• சகோதரர் இ.வஷ்னி ஏனர்ஸ்ட் •
(செப்டம்பர் – அக்டோபர் 2023)

இன்றைக்குப் பலர் கேட்கும் ஒரு கேள்வி: “நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன் என்ற நிச்சயத்தைப் பெறுவது எப்படி?” சிலர் மற்றவர்களிடம், “நீ இரட்சிப்பை ருசித்துவிட்டாயா?” என கேட்பதும் உண்டு. இரட்சிப்பை ருசிபார்த்த நண்பரிடம். “இயேசு தரும் இரட்சிப்பைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவித்தாயா?” என்று கேட்பவர்களோ மிகவும் குறைவு அல்லவா!

உண்மையில், “இன்று இரட்சிக்கப்பட்டுள்ளேன்” என்ற நிச்சயமற்றவர்களாக பலர் வாழ்ந்து வருகின்றனர். “நான் இரட்சிப்பைப் பெற்றுவிட்டேன்” என்ற நிச்சயமுள்ள சிலர், தங்களது விசுவாசத்தைக் குறித்து கவலையற்று இருப்பவர்களும் உண்டு. தாம் இயேசுவிடம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக் குறித்து அயலகத்தாரிடம். தனது ஊரிலோ வீட்டிலோ, சபையிலோ பிறரிடம் தான் பெற்ற இரட்சிப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்பவர்கள் மிகவும் குறைவானவர்களாக இருக்கிறார்கள்.

ஒருநாள். திடீரென எனக்கொரு சிந்தனை வந்தது. “உண்மையில் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா? அல்லது நான் இன்னும் இரட்சிக்கப் படவில்லையா” என்று யோசித்தேன். ஆகவே மறுபடியும் நான் இயேசுவை நோக்கி “என் இருதயத்திற்குள் வாரும் ஆண்டவரே” என்று நான் ஜெபித்தேன். அதன்பின் “நான் இயேசுவின் பிள்ளை. பயமே இல்லை” என்று பாட்டு பாடிக்கொண்டு திரிந்தேன், மீண்டும் இரட்சிப்பைக் குறித்த சிந்தனை வந்தபோது. எனக்குள் காணப்பட்ட சந்தோஷம், மனஅமைதி. திருப்தி குறைவடைந்ததோ என்ற கவலை ஏற்பட்டது. பல கிறிஸ்தவர்கள், அநேக நேரங்களில், இவ்விதமான ஒரு அனுபவத்திற்கு முகங்கொடுத்திருப்பார்கள். அநேக தடவை இரட்சிப்பைக்குறித்து சந்தேகம் அடைவதற்குக் காரணம். தம்மில் இரட்சிக்கப்பட்டது போன்ற உணர்வுகள், அனுபவங்கள் மீண்டும் ஏற்படாமலிருப்பதுதான்.

முதலாவதாக, “நாம் இரட்சிக்கப்பட்டுள்ளதை எப்படி அறியலாம்?” என்ற கேள்வியை கேட்பதற்கு முன்பு, “நான் எப்படி இரட்சிக்கப்படலாம்?” என்ற கேள்வியைக் கேட்கவேண்டும். அத்துடன் “ஏன் நான் இரட்சிக்கப்படவேண்டும்?” என்றும் கேட்கவேண்டும். இந்த கடைசிக் கேள்விக்குரிய விடை: எல்லா மனுஷரும் பாவஞ் செய்தவர்கள், பாவத்தின் விளைவு மரணம் (ரோமர் 6:23) என்பதாகும்.

பாவ சுபாவத்தோடு பிறந்தபடியினாலும் பாவமான காரியங்களைச் செய்தபடியினாலும் நாம் மரண தண்டனைக்குரியவர்களாகிறோம். இது வெறுமனே சரீரப்பிரகாரமான மரணத்தைக் குறிப்பது மட்டுமல்ல, நமது ஆவிக்குரிய மரணத்தை, ஆண்டவரிடத்திலிருந்து பிரிக்கப்படுவதைக் குறிக்கிறது. இந்த கொடிய தண்டனையினின்றே நாம் மீட்கப்பட இரட்சிக்கப்படவேண்டும். சுருக்கமாக மீண்டும் சொல்வதாயின், “பாவத்தின் கொடிய தண்டனையான நரகத்திலிருந்து தப்பும்படியாக. இயேசு கிறிஸ்து தருகின்ற இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ள வேண்டும்.” ஆக, இயேசுகிறிஸ்துவே இரட்சிப்பவர், அவரிடமே இரட்சிப்பு உண்டு. அவர் தரும் விடுதலையே நிரந்தரமானது.

