சத்திய வசனம் பங்காளர் மடல்

(செப்டம்பர் – அக்டோபர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

ஜெயங்கொடுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

செப்டம்பர் – அக்டோபர் மாத சத்தியவசன சஞ்சிகை வெளியிட தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரைத் துதிக்கிறோம். இவ்விதழில் இடம்பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகளும் வேத பாடங்களும் உங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியத்தை ஊக்கமான ஜெபத்தாலும் அன்பின் காணிக்கையாலும் தாங்கி வருகிற பங்காளர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தாங்கள் அளித்துவரும் உதாரத்துவமான காணிக்கையினாலேயே இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தையும் கர்த்தர் சந்தித்து வருகிறார். தேவனுடைய ராஜ்யம் விரிவடையும் பணியில் தொடர்ந்து இணைக்கரம் தந்து தாங்க அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாரத்தில் நான்கு நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து சத்தியங்களை கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் பயனடைந்து வருகிறார்கள். தாங்களும் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கெடுங்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளே பிரசுரிக்கப்பட்டுள்ளது. சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஊழியத்தைத் தாங்க தங்களை அன்பாய் அழைக்கிறோம். YouTube சேனலில் வெளிவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய பொன்னிலும் மிகுந்த பசும் பொன்னிலும்… என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆழமான தேவசெய்தியும், இரட்சிப்பு எனக்குள் சந்தேகமா? என்ற தலைப்பில் சகோ.வர்ஷினி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், நம்முடைய இதயத்தை எவ்விதமாக காத்துக்கொள்வது என்பதை விளக்கி உன் இருதயத்தைக் காத்துக்கொள் என்ற தலைப்பில் சகோ.பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவன் விரும்பும் இனியகுடும்ப வாழ்க்கை வாழ்வதை விபரித்து ஆசீர்வாதமான கிறிஸ்தவ குடும்பம் என்ற தலைப்பில் Dr.எம்.எஸ்.வசந்த குமார் அவர்கள் எழுதிய செய்தியும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் வழங்கிய வேதபாடமும், காலங்களைப் பற்றிய சத்தியம் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய தொடர் வேதபாடமும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்திகளின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை தேவனுடைய நாம மகிமைக்காக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்