• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(ஜூலை – ஆகஸ்டு 2023)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

கிறிஸ்தவ வாழ்வின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாய் அமைவது இறைவனுடைய வார்த்தையேயாகும். தேவவார்த்தையற்ற கிறிஸ்தவ வாழ்வு அச்சாணியில்லாத வண்டியைப் போன்றது என்றால் அது மிகையாகாது. இதனால் தேவவார்த்தையின் இத்தகு இன்றியமையாத தன்மையை நாம் சரிவர விளங்கிக்கொள்ளும் முகமாக, அதனது இணையற்ற இயல்புகள் பிரதிமைகளாக உவமிக்கப்பட்டுள்ளன. இப்பிரதிமைகளை நாம் சரிவர அறிந்துகொண்டால் தேவவார்த்தை நம் வாழ்வுக்கு எந்த அளவுக்கு அவசியமானது என்பதனை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

தேவவார்த்தையை நாம் வாசிக்கும்போது நாம் அதன் இணையற்ற இயல்புகனைப் புரிந்துகொள்ளுமுகமாக, அது வழிகாட்டும் ஒளியாகவும் (சங்.119:105) வாழ்வளிக்கும் விதையாகவும் (1 பேதுரு 1:23) நமது வடிவைக் காட்டும் கண்ணாடியாகவும் (யாக்.1: 23-24) வாழவைக்கும் ஆகாரமாகவும் (1 பேதுரு 2:3) வல்லமைமிகு ஆயுதமாகவும் (எபேசி.6:17, எபி.4:12) உவமிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

இப்பிரதிமைகள் உண்மையிலேயே உன்னதமான சத்தியங்களை நமக்கு கற்பிக்கின்றன. எனவே இவைகளை தனித்தனியாக ஆராய்ந்து பார்ப்போம்.

(அ) வழிகாட்டும் ஒளி

இறைவாக்கின் முதலாவது இணையற்ற இயல்பு, அது நம் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளி யாக இருப்பதேயாகும். 119-ஆம் சங்கீதத்தை எழுதியவர் “உம்முடைய வசனம் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105) என தன் அனுபவத்தை தேவனிடம் தெரிவிக்கிறார்.

இரவு நேரத்தில் ஒளியானது, பாதை எது, பள்ளம் எதுவென்பதைப் பார்த்து பயணத்தைத் தொடர்வதற்கு துணைபுரிகின்றது. உண்மையில் வெளிச்சமில்லாவிட்டால் நம்மால் பயணத்தைத் தொடர முடியாது. அதேபோலதான் இருள்சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் நடந்துசெல்ல வேண்டிய பாதை எது. நாம் விழுந்து விடக்கூடிய பள்ளம் எது என்பதனை நம் பார்வைக்கு புலப்படுத்துவது. தேவவசனம் என்னும் தீபமேயாகும். ஏனெனில் அதுவே நம் பாதைக்கு வெளிச்சமாயும் நம் கால்களுக்கு தீபமாயும் உள்ளது.

தேவவார்த்தையை நாம் அறியாதவர்களாயிருந்தால் நாம் பயணம் செய்யவேண்டிய பரிசுத்தமான பாதை எதுவென்பதனையும் அந்த பாதையில் நம்மை வீழ்த்துவதற்காய் உள்ள பாவப்பள்ளங்கள் எவையென்பதனையும் அறியாதவர்களாகவே இருப்போம். இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் பாதையிலுள்ள பள்ளங்களில் விழுந்து விடாமல் இருப்பதற்கு வெளிச்சம் எந்த அளவுக்கு அவசியமானதாயுள்ளதோ, அந்த அளவுக்கு கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்க்கைப் பயணத்திற்கு தேவவார்த்தையெனும் தீபம் இன்றியமையாததொன்றாய் உள்ளது. “தேவனுடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தருகிறது” (119:130). ஆம், அது நமக்கு வழி காட்டும் ஒளியாயுள்ளது!

(ஆ) வாழ்வளிக்கும் விதை

தேவனுடைய வார்த்தை. வழிகாட்டும் ஒளியாக மட்டுமல்ல, வாழ்வளிக்கும் விதையாகவும் உள்ளது. பேதுரு தன்னுடைய முதலாம் நிருபத்தில் “அழிவுள்ள வித்தினலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிபிக்கப்பட்டிருக்கிறீர்களே” (1:23) என்று தெரிவிக்கிறார். இயேசுவும்கூட ஒருமுறை தேவவார்த்தையை விதையாக உவமித்தார் (மத்.13:7-23).

இந்த வேத வசனமாகிய விதையானது ஒருவனது உள்ளத்தில் விதைக்கப்படும்போது அது முளைத்து வளர்ந்து பலனளிக்கின்றது. அதாவது, அவன் தேவவசனத்தை கேட்டு விசுவாசிக்கும் போது (ரோமர் 10:17) இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறுகிறான் (ரோமர் 10:8-10). இச்சத்தியத்தைத் தான் பேதுரு, “என்றென்றும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே” என்று கூறுகிறார். அதாவது தேவனுடைய வார்த்தை இரட்சிப்பின் அனுபவத்தை சாத்தியமாக்குகிறது.