இரண்டாவதாக, “நான் இரட்சிக்கப்படுவது எப்படி?” என்ற இதே கேள்வியை ஒரு சிறைச் சாலைக்காரன் பவுலிடமும் சீலாவிடமும் கேட்டதை நாம் அப்போஸ்தர் 16ம் அதிகாரத்தில் காணலாம். “ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” (வசனம் 30) அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி” என்றே பதிலளித்தார்கள். இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதற்கூடாகவே நான் இரட்சிக்கப்படுகின்றேன் என்ற உண்மையை இதற்கூடாக நாம் காண்கிறோம். அதாவது, அவரிடத்தில் எனது நம்பிக்கையை வைத்து வைத்திருக்கவேண்டும்.

இயேசுகிறிஸ்து நமது பாவத்திற்கான மரண தண்டனையை சிலுவையில் அனுபவித்தார். நமக்குப் பதிலாக அவரே தம் மீது தண்டனையை ஏற்றுக்கொண்டார். இனி நாம் அந்தத் தண்டனைக்கு பரிகாரம் செலுத்தவேண்டிய அவசியமில்லை. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, பிதாவுடனான உறவு பிரிவதற்கானக் காரணமே நமது பாவத்தின் கொடூரமேயாகும். இயேசு செய்த தியாகத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, அவரை உள்ளத்தில் நாம் அழைக்கும்போது, அவர் நம்மோடுகூட வந்து வாசம் செய்வார்.

இப்போது அந்த இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் அறிக்கையிட வேண்டும். அதை வாயினால் நாம் அறிக்கை செய்யவேண்டும். நான் இரட்சிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள ஒரே ஒரு சிறந்த ஆதாரம் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமமேயாகும்.

உண்மையில், நமது இரட்சிப்பின் நிச்சயத்தை நமது உணர்வுகளின் அடிப்படையில் பெற முடி யாது. உணர்வினால், ஆண்டவர் அருளிய இரட் சிப்பின் மகிழ்ச்சியை அனுபவிக்கலாமே தவிர, அந்த இரட்சிப்பின் நிச்சயத்தை நாம் தேவ வார்த்தைக்கூடாகவே அறிந்துகொள்கிறோம். இரட்சிப்பின் மார்க்கமானது விசுவாசத்தின் வழியாகும். உணர்வுகளல்ல.

விசுவாசத்தினாலேயே நாம் இரட்சிக்கப்படுகிறோம். தேவ வார்த்தைக்கூடாக அவற்றை அறிந்துகொள்கிறோம். ஆக, உணர்வுகள் மாறும் தன்மை உடையன. தேவனுடைய வார்த்தையோ ஒரு போதும் மாறாதது. அது நிரந்தரமானது. அனைவருக்கும் உரியது. உறுதியானது. ஆண்டவராகிய இயேசுவானவர், “என் வசனத்தைக்கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 5:24) என்ற சத்திய வார்த்தையைக் கூறியுள்ளார்.

நீங்கள் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படும்போது, தேவனுக்குமுன் நிறுத்தப்படுகின்றீர்கள். ஒரு பரிசுத்தவானாக, ஒரு நீதிமானாக கருதப்படுகின்றீர்கள். இது இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்படுவதினால் கிடைக்கின்றது. நாம் கடவுளின் பார்வையில், இயேசுவுக்கூடாக பரிசுத்தவானாக மாறுவதானது. தேவனுடைய பாதுகாப்பையும், கிருபையையும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது. அதற்கூடாக நித்திய வாழ்வை “நோக்கிய பயணத்தை நாம் ஆரம்பிக்கின்றோம், இந்த முடிவே இல்லாத வாழ்வானது. நம்மை தேவனிடமிருந்து பிரிக்காத ஆவிக்குரிய வாழ்வு” என்று கூறலாம். இந்த நித்திய வாழ்வானது கிறிஸ்து நமக்குள் வாழும் வாழ்க்கையைக் குறிக்கின்றது.

