• Dr.உட்ரோ குரோல்
(ஜூலை – ஆகஸ்டு 2023)
1. வேதாகம தீர்க்கதரிசனங்களை நாம் ஏன் படிக்கவேண்டும்?

Dr.உட்ரோ குரோல்
புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலையும் எழுதுவதற்கு அதன் ஆசிரியர்களுக்கு ஒரு மேலான நோக்கம் உண்டு. முதல் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை பதிவுசெய்துள்ளன. ஆதித்திருச்சபையின் ஆரம்பம், வளர்ச்சி போன்ற வரலாற்றை அப்போஸ்தலர்களின் நடபடி புஸ்தகம் விளக்குகிறது. ஆனால் நிருபங்கள் வரலாற்றைவிட இறையியல் கருத்துக்களையே அதிகம் கொண்டுள்ளன. இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளின் அடிப்படை இறையியல் கருத்துக்களை நாம் விளங்கிக்கொள்ளும்விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிப்படுத்தின விசேஷம் நூலானது திருச்சபை காலத்தின் முடிவையும், எதிர்காலத்தைப் பற்றிய கண்ணோட்டத்தையும், அப்.யோவான் கூற்றுப்படி சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவற்றைக் குறித்தும் நமது கவனத்தை ஈர்க்கிறது.
வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை வாசித்து அவைகளுக்கு விளக்கம் கொடுக்கும்பொழுது சிலர் செய்யும் சில தவறுகளை நான் கூற விரும்புகிறேன். அது மிகவும் முக்கியம்; ஏனெனில் அந்த தவறுகளை நாம் செய்யக்கூடாது. சில மக்கள் வேதாகம தீர்க்கதரிசனங்களை வாசிக்கும்பொழுது ஏற்கனவே அறியப்பட்டுள்ள சில பழைய காரியங்களை ஆராய்ந்து, புதியனவற்றை கண்டுபிடிக்க வேண்டுமென்று வாசிக்கிறார்கள்.
தெரிந்த பழைய காரியங்களுக்கு நவீன விளக்கம் கொடுக்க விரும்புகிறார்கள். அதைப் புதிய கோணத்தில் பார்க்க விழைகிறார்கள். உதாரணமாக, அந்திக்கிறிஸ்து யார் என்பதைப் புதிதாகப் புரிந்துகொள்ள முயலுகின்றனர். வேதாகமத்தின் ஒருசில வசனங்களின் அறிவைக்கொண்டு வேதத்தின் முழு பகுதியையும் விளக்க ஒரு புதிய வழிமுறையை கையாளுகின்றனர்.
அப்போஸ்தலர் 17:21 ஐ எடுத்துக்கொள்வோம். இது வெளிப்படுத்தல் புத்தகம் அல்ல; பவுல் அத் தேனே பட்டணத்தில் இருக்கும்பொழுது அவருக்கு அங்கே நிகழ்ந்த சம்பவம். பவுல் சில ஞானிகளின் முன்னே மார்ஸ் மேடைக்கு இழுத்துச் செல்லப்படுகிறார். “அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.”
ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸ் அருகேயுள்ள அரயோப்பாகஸ் என்ற உயர்ந்த குன்றின்மீது அவர்கள் சென்றனர். ஏனென்றால் அவர்கள் பவுல் கூறிய சில புதிய காரியங்களைப் பற்றி உரையாட விரும்பினர்.
பழைய காரியங்களைப் பற்றி நாம் சிந்திக்க விரும்புவதில்லை. புதிய காரியங்களே நமது ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ஆனால் சாலொமோன் ஞானியோ சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை என்றார். ஆனால், சில மனிதர்களோ வெளிப்படுத்தல் விசேஷநூலில் சில புதிய காரியங்களைக் கண்டுபிடிக்கப்போவதாக எண்ணி அதனை வாசிக்கின்றனர். முதல் இடத்தைப் பிடிப்பதற்கு எப்பொழுதுமே அனைவருக்கும் ஒரு தாகமுண்டு. இப்புத்தகத்தின் ஒரு புதிய விளக்கத்தை நான் அறியப்போகிறேன் என்று அதனை வாசிப்பர். புதியனவற்றைக் கண்டறியும் ஆர்வம் பலருக்கு இருக்கலாம். திருச்சபை 2000 ஆண்டுகளாக நம்பி வந்ததை ஒதுக்கிவிட்டு ஒரு புதிய விளக்கத்துடன் ஒரு புதிய வழிமுறையையும் தரப் போவதாக சிலர் எண்ணுவர்.
