சத்திய வசனம் பங்காளர் மடல்

(ஜூலை – ஆகஸ்டு 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இம்மட்டும் நம்மை வழிநடத்தின ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

ஜூலை-ஆகஸ்டு மாத சத்தியவசன சஞ்சிகை வெளிவர தேவன் செய்த கிருபைகளுக்காக அவரை ஸ்தோத்திரிக்கிறோம். தாமதமாக வெளியிடுவதற்காக வருந்துகிறோம். வேதாகமத்திற்கு திரும்புக இந்திய ஊழியத்தின் ஐம்பதாவது வருட நிறைவை முன்னிட்டு இவ்விதழ் சிறப்பிதழாக வெளியிடப்படுகிறது. இவ்வூழியம் கடந்துவந்த 50 ஆண்டு கால வரலாற்று பின்ணணியங்களையும், தேவன் இவ்வூழியத்தின் வாயிலாக செய்த அவருடைய மகத்துவமான கிரியைகளை நினைவு கூர்ந்து அவருடைய நாம மகிமைக்காக சுருக்கமாக தயாரித்து வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து இவ்வூழியத்தினுடைய எதிர்காலத்திற்கான சுவிசேஷ பயணத்திற்காகவும், ஆண்டவருடைய வருகை பரியந்தம் இவ்வூழியத்தின் தரிசனம் நிறைவேறுவதற்கும் அனைவரும் தங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்ய கேட்கிறோம்.

கடந்த ஜூலை 18ஆம் தேதி சென்னையில் வேதாகமத்திற்கு திரும்புக கருத்தரங்கு போதகர்கள் மற்றும் விசுவாசிகள் ஆயத்தமாவதற்கு தேவனுடைய கிருபையால் ஆசீர்வாதமாக நடைபெற்றது. கருத்தரங்கில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இந்த கருத்தரங்கில் பயன்படுத்திய கையேடு விநியோகத்திற்கு உள்ளது. தேவைப்படுவோர் எங்களுக்கு எழுதுங்கள். இலவசமாக அனுப்பித் தருகிறோம்.

சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் தொகுத்து வழங்கிய இயேசுகிறிஸ்து அருளிய உவமைகள் என்ற தலைப்பிலான புத்தகம் பிரிண்ட் செய்யப்பட்டு உள்ளது. கூடியவிரைவில் அதை பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். சந்தாதாரர்கள் ரூ.60/- நன்கொடை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதுவரையிலும் தங்கள் பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் சந்தாவைப் புதுப்பித்து இவ்வூழியத்திற்கு தொடர்ந்து ஆதரவு தந்தருள வேண்டுகிறோம்.

இவ்விதழில் வேதாகமத்திற்கு திரும்புக இந்திய ஊழியத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு என்ற தலைப்பில் விரிவான கட்டுரையும், தேவனுடனான உறவுக்கு எனது மதிப்பீடு என்ன? என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், இறைவாக்கின் இணையற்ற இயல்புகள் என்ற தலைப்பில் Dr.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது. Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய தானியேல் வேதபாடம் கடந்த இதழில் முடிவு பெற்றுவிட்டது. இம்மாதத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து அவர்கள் வழங்கிய தொடர் வேதபாடம் ஆரம்பித்துள்ளோம்.

இச்செய்திகளின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை தேவனுடைய நாம மகிமைக்காக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்