உண்மையில், இரட்சிப்பைப் பெறாத பலர் தம்மை கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு இறுதியில் ஏமாறப்போகிறார்கள். ஒரு சபையில் நான் அங்கம் வகிப்பதினால் இரட்சிப்பு கிடைப்பதில்லை. கிறிஸ்தவ பெயருடன் வாழ்வதினால், பரலோகம் செல்லலாம் என்று நீங்கள் நினைப்பது தவறாகும். அது அப்படியல்ல. இரட்சிக்கப்படுவதற்கென்று ஆண்டவர் இயேசுவின்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும்போது, அவர் உங்களை மன்னிக்கிறார். தம்மோடு சேர்த்துக்கொள்கிறார். பிறகு, எவராலும் உங்களை இயேசுகிறிஸ்துவின் அன்பிலிருந்து வேறுபிரிக்க முடியாது. இந்த நிச்சயத்தை நாம் தேவ வார்த்தைக்கூடாகவும், மறுபடியும் பிறப்பதற்கூடாகவுமே அனுபவிக்கிறோம். அவனே இரட்சிக்கப்பட்டவனாக இருக்கிறான்.

இன்னுமொருவிதமாக இந்த சத்தியத்தை விளங்கப்படுத்தலாம். தேவன் தரும் இரட்சிப்பு நித்தியமானது. அது அழிவற்றது. இரட்சிக்கப்படுபவர்கள் அந்த நித்தியமான வாழ்வை என்றென்றும் அனுபவிப்பார்கள். இந்த இரட்சிப்பின் விஷயத்திலே இயேசுகிறிஸ்துவில் உங்களுடைய நம்பிக்கையை வைப்பதுதான் முதற்படி. அவர் உங்களுக்காக தமது ஜீவனைக் கொடுத்தார்.

உங்களுக்காக சிலுவையில் பலியானார். இனி நான் தண்டனைக்குரியவன் அல்ல. அவரே எனது சகல பாவத்துக்காகவும் தண்டிக்கப்பட்டார் என்று நம்பி அதை அறிக்கையிடுங்கள். அதாவது இனி அவரே உங்களைப் பாதுகாப்பார். “அவர் தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்” என்று எபிரெயர் 7:25இல் நாம் வாசிக்கிறோம் அல்லவா! உங்களிடத்தில், ஒரு காரியத்தைத் துவக்கிய தேவன், இறுதிவரை நடத்துவார் என்ற உறுதி (பிலி.1:5) கொண்டிருங்கள். இதுவே தொடர்ந்தும் இரட்சிப்பை ருசிபார்ப்பதாகும். உங்களில் இரட்சிப்பு என்னும் கிரியைகளைத் தொடங்கினவர் அதை முடிவுபரியந்தம் நடத்துவார். அவர் கைவிடவேமாட்டார்.

இரட்சிப்பின் அனுபவத்தை ருசிபார்த்த அநேகர், “நான் இரட்சிக்கப்பட்டபின் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றோ, “நான் விடுதலை உணர்வினைப் பெற்று உள்ளேன்” என்றோ அல்லது “எந்தவிதமான வித்தியாச உணர்வுமேயில்லை” என்றோ கூறலாம். காரணம், இரட்சிப்புக்கும், உணர்வு ஏற்படுவதற்கும் எந்தவிதமான சம்பந்தமுமே இல்லை.

“விசுவாசிக்கிறேன்” அல்லது “நம்புகிறேன்” என்ற சொற்களுக்கூடாக, இரட்சிப்பின் அனுபவத்தை நாம் அறிந்துகொள்கின்றோம். “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்!” என்று எபிரெயர் 2:4 கூறுகின்றது. ஆக, இரட்சிப்பை ருசி பார்த்த நாம். தொடர்ந்தும் அந்த விசுவாசத்தில் உறுதியாயிருக்க வேண்டியது அவசியமாகும்.

