• சகோதரி சாந்தி பொன்னு •
(செப்டம்பர் – அக்டோபர் 2023)

கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும் ….. தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது (சங்.19:9,10).

சகோதரி சாந்தி பொன்னு

“இது நியாயமா?” “நீதி செத்துவிட்டதா?” “இந்த அநியாயங்களைக் கேட்க யாருமே இல்லையா?” இன்று மட்டுமல்ல, மனிதன் பாவத்தின் வஞ்சகத்தில் அகப்பட்ட காலத்திலிருந்தே மனித மனங்களில் எழுகின்ற கேள்விகள்தான் இவை. “கடவுளின் நியாயம் ஏன் மங்கிவிட்டது?” என்று கடவுளையே கேள்வி கேட்குமளவுக்கு மனுக்குலம் உடைந்து கிடக்கிறது. அன்பு, பரிசுத்தம், நீதி மூன்றும் ஒன்றிணைந்தவராகிய கடவுள், இன்று நடக்கின்ற அக்கிரமங்களைப் பார்த்திருப்பது என்ன? ஏன் நியாயம் செய்யாமல் இருக்கிறார்? துன்மார்க்கன் கை ஓங்கி நிற்கிறது; துஷ்டன் தன் இஷ்டப்படியே தன் இச்சைகளுக்காக உயிர்களைப் பலியாக்குகிறான். இது இப்படி என்றால், இயற்கை சீற்றங்கொண்டு எழுந்து கற்பனைக்கும் அடங்காத அழிவுகளைக் கொண்டு வருகிறதே, மனித ஓலங்கள் வானை எட்டுகிறதே, இயற்கையை ஆளுகிறவர் எங்கே என்றுகூட கேள்விகள் எழுகின்றன.

தன்னை உணராத மனிதன்

இத்தனையும் மனித நியாயங்களின் வெளிப்பாடாக இருக்கின்ற அதே சமயம், தான் எங்கே நிற்கிறான் என்பதை எந்த மனிதன் சிந்திக்கிறான்? இன்று நாம் வாழுகின்ற சமுதாயத்திலே, மக்கள் மத்தியில் ஒழுங்குவிதி ஒழுக்கநெறி, நற்சாட்சிகள் நற்போதனைகள், நீதி நியாயம் எல்லாமே புரட்டப்பட்டு வருகின்றன என்றால் அது மிகையாகாது. காலத்தின் மாற்றத்திற்கேற்ப, வாழ்க்கை முறைமைகளும் மாறிப்போக, அறிவு பெருத்துப்போக மனித மனமும் தன்னைப் படைத்தவரைவிட்டு, சுயஉரிமை, சுயஇன்பம், சுயமரியாதை என்று தனது சுயத்துக்கே முன்னுரிமை கொடுத்து, சட்ட திட்டங்களையும் தன் வசதிக்கேற்ப மாற்றியமைக்கின்ற தைரியத்தைப் பெற்றுவிட்டது. இதன் விளைவு பாவம் எது, தீமை எது, தேவன் வெறுப்பது எது என்று எந்தவித பயமுமின்றி, சிந்திக்கவே நேரமற்று, இந்த உலகை வெல்லவேண்டும், உலகை மாற்றியமைத்து தானே கடவுளாக வேண்டும் என்பதுபோல, வெகுவேகமாக அலைகிறான். இந்த வேகத்தில் நீதிநியாயம் விதிமுறைகள் நல் வழிகள் யாவும் பின்தள்ளப்பட்டுப் போயினவா என்று சிந்திக்கவேண்டியுள்ளது.

நீதிச்சட்டங்கள்

கடவுளை மறந்து தங்கள் இஷ்டப்படி தங்களுக்கென்று தெய்வங்களை உண்டாக்கி, வணங்கி ஒழுங்கற்றுப்போன மனித சமுதாயம், தேவனை அறிந்து அவரைச் சேவிக்கும்படிக்கு, அவர் தமக்கென்று ஒரு இனத்தையே தெரிந்தெடுத்தது நாம் அறிந்ததே! அடிமைகளாக இருந்த அவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டியிருந்தது. மோசேயின் மூலம் இந்த இஸ்ரவேல் இனத்தை எல்லா ஜாதி ஜனத்தைவிட்டுப் பிரித்து, வனாந்தரத்திற்கு வழிநடத்தி, அவர்களுக்கு வாழ்வதற்குத் தேவையான சகலவற்றையும் கர்த்தர் கற்பித்தார். முக்கியமாக அவர்கள் தனித்த ஜாதியாக, தம்மைப் பிரதிபலிக்கும் ஜனமாக வாழுவதற்கான கட்டளைகளைப் பிரமாணங்களைக் கொடுத்தார்.

