பது நாம் பார்க்க இருக்கும் ராஜ்யங்களில் மூன்றாவதாகும்.
வசனம்-2: “இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின் பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னன் ஆவான்” என்று தூதன் கூறத் துவங்கினார்.
பெர்சியா நிறுவப்பட்டபொழுது அந்த சாம்ராஜ்யத்தில் நான்கு பெரிய ராஜாக்கள் எழும்பி ஆண்ட னர். அந்த பெரிய அரசர்களில் நான்காவதானவன் செர்கஸ் என்பவராவர். இவர் கோரேஸ் அரசரின் மகனான காம்பிசெஸ் என்பவரைவிட வலிமை வாய்ந்தவர். கோரேஸ் அரசர் தன் நாட் டிலிருந்த மக்களை புனித நாட்டுக்கும், அவரவர் தேசங்களுக்கும் செல்ல அனுமதி அளித்தவர். இவரைத் தொடர்ந்து சூடோ ஸ்மெர்டிஸ் என்பவர் ஆட்சிக்கு வந்தார். கி.மு.522இல் ஒரு சில மாதங்களே இவர் அரசாண்டார். இவருக்குப் பின் முதலாம் தரியு (ஹிஸ்டஸ்பிஸ்) அரியணை ஏறினார்.
இறுதியாக, பாரசீக சாம்ராஜ்யத்தின் நான்காவது வலிமையான அரசரைக் காண்போம். மற்றவர்களைவிட இவர் மகாபெரியவர் என்று தானியேல் வசனம் 2இல் கூறியது உண்மையே.
இது பெர்சியாவைப் பற்றிய தீர்க்கதரிசனமாகும். இனி கிரீஸ் தேசத்தைக் குறித்த தீர்க்கதரிசனங்களை நாம் காண்போம்.
வசனம் 3: “ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு தனக்கு இஷ்டமானபடி செய்வான். அவன் எழும்பின பின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்”
அவனுடைய இந்த பராக்கிரமமுள்ள ராஜா யார்? தானியேல் 2ஆம் அதிகாரத்தில் நேபுகாத் நேச்சார் கண்ட சொப்பனத்தில் வெண்கல வயிறும் தொடையும் கொண்ட கிரேக்க சாம்ராஜ்யத்தின் அரசரான மகா அலெக்சாந்தரே இவர். 7ஆம் அதிகாரத்தில் தானியேல் சொப்பனத்தில் கண்ட சிவிங்கி(சிறுத்தை)யும் இவரையே குறிக்கிறது. 8ஆம் அதிகாரத்தில் தானியேலின் தரிசனத்தில் கண்ட வெள்ளாட்டுக்கடாவும் இவரேயாவார்.
அவருடைய இராஜ்யம் வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும். இது செய்யுள் நடையில் எழுதப்பட்டுள்ளது. அதாவது, அவருக்குப் பின் நான்கு அரசர்கள் கிரேக்க தேசத்தை ஆட்சி செய்வார்கள். அவர்கள் அலெக்சாந்தரின் நான்கு படைத் தளபதிகளான, யாரெனில் செலூக்கஸ், தாலமி, லசிமாக்கஸ் மற்றும் கசாண்டர் ஆகியவர்கள்.
அலெக்சாந்தருக்குப் பின் ஆண்டவர்களில் லசிமாக்கஸ் மற்றும் கசாண்டர் ஆகியோரைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். தாலமி மற்றும் செலூக்கஸ் ஆகியவர்களே நம் கவனத்திற்குரியவர்கள். ஏனெனில் செலூக்கஸ் வடபகுதியைப் பெற்றுக்கொண்டார். அது சிரியா மற்றும் மெசெப்பத்தோமியா பகுதிகளாகும்.தாலமி அலெக்சாந்தரின் இராஜ்யத்தில் தென்பகுதியைப் பெற்றுக் கொண்டார். கி.மு.334-330இல் மகா அலெக்சாந்தர், கிரீஸ், ஆசியா மைனர், சிரியா, எகிப்து, மேதிய பெர்சியப் பேரரசுகள் யாவையும் வென்றார். இந்தியாவின் எல்லைவரை வந்தார். அது ஒரு அற்புதமான ராஜ்யமாகும். ஆனால், அவருக்குப் பின்வந்த நால்வரில் இருவர் ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாயினர். ஒருவர், வடதேசத்து ராஜாவான செலூக்கஸ். அடுத்தவர், தென் தேசத்து ராஜாவான தாலமியாவார். தானியேல் 11ஆம் அதிகாரத்தில் இவ்விரு மனிதர்களும் அவர்களது ராஜ்யங்களும் எப்பொழுதும் எதிரிகளாகவே இருந்துவந்ததை நாம் கவனிக்கலாம்.
