(ஜூலை – ஆகஸ்டு 2023)
(ஜெர்மன் நாட்டிலுள்ள லூயிபெக் தேவாலயத்தில் அழகு கொழிக்கும் ஒரு சலவைக்கல்லில் பின்வரும் வைர மணிமொழிகள் செதுக்கப்பட்டுள்ளன).

இயேசுகிறிஸ்து கிறிஸ்தவர்களைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார். கிறிஸ்தவர்கள் என கூறிக்கொள்வதில் பெருமைகொள்ளும் நமது நிலைமை எத்தகையது என்று சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

நீங்கள் என்னைத் தெய்வம் என்று அழைக்கிறீர்கள்;
ஆனால் – நீங்கள் என்னிடம் பயபக்தி கொள்வதில்லை.

 

நீங்கள் என்னை இரட்சகர் என்று இயம்புகிறீர்கள்;
ஆனால் – நீங்கள் உங்கள் சொந்த ஆத்துமாவுக்குரிய இரட்சிப்பை இன்னும் என்னிடத்திலிருந்து பெற்று அனுபவிக்கவில்லை.

 

நீங்கள் என்னை எஜமான் என்று கூறுகிறீர்கள்;
ஆனால் – நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை.

 

நீங்கள் என்னை ஜீவன் என்று சொல்கின்றீர்கள்;
ஆனால் – என்னை உங்கள் சொந்த ஜீவனாக ஏற்றுக்கொள்ளாது நீங்கள் நடைப்பிணமாக உழலுகிறீர்கள்.

 

நீங்கள் என்னை வழி என்று மொழிகிறீர்கள்;
ஆனால் – நீங்கள் என் வழியிலோ நடப்பதில்லை.

 

நீங்கள் என்னை வெளிச்சம் என்று சொல்கிறீர்கள்;
ஆனால் – நீங்களோ இன்னும் இருட்டிலே இருக்கிறீர்கள்.

 

நீங்கள் என்னை ஞானம் என்று நவில்கிறீர்கள்;
ஆனால் – நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்பதில்லை.

 

நீங்கள் என்னை சிலுவைநாதர் என்று செப்புகிறீர்கள்;
ஆனால் – நீங்களோ உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றுவதில்லை.

 

நீங்கள் என்னைப் போதகரே என்று அழைக்கிறீர்கள்;
ஆனால் – நீங்களோ என் பாதத்தில் அமர்ந்து சீஷர்களாகக் சுற்றுக்கொள்வதில்லை.

 

நீங்கள் என்னைச் சத்தியம் என்று சாற்றுகிறீர்கள்;
ஆனால் – நீங்கள் என்னை நம்புவதில்லை.

 

நீங்கள் என்னை தெய்வ இரட்சகர் என்று வாழ்த்துகிறீர்கள்;
ஆனால் – நீங்களோ என்னை நேசித்து சேவிப்பதில்லை.