• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜூலை – ஆகஸ்டு 2023)
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன் (வெளிப்.3:21).

சகோதரி சாந்தி பொன்னு
நமது ‘மதிப்பிடுகின்ற அமைப்பு’ எவ்விதத்தில் இயங்குகிறது, அல்லது எதனை மையமாகக் கொண்டு மதிப்பீடு செய்கிறது? சுய விருப்பங்களின் அடிப்படையிலா? விளம்பரங்களின் அடிப்படையிலா? அல்லது பிறருடைய மதிப்பீடுகளின் அடிப்படையிலா? மதிப்பீட்டுக்கும் நமது தெரிவுகளுக்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. ஏனெனில், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற தெரிவை இந்த மதிப்பீடுதான் கட்டுப்படுத்துகிறது. நமக்கு முக்கியம், நல்லது, ஆதாயம் என்று நாம் மதிப்பிடுகிறவற்றுடன் ஈடுபடவே எப்போதும் முயற்சி செய்வோமே தவிர, வரக்கூடிய ஆபத்தையும் பின்விளைவையும் ஆராய்ந்து மதிப்பீடு செய்ய நாம் அதிகம் முயற்சி எடுப்பதில்லை. இந்த மதிப்பீடு என்பது அநேகமாக உலகபார்வையில் எது முக்கியமோ அல்லது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோமோ அதற்கேற்றதாகவே இருக்கிறது; இப்படி இருக்கும்வரைக்கும், இந்த மதிப்பீடு நமக்கு நன்மையாக இருக்கும் என்று சொல்லவும் முடியாது; இவையே நமக்குக் கண்ணியாக மாறாது என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.
ஒரு கிறிஸ்தவனாக கிறிஸ்தவளாக, தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவுக்கு இன்று நாம் என்ன மதிப்பீடு கொடுத்திருக்கிறோம்? கிறிஸ்தவன் என்றால் என்னவென்று தேவனை அறிந்துகொள்ளுதல் என்ற ஆங்கிலப் புத்தகத்தின் ஆக்கியோன் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அவரே பதிலும் தருகிறார். தேவனைத் தனது தகப்பனாகக் கொண்டிருக்கிறவனே கிறிஸ்தவன் என்கிற பெறுமதியான பதிலை நான் அறிந்திருக்கிறேன் என்கிறார். மேலும், புதிய ஏற்பாட்டின் போதனைகள் முழுவதினதும் சாராம்சம் தேவனுடைய இந்த தகப்பன் ஸ்தானத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். நமது தகப்பனுக்கும், கிறிஸ்துவுக்குள் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்ற நமக்குமுள்ள உறவுக்கு இன்று நாம் கொடுத்திருக்கும் பெறுமதிதான் என்ன?
இயேசுவும் திமிர்வாதக்காரனும்
ஒருதடவை இயேசு கப்பர்நகூமில் வீட்டிலிருந்து போதித்துக்கொண்டிருந்தார். வாசலை அடைத்துப் போடத்தக்கதாக ஜனங்கள் கூடிவந்திருந்தார்கள். அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனை சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள். இயேசு வைப்பற்றிக் கேள்விப்பட்டு. அவரால் அவனை சுகப்படுத்தமுடியும் என்று நம்பி அவன் சுகமடைய வேண்டும் என்ற ஆதங்கத்தில்தானே அவர்கள் வந்திருப்பார்கள்! அந்த ஆதங்கம் எவ்வளவு என்பதை, உள்ளே நுழைய முடியாததால் வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, வியாதிப்பட்டவனை சுமந்துவந்த படுக்கையை இயேசுவுக்கு முன்பாக இறக்கியதிலிருந்து நம்மால் உணர முடியும்.
