• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(செப்டம்பர் – அக்டோபர் 2023)

நன்மையான ஈவா? அல்லது தீமையான ஈயா?

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

வேதாகம சத்தியத்தின்படி தேவன் மனிதனை “ஆணும் பெண்ணுமாக” சிருஷ்டித்துள்ளார் (ஆதி. 1:27). ஏனெனில், மனிதன் தனியாக வாழ்வதற்காகவோ அல்லது தனித்துச் செயல்படுவதற்காகவோ சிருஷ்டிக்கப்படவில்லை (ஆதி.2:18). மேலும், மனிதன் “தேவனுடைய சாயலில்” (ஆதி. 1:27), “திரியேக தேவன்” எப்படி தமக்குள்ளே ஐக்கியமுள்ளவராக இருக்கின்றாரோ, அதேவிதமாக மனிதரும் தங்களுக்கிடையில் ஐக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது அவருடைய சித்தமாயிருக்கிறது. இதனால்தான், இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களுக்காகப் பிதாவிடம் ஜெபித்தபோது, “நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” (யோவான் 17:22) என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயேசுகிறிஸ்துவின் சீடர்களாக இருப்பவர்கள் ஒன்றாயிருப்பதற்கு “சபை வாழ்வை” உருவாக்கிய தேவன், தனிப்பட்ட ரீதியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றாயிருப்பதற்குத் “திருமண வாழ்வை” ஏற்படுத்தியுள்ளார். இதனால்தான், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமண பந்தத்தில் ஒரே மாம்சமாக இருக்கின்ற விதத்தில், ஆணின் சரீரத்திலிருந்து ஒருபகுதியை வெளியே எடுத்து, அதைப் பெண்ணாக சிருஷ்டித்து, ஆணிடம் கொடுத்து, உலகின் முதலாவது திருமணத்தை தேவன் நடத்தி வைத்துள்ளார் (ஆதி.2:21-22).

ஒருஆணும் ஒருபெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வது, தேவனால் உருவாக்கப்பட்ட வாழ்க்கைமுறையாக இருப்பதனால்தான், “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்” என்று (நீதி.18:22) கூறுகிறது. மேலும், எல்லாவற்றையும் ஆண்பாலில் சொல்வதே வேதாகமகால மொழிவழக்காக இருந்ததினால்தான் இவ்வசனத்தில் “மனைவியைக் கண்டடைவதைப்பற்றி” குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதைத் தற்கால மொழிநடையில் “மனைவியைக் கண்டடைகிறவன்” என்று மட்டுமல்ல, “கணவனைக் கண்டடைகிறவள்” என்றும் நாம் மொழிபெயர்க்கலாம். எனினும், ஆரம்பத்தில் நன்மையாகத் தென்படும் மனைவி அல்லது கணவன், நாளடைவில் தீமையானதாக இருப்பதாகவே பெரும்பாலான மனிதர்கள் புலம்புகின்றார்கள். இதனால், தற்காலத்தில் திருமணம் முடிப்பவர்களின் எண்ணிக்கையைவிட, விவாகரத்து பெறுபவர்கள், பிரிந்துவாழ்பவர்கள், ஒருவீட்டுக்குள்ளேயே எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் குடியிருப்பவர்கள் என்போரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இதனால், கணவன் அல்லது மனைவி தேவனுடைய நன்மையான ஈவா? அல்லது தேவையற்ற தீமையான ஈயா? என்று ஆராய்ந்து பார்ப்போம்.

1. ஏற்ற துணையா அல்லது ஏமாற்ற துணையா?