பரிசுத்த வேதாகமம் முழுமையிலும் தேவனுடைய அன்பின் வாக்கியங்கள் அடங்கியுள்ளன. அதில் வாக்குத்தத்தங்கள், ஆசீர்வாதங்கள் மாத்திரமல்ல, தேவனைப் பிரதிபலிக்கின்ற வாழ்வு வாழ்வதற்கு அவசியமானதும், தேவனாகிய கர்த்தரின் குணாதிசயங்களை உள்ளடக்கியதுமான ஒழுக்க விதிகளும் வெளிப்படையாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டளைகள், நியாயவிதிகளைக் குறித்து மோசே, “உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு” (உபா.8:11) என்றார்.

அதாவது, ஒவ்வொரு கட்டளைக்குக் கீழ்ப்படியும்போது அது கர்த்தரை நினைவுபடுத்தும். பத்துக் கட்டளைகள் நியாயப்பிரமாணங்களின் இருதயமாக இருக்கிறது. அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தரையே அன்புகூர்ந்து அவரையே சேவிக்கவும், பிறரிடத்தில் அன்புகூரவும் இந்தக் கட்டளைகள் நீதிச்சட்டங்களாகக் கொடுக்கப்பட்டன. அடிப்படையில் இந்தக் கட்டளையை மீறி இஸ்ரவேல் தேவனைவிட்டு சறுக்கும்போதெல்லாம் தேவனுடைய நியாயம் வெளிப்பட்டதையும், அவர்கள் மனந்திரும்பியபோது திரும்பவும் மனதுருகி கர்த்தர் அவர்களைச் சேர்த்துக் கொண்டதையும் இஸ்ரவேலின் முழு சரித்திரத்திலும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் காலத்துக்குக் காலம் மனிதன் வேதனைக்குட்படும்போது, தன்னை நிதானிக்காமல் தேவனைக் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருந்தான், இன்றும் அதுதான் நடக்கிறது. “யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், நியாயம் என்னிடம் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்” (யோபு 34:5,6) என்றான். ஆனால், “நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என் மேல் குற்றஞ்சுமத்துவாயோ” (40:8) என்று கர்த்தர் கேட்டபோது, மனம் நொந்தவனாய், “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” (42:6) என்று சொல்லி, நியாயம் செய்யும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

புலம்பல் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா? எருசலேம் பிடிக்கப்பட்டு, மக்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டபோது எரேமியா புலம்பிக் கதறிய வார்த்தைகளைத்தான் இப்புத்தகத்தில் படிக்கிறோம். முக்கியமாக முதல் இரண்டு அதிகாரங்களையும் படிக்கும்போது, உள்ளம் உறைகிறது. தாமே தமக்கென்று தெரிந்தெடுத்து, இஸ்ரவேலின் தேவன் என்று தமக்கு ஒரு நாமத்தையும் கொடுத்து, அவர்கள் செய்த தவறுகள் அக்கிரமங்களுக்காக தண்டித்தாலும், மறுபடியும் சேர்த்துக்கொண்டு நடத்திவந்த கர்த்தர், தாம் நேசித்த அந்த இனம் இத்தனை சீர்கேடுகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது எப்படிச் சகித்திருந்தார் என்று எண்ணத்தோன்றியது.

ஆனால், இஸ்ரவேல் எப்படியெல்லாம் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள் என்றும், அவருடைய பிரமாணங்களைத் தள்ளிப்போட்டார்கள் என்றும், கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை எப்படிப் புறந்தள்ளினார்கள் என்றும், இறுதியாக எச்சரித்த எரேமியாவை எப்படி வதைத்து, பாபிலோனுக்குப் போகமாட்டோம் என்று அடம் பிடித்தார்கள் என்றும் படிக்கும்போது, இன்று நமக்குப் பெரிதான எச்சரிப்பு ஒலிப்பதைக் கேட்கக் கூடியதாக இருந்தது. பாபிலோனுக்குச் சிறைப் பிடிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தெருப்பிரசங்கியாக நின்று கதறிய எசேக்கியேலின் வார்த்தைகளைப் படிக்கும்போது, இன்று கர்த்தர் எவ்வளவு நீடிய பொறுமையோடு தமது பிள்ளைகளின் மனந்திரும்புதலுக்காகக் காத்திருக்கிறார் என்பதை உணரவும், மண்டியிட்டு அவரை வணங்கவும் வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