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டார்; கண்டவர், “எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்று சொல்லி அவனுக்குச் சுகம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவோ, திமிர்வாதக்காரனை நோக்கி, “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்கிறார். ஆம், அந்த மனிதன் சரீர ரீதியாக மாத்திரமல்ல, அவனுடைய ஆவிக்குரிய வாழ்வும் பாதிக்கப்பட்டிருந்ததை இயேசு கண்டார். அதிலிருந்து விடுதலை கொடுக்க இயேசு வால் மாத்திரமே முடியும். மாத்திரமல்ல, அந்த மனிதன் முதலில் அவசரமாக எதிலிருந்து விடுதலையாக வேண்டும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். பின்னர், அங்கிருந்த வேதபாரகரின் விமரிசனங்களைத் தாண்டி, “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார் இயேசு. உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக நடந்துபோனான். அவன் வெறுமனே சரீர சுகத்தை மாத்திரமல்ல, அவனுடைய ஆத்துமாவும் விடுதலையான குதூகலத்துடன் புறப்பட்டுப் போனான்.
ஆக, சரீர சுகம் பிந்தினாலும், பாவத்தின் கோரப் பிடியிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும். சரீரசுகம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நமது ஆத்துமா விடுவிக்கப்படாவிட்டால் நமது நிலை என்ன?
பாவமா? வியாதியா? எது கொடிது?
பாவம் மிகவும் இலகுவானதாக எளிதானதாக கருதப்படுகின்றதும் செயற்படுத்தப்படுகின்றதுமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பரிசுத்த வேதாகமம் நமது கைகளில் இருந்தும், கிறிஸ்தவர்கள் நாமே பாவத்துக்கு இன்னமும் விவரம் தேடிக்கொண்டிருக்கிறோம். எது பாவம், எது பாவமில்லை என்று தர்க்கிக்கும் அளவுக்கு பாவத்தை நாம் மிகவும் இலகுவாக்கி விட்டிருக்கிறோம்.
பாவத்தில் பெரியது சிறியது என்று எதுவுமே இல்லை. ஒரு சிறிய பொய்யும், பெரிய கொலையும் எல்லாமே தேவனுடைய பார்வையில் ஒரே பாவம்தான். ஆனால் நாமோ, பாவத்திற்கு சிறிது பெரிது என்றும், இது பரவாயில்லை, இதிலென்ன இருக்கிறது என்றும் சில வரையறைகளை வகுத்திருக்கிறோம். ஆனால், நாம் ஒரு சிறிய பொய், யாருக்கும் தீங்கிழைக்காத பொய் என்றாலும் சொல்லுவோமானால், அது நமது ஆண்டவரைத் துக்கப்படுத்தும், நம்மை அவரைவிட்டுப் பிரித்துப்போடும். நாம் இன்னமும் விழுந்துபோன உலகிலே மாம்ச போராட்டங்களைச் சந்திப்பதால் பாவம் செய்கிறவர்களாகவே இருக்கிறோம். ஆனால், அதைக் குறித்து எவ்வளவுக்கு நாம் பயமுள்ளவர்களாக, மனந்திரும்புகிறவர்களாக, விழிப்புள்ளவர்களாக இருக்கிறோம்?
வீடுகளிலே திடீரென மின்சாரம் நின்று போனால், இருள் கவ்விப்பிடிக்கும்; அந்த இருட்டில் நாம் சும்மா இருப்போமா? உடனடியாக ஏதாவது முயற்சிபண்ணி ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவிடுவோமே! இந்த இருளினால் உண்டாகும் பயம், அவசரம், இருளை அகற்ற நாம் கிரியை செய்யும் வேகம், பாவம் செய்யும்போது உண்டாகிறதா? மின்சாரம் போனால், மீண்டும் வரும்; ஆனால், பாவத்தினால் உண்டாகும் இருள் தானாக அகலாது, தானாக வெளிச்சம் உண்டாகாது, அதனால் உண்டாகும் கேடு மிகுந்த பாதகமான விளைவை ஏற்படுத்தும்.