வசனம் 5: தென்றிசை ராஜா (தாலமி) பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.
வசனம் 5 முதல் 20 வரை வெவ்வேறு இராஜ்யங்கள் மற்றும் கிரேக்க சாம்ராஜ்யத்தின் அரசர்கள் மற்றும் அரசிகள் ஆகியோரைப்பற்றி தானியேல் உரைத்த யாவும் எழுத்தின் பிரகாரமாய் வரலாற்றில் நிறைவேறின. கிரேக்க வரலாற்றை நாம் ஆராயப்போவதில்லை. எனவே இந்த பல்வேறு அரசர்களின் பட்டியலைக் கொடுத்து உங்கள் பொறுமையை நான் சோதிக்கவில்லை. பரிசுத்த வேதாகமத்தை வாசியுங்கள், இதில் கூறப்பட்டுள்ள மாந்தர்களைப்பற்றி வரலாற்றுப் புத்தகத்தில் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம்.
வசனம் 20,21இல் குறிப்பிட்டுள்ள சூழ்ச்சி என்னை மிகவும் ஈர்த்தது. “இராஜ்யத்தின் மேன்மையைக் காத்துக்கொள்ள அவன் ஒரு தண்டல் காரனைத் திரியப்பண்ணுவான். ஆகிலும் சில நாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான். அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்ட ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம்பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான்.” தேசத்தின் ஜனங்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கையில் இவன் சூதாக நுழைந்து அந்த இராஜ்யத்தைக் கைப்பற்றுவான்.
இந்த இழிவான மனிதன் அந்தியோகஸ் எப்பிபானஸ் ஆவார். மகா அலெக்சாந்தருக்குப் பின் வந்த தளபதிகளில் இவனும் ஒருவன். இந்த மனிதனைப்பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம். யூத மக்களின் இரத்தத்தை சிந்தி அரசாண்டவன் இவன்.
சிரியா வடதிசையிலும், எகிப்து தென்திசையிலும் இருக்கும்பொழுது இவற்றுக்கு இடையில் இஸ்ரேல் அமைந்திருக்கும். வடக்குக்கும் தெற்குக்கும் போர் நிகழும்பொழுது இடையில் சிக்குவது இஸ்ரேல் தேசமே. அந்தியோகஸ் எப்பிபானேஸ் ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின்மீது போரிட்டான். தென் நாட்டின்மீது படையெடுக்கும் பொழுதெல்லாம் தனது கோபத்தை இஸ்ரேல் தேசத்தின்மீது காட்டுவான்.
போலந்து நாட்டின் யூத மக்களும் கிழக்கு ஐரோப்பிய மக்களும் சுமார் 70 விழுக்காடு ஐரோப்பிய யூதர்களும் இந்த படுகொலையில் மாண்டனர். ஹிட்லரின் மறைவான நிகழ்ச்சி நிரலில் இருந்ததே அந்தியோகஸ் எப்பிபானேஸ் எண்ணத்திலும் இருந்தது. ஹிட்லர் அல்லது அந்தியோகஸ் போன்ற தேவபயமற்ற, முரட்டுத்தனமான ஆட்சியாளர்கள் இருக்கும்பொழுது அவர்கள் சாத்தானால் சக்தியூட்டப்பட்டு, அவனது கோபத்தால் தேவ ஜனங்களான யூதர்களை அழிப்பார்கள். தானியேல் புத்தகத்தில் இது நடந்ததை நாம் வாசிக்கிறோம். வரலாற்றிலும் இதனை நாம் காணலாம். இந்த அரசன் தேவனை முற்றுமாய் வெறுத்தான்.
வசனம் 29: “குறித்த காலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனது பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது.” இருமுறை இவன் எகிப்தின்மீது படையெடுத்து தோல்வியுற்றான். எனவே இஸ்ரேல் மக்கள்மீது படையெடுத்தான் என வரலாறு கூறுகிறது.
வசனம் 35 வரையுள்ள பகுதிகள் அந்தியோகஸ் ஆட்சியைப்பற்றி விளக்கும் வரலாற்று சான்றுகள் எனலாம்.
வசனம் 36இல் குறிப்பான ஒன்று நிகழ்கின்றதை நாம் வாசிக்கலாம்: “ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்.”