நியாயமான தராசு

மாசற்ற அன்பும், பரிசுத்தமும் நிறைந்த தேவன் நீதியுள்ளவருமாயிருக்கிறார். “நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்” (சங். 89: 14) என்று ஏத்தான் பாடியுள்ளார். “அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்” (தானி. 4:37) இந்த அறிக்கையைச் சொன்னது நேபுகாத்நேச்சார் என்ற புறவினத்து ராஜா. ஆம், நீதியும் நியாயமும் தேவனுடைய லட்சணங்களில் ஒன்று.

இப்படியிருக்க, தேவனுடைய நீதியும் உலக நீதியும் அதாவது மனித நீதியும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணானவை. தேவகரத்திலும் மனித கரத்திலும் ஒவ்வொரு தராசு உண்டு. தேவன் பாரபட்சமில்லதவர். அவர் கரத்திலே பிடிக்கப்பட்டுள்ள தராசு எப்பக்கமும் சாயாது. அதன் நடுவிலுள்ள கூர், அதுதான் நீதி. அந்த நீதி பக்க சார்பற்றது. ஒருபக்கம் கர்த்தருடைய நியாயங்களும் ஒருபுறம் நாமும் நிறுத்தப்படும்போது, எந்தக் கள்ள நிறைகளும் அங்கே செல்லுபடியாகாது. தமது நியாயங்களுக்கு அப்பால், அதாவது தமது வேதவாக்கியங்களுக்கு அப்பால் அவர் நியாயம் செய்யவும் மாட்டார். அவருடைய நியாயங்களுக்கு எதிர் நியாயங்களும் கிடையாது. கர்த்தருடைய வார்த்தை சத்தியம். ஆனால் நாமோ, தேவனுடைய பிரமாணங்கள் உள்ள பக்கத்திற்குச் சரி செய்ய தராசின் மறுபக்கத்தில் நமது சுயநீதியைப் புகுத்தி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம்.

ஏதேன் தோட்டத்தில் கர்த்தர் ஒரு கட்டளையைக் கொடுத்தார். மனிதன் அதை மீறினான். செய் என்றும் செய்யாதே என்றும் பிரமாணங்களைக் கொடுத்தார். அவன் அப்படியே செய்வான் என்றா கொடுத்தார்? நியாயப்பிரமாணம் வந்தபோது அது பாவத்தை அறிகிற அறிவைக் கொடுத்தது (ரோமர் 3:20). பிரமாணத்தை மீறினால், அதன் தண்டனைத் தீர்ப்பு மரணம். இதுவே நியாயம். இன்று மனிதனும், தன்னை அடிக்கிறவனை அடிக்கவும், கொல்லுகிறவனைக் கொல்லவும் தானே தீர்ப்பு வழங்குவதைக் காண்கிறோம். இது மனித நியாயம்.

வெளிப்பட்ட தேவநீதி

இங்கேதான் தேவநீதி வெளிப்பட்டது. நமது பாவங்களின் தண்டனையாக தேவனைவிட்டு நித்தியமாய் பிரிக்கப்பட்டு அழிவுக்குட்பட இருந்த நாம் பிழைத்திருக்கும்படிக்கு, பாவிகளாய் துரோகிகளாய் சத்துருக்களாய் நாம் இருக்கும்போதே, மகா பரிசுத்தரை நமக்காக பாவத்தின் விலைக் கிரயமாக பலியாகக் கொடுத்தாரே தேவன், இதுவே தேவனுடைய நீதி; அவர் நமக்காகக் கொடுத்த நியாயத்தீர்ப்பு. இந்த அன்பிற்கு முன் நாம் எம்மாத்திரம்?

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2கொரி.5:21). “அவர் பாவஞ் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், …நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”… (1பேதுரு 2:22,23).