தேவன் மனிதனை சிருஷ்டித்து அவனுக்கு மனைவியாக ஒருபெண்ணைக் கொடுப்பதற்கும் முன்பே “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ‘ஏற்ற துணையை’ அவனுக்கு உண்டாக்குவேன்” (ஆதி.2:18) என்று தெரிவித்துள்ளார். உண்மையில், உலகின் முதல் மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதர் அனைவருக்கும் ஏற்ற துணையையே தேவன் கொடுக்கின்றார். ஆனால், ஆரம்பத்தில் ஏற்ற துணையாகத் தென்பட்டவர் நாளடைவில் ஏமாற்றம் தருகின்ற துணையாகவே இருக்கின்றார் என்பது, பொதுவாக மனிதரின் மனக் குறையாகவும் பெரும்பாலானவர்களின் மனக் குமுறலாகவும் உள்ளது. இதனால், “ஏற்ற துணை” என்றால் என்னவென்பதை முதலில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஏனெனில், “ஏற்ற துணை” என்னும் சொல் ஆங்கில வேதாகமங்களில் “பொருத்தமான உதவியாளர்” (Suitable helper) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதினால், “ஆணுக்கு உதவி செய்வதற்காகவே பெண் சிருஷ்டிக்கப்பட்டாள்” என்னும் தவறான ஒரு எண்ணத்தையே பலருக்கு ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கிறிஸ்தவ பாரம்பரியப் போதனைகளின் அஸ்திபாரமாய் இருக்கும் ஆதிசபைத் தலைவர்கள், “நற்கிரியைகளில் ஆணுக்கு உதவி செய்வதற்காகவும், பிள்ளைகளைப் பெறுவதற்காகவுமே பெண் சிருஷ்டிக்கப்பட்டாள்” என்று பெண்ணின் பணியை வரையறை செய்துள்ளனர். இதனால், மனைவியை “நிரந்தரமான வேலைக்காரியாக” அல்லது “பிள்ளை பெறும் இயந்திரமாகப்” பார்க்கும் மனநிலையே பலருக்கு உள்ளது. மேலும், ஏவாள் இல்லாமல் இருந்திருந்தால் உலகில் பாவமே வந்திருக்காது என்னும் எண்ணமும் பெரும்பாலான கிறிஸ்தவ ஆண்களின் ஆழ்மனதில் இருப்பதனால், குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பெண்ணும் பேயும் ஒன்று என்று பேசுகிறவர்களும் இருக்கின்றார்கள். இதைப்போலவே, கணவன் தன்னைக் கடைசிவரைக்கும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வான், தன் தேவைகளை சந்திப்பான், தன்னை முழுமையாக நேசிப்பான் என்றெல்லாம் கனவுகண்ட பெண்களும், திருமணத்தின் பின், தங்களுடைய சுயாதீனத்தை அபகரித்து, தன்னுடைய ஆசைகளுக்கேற்றவிதத்தில் தங்களை அடிமைபோல நடத்தும் எவ்வித இரக்கமும் அற்ற அரக்கனாக கணவன் இருக்கின்றானே என்று அழுகிறவர்களாக இருக்கின்றார்கள். இதனால், தேவனால் அருளப்படும் ஏற்ற துணை அநேகருக்கு ஏமாற்ற துணையாகவே தென்படுகிறது.

வேதாகமத்தின் பழையஏற்பாடு எழுதப்பட்ட எபிரெய மொழியில் “ஏற்ற துணை” என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள “ஏசெர்” (ezer) என்னும் சொல், “இன்றியமையாத” அல்லது “மிகவும் அவசியமான” துணை என்னும் அர்த்தமுடையது. அதாவது, “மனிதனின் குறையைப் பூர்த்தி செய்யும் துணை. மனிதனால் தனியாக செய்ய முடியாததை செய்யக்கூடிய துணை என்னும் அர்த்தமுடையது”.