அந்தியோகஸ் எப்பிபானேஸ் இவ்வாறு செய்யவில்லை. எனவே வசனம் 36 முதல் உள்ள வசனங்கள் அந்தியோகஸ் எப்பிபானேஸைக் குறிக்காது என நான் நினைக்கிறேன். இது அவனைவிட கொடுங்கோல் தலைவன் ஒருவனைப் பற்றிய வித்தியாசமான விவரத்தைக் கொடுக்கிறது. அது அந்திக்கிறிஸ்துவைக் குறித்ததாகும்.இதனை நாம் விவரமாகப் பார்ப்போம்.
வசனம் 36இல் அவன் மகாவல்லமையுள்ளவன். அவனுக்கு முன்பாக யாரும் நிற்கமுடியாது. அவன் தேவனுக்கு முன்பாகத் தன்னை உயர்த்தி, தேவாதிதேவனுக்கு விரோதமாக பழிச்சொற்களைப் பேசுவான். உபத்திரவ காலத்தின் இறுதி காலமான மூன்றரை ஆண்டுகள் கழித்து அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவான்; அவனது நாட்களில் பகற்கால வெளிச்சம் குறைவாக இருக்கும். இதனை தானியேல் 7ஆம் அதிகாரத்திலும் வெளிப்படுத்தல் 19ஆம் அதிகாரத்திலும் நாம் இவைகளை வாசித்து அறிந்துகொள்ளலாம்.
வசனம் 37இல் அவன் தன் மூதாதையர் வழிபட்ட தெய்வங்களைப் பொருட்படுத்தமாட்டான். அதனால் இவன் யூதனாயிருப்பான் என சிலர் விளக்கம் கொடுக்கின்றனர். அவன் தன்னுடைய தெய்வத்தையும் மதிப்பதில்லை. நாட்டின் மற்ற தெய்வங்களையும் மதிக்கமாட்டான். தானே தேவன் என்றும் தன்னைப்போல வேறு எவரும் இல்லை எனவும் எண்ணுவான். அவனைப் போன்று ஒருவரும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை.
வசனம் 37இல் “அவன் தன் முன்னோரின் தெய்வங்களையோ பெண்களின் சிநேகத்தையோ விரும்பமாட்டான்” என்றுள்ளதால் அவன் ஓரினச் சேர்க்கையாளன் எனவும் கூறுவாருண்டு. அவன் உலக அரசாட்சியை விரும்புவதால், சாதாரண குடும்ப வாழ்வுக்கு நேரமில்லை என்று கருதுவோரும் உண்டு.
ஆனால் NIV ஆங்கில வேதாகமம் இவ்வாறு மொழிபெயர்த்துள்ளது. அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ பெண்கள் விரும்பும் வேறெந்தத் தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக்கொள்வான்.” பெண்கள் விரும்பும் தெய்வம் என்ற சொல் மேசியாவையே குறிக்கும். இஸ்ரவேலை இரட்சிக்கும் மீட்பரின் தாயாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு யூத இளம்பெண்ணும் விரும்பினாள். இவன் இயேசுகிறிஸ்துவை மெய்யான மேசியா என ஏற்றுக்கொள்ளமாட்டான். தான் செய்ய நினைத்த யாவையும் தன்னால் செய்யமுடியும் என அவன் நினைப்பான்.
வசனம் 38: “அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான்.” அதாவது, அவன் வலிமையான இராணுவத்தலைவன் என்றும் உலகத்தைத் தன்னுடைய இராணுவ பலத்தால் ஆளுவான் என்றும் பொருள்படும்.
மேலும் தன் தாய் தந்தையர் அறிந்திராத அந்த தெய்வங்களை அவன் மதிக்கமாட்டான். வலிமையான அரண்களை எதிர்ப்பான். தன்னை ஏற்றுக்கொண்டவர்களை மதித்து அவர்களை அதிகாரிகளாக நியமிப்பான். “அந்திக்கிறிஸ்துவோடு ஒன்றிப்போவீர்களானால் ஒரு சில காலங்களுக்கு நல்ல நண்பர்களுடன் இருப்பீர்கள். ஆனால் நித்தியமாய் கெட்ட நண்பர்களுடன் ஆக்கினையில் தள்ளப்படுவீர்கள்.” இங்கு தானியேல் அந்திக் கிறிஸ்துவைப்பற்றிய காரியங்களை மிகமிக வலிமையாக எடுத்துரைக்கிறார். அந்த அந்திக்கிறிஸ்துவுக்கு என்ன நிகழும் என நாம் கவனிப்போம்.
வசனம் 40: “தென்திசை மன்னன் அவனைத் தாக்குவான்; இவருக்கு எதிரியாக இருந்த வடதிசை மன்னனும் இந்த எதிர்ப்பில் சேர்ந்து கொள்ளுவான்”. எனவே அந்திக் கிறிஸ்து எகிப்தை ஆக்கிரமிக்க முயலும்பொழுது அவன் சிங்கார தேசமான, பரிசுத்த நகரத்தையும் தாண்ட வேண்டும். உலகத்தின் இந்த யுத்தத்தில் இஸ்ரவேலும் சிக்கிக்கொள்ளும்.