தேவனுடைய வார்த்தை ஒளியாக உள்ளமையினால், அது சரியான பாதை எதுவென்பதை நமக்குக் காட்டுகிறது. நாம் ஜீவ வழியைக் கண்டடைகிறோம். அந்த வார்த்தை வாழ்வளிக்கும் விதையாகவும் உள்ளமையினால் நாம் அவ் வார்த்தையை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, அது நமக்குள் முளைத்து பலன் கொடுப்பதனால், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். இதனால்தான் யாக்கோபு “உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும், உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தை சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்” (1:21) என அறிவுறுத்தியுள்ளார்.

ஆம். அது வாழ்வளிக்கும் ஜீவ விதை! நித்திய ஜீவனைப் பலனாகத் தரும் ஜீவ விதை!! “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாய் உள்ளது.”

(இ) வடிவைக் காட்டும் கண்ணாடி

தேவனுடைய வார்த்தையானது வழி காட்டும் ஒளியாகவும் வாழ்வளிக்கும் விதையாகவும் மட்டுமல்ல; நம் ஆத்மீக வாழ்வின் வடிவைக் காட்டும் கண்ணாடியாகவும் உள்ளது.

“ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத் தானே, பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” (1:23-24) என யாக்கோபு குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, நாம் கண்ணாடியிலே நம்முடைய முகத்தைப் பார்க்கும்போது முகத்திலுள்ள அழுக்குகளை அக்கண்ணாடியில் காணக்கூடியதாயிருக்கும். அதேபோலதான் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது அக்கண்ணாடியானது ஆத்மீக வாழ்விலுள்ள அழுக்குகளை நமக்கு காட்டுவதாயுள்ளது. நம் முகம் அழுக்காயிருக்கிறதா இல்லையென்றால் அழகாயிருக்கிறதா என்பதனை அறிந்துகொள்வதற்காக நாம் எவ்வாறு கண்ணாடியின் உதவியை நாடுகின்றோமோ, அதேபோல நம் ஆவிக்குரிய வாழ்வில் உபயோகிக்கவேண்டிய கண்ணாடியாக தேவனுடைய வார்த்தை உள்ளது.

தேவனுடைய வார்த்தை நமது ஆத்மீக வடிவைக் காட்டும் கண்ணாடி என்பதனை மறுப்பதற்கில்லை. தேவ வார்த்தையை நாம் வாசிக்காவிட்டால் நம் வாழ்க்கையிலுள்ள அழுக்குகளை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இவ்வாறு தேவவசனம் சுட்டிக்காட்டும் பாவஅழுக்குகளை அறிக்கையிட்டு நம்மைநாம் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும் (1 யோவான் 1:9). வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் செய்வான்?˜ தேவனு டைய வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே (சங். 119:9).

(ஈ) வாழவைக்கும் ஆகாரம்

தேவவசனத்தின் மற்று மொரு இணையற்ற இயல்பு அது வாழவைக்கும் ஆகாரமாயிருப்பதாகும். தேவ வார்த்தையெனும் ஒளிகாட்டிய ஜீவவழியில் சென்று, தேவவார்த்தையெனும் ஜீவனுள்ள விதையினால் மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் வளர்ச்சியடையவேண்டும். இரட்சிக்கப்பட்டவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக வளர்ச்சியடைவதற்கு வேண்டிய ஆகாரமாக தேவனுடைய வார்த்தையே உள்ளது. இதனால்தான். “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (உபா.8:3, மத்.4:4) என்று வேதம் தெளிவாகத் தெரிவிக்கிறது.

இச்சத்தியத்தைப் பேதுரு தன்னுடைய முதலாவது நிருபத்தில் அழகாக சித்தரித்துள்ளார். இரண்டாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில் “நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப் பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” என அறிவுறுத்துகிறார்.

உண்மையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் வளர்ச்சியடைவதற்கு பால் மிகவும் அவசியமான ஆகாரமாகும். அக்குழந்தைக்கு பால் கொடுக்காவிட்டால் அது மரித்துவிடும். அதேபோல தான் தேவவசனமாகிய ஜீவவிதையினால் மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள். அதாவது மறுபிறப்படைந்தவர்கள், ஆவிக்குரிய பிரகாரமாக குழந்தைகளாக இருப்பதனால் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வு வளர்ச்சியடைவதற்கு தேவ வசனமாகிய களங்கமில்லாத ஞானப்பால் அவர்களுக்கு இன்றியமையாத ஆகாரமாயுள்ளது. தேவவசனப் பாலை அருந்துவதன் மூலம், அதாவது வாசித்து தியானிப்பதன் மூலம் அவர்களது ஆத்மீக வாழ்வு வளர்ச்சியடைகின்றது. நம்மை வாழவைக்கும் ஆகாரமாகத் தேவனுடைய வார்த்தை உள்ளதென்பதை உணர்ந்துகொண்ட பக்தன் யோபு “அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாக காத்துக்கொண்டேன்” (23:12) என்று தெரிவிக்கிறார். தீர்க்கதரிசியாகிய எரேமியாவும்கூட “தேவனுடைய வார்த்தைகள் கிடைத்தவுடன் அவைகளை உட்கொண்டேன்” (15:16) என்று தெரிவித்துள்ளார்.