ருசியான நியாயம்

இந்த இடத்திலே தாவீதின் 19ஆம் சங்கீதம் நமக்கு இனிப்பான செய்தியையே தந்திருக்கிறது. வேதம் அதாவது வேதவாக்கியம், கர்த்தருடைய சாட்சி, கர்த்தருடைய நியாயங்கள், கர்த்தருடைய கற்பனைகள், விளக்கத்தில் இவை சிறிய வித்தியாசங்களை கொண்டிருந்தாலும் சகலமும் கர்த்தருடைய பண்புகளையே நமக்கு எடுத்துரைக்கின்றன. சாதாரணமாக வாக்கியம் நம்மைத் தண்டிக்கும், சாட்சி நமக்கு விரோதமாக எழும்பும், கற்பனைகள் நம்மை நியாயந்தீர்க்கும், நியாயங்களோ நமக்கு நியாயத்தீர்ப்பை வழங்கும் என்று மக்கள் அன்று பயப்பட்டார்கள்; ஆனாலும், துணிந்து தேவனுக்குக் கீழ்ப்படியாமலும் இருந்தார்கள்.

இன்று நாமோ, இந்தக் கட்டளைகளின்படி நடந்தால் நம்மால் சந்தோஷமாக வாழமுடியாது, உலகத்தை அனுபவிக்கமுடியாது என்றும் முறுமுறுக்கிறோம். ஆனால் ஒன்று சொல்லுகிறேன்:

1. கட்டளைகள் பிரமாணங்கள் – நமக்கு எதிராகச் சாட்சி கொடுக்கும்.
2. நியாயம் – வழக்காடும்
3. நீதி – தண்டிக்கும்
4. அன்பு – மன்னித்து ஏற்றுக்கொள்ளும்
5. இயேசுவின் பலியும் உயிர்த்தெழுதலும் – நமக்கு விடுதலையளிக்கும்
6. பரிசுத்தம் – மகிழ்வுடன் தமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்

இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு? கர்த்தருடைய நீதி, நியாயம், தீர்ப்பு யாவையும் அனுபவித்த தாவீது, அற்புதமான அறிக்கையைத் தந்துள்ளார். அவை குறைவற்றது, ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது, பேதையை ஞானியாக்குகிறது, இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது, தூய்மையும் கண்களை தெளிவிக்கிறதுமாயிருக்கிறது என்று சொல்லி, கர்த்தருடைய நியாயமோ, பொன்னிலும் பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாயிருக்கிறது என்று ரசித்து ருசித்து பாடியுளளார்.

கர்த்தருடைய நீதியும் அதன்படியான நியாயமும் அவ்வளவு ருசிகரமானதா? ஆம், கட்டளைகளைக் கொடுத்தவர், அதை மீறினால் அதன் விளைவைக் குறித்து எச்சரிப்பும், கர்த்தருடைய கோபமும் நியாயமும் எப்படிப்பட்டது என்று மாத்திரமல்ல, அவருடைய நியாயத்திற்குக் கீழ்ப்படிந்தால் உள்ள ஆசீர்வாதத்தையும் தந்துள்ளார். இப்போ தீர்மானம் நம்முடையது. அதற்கேற்பவே நமது மகிழ்ச்சியும் வேதனையும் இருக்கும்.

இவை யாவுக்கும் மேலாக தேவநீதிக்குட்பட்டு, பாவத்தின் தண்டனையை அனுபவிக்க வேண்டிய நமக்காகத் தாமே பாவமாக்கப்பட்டு, நம்மை மீட்ட ஆண்டவர் நமக்கு அநியாயம் செய்வாரா? அவருடைய கோபம், நியாயம், நியாயத்தீர்ப்பு சகலமும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ள வேதவாக்கியம் நமது கைகளில் உள்ளது. அதனை நாம் ருசித்து, அதன் ருசியை நாமும் வெளிப்படுத்தி, உலகுக்கும் வெளிப்படுத்துவோமா? அல்லது, அதை உதாசீனம் செய்து தேவகோபத்துக்கு ஆளாவோமா? கர்த்தர் அன்றும் இன்றும் மாறாதவர்; அவருடைய அன்பு, பரிசுத்தம், நீதி அடங்கலான குணாதிசயங்களும் மாறாதவை. காலம் நெருங்கிவிட் டது. தேவனுடைய நியாயம் வெளிப்படும் நாட்களும் நெருங்கிவிட்டது.

“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். … உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின” (வெளி.15:3,4) என்ற பாடலின் தொனி கேட்கும் நேரமும் நெருங்கிவிட்டது. விழிப்புடன் செயற்படுவோமாக.

உங்களுக்குத் தெரியுமா?

 நாம் பலர் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக தேவனுடைய காரியத்தை செய்யும்போது சாத்தான் அதைப் பார்த்து நடுங்குகிறான்!