வசனம் 41இல் அவன் இஸ்ரேல் தேசத்துக்குள் நுழைவான் என்று கூறுகிறது. அவன் இஸ்ரேல் தேசத்தில் இருக்கும்பொழுது சில கலக்கமான செய்திகளைக் கேள்விப்படுவான். இதனை வெளிப்படுத்தல் விசேஷத்துடன் ஒப்பிடும்பொழுது, 200 மில்லியன் சீன சிவப்பு வீரர்கள் தன்னைத் தாக்க வருகிறார்கள் என்ற செய்தியாக அது இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இதனை உலகில் இத்தனை பெரிய இராணுவக் கூட்டத்தைச் சேர்க்கும் ஒரே நாடு சீனாதான். சீனா இன்றும் தன் படைபலத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறது. உலகின் மிகப்பெரிய போர் வீரர்களைக் கூட்டுவதற்கும் மனுக்குலத்தின் மிகப் பெரிய இராணுவமாகவும் இருக்க சீனாவால்தான் இயலும். யூப்ரடீஸ் நதி வற்றிவிட்டது எனவும் சீனப்படைகள் வந்து கொண்டிருக்கிறது எனவும் அந்திக்கிறிஸ்து கேள்விப்பட்டால் அவன் நிச்சயமாகவே கலங்கிப்போவான்.
அந்த ஆத்திரத்தை அவன் சீனா மீதோ எகிப்தின் மீதோ அல்ல, இஸ்ரேல் தேசத்தின் மீதே செலுத்துவான். தொடர்ந்து அவனுடைய ஆத்திரம் மற்றவர்கள் மீதும் பாயும். ஏனெனில் வசனம் 45 இல் “சமுத்திரங்களுக்கு இடையே தன் கூடாரத்தைப் போடுவான்.” அது சவக்கடலுக்கும் மத்தியக் கடலுக்கும் இடையே உள்ள பகுதி. அவன் தன் தலைமையிடத்தை எருசலேமில் நிறுவுவான். தன்னையே கிறிஸ்துவாக எண்ணுவான். அவன் கிறிஸ்துவாக இருக்க முயலுவான். ஆனால், ஒருக்காலும் அவன் கிறிஸ்துவாக முடியாது.
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி நீண்டகாலம் இருக்காது. இந்த இரத்தப்பிரிய மனிதனின் முடிவை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 19ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம்.
வெளிப்படுத்தல் 19:19,20இல் “நான் அந்த மிருகத்தைக் கண்டேன்” அந்த மிருகம் பயங்கரமான அந்திக்கிறிஸ்துவே. “மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம் பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இருவரும் கந்தகம் எரிகிற அக்கினி கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்” என எழுதப்பட்டுள்ளது.
மேலும் வெளிப்படுத்தல் 20:1,2இல் “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக் கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோசம் போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின் மேல் முத்திரை போட்டான்.”
சாத்தான் அந்த பாதாளத்திலே ஆயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டும். ஆயிரம் ஆண்டின் முடிவில் அவன் விடுதலையாக்கப்படுவான். மீண்டும் அவன் இயேசுவுக்கு விரோதமாக எழும்புவான். ஆனால் “அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்; அவர்கள், இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்” (வெளி. 20: 9,10).
ஆம் நண்பர்களே, உண்மையானது வரும் பொழுது போலி அகலும். இயேசு வந்து கொண்டிருக்கிறார். எனவே நாம் மெய்யான இரட்சகர் இயேசுவின்மீது விசுவாசம் வைத்திருந்தால் சர்வாதிகாரியான அந்திக்கிறிஸ்துவுக்கு நாம் பயப்பட வேண்டாம். அநேகர் தானியேல் புத்தகத்தின் இறுதிவரை வாசிப்பதில்லை. இடைப்பட்ட பகுதிகளைக் கண்டு ஐயோ, மோசமான காரியங்கள் நடைபெற இருக்கிறதே என பயப்படுகின்றனர்.
ஆம். அது உண்மைதான். இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு வர உள்ளது. இயேசுகிறிஸ்து நியாயாதிபதி மட்டுமல்ல, நம்முடைய இரட்சகரும் அவரே! இன்றே உங்களுடைய விசுவாசத்தை அவர்மீது வைத்தால் நீங்கள் நியாயத்தீர்ப்பைக் குறித்து அஞ்சவேண்டியதில்லை.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை