(ஜூலை – ஆகஸ்டு 2023)

The Good News Broadcasting Society

1973 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்ட வேதாகமத்திற்கு திரும்புக மற்றும் சத்தியவசன ஊழியப்பணியானது 50 ஆண்டுகள் கடந்துவந்த பாதைகளைக் குறித்தும் வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியத்தின் ஆரம்பகால வரலாற்றைக்குறித்தும் இந்த சிறப்புப் பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Back To The Bible ஊழியத்தின் ஆரம்ப சரித்திரத்தின் பின்னணி

1893ம் ஆண்டில் ஒருநாள் இரவு வோல்கா ஆறு பனியினால் உறைந்தமை, சரித்திரத்தில் ஒரு மாற்றம் நிகழக் காரணமாயிற்று. எப்படியெனில் ஜெர்மனியிலிருந்து ரஷியாவுக்குப் புலம் பெயர்ந்து சென்ற, ஜொஹானன் – மார்க்ரேட்டா எப் தம்பதிகள் பிற்காலத்தில் ரஷ்யர்களால் ஜெர்மனியர்கள் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக தங்கள் பின் வரும் சந்ததியின் நன்மை கருதி அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றிடத் தீர்மானித்தார்கள்.

அதன்படி தங்கள் உடமைகள் அனைத்தையும் விற்று, அமெரிக்காவை நோக்கிய தங்கள் நெடுந்தூரப் பயணத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் வொல்கா நதியண்டை வந்தபோது ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி அவர்களுக்குக் காத்திருந்தது. அன்றைய பகல் முழுவதும் நிலவிய வெப்ப காலநிலை காரணமாக அன்றிரவு அந்த நதி முழுவதுமாக பனியினால் உறையுமா என்பது சந்தேகத்துக்குரியதாய் இருந்தது. அப்படியாக அது உறையாது போனால் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர மேலும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். சந்தர்ப் பவசமாக அன்று இரவு வொல்கா நதி பனியினால் உறைய ஆரம்பித்தது. ஜொஹானன் எப் தம்பதிகள் தங்களோடு எடுத்து வந்த பொருட்களை, பனி சறுக்கும் ஓர் வண்டியில் ஏற்றி நதியைக் கடந்து, தாம் திட்டமிட்டபடி அமெரிக்காவை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் அந்த நதியைக் கடந்து போகாதிருந்திருந்தால் இனி எப்போதுமே அவர்களால் அந்த பயணத்தை தொடர முடியாது போயிருக்கும்.

ஏனெனில் அந்த நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட கடைசி குழுவினர் தாங்கள்தான் என்பதை பின்னர் அறிந்து கொண்டார்கள்.

அமெரிக்காவில் ஊழியத்தின் ஆரம்பம்

இப்படியாக அமெரிக்கா சென்றடைந்த ஜொஹானன் மார்க்ரேட்டா தம்பதிகளின் மகன் ஜே பி எப் அவர்கள், அமெரிக்காவிலே ஹோபி எனப்பட்ட செவ்விந்தியர்கள் மத்தியில் ஒரு மிஷனரியாகவும் வேதாகம விரிவுரையாளராகவும் ஊழியம் செய்துவந்தார். 1914இல் அவர் ஆரம்பித்து வைத்த ஒக்லோஹோமா வேதாகம கல்லூரியில் அவரது மகன் தியோடர் எப் அவர்களும் சேர்ந்து கற்றார். 1932ஆம் ஆண்டு முதல், ஒக்லோஹோமாவில் உள்ள ஒரு சபையில் போதகராகப் பணியாற்ற ஆரம்பித்த தியோடர் எப் அவர்களுக்கு 1934இல் முதன்முதலாக வானொலி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. இப்படியாக அவருடைய நாட்டம் படிப்படியாக வானொலி ஊழியத்தின்மேல் திரும்ப ஆரம்பித்தது. 1939இல் தியோடர் எப் அமெரிக்காவிலுள்ள லிங்கன் நெப்ரெஸ்கா எனும் இடத்தில் தன்னிடமிருந்த 65 டாலர் பணத்துடனும், ஆண்டவர்மேல் அளவில்லாத விசுவாசத்துடனும் மே மாதம் முதலாம் திகதி Back To The Bible அவர்கள் ஊழியத்தின் முதல் வானொலி நிகழ்ச்சியை ஒலிபரப்பி இப் பணியை ஆரம்பித்து வைத்தார்.