அனுதினமும் நம் ஆவிக்குரிய வாழ்வுக்குத் தேவையான தேவவசனமெனும் ஆகாரத்தை நாம் புசிக்க வேண்டும். “மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்.4:4). எனவே நாம் தேவ வசனமெனும் வாழவைக்கும் ஆகாரத்தை அனுதினமும் புசித்து (அதாவது வாசித்து தியானித்து) அன்றாட ஆவிக்குரிய வாழ்வுக்குத் தேவையான போஷாக்கினைப் பெற்றுக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

(உ) வல்லமைமிகு ஆயுதம்

தேவனுடைய வார்த்தை யானது. நம்மை வாழவைக்கும் ஆகாரமாக மட்டுமல்ல. அது வல்லமைமிகு ஆயுதமாகவும் உள்ளது. எபிரெயர் திருபத்தை எழுதியவர் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் உள்ளது” எனக் கூறுகிறார் (4:12). இதனால்தான் பவுலும்கூட “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபேசி. 6:17) என அறிவுறுத்துகிறார்.

உண்மையில் கிறிஸ்தவர்களாகிய நாம் சந்திக்கவேண்டிய எதிரிகள் பலர் உள்ளனர். இவர்களின் எதிர்ப்புகளை நாம் சமாளித்து ஜெயத்துடன் முன்னேறிச் செல்லவேண்டியது நம்முடைய கடமையாயுள்ளது. இத்தகைய எதிரிகளை மேற்கொள்ள தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் அவசியமானதாயுள்ளது (எபேசி.6:17). அது இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயுமுள்ளதால் (எபி.4:12) நாம் சந்திக்கும் எதிரிகளை சமாளிப்பதற்கு ஏற்ற ஆயுதமாயுள்ளது.

“கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானமல்ல, அது ஒரு போர்க்களமாகும்” என வாரன் வியர்ஸ்பி கூறினார். இது முற்றிலும் உண்மையானது. “ஏனெனில், நம் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8). அவனுக்கு நாம் எதிர்த்து நிற்கவேண்டும் (5:9). அவ்வாறு நாம் அவனை எதிர்த்து நிற்பதற்கு ஆவியின் பட்டயமே அவசியமான ஆயுதமாயுள்ளது.

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்தபோது பிசாசு அவரை எதிர்க்க சோதனைகளைக் கொண்டுவந்தான். இயேசுகிறிஸ்து தேவ வார்த்தையெனும் ஆயுதத்தைக்கொண்டே அவனை மேற்கொண்டார் (மத்.4:1-11). அதேபோல நாமும் நம் எதிரியாகிய பிசாசை எதிர்த்துப் போராட தேவவசனமெனும் வல்லமைமிகு ஆயுதமே அவசியமானதாகும் (எபி.4 :11-13).

இறைவாக்கின் இணையற்ற இந்த ஐந்து இயல்புகளும், அதன் இன்றியமையாமையை நமக்கு அறிவிப்பதாயுள்ளன. வழிகாட்டும் தேவவசன ஒளியைப் பின்பற்றிச் சென்று, வாழ்வளிக்கும் தேவ வசன விதையின் மூலம் இரட்சிப்பினைப் பலனாகப் பெற்று, வடிவைக் காட்டும் தேவவசனக் கண்ணாடியின் உதவியுடன் பாவஅழுக்குகளைக் கண்டறிந்து கழுவிச் சுத்திகரித்துக்கொண்டு வாழ வைக்கும் தேவவசனமெனும் ஆகாரத்தை அனுதினமும் புசித்து தேவையான சக்தியைப் பெற்றுக் கொண்டு, வல்லமைமிகு ஆயுதமான தேவ வசனப் பட்டயத்தின் மூலம் பிசாசின் எதிர்ப்புகளை மேற்கொண்டு வாழக்கூடியதாயுள்ளது.

எனவே, நாமும் சங்கீதக்காரனைப்போல “வீண் சிந்தனைகளை வெறுத்து கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுவோம்” (119:113). நாள் முழுவதும் அது நம் தியானமாயிருக்கட்டும் (119:97), கர்த்தருடைய புத்தகத்திலே தேடி வாசிப்போம் (ஏசா.34:16), வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்ப்போம் (யோவான் 5:39). ஏனெனில் இணையற்ற இயல்புகளையுடைய கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷனே பாக்கியவான் (சங். 1,2).