பிரியமானவர்களே, உம்மிடம் இரட்சிப்பைக் குறித்து கேள்வி எழும்போது, இயேசுகிறிஸ்துவிடம் வைத்த விசுவாசத்தை சிந்தித்துப்பாருங்கள். தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்த நாம், இயேசு கிறிஸ்துவுக்கூடாக பாவத்திலிருந்து விடுதலை பெற்றோம். மரணத்திலிருந்து இரட்சிப்புக்குள் வந்தோம், நமது அன்றாட வாழ்விலே பாவத்திலிருந்து விடுபடவைக்கும் வல்லமையைத் தருவது இந்த இரட்சிப்பே! நடைமுறையில் பரிசுத்தத்தை, நீதிமானாகுதலை, நித்தியத்தை நோக்கி செல்லும் நமக்கு, இரட்சிப்பானது தேவனுடைய இலவச ஈவாகவே தரப்பட்டுள்ளது. நீங்கள் இயேசுகிறிஸ்துவில் நம்பிக்கை வைத்துள்ளது உண்மையென்றால், கர்த்தருடைய வசனத்தை தொடர்ந்தும் வாசித்து அதில் வளர வேண்டும்.

பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டோம். தொடர்ந்தும் பாவத்தின் வல்லமையிலிருந்து இரட்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். இறுதியில், உன்னை இரட்சிப்பேன் என்று ஆண்டவர் கூறியபடியே. முற்றிலும் பாவத்தின் வல்லமையிலிருந்து, நரகத்தின் வல்லமையிலிருந்து. சாத்தானின் பிடியிலிருந்து நியாயத்தீர்ப்பு நாளிலே முற்றிலுமாக இரட்சிக்கப்படுவோம். இவையெல்லாம் இரட்சிப்பு என்பதற்குள் உள்ளடக்கப்படும்.

கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைகளையும் நமது வாழ்வின் நோக்காக வைத்திருந்தால். இரட்சிப்பைக்குறித்த எந்தவொரு சந்தேகமும் உங்களுக்குள் வரத் தேவையே இல்லை. நீங்களும் மற்றவர்களை அந்த இரட்சிப்புக்குள் வழிநடத்துபவர்களாக மாறுவீர்கள்.

பகிர்ந்து கொடுக்கும் வாழ்க்கை

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேற்குப் பகுதியில் ஒரு வறண்ட பிரதேசத்தில் ஒரு மனிதன் கால்நடையாய் வந்து கொண்டிருந்தான். அவனைத் தாகம் வாட்டியது. எதிர் பாராதவிதமாக ஒரு பழைய, கைவிடப்பட்ட குடிசையைக் கண்டான். அதில் தண்ணீர் அடித்தெடுக்கும் ஒரு கைப்பம்பு இருந்தது. அதன் அடியில் ஒரு கூஜா நிறைய தண்ணீர் இறுக மூடப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு சீட்டு எழுதிக் கட்டப்பட்டிருந்தது. அதில், “இந்தத் தண்ணீரைக் குடித்துவிடாதேயுங்கள். கைப்பம்பு இயங்குவதற்கு இதைப் பயன்படுத்துங்கள். பின்னர் அடுத்த நபருக்காக இதை நிரப்பி வையுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த மனிதன் இதைக் கண்டு திகைத்தான்.

அவனோ தாகத்தால் செத்துக்கொண்டிருந்தான். இவன் அந்தத் தண்ணீரைப் பம்பில் ஊற்றினால், அந்த ஆழ்துளை கிணற்றில் ஒரு வேளை தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தால், அவன் உயிர்பிழைக்க இருந்த ஒரு வாய்ப்பையும் இழக்க நேருமே” என்று நினைத்தான்.

இருப்பினும், முயற்சித்துப் பார்க்க முடிவு செய்தான். பம்பின் குழாய் வழியாக அந்தத் தண்ணீரை ஊற்றினான். பாத்திரத்திலிருந்த தண்ணீர் முழுவதும் ஊற்றித்தீர்ந்ததும், கைப் பிடியை அடித்தபோது, நிரம்ப சுத்தமான நீர் கொப்பளித்து வந்தது. தண்ணீர் குடித்து தாகம் தீர்த்தான். பின்னர் அவன் அந்தப் பாத்திரத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பி, அதை மூடிய பின் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த குறிப்பில் மேலும் ஒரு வரியை இவ்வாறு சேர்த்தான்: “முயற்சித்துப் பாருங்கள். நான் முயற்சித்தபோது அது நன்றாக இயங்கியது” என்று அதில் எழுதினான்.

“பகிர்ந்து கொடுத்தலே வாழ்க்கையாகும். இப்படியாக வாழ்வதே தேவனை மகிமைப்படுத்தும் வாழ்வாகும்.”