உலகமகா யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த வேளையில் ஒருபுறம் நாட்டுக்கு விரோதமாக இன்னமொரு நாடு போர் தொடுத்து, வானத்திலே குண்டு மாரி பொழிந்து கொண்டிருக்க மறுபுறத்தில் Back To The Bible வானொலி நிகழ்ச்சிகள், கர்த்தருடைய வார்த்தையானது வான் அலைகளிலே ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படியாக ஆரம்பித்த ஊழியம் பிற்காலத்தில் ஒரு சர்வதேச பணியாக வியாபிக்கும் என தியோடர் எப் அவர்கள் எண்ணியிருக்கவில்லை. தியோடர் எப் அவர்கள் இவ்வூழியத்தை ஆரம்பித்தபோது இவ்வுலகம் இயேசுகிறிஸ்துவை அறியவேண்டுமென்பதே அவரது பிரதான இலக்காயிருந்தது. எனவே அருட்பணியாளர்களை ஆதரிக்கவும் ஒலிபரப்பிற்கு இன்னும் அதிகமான அமெரிக்கா வானொலி நிலையங்களிலிருந்து சிற்றலைவரிசையின் வாயிலாக உலகின் மற்ற நாடுகளுக்கும் ஒலிபரப்பவும் தொடங்கினார். படிப்படியாக உலகளவில் இவ்வூழியம் வளர்ந்து 10 நாடுகளில் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் கிளைகள் திறக்கப்பட்டன.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட வேதாகமத்திற்கு திரும்புக ஊழியம்

1940ம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் திபத்திய எல்லை பகுதிக்கு வந்து, அங்கே ஆறு ஆண்டுகளாக மிஷனரியாகப் பணியாற்றிவந்த திரு.ருபேஷ் அவர்களின் வீசா திடீரென இரத்து செய்யப்பட்டது. அவரால் இந்தியாவில் ஊழியம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. “ஒருபுறத்தில் மனிதன் கதவு ஒன்றை அடைத்துப் போடுகையில், மறுபுறத்தில் கடவுள் ஜன்னல் ஒன்றை திறந்துவிடுகிறார்” என்ற வார்த்தைகளைக் கூறிய திரு.டான் ருபேஷ் அவர்கள் அதைத் தன் வாழ்க்கை அனுபவத்திலும் கண்டார்.

வேதாகத்திற்கு திரும்புக ஊழியத்தின் அழைப்பை ஏற்று தெற்காசிய பகுதியில் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பொறுப்பை ஏற்றார்.

இந்தியாவில் கதவு அடைக்கப்பட்டபோது, இலங்கை தீவு எனும் ஜன்னலை தேவன் அவருக்குத் திறந்தார். 1955ம் ஆண்டு திரு டான் ருபேஷ் அவர்கள் குடும்பத்தோடு இலங்கை வந்துசேர்ந்தார்கள். அங்கு வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தை ஸ்தாபிப்பதில் திரு.மெடோஸ் தம்பதியினர் அவர்களுக்கு ஊறுதுணையாக இருந்தனர். இலங்கையிலிருந்த வண்ணம் தெற்காசிய நாடுகளுக்கு ‘ரேடியோ சிலோன்’ சிற்றலை ஒலிபரப்பு மூலமாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிப்பதே டான் ருபேஷ் அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆரம்ப நாட்களில் திரு ருபேஷ் அவர்களின் 5 பிள்ளைகளின் கூச்சல்களினதும் சத்தங்களினதும் மத்தியில், அவரது படுக்கை அறையிலேதான் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவாயின. இப்படியாக இலங்கையில் ஆரம்பமான Back To The Bible ஊழியத்தின் விளைவாக சிங்களத்தில் ஜீவித்தாலோக்கய (வாழ்வின் ஒளி), தமிழில் சத்தியவசன ஊழியங்கள் உதயமாயின. 1957ஆம் ஆண்டு சத்தியவசனம் தமிழ் நிகழ்ச்சிகள் இலங்கை வர்த்தக சேவையில் ஆரம்பமாயின. திரு.மெடோஸ் அவர்கள் தமிழில் செய்திகளை வழங்கி வந்தார்கள். 1966ஆம் ஆண்டு திரு.மெடோஸ் அவர்களின் மறைவிற்கு பின்பதாக திருமதி மெடோஸ் அவர்கள் பொறுப்பேற்று வானொலி நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்கள்.

இவ்விதம் அற்பமாக ஆரம்பமான ஊழியம் படிப்படியாக விரிவடைந்து வாரம் முழுவதும் காலையிலும் மாலையிலும் ஒலிபரப்பானது. பின்நாட்களில் டாக்டர் தியோடர் வில்லியம்ஸ், டாக்டர் சாம் கமலேசன், டாக்டர் புஷ்பராஜ், சகோ.பிரகாஷ் ஏசுவடியான் மற்றும் பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார், பேராசிரியர் எடிசன் மற்றும் சகோ.சுசி பிரபாகரதாஸ் ஆகியோருடைய வேதபாட செய்திகள் வானொலி நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன.

இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்ட வேதாகமத்திற்கு திரும்புக ஊழியம்

பல வருடங்களாக, ருபேஷ் தம்பதியினர் உள்ளத்திலே இந்திய நாட்டிலே உள்ள பல நூறுகோடி இந்திய மொழி பேசும் மக்களை சந்திக்கக் கூடிய இலங்கை வானொலியின் ஆசிய சேவை மூலம், இந்தி ஒலிபரப்பை ஆரம்பிக்க தேவன்தாமே வழி திறக்க வேண்டுமென்ற ஒரு ஆழ்ந்த அவா இருந்தது. அதிக ஜெபம் மற்றும் விசுவாசத்தின் பயனாக 1973ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது நிறைவேறியது.