ஒரு சிலர் தங்களுக்குத் தரப்பட்ட சத்தியத்தின் முழுஅமைப்பையும் விளங்கிக்கொள்ளாமல் இருக்கின்றனர். அப்.பவுல் இளைஞன் தீமோத்தேயுவுக்குக் கூறின ஆலோசனையைக் கவனியுங்கள். “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (2தீமோ.2:2).
புதிய காரியங்களைக் கண்டுபிடிக்க தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தவில்லை. ஆனால், தன்னிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட வேத சத்தியங்களையே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையினருக்கு கடத்திச்செல்ல ஊக்கப்படுத்தினார்.
21ம் நூற்றாண்டின் பிரச்சனையை இங்கு நான் காண்கிறேன். பழையவற்றை நாம் இன்னும் அறியாமலே புதிய காரியங்களை அறிவதில் மயங்கி நிற்கிறோம். சத்தியத்தை நாம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவில்லை.
நீங்கள் மாத்திரமே கொண்டுள்ள புதிய விளக்கங்கள், புதிய எண்ணங்கள் மற்றும் புதிய கருத்துக்களில் வாழ்வீர்கள் என்றால் நீங்கள் தடுமாறுகிறீர்கள் என்று பொருளாகும்.
“எதிர்காலத்தை அறியும் மந்திர பளிங்கு பந்தினை நம்பி வாழ்பவன் விரைவில் தேய்ந்த கண்ணாடியை உண்ண கற்றுக்கொள்வான்’ என எட்கர் சு பிட்லெர் கூறியுள்ளார். வேதபுத்தகத்தின் மற்ற நன்மைகளைப் புறக்கணித்து, எதிர்காலத்துக்கு வெளிப்படுத்தல் நூலைமட்டும் நம்பியிருக்கும் தவறினை நாம் செய்யக்கூடாது.
நாம் செய்யும் முதலாவது தவறு, இப்புத்தகத்தில் புதிய காரியங்களைக் கண்டுபிடிக்கும் எண்ணத்துடன் இதனை அணுகக்கூடாது. ஒரு சிலர் இப்புத்தகத்தைப் படிக்கும்பொழுது அதனை விளக்குவதில் தவறு செய்கின்றனர். இந்த முடிவுகளை மற்ற கிறிஸ்தவர்களின் ஐக்கியத்துக்கு அடிப்படையாகவும் பயன்படுத்துகின்றனர்.
வெளிப்படுத்தல் புத்தகத்தில் நான் கொடுக்கும் சில விளக்கங்களை உங்களில் அநேகர் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஆனாலும் சில காரியங்களை ஒத்துக்கொள்ளுங்கள். நாம் சில கருத்துக்களில் மாறுபட்டாலும் நற்செய்தியில் நமக்கிடையே ஐக்கியம் உண்டு.
எனவே எதிர்காலத்தைப் பற்றிய உங்களது புரிந்துகொள்ளுதலை உங்களைச் சுற்றியுள்ள வர்களின் நட்பை சோதிக்க பயன்படுத்தாதீர்கள். ஐக்கியத்தின் திறவுகோல் இரட்சிப்பு என நான் நினைக்கிறேன். இரட்சகரில் தங்களது உண்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துபவர்களோடு நாம் ஐக்கியம் கொள்ளலாம். அவர்களது சில கருத்துக்களுக்கு மாறுபடவும் செய்யலாம்.
நான் சொல்லும் சில காரியங்களுக்கு நீங்கள் உடன்பட மாட்டீர்கள். உங்களுடைய சில ஆலோசனைகளுக்கு நானும் ஒத்துப்போகாமலிருக்கலாம். அக்காரியங்களை நாம் மோசமானதாக மாற்றவேண்டிய அவசியமில்லை. 1 யோவான் முதலாம் அதிகாரம் ஐக்கியத்தைப் பற்றிக் கூறுகிறது. விசுவாசத்தைத் தவிர மற்ற காரியங்களில் நாம் ஐக்கியம் கொள்வது தவறு என நான் நினைக்கிறேன்.
“ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை (இங்கே நித்திய ஜீவனைக் குறித்து எழுதுகிறார்; எதிர்காலத்தைப் பற்றிய அறிவையல்ல) நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்கள் எங்களோடே ஐக்கிய முள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவான் 1:1-3).
அவர்களுடைய ஐக்கியத்தின் அடிப்படை யாது? அது அவர்கள் அறிந்திருந்த நித்திய ஜீவனுடன் தொடர்புடையது. “நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிற வர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:6-7).
சபையில் நாம் யாருடன் ஐக்கியம்கொள்ள வேண்டும் என்ற கொள்கைக்கு அடிப்படை, தீர்க்கதரிசனத்தை நாம் அறிந்துகொள்வதல்ல; மாறாக விசுவாசத்தைப் புரிந்துகொள்வதேயாகும்.
இத்தவறினை நாம் செய்யக்கூடாது. வெளிப்படுத்தல் புத்தகத்தை நாம் படிக்கும்பொழுது சில காரியங்களை நாம் தெளிவாகக் கூற இயலாமல் போகலாம். இப்புத்தகத்தை இரு பெரிய வழிகளில் நாம் விளக்கலாம். இதில் ஒன்றினை நான் தெரிந்துகொள்ளப் போகிறேன். என் நண்பர்கள் என்னுடன் ஒத்த கருத்துக்களை கொண்டிராவிட்டாலும் எங்களுக்குள்ளே ஐக்கியம்கொள்ள முடியும். ஏன்? ஏனெனில் அவர்களும் என்னைப்போன்ற விசுவாசிகளே.
உண்மைக்குப் புறம்பான காரியங்களில் நாம் வழிவிலகிப்போக வேண்டாம். அந்திக்கிறிஸ்து வைப்பற்றிய சில உண்மைகளை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். வெளிப்படுத்தல் புத்தகத்தில் இயேசு யார் என்று நாம் பார்க்க இருக்கிறோம்.
பல ஆண்டுகளாக வெளிப்படுத்தல் புத்தகத்தைப் படித்துவரும் அநேகரால் அதன் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் விளக்கமுடியாது. இது தூய யோவானின் வெளிப்படுத்தல் அல்ல; அவருக்கு கிறிஸ்துவைப்பற்றி தேவன் வெளிப்படுத்தியதாகும். இது முழுவதும் இயேசுவைப் பற்றியது. அவரை அறியும் வரை நாம் அவரையே நோக்கவேண்டும்.
வெளிப்படுத்தல் நூலைப் போன்று உலகின் கடைசி காலங்களைக் கூறும் சில புத்தகங்களை நீங்கள் படிக்கும்போது அதில் பலவித விளக்கங்களுக்கு இடம் உண்டு. சரியான கொள்கைகளை நாம் கடைபிடிக்கும்பொழுது மட்டுமே நாம் சரியான விளக்கங்களைப் பெறமுடியும். அப்.யோவான் இப்புத்தகத்தின் காரியங்களை எழுதும்பொழுது எந்த பொருளில் எழுதினார் என்பதையும் நாம் அறியமுடியும்.
பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களை படிப்பதற்கு ஐந்து கொள்கைகளைப் பின்பற்ற உங்களுக்கு ஆலோசனை தருகிறேன். அதில் சில பொதுவானவை. அவை வேதாகமக் கருத்துக்கள் எனினும் சாதாரண காரியங்களேயாகும். வரப் போகும் மாதங்களில் நாம் இப்புத்தகத்தை ஆராயும்பொழுது இக்கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
1. இதனை செய்தித்தாளைப்போல படிக்கக்கூடாது.
வேதத்தின் கருத்துக்களை அறிந்த அநேகர் அன்றைய செய்தித்தாளை வாசித்து தாங்கள் புரிந்துகொண்டிருப்பது உண்மைதானா என சரிபார்க்கின்றனர். செய்திகள் மாறும்பொழுது அவர்களது வேதவிளக்கங்களும் மாறுகின்றன. இது எதிர்காலத்தை அறிந்துகொள்ள தவறான வழியாகும். எனவே, செய்தித்தாள் உங்களது வேத அறிவை மறைத்துவிட இடங்கொடாதீர்கள்.