மேலும், இது தனிமையின் வெறுமையை இல்லாமலாக்கிய துணையாகவும் உள்ளது. எனினும், இது எவ்விதத்திலும் தாழ்வான நிலையில் இருக்கும் துணை அல்ல. இதனால்தான், மூலமொழியில் இச்சொல் ஆண் பாலில் உள்ளதோடு, தேவன் இஸ்ரவேலுக்கு சகாயராக இருப்பதற்கும் பழைய ஏற்பாட்டில் இச்சொல்லே உபயோகிக்கப்பட்டுள்ளது (யாத்.18:4, உபா.33:7, 33:26, 33:29, சங்.33:20, 115:9-11, 146:5). ஏனெனில், “தேவனைப் போன்ற இன்னுமொரு துணை மனிதனுக்கு அவசியமாய் இருந்தது. மேலும், பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் “வைத்தியர்” என்னும் அர்த்தமுடைய “பொய்த்தொஸ்” (boethos) என்னும் சொல்லே ஏற்ற துணை என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே இது, உயர்ந்தவருக்குத் தாழ்ந்தவர் செய்கின்ற உதவியாக அல்ல, வல்லமையுள்ளவர் பலவீனமானவருக்குச் செய்கின்ற உதவியாக, குறைவுள்ளவருக்கு குறைவற்றவர் செய்கின்ற உதவியாக உள்ளது. ஏனெனில் இச்சொல், “வல்லமை” என்னும் அர்த்தமுள்ள சொல்லிலிருந்தே இச்சொல் வந்துள்ளது.

எனவே, ஆணுக்கு தேவன் உருவாக்கிய ஏற்ற துணை, “அவனுக்கு பெலனாயிருக்கும் வல்லமையான உதவியாளராக, எவ்விதத்திலும் தாழ்வான சிருஷ்டியாக இராமல், தேவனைப்போல மனிதனுக்கு எப்பொழுதும் தேவைப்படும் ஏற்ற உதவியாளராக இருக்கின்றாள்”. எனவே, தன் குறைவை நிறைவாக்கும் துணையின் உதவி தேவைப்படும் நிலையிலேயே தேவன் மனிதனை சிருஷ்டித்துள்ளார். இதனால், ஆணின் வாழ்வில் இருக்கும் குறைவை நிறைவு செய்யும் பங்காளியாகவே பெண் இருக்கின்றாள் என்பதை மறுப்பதற்கில்லை. இதைப்போலவே, பெண்ணின் வாழ்விலிருக்கும் குறைவை நிறைவாக்குபவனாக ஆண் இருக்கின்றான். ஏனெனில், ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பதையும், சமநிலையில் ஒருவருக்கு மற்றவர் ஒத்தாசையாய் இருப்பதையுமே “ஏற்ற துணை” என்ற சொல் அறியத்தருகின்றது.

கணவனும் மனைவியும் ஒருவருடைய வாழ்வில் இருக்கும் குறைவை மற்றவர் பூர்த்தி செய்யும் நிலையிலேயே தேவனால் சிருஷ்டிக்கப் பட்டுள்ளதனால், இருவரும் வித்தியாசமானவர்களாக இருக்கின்றனர். அதாவது, ஒருவரிலிருக்கும் குறைவு மற்றவரில் நிறைவாகவும், ஒருவருடைய நிறைவு மற்றவரில் குறைவாகவும் உள்ளது. இதனால் “ஏற்ற துணை” பலர் நினைப்பதுபோல ஏமாற்ற துணையாக அல்ல, ஒருவரில் இல்லாததை மற்றவரில் பெற்றுக்கொள்ளும் “வித்தியாசமான துணையாகவே” உள்ளது. அதாவது, “எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்” என்னும் பழைய பாட்டில் உண்மை இருந்தாலும், “எனக்கொரு மனைவி வருவாள், அவள் என்னைப்போலவே இருப்பாள்” என்று யாராலும் பாடமுடியாது. ஏனெனில், தற்கால நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி இருப்பதுபோல, அல்லது சிறுவர்களுக்கான கார்ட்டூனில் வரும் “டாமும் ஜெரியையும் போல” கணவனும் மனைவியும் எப்பொழுதும் எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர். இதனால், “ஆணும் பெண்ணும் வேறுபட்ட இரண்டு கிரகங்களிலிருந்து வந்தவர்களைப்போல ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள்” என்று கூறக் கூடிய அளவுக்கு, இருவரும் மாறுபட்ட தன்மை உள்ளவர்களாக இருக்கின்றனர்.