ஒரு சிறிய பொய், ஒரு சிறிய பாவசிந்தனை, வரி செலுத்தாமல் தப்பிக்கொள்வது, இணையத் தளத்தில் யாருக்கும் கேடு விளைவிக்காமல் நாம் ரசிக்கும் கேடான காரியங்கள், இதுபோன்ற பாவங்கள் அப்படி என்னதான் கேட்டை விளைவிக்கப்போகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் இது நமது வாழ்வின் வெளிச்சத்தையே தடைசெய்துவிடும். சோதனைகள் வரும், இச்சைகள் நம்மை இழுக்கும், இவற்றை இந்த உலக வாழ்வில் தடைசெய்யமுடியாது. ஆனால் ஒரு தடவைதானே என்று பின்னர் அதுவே தொடர்கதையாகவும் வாய்ப்புண்டு, அங்கேதான் நாம் பாவ வலைக்குள் சிக்கிப்போய் இருளின் அந்தகாரத்துள் தள்ளப்பட்டுப்போகிறோம். அங்கே நமக்கும் நமது பரமபிதாவுக்கும் உள்ள உறவைக் காணவேமுடியாது. பாவம் எவ்வளவு கொடிது!
வியாதியா? பாவமா? எது கொடிது? இந்தக் கேள்விக்கு நமது பதில் என்ன? என்னதான் கொடிய வியாதியானாலும் அது ஒருபோதும் நம்மை நரகத்துக்குள் தள்ளிப்போடாது; ஆனால், பாவம் கொடிது, அதிலிருந்து நாம் வெளிவராவிட்டால் அது நம்மை நரகத்தில் தள்ளிப்போடும். மேலும், வியாதியின் நேரத்தில் நாம் இன்னமும் தேவனோடு நெருங்கிச் சேரத்தக்க பாலமாகவே அது அமையும். ஆனால் ஒரு சிறிய பொய்கூட தேவசமுகத்தை நமக்கு மறைத்துப்போடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆதலால்தான் மீட்கப்பட்ட நம் ஒவ்வொருவருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணி, நம்மை நடத்த வேண்டிய வழியில் நடத்திக்கொண்டிருக்கிறார். நாம் தவறு நினைக்கும்போதே அவர் நம்மைத் தடுத்து நிறுத்துவதை நம்மால் உணரமுடியும். அதற்குச் செவிகொடாமல், நாம் தொடரும்போது பாவம் நம்மை வளைத்துக்கொள்கிறது. தேவனுட னான, நமது பிதாவினுடனான உறவிலிருந்து நாம் விலகுவோமானால், அது செத்துப்போவதற்குச் சமம் அல்லவா?
ஒரு சிறு வியாதி, ஒரு தலைவலி வந்தாலே அதனை நிறுத்த அதிலிருந்து வெளிவர நாம் எவ்வளவு துரிதமாக காரியங்களை முன்னெடுக்கிறோம். ஏனெனில் தலைவலியை நம்மால் தாங்கமுடி யாது. ஆனால், அந்தத் தலைவலியினால் நாம் தேவசமுகத்திலிருந்து விலகவும் மாட்டோம், அது நம்மை நரகத்துள் தள்ளவும் மாட்டாது. அது நாளைக்கு மாறியும் போகும். இந்தத் தலைவலி நீங்கிப்போகவேண்டும் என்று நாம் எடுக்கின்ற தீவிரமுயற்சியின் ஒரு சிறிய அளவையேனும் நாம் பாவம் செய்யும்போது எடுக்கிறோமா? அல்லது அந்த உணர்வு தன்னும் உண்டாகிறதா?
இன்று யாருடன் பேசினாலும், தொலைபேசியில் இணைப்பை ஏற்படுத்த முயன்றாலும், busy என்ற பதிலைத்தான் அதிகமாகவே கேட்கிறோம், நம்மில் அநேகரும் அப்படியேதான் வாழுகிறோம். எல்லோருக்கும் அதிக வேலைப்பளு. இது எப்படி வந்தது? சற்று அமர்ந்திருந்து நேற்றைய நாளை சிந்தித்துப்பார்த்தால், தேவனுக்கு அடுத்த காரியங்களிலா அல்லது உலகத் துக்கு அடுத்த காரியங்களிலா? எதிலே நாம் அதிகம் ஈடுபட்டிருந்தோம் என்பது தெரியும்; ஊழியப்பணிதான் என்றாலும் அதிலும் தேவனுடனான உறவிலும் அதிகமாக நம்மை வேலைப் பளுதான் அழுத்துகிறது.