செய்திகள் மாறிக்கொண்டே இருக்கும்; அதுவே அதன் இயல்பு. அவை உங்களது வேதப் புத்தகத்துடன் உடன்படவில்லை என்றால் பொறுத்திருங்கள். இறுதியில் வேதமே நிறைவேறும். உலகில் நடப்பவற்றை வைத்து வேதத்தை விளக்குவீர்கள் எனில் நீங்கள் பின்வாங்கிப் போவீர்கள்.
எனவே, நாம் செய்தித்தாளைச் சார்ந்து வேதாகமத்தை வாசிக்கக்கூடாது. வேதத்தைச் சார்ந்தே செய்தித்தாளை வாசிக்கவேண்டும். இதுவே முதல் கொள்கை.
2. வேதாகமத்தை, வரலாற்றின் அனைத்து பேரழிவுகளுடன் இணைக்காதீர்கள்.
அநேகர் 1800, 1900 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுகளை வைத்து சில முன்கணிப்புகளைக் கூறினார். இந்த 21ம் நூற்றாண்டிலும் நாமும் அதனையே செய்கின்றோம். ஹைட்டி அல்லது சிலி நாடுகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சிகளைப் போன்றும், கத்ரீனா சூறாவளி அல்லது சில ஆண்டுகளுக்குமுன் இந்தோனேசியாவைத் தாக்கின சுனாமி போன்ற பேரழிவுகளும், கடலில் எண்ணெய் கப்பல்கள் உடைந்த காரியங்களும், ஏற்பட்டபொழுது சில மக்கள் வியப்புடன் “இந்நிகழ்வைக் கொண்டு நாம் வேதவசனங்களை விளக்கலாம்” என்று கூறுவதுண்டு. இது செய்தித்தாளைச் சார்ந்து வேதாகமத்தை விளக்குவதைப்போன்று மோசமானது.
இயேசுகிறிஸ்து, “யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மத்.24:6-8). இவை வேதனைகளுக்கு ஆரம்பம் என்றால் ஒவ்வொரு இயற்கைப் பேரழிவுகளும் தேவன் தமது உக்கிர கோபாக்கினைப் பாத்திரத்தைத் திறந்துவிட்டார் என்றே நம்மை நினைக்கத் தோன்றும். இதனைத் தலைமுறை தலைமுறையாகச் செய்துவருகிறோம். இது அதிக அளவிலான ஆர்வக்கோளாறு.
பூமியதிர்ச்சி வேதாகம தீர்க்கதரிசனங்களோடு தொடர்புடையதா? ஆம். ஆனால் அனைத்து பூமியதிர்ச்சிகளும் அவ்வாறு தொடர்புடையதல்ல. எனவே, உலகில் நிகழும் இயற்கைப் பேரழிவுகளை நாம் வேதாகம தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிடக்கூடாது. இந்த தவறினை நமது வேத பாடங்களில் செய்யாமல் இருப்போம்.
3. வேதாகம தீர்க்கதரிசனங்களை சிந்திக்கப் பயப்படாதிருங்கள்.
உங்களுடன் உடன்படாதவர்களுடையவற்றை வாசிப்பதற்கு அஞ்சாதீர்கள். ஒரு விளக்கக் குழுவைச் சேர்ந்த சில மனிதர்கள் அடுத்தக் குழுவினரின் கருத்துக்களை வாசிக்க மறுப்பார்கள். ஏனெனில் அவை அவர்களது கருத்துக்களை மாற்றிவிடும் என்று பயப்படுவார்கள். ஆனால், நீங்கள் உங்களுடன் ஒத்துப்போகாத கருத்துக்களையும் அறிந்துகொள்ள பிரயாசப்படுங்கள். ஆயினும் அவர்களின் விளக்கத்தை ஆராயாமலும், எதிர்க்காமலும் ஒத்துக்கொள்ளாதீர்கள்.
அநேகர் நான் கொடுக்கும் வேதவிளக்க வழி முறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “என்னால் இதற்கு பதில் அளிக்கமுடியவில்லை; ஆனால் அதற்கு பதிலும் இல்லை” என்று நான் சொல்வது சரியல்ல. என்னால் விளக்க முடியாவிட்டாலும் வேறொருவர் அதனை நன்கு விளக்க முடியும்.