ஏனெனில், ஆணும் பெண்ணும் சிந்திக்கும் விதமும், செயல்படும் விதமும், உணர்கின்ற விதமும் வித்தியாசமாகவே உள்ளது. அதாவது, அவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற விதமும், சரீரப்பிரகாரமாக செயல்படுகின்ற விதமும், அவர்களுடைய தனிப்பட்ட மன விருப்பு வெறுப்புகளும் வித்தியாசமானவைகளாகவே உள்ளன. எனவே, திருமணவாழ்வில் தனக்குத் தேவையானதே மற்றவருக்கும் தேவை என்றோ, அல்லது, தான் விரும்புகின்ற, அல்லது உணர்கின்ற, அல்லது சிந்திக்கின்ற விதமாகவே மற்றவரும் விரும்பவும் உணரவும் சிந்திக்கவும் வேண்டுமென்று, கணவனோ அல்லது மனைவியோ எதிர்பார்ப்பவர்களாக இருந்தால், தேவனால் அருளப்பட்ட ஏற்ற துணை அவர்களுக்கு எப்பொழுதும் ஏமாற்ற துணையாகவே தென்படும். ஏனெனில், தேவன் ஆணையும் பெண்ணையும் ஒரேவிதமாக அல்ல, வித்தியாசமானவர்களாகவே சிருஷ்டித்துள்ளார்.

ஆணும் பெண்ணும் வித்தியாசமாக சிந்திப்பவர்களாகவும், செயல்படுகிறவர்களாகவும், உணர்கிறவர்களாகவும் இருப்பதனால், தேவனால் நல்ல ஈவாக அருளப்பட்ட “ஏற்ற துணை” ஏமாற்ற துணையாகத் தென்படாமல் இருப்பதற்கு, ஒருவரில் இருக்கும் வித்தியாசத்தை மற்றவர் அறிந்திருக்கவேண்டியது அவசியம். உண்மையில், வெளித்தோற்றத்தில் ஆணும் பெண்ணும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்ல, அவர்களுடைய சரீரமும் வித்தியாசமாய் உள்ளது. ஏனெனில், ஆணின் தோலைவிட பெண்ணின் தோல் 25 சதவீதம் மெல்லியது மட்டுமல்ல, இரண்டு மடங்கு அதிகம் உணர்ச்சியுடையது. மேலும், ஆணின் தோலைவிட பெண்ணின் தோல் அதிகளவு இழு படக்கூடியது.

ஆனால், ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அளவிலும் எடையிலும் 25வீதம் சிறியதாக இருந்தாலும், ஆணின் இதயத்தைவிட வேகமாகத் துடிக்கின்றது. இதைப்போலவே, பெண்ணின் நுரையீரல் 10-12வீதம் ஆணைவிட சிறியது. மேலும், ஆணின் மூளையில் இருக்கும் செல்களுக்கு இணையான அளவுடன் பெண்ணின் மூளை இருந்தாலும், 10வீதம் சிறியதாகவும், அதன் அமைப்பு மாற்றுத் திசைகளில் திடீர் திருப்பங்களுடனும் உள்ளது. மேலும், ஆணின் மூளை ஒரு பக்கம் மாத்திரம் விஷயங்களைச் சேகரித்து வைக்கிறது. ஆனால் பெண்னின் மூளை இரண்டு பக்கங்களிலும் விஷயங்களைச் சேகரித்து வைக்கின்றது. இதனால், நினைவுகளைப் பதிவு செய்வதிலும், உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதிலும், மனிதரின் முகங்களை அடையாளம் காண்பதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், தீர்மானங்கள் எடுப்பதிலும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும், விஷயங்களைப் புரிந்துகொள்வதிலும் ஆணும் பெண்ணும் வித்தியாசமாகவே செயல்படுகின்றனர். மேலும், ஆணைவிட பெண்ணுக்கு ஞாபக சக்தியும், நோய் எதிர்ப்புசக்தியும், வலிகளைத் தாங்கக்கூடிய சக்தியும் அதிகமாக இருப்பதோடு, பெண்ணின் நாவுக்கு சுவை உணர்வும், நாசிக்கு சுகந்த உணர்வும், கண்களுக்குப் பார்வைத்திறனும் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் அறியத்தருகின்றன.

ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்களாக இருப்பதனால், ஒருவர் எப்படி மற்றவரைவிட வித்தியாசமாக சிந்தித்து செயல்படுகின்றார், அல்லது உணர்கின்றார் என்பதைக் கணவனும் மனைவியும் அறிந்திருக்கவேண்டியது அவசியம். உதாரணத்திற்கு, குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும்போது, கணவனைவிட மனைவியே அதைப்பற்றி அதிகமாகப் பேசுகிறவளாக இருப்பாள். ஏனெனில், நாம் ஏற்கனவே பார்த்தவிதமாக, பெண்ணின் மூளை மாற்றுத் திசைகளில் திடீர் திருப்பங்களுடன் இருப்பதனால், எந்த காரியத்திலும் அதனோடு தொடர்பான சகலத்தையும் அவர்கள் பார்த்து, சிறிய பிரச்சனையையும் பெரிதுபடுத்திப் பேசுவார்கள். ஆனால் ஆண்கள் எந்த காரியத்திலும் குறிப்பிட்ட விஷயத்தைமட்டும் பார்க்கிறவர்களாகவும் சுருக்கமாகப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். ஏனெனில், ஆணைவிட பெண் அதிகம் பேசுகிறவளாகவே இருக்கின்றாள்.

அதாவது, ஆண் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுவான் என்றும், பெண் 20,000 வார்த்தைகள் பேசுவாள் என்றும் கணிப்படப்பட்டுள்ளது. எனினும், தற்காலத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் இக்கணிப்பீட்டை நம்பகமானதாக ஏற்றுக்கொள்ளாத போதிலும், பொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் அதிகமாகப் பேசுகிறவர்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. ஏனெனில் ஆண்கள் தேவையானதை மாத்திரம் பேசுவார்கள். ஆனால், பெண்கள் எல்லாவற்றையும் பேசுவார்கள். இதனால், ஒருபிரச்சனை ஏற்படும்போது, பெண் பிரச்சனையைப் பற்றியே அதிகமாகப் பேசுவாள். ஆனால் ஆண் பிரச்சனைக்கான தீர்வை சுருக்கமாகப் பேசுவான். ஆனால், மனைவி பிரச்சனையை முழுமையாகவும் விரிவாகவும் சொல்வதற்கும் முன்பு கணவன் கொடுக்கும் தீர்வு, மனைவியின் காதில் விழாது. இதனால், பிரச்சனையின்போது மனைவிக்கு அறிவுரை கொடுப்பதற்குமுன் அவள் சொல்வதைப் பொறுமையாகவும் முழுமையாகவும் கணவன் காது கொடுத்துக் கேட்கவேண்டும்.

ஆனாலும், பிரச்சனையின்போது ஆண் தனிமையைத் தேடுகிறவனாகவே இருப்பான். ஏனெனில், தனிமையில் அவன் பிரச்சனைக்கான தீர்வைக் கண்டுபிடித்துவிடுவான். ஆனால், பெண்ணுக்கு யாரிடமாவது பேசிய பிறகே தீர்வு அவளுடைய மூளைக்குத் தென்படும். மேலும், ஆணைவிட பெண் ஒருநாளைக்கு 13000 வார்த்தைகள் அதிகம் பேசுவாள் என்பதனால், அவள் எங்கும், எப்போதும் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பாள். ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண் அங்கு அதிகம் பேசிவிட்டால் வீட்டில் பேசுவதற்கு அவனிடம் வார்த்தைகள் இருக்காது. இதனால், இத்தகைய சூழ்நிலையில் கணவன் தன்னோடு அதிகம் பேசவில்லை என்பது மனைவியின் மனக் குறையாகவே இருக்கும்.