மாத்திரமல்ல, நேற்றைய நாளிலே நாம் தேவ னுக்குப் பிரியமற்ற என்னென்ன காரியங்களில் ஈடுபட்டோம், ஜெபத்துக்கும் தியானத்துக்கும் எவ்வளவு நேரம் கொடுத்தோம்? தேவனுக்கு மாத்திரம் பிரியமாக என்ன காரியங்கள் செய்தோம் என்று உண்மைத்துவத்துடன் ஒரு மதிப்பீடு செய்வது அவசியம். அப்போதுதான், நாம் எவ்வளவுக்கு பாவம் செய்வதில் தீவிரமாக இருந்திருக்கிறோம் என்பது விளங்கும். தேவஅடியான் பில்லி கிரஹாம் அவர்கள் தனது ஒரு தேவசெய்தியிலே, தேவனுக்கும் தனக்கும் உள்ள உறவுக்குத் தான் செலவிட்ட நேரம், உலகத்துக்கு தான் செலவிட்ட நேரத்திலும் குறைவுபட்டது என்று தெரிந்து தான் அடிக்கடி பாவமன்னிப்பு கேட்டதாக அவர் சொல்ல நான் கேட்டு, நான் வெட்கினேன்.
பிதாவும் குமாரனும்
நமது பரமபிதாவுக்கும் நமக்கும் உள்ள தனிப் பட்ட உறவுக்கு நாம் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் என்ன? மதிப்பீடு என்ன? இதற்கு மாதிரியாக இருக்கிறவர் நமது ஆண்டவர் இயேசுவே தான். எபிரெயர் ஆசிரியர் ஒரு அற்புதமான அறிக்கையை எழுத்திலே தந்திருக்கிறார்: “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, …’ (எபி.5:7,8).
இந்த வசனத்தை அதிகமாக கெத்சமெனே ஜெபத்துடன் நாம் தொடர்புபடுத்தி பார்ப்பதுண்டு. ஆனால், “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்” என்று எபிரெய ஆசிரியர் எழுதியதிலிருந்து, இயேசு தான் வாழ்ந்திருந்த காலம் முழுவதும் ஜெபிப்பதற்காக தனிமையை நாடிப்போனதை சுவிசேஷங்களில் காண்கிறோம். பிதாவின் சித்தத்தைச் செய்ய பூவுலகுக்கு வந்தவர், தாம் பாவத்தில் சிக்கிவிடாத படி 33 வருடங்களுக்கும் மேலாக பிதாவுடன் நெருங்கிய உறவுள்ளவராக, ஜெபத்தில் சளைக்காதவராக வாழ்ந்தார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இயேசு தாம் மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதும், பலத்த சத்தத்துடன் கண்ணீர்விட்டு ஜெபித்தார். எதற்காக ஜெபித்தார்? தமது ஊழியத்தில் தடை வரக்கூடாது, வசதி வாய்ப்புகள் வேண்டும், பரிசேயர் சதுசேயரின் வாயை அடைக்கவேண்டும், வரி கட்டுவதற்குப் பணம் வேண்டும், படுத்து உறங்க ஒரு வீடு வேண்டும், ஆலயம் கட்ட இடம் வேண்டும்….… இன்று நாம் கேட்கின்ற இப்படிப்பட்ட விண்ணப்பங்களையா இயேசு செய்தார்? அப்படி இல்லையென்றால் இன்று நமது ஜெபங்களை நாம் சற்று நிதானித்துப் பார்ப்பது நல்லது.
“தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்ல மையுள்ளவரை நோக்கி” இயேசு கண்ணீருடன் ஜெபித்தார். இது அவர் அடைய இருந்த சிலுவை மரணமா? இல்லை, அவர் அதற்கென்றே வந்தவர். இது ஆவிக்குரிய மரணம் – பாவத்தின் விளைவான மரணம்! பாவத்தில் சிக்குண்டு விழுந்துபோகாதபடி 33 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடி ஜெபித்த இயேசு, பாவமில்லாதவ ராகவே சிலுவையை நோக்கி நடந்தார். பாவமில்லாதவர் எதற்காக கதறி ஜெபிக்கவேண்டும்? பிதாவின் சித்தப்படி இந்த உலகத்தின் பாவத்தை, உங்களது என்னுடையதுமான பாவத்தை சுமந்து, அவர் பாவமாக்கப்படவேண்டியிருந்ததே, அந்த வேளைக்காகவே அவர் கதறினார். ஏன்? பாவம் சுமத்தப்பட்டு அவர் பாவமாக்கப்படுவாரானால், பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே மகா பெரிய பிளவு உண்டாகுமே! ஒரு கணமேனும் பிதாவை விட்டுப் பிரிந்திருக்க இயேசு விரும்பவில்லை என்பதுவே சத்தியம். இதுதான் இயேசு தமது பிதாவுடனான உறவுக்குக் கொடுத்திருந்த மதிப்பீடு. ஒரு கணமேனும் பிரிந்துவிட இயேசு துளியேனும் விரும்பவில்லை.
அப்படியானால் பிதா, குமாரனுடைய ஜெபங்களை, கெத்சமெனேயின் வியாகுலத்தை புறக்கணித்தாரா? இல்லை! “அவர் குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு” இதுவே இரகசியம்! அவர் கீழ்ப்படிந்து, அந்த வேதனையை ஏற்றுக்கொண்டதானால் தான், அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு நித்திய இரட்சிப்பு இன்று வாக்களிக்கப்பட்டுள்ளது (எபி. 5:9). இயேசு அடிக்கப்பட்டு வதைக்கப்பட்டு, சதையெல்லாம் பிய்க்கப்பட்டு, தலையில் முள்முடி வதைக்க சிலுவையில் தொங்கினார். அவர் பாவமற்றவராக இருந்தும், நமது பாவங்களைச் சுமந்து, ஒரு அக்கிரமக்காரனாக கருதப்பட்டு, அந்த நித்திய நரக வேதனையை, – நாம் அனுபவிக்க வேண்டிய அந்த நரகத்தின் கொடூரத்தை – இயேசு சிலுவையில் அடைந்தாரே! அவர்மீது நமது பாவம் சுமத்தப்பட்டு அவர் பாவமாக்கப்பட்டதால் அவர் அடைந்த வேதனைதான் அது. அவருக்கும் பிதாவுக்கும் இடையே இருந்த உறவு அறுந்துபோனதுவே அந்த வேதனைக்கான காரணம். வருடாவருடம் இதனை நினைவுகூர்ந்தும் நாம் இன்னமும் பாவத்துடன் கரம்கோர்ப்பது ஏன்? பாவம் நம்மை வஞ்சித்தாலும் கூட, குறைந்தது, விழிப்படைந்து வெளிவர முயற்சியாவது செய்யாதிருப்பது தகுமா?
சிலுவையில் இயேசுவின் கடைசி மூன்று மணிநேர வேதனையை நம்மால் கற்பனை பண்ணவே முடியாது. ‘பிதாவே, இவர்களை மன்னியும்’ என்று பேசியவர், இறுதி வேளையிலே ‘என் தேவனே என் தேவனே’ என்று கதறியது ஏன்? பிதா – குமாரன் என்ற அந்த நித்திய உறவு அறுந்துபோய் இயேசு தனித்து விடப்படக் காரணர் யார்? நாம்தானே!
சிந்தித்துப்பாருங்கள்! கெத்சமெனேயில் தமது குமாரனின் கண்ணீரைக் கண்டு, “மகனே, நீ பரத்துக்கு ஏறி வா” என்று பிதாவானவர் அனுமதி கொடுத்திருந்தால் இயேசு அப்படியே பரத்துக்கு ஏறிப்போயிருப்பார், ஏனெனில் அவரில் பாவம் இருக்கவில்லை. ஆனால், அவர், “நான் பரத்துக்கு வர முடியும். ஆனால் என் மகள், என் மகன் (இங்கே நமது பெயர்களைப் போட்டு வாசிப்போம்) நரகத்துக்குப் போய்விடுவார்களே” என்று சொல்லி மறுத்திருப்பாரோ! ஆம், தாம் பிதாவின் சமுகத்தி லிருந்து பிரிக்கப்படுவது தெரிந்திருந்தும், இயேசு சிலுவையையே தெரிந்துகொண்டாரே, நானும் நீங்களும் பாவத்தால் கறைப்பட்டு நரகத்தில் விழக்கூடாது என்பதற்காகத்தானே!