எனவே உங்களுடன் ஒத்துப்போகாதவர்களுடைய கருத்துக்களையோ வாசிக்க பயப்படாதீர்கள். உங்களுக்கு புரியவில்லை என்பதற்காக அவர்களுடைய விளக்கங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஆதித் திருச்சபையிலும் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இந்த வாதங்கள் இருந்து வருகின்றன. இந்த வாதங்களுக்கும் நாம் தீர்வு காணப்போவதில்லை.
4. சிறிய குறிப்புகளிலும் கவனம் செலுத்துங்கள்.
பரிசுத்த வேதாகமம் என்பது 66 புத்தகங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு புத்தகத்திலும் அநேக அதிகாரங்கள் உண்டு. இவ்வதிகாரங்களில் அநேக சொற்கள் உண்டு. சிலவேளைகளில் நமக்குத் தேவையானவற்றை திரும்பத்திரும்ப வாசிப்போம். ஆனால். சில சிறிய காரியங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். உதாரணமாக மத்தேயு 24 மற்றும் 25ம் அதிகாரங்களை விளக்குவதில் சில விவாதங்கள் உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய விளக்கங்களில் கிறிஸ்தவர்களிடையே இவை பிரிவினைகளை உண்டுபண்ணுகிறது.
மத்தேயு 24:29 இல் “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே” என்று ஆரம்பிக்கிறது. ஆனால், நாம் அதைத் தொடர்ந்துவரும் “சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்” என்ற வாக்கியங்களால் நாம் ஈர்க்கப்பட்டுவிடுகிறோம். அதனால், “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே” என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்த வசனத்தை ஆழமாகக் கவனிப்போமானால் அது ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டுவதை நாம் உணரலாம். சூரியன் எப்பொழுது அந்தகாரப்படும்? சந்திரன் எப்பொழுது ஒளியைக் கொடாதிருக்கும்? என்ற கேள்விகளுக்கான பதில் இங்கு தரப்பட்டுள்ளது. அது அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே நிகழும். சிலமக்கள் தலைகீழாக எண்ணுகின்றனர். அவர்கள் இவைகளின் முடிவிலே உபத்திரவம் வரும் என்றும், சிலர் உபத்திரவகாலமே இருக்காது என்றும் புரிந்துகொள்கின்றனர்.
வேதத்தின் சிறிய குறிப்புகளில் நீங்கள் கவனம் செலுத்தாவிடில் பரிசுத்த வேதாகமத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. எனவே வெளிப்படுத்தின விசேஷ நூலை நாம் படிக்கும்பொழுது சில சிறிய காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயல்வோம்.
5. இதில் குறிப்பிடப்படும் இடங்களும் மிக முக்கியம்.
அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறும் சில இடங்கள் உண்டு. அது பரலோகத்தில் நடக்கும் எனில் பூமியிலும் நிகழும் என்று பொருளாகாது.
உதாரணமாக வெளிப்படுத்தல் 19:11 ஐ எடுத்துக்கொள்வோம். “பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்;” ஆம்; இந்த நிகழ்வு பரலோகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. “இதோ, ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார்.”
இது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை யோவான் குறிப்பிடுகிறார் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கு நடக்கும் நிகழ்விடம் முக்கியம். ஆம். இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடே உலகின் தீயசக்திகளை எதிர்த்துப் போரிட பூமிக்கு வருகிறார். இது இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து பூமிக்கு வரும் காலத்தைக் குறிப்பிடுகிறது.
எதிர்காலத்தைக் குறிக்கும்பொழுது காலமும் இடமும் முக்கியம். இயேசு பரலோகில் இருந்தால் பூமியில் அதைச் செய்யமுடியாது. அவ்வாறு அவர் செய்யவும் மாட்டார்.
அநேகர் வேதத்தை சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை; ஏனெனில் அவர்கள் சிறிய குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சொற்களும் இலக்கணமும் முக்கியம். அவைகளே கருத்துக்களைப் பரிமாறும் தொடர்பு சாதனங்கள். வேதாகம சத்தியத்தை அறிந்து கொள்வதில் சில கொள்கைகளை நாம் பின்பற்றவேண்டியது மிக மிக அவசியம்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு விசுவாசி எந்த அளவுக்கு பக்குவமடைந்தவனாயிருக்கிறான் என்பதை அவன் இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுக்கும் விதம் புலப்படுத்திவிடும்.