சத்திய வசனம் பங்காளர் மடல்
(மே – ஜுன் 2023)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
சர்வ வல்ல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
மே-ஜுன் சத்தியவசன சஞ்சிகை வெளிவருவதற்கு கர்த்தர் பாராட்டிய கிருபைகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். இவ்விதழில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாக இருப்பதற்காக வேண்டுதல் செய்கிறோம்.
புதிய கல்வியாண்டை தொடங்கவுள்ள பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளை கர்த்தர் அதிகமாக ஆசீர்வதித்து அனைத்து பங்காளர்களது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் தேவன் சந்தித்து நடத்த ஜெபிக்கிறோம். உங்களது ஜெபவிண்ணப்பங்களுக்காகவும் அனுதினமும் சந்திக்கும் வாழ்வின் போராட்டங்கள், பலவிதமானத் தேவைகள் இவை எல்லாவற்றிற்காகவும் தவறாது ஜெபித்து வருகிறோம். கடந்த நாட்களில் நமது மன்றாட்டு விண்ணப்பங்களுக்கு கர்த்தர் பதில் தந்து அநேகருக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆண்டவருக்கு நன்றிகளைச் செலுத்துகிறோம்.
சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் தொகுத்து வழங்கிய இயேசுகிறிஸ்து அருளிய உவமைகள் என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பிரிண்ட் செய்யும்படியாக கர்த்தர் கிருபை செய்துள்ளார். கூடிய விரைவில் அதை பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான விலை ஏற்றத்தை முன்னிட்டு இருமாத வெளியீடுகளின் வருடசந்தாவை உயர்த்தியுள்ளோம். ஏப்ரல் மாதத்திலிருந்து சத்தியவசன சஞ்சிகையின் வருடசந்தா ரூ.150/- ஆகவும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் வருடசந்தா ரூ.250/- ஆகவும் உயர்த்தியுள்ளோம். வாசகர்கள் இதைக் கருத்திற்கொள்ள அன்பாய் கேட்கிறோம். மேலும் நீண்ட நாட்களாக பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்களும் சந்தாவைப் புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க வேண்டுகிறோம்.
இவ்விதழில் நம்முடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும் கர்த்தருக்குப் பிரியமாய் காணப்படவேண்டும் என்ற சத்தியத்தை நமது வார்த்தைகளும் தியானமும் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்! என்ற தலைப்பில் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதிய செய்தியும், Dr.எம்.எஸ்.வசந்த குமார் அவர்கள் எழுதிய ஆண்டவருடைய வார்த்தை என்றும் அழியாது! என்ற சிறப்பு செய்தியும், உண்மையான செல்வம் எது? என்ற தலைப்பில் சகோ.வாட்டர்மேன் அவர்கள் எழுதிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. மேலும் பழையஏற்பாட்டு வேதபாடம் இஸ்ரவேல் தேசத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தானியேல் புஸ்தகத்தின் தொடர் வேதபாடத்தின் இறுதி பகுதியும், Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தொடர் வேதபாடமும், இடம்பெற்றுள்ளது.
இச்செய்திகளின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை தேவனுடைய நாம மகிமைக்காக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கே.ப.ஆபிரகாம்