The Good News Broadcasting Society என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. மோதிலால் இந்துஸ்தானி குடும்பமொன்றில் பிறந்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பின்பு தன்னை அவரது பணிக்கென அர்ப்பணித்த போதகர் மோதிலால் அவர்கள் இந்தி வானொலி ஊழியத்தின் முதல் வேதாகம ஆசிரியரானார்.

அதற்கிடையில் ஆங்கில நிகழ்ச்சி ஒலிபரப்புக்காக வரும் கடிதங்களை கவனிப்பதற்கென்று இந்தியாவில் சில ஊழியர்களைக் கொண்ட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தி ஒலிபரப்பு ஆரம்பமாகி ஒரு வருடத்திற்குள் 20க்கும் மேற்பட்டவர்கள் அங்கு பணிபுரியலானார்கள். காரணம், ஆவிக்குரிய உதவிக்காக வந்த ஆயிரக்கணக்கான கடிதங்களையும், புத்தகங்கள் மற்றும் தபால் மூலம் வேதபாடங்கள் கற்கும்படி வந்து குவிந்த கடிதங்களையும் கவனிக்கவேண்டியிருந்தது. அதின் முதலாவது வருடத்திலேயே மொத்தமாக 59,000 கடிதங்கள் அந்த இந்தி ஒலிபரப்பின் மூலம் வந்துசேர்ந்தன. இவ்வாறு இந்த ஊழியம் வளர்ந்து பெருகினது.

இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்ட வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தைக் குறித்து கலாநிதி தியோடர் எப் அவர்கள் கூறும்போது, “இந்த இந்தி ஒலிபரப்பும் எந்தவித எதிர்ப்புமின்றி கைகூடிவிடவில்லை. இயேசுவை அறியாத பிரதேசத்திற்குள் நாம் படையெடுக்க ஆரம்பித்ததால் சாத்தானுடைய தாக்குதல்கள் நாலாபுறங்களிலிருந்தும் வந்தன. ஆனால், திரும்பவும் திரும்பவும் தேவன் எங்களது ஜெபத்திற்கும் விசுவாசத்திற்கும் பலனாகவும் எங்களது திடமான விசுவாசத்தின் விளைவாகவும் பெருந்திரள் மக்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குள் கொண்டுவர கிருபை செய்தார்” என்றார்.

இந்தியாவில் சத்தியவசனம் ஊழியம் நிறுவப்படுதல்

1973ஆம் ஆண்டு டெல்லி மாநகரத்தில் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டபோது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளோடு சத்தியவசன தமிழ் பணியும் அங்கு ஆரம்பிக்கப்பட்டது. இம்மூன்று ஊழியங்களும் தேவனுடைய மாறாத கிருபையினால் இந்தியாவில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளன.

சத்தியவசனம் வானொலி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்ட 1957ஆம் ஆண்டிலிருந்து 1973 ஆண்டுவரை இந்தியாவிலுள்ள தமிழ் வானொலி நேயர்கள் இலங்கை அலுவலகத்தோடு தங்களது தேவைகளுக்காக கடிதத்தொடர்பு வைத்திருந்தனர். அங்கிருந்து பத்திரிக்கைகளையும் தமிழ் இலக்கியங்களையும் பெற்றுவந்தனர்.

அதன்பிறகு இந்தியாவில் சத்தியவசன ஊழியம் குறுகிய காலத்திலே வளர ஆரம் பித்தவுடன் இவ்வூழியத்தை தமிழ் நாட்டில் நிறுவுவதற்கு தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். அந்நேரத்தில் Board of Director ஆக இருந்த திரு.எஸ்.பாபிங்டன் அவர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றார். 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் சத்திய வசனம் ஊழியம் டில்லியிலிருந்து மதுரை பட்டணத்திற்கு மாறுதலடைந்தது. தற்போது மதுரையில் இவ்வூழியம் 40 ஆண்டுகளைக் கடந்துவர கிருபை செய்துள்ளார்.

தற்போது தொலைகாட்சி, இலக்கியம், இணையதளம், சோஷியல் மீடியா ஆகிய ஊடகங்கள் வாயிலாக இந்த தலைமுறையினருக்கு நற்செய்தியை அறிவிக்க தேவன் கிருபை செய்துள்ளார்.

இவ்வூழியங்கள் வாயிலாக தேவன் செய்த மகத்தான அவரது கிரியைகளுக்காகவும் அவரது மாறாத கிருபைகளுக்காகவும் அவருக்கு எமது துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். இவ்வூழியத்தைத் தங்கள் உதாரத்துவமான காணிக்கையாலும் ஊக்கமான ஜெபத்தாலும் இதுவரை தாங்கிவந்த அனைத்து பங்காளர்களுக்கும் வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.