பிரியமானவர்களே!
சோதனை வருவது பாவம் அல்ல, அது சகஜம். ஆனால் சோதனையை நாம் அரவணைப்பது தான் ஆபத்து. பாவம் நம்மைச் சுற்றிவளைப்பதும் தவிர்க்கமுடியாதது. ஆனால், அதை பாவம் என்று உணராவிட்டால், உணர்வடைந்து உடனடியாகவே அதை அகற்றிப்போட, அல்லது அதை விட்டு விலகியோட முயற்சிக்காவிட்டால், நாம் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்துக்குச் செவி கொடுக்கிறோம் என்பது பொய்யாகும். மேலும், பாவத்துள் விழுந்துவிட்டாலும், அந்த உணர்வினால் குத்துண்டு, இரட்சகரின் பாதத்தில் விழுந்து அழுது அறிக்கை பண்ணி, எதனை இழக்க நேரிட்டாலும், அதை இழந்து பாவத்தைவிட்டு வெளிவரவில்லை என்றால், நமக்கும் பரமபிதாவுக்குமான அன்பின் ஐக்கியம் முறிந்துவிட்டது என்பதுவே அர்த்தமாகும். ஆகவே, ஒவ்வொரு விநாடியும் கர்த்தருக்குள் விழிப்புடன் இருக்க கர்த்தரே உதவிசெய்வாராக.
“கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” (எரே.10:23) என்ற எரேமியாவின் வார்த்தைகளை உணர்ந்து, நமது வழிகளை பிதாவின் கரத்தில் விட்டுவிடுவோமாக.
மேலும், சரீரமரணம் தவிர்க்கமுடியாதது; அது நமது கண்களுக்கு மறைவானதும் அல்ல. ஆனால் ஆவிக்குரிய மரணம், வேதனைக்குரியது, அதை யாரும் காணமுடியாது. ஆவிக்குரிய மரணம் என்பது தேவசமுகத்தை விட்டுப் பிரிக்கப் படுவது, இதுதான் ஏதேனிலே நடந்தது. இன்று ஆண்டவர் இயேசு அதிலிருந்து நம்மை மீட்டுவிட்டார். திரும்பவும் அந்த ஆவிக்குரிய மரணத்துக்கு உட்பட்டு, நமது மூச்சை இழந்தவர்களாக, நடைப் பிணங்களாக நாம் வாழவேண்டியது ஏன்?
“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்தில் அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படி அருள் செய்வேன்” (வெளி.3:21) என்று வாக்களித்தவர் பொய்யுரையாதவர். ஆக, இயேசு எப்படி ஜெயங்கொண்டாரோ, 33 ஆண்டுகளுக்கும் மேலாக தாம் மாம்சத்தில் வாழ்ந்திருந்த காலமெல்லாம் பாவம் நெருங்காதபடி போராடி ஜெபித்து எப்படி ஜெயங்கொண்டாரோ, அந்த ஜெயத்தை நாமும் பெற்றுக்கொள்ள அவர் நமக்குக் கிருபை செய்ய ஆயத்தமாய் இருக்கிறார்.
ஆனால், தேவனோடுள்ள நமது உறவுக்கு நாம் கொடுத்திருக்கும் மதிப்பீடு என்ன? முக்கியத்துவம் முன்னுரிமை என்ன? வியாதியோ, உலகத்தில் முகங்கொடுக்கும் பிரச்சனைகளோ, நாளை மாறிப்போகும். பாவமோ கொடிது, அது நம்மை நித்திய மரணத்துக்கு இட்டுச்சென்றுவிடும். ஆக, தேவனோடுள்ள உறவுக்கு நாம் கொடுத்திருக்கும் மதிப்பீட்டை மீண்டும் ஆராய்ந்து, தேவ ஆவியானவர் துணையுடன் அதனைச் சரி செய்து, அவருடைய உறவில் மகிழ்ந்திருப்போமாக. ஆமென்.