ஆணைவிட பெண் அதிகமாகப் பேசுகிறவளாக மாத்திரமல்ல, அவள் அதிகமான முகபாவங்களை வெளிபடுத்தக்கூடியவளாகவும், மற்றவரின் முகபாவத்தை வைத்தே அவர்களுடைய உள்ளத்தின் நிலையை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடியவளாகவும் இருக்கின்றாள். உதாரணத்திற்கு, ஆணின் முகபாவத்தை வைத்து அவன் பொய் சொல்வதைப் பெண் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவாள். ஆனால், ஆண் எளிதாக நம்புகின்ற விதத்தில் பெண் பொய் சொன்னாலும், பெண்ணின் முக பாவத்தை வைத்து ஆண்களால் அதைக் கண்டு பிடிக்கமுடியாது. ஏனெனில், பெண் எல்லாரிடத்திலும் ஒரேவிதமான தொனியில் பேசுவதில்லை. ஆனால், தனக்கு பிடித்தவரிடத்தில் பேசும்போது அவளுடைய குரல் மென்மையாக இருக்கும். இதனால், மனைவிக்குப் பிடித்தமான விதத்தில் கணவன் இருக்கவேண்டியது அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்ணுக்கு ஆணைவிட காது நன்றாகக் கேட்பதனால், மனைவியைப்பற்றி எதிர்மறையாக எதையாவது முணுமுணுக்கும் நேரங்களில் கணவன் மிகவும் கவனமாயிருக்கவேண்டும். மேலும், பெண்ணால் ஒரு நேரத்தில் பலவேலைகளைச் செய்யக்கூடியதாக இருப்பதுபோல, ஆண்களினால் செய்யமுடிவதில்லை. இதனால், மனைவி வீட்டில் ஒரே நேரத்தில் பலவேலைகளைச் செய்வது மாத்திரமல்ல, கணவனும் அதேவிதமாகச் செயல்படவேண்டும் என்று எதிர்பார்ப்பவளாகவும், செய்யும்படி வற்புறுத்துபவளாகவும் இருப்பாள். ஆனால், நடைமுறையில் இது சாத்தியப்படாததனால் தேவனால் அருளப்பட்ட நன்மையான ஈவாகிய கணவன், எதற்கும் பிரயோஜனமற்ற வெறும் ஈயாகவே மனைவிக்குத் தென்படுவான். அதே சமயம், கணவனும் மனைவியைத் தீமையான ஒரு ஈயாகவே பார்ப்பான்.

திருமணவாழ்வில் தேவனால் அருளப்பட்ட “ஏற்ற துணை” ஏமாற்ற துணையாகப் பலருக்குத் தென்படுவதற்குக் காரணம், கணவனும் மனைவியும் தங்களுடைய துணையைவிட தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை அறியாதவர்களாக, அல்லது ஏற்றுக்கொள்ள மனமற்றவர்களாக இருப்பதேயாகும். அதாவது, “மனைவி” தன்னைப்போலவே சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்று கணவனும், கணவன் தன்னைப்போலவே உணரவும் செயல்படவும் வேண்டும் என்று மனைவியும் எதிர்பார்ப்பதனாலேயே, அவர்களுடைய உறவில் அன்பு இல்லாமல் போய் விடுகிறது. இதனால், மனக்கசப்புடன் வாழ்வதும், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதும், தான் விரும்பும் காரியத்தைச் செய்யும்படி மற்றவரை வற்புறுத்துவதும், மற்றவர் செய்யும் காரியத்தை சகிக்கமுடியாமல் வெறுப்புடன் பேசுவதும், சண்டைபிடிப்பதும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் அவலநிலையாக மாறிவிடுகிறது.

ஆனால், கணவனும் மனைவியும் ஒருவருடைய வித்தியாசத்தை மற்றவர் ஏற்றுக்கொண்டு, ஒருவரையொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினால் அவர்களுடைய திருமணவாழ்வில் இல்லாமற்போன அன்பு மறுபடியும் மலர்ந்திடும். இதனால், தன்னுடைய குறைவை நிறைவாக்கி, தன்னால் செய்யமுடியாதவற்றைச் செய்து, தன்னுடைய வாழ்வை முழுமையாக்குவதற்காகவே தேவன் “ஏற்ற துணையைக்” கொடுத்துள்ளார் என்பதை நாம் மறக்கலாகாது. இதனால் தான், தேவன் ஆணை சிருஷ்டித்த விதமாகப் பெண்ணை சிருஷ்டிக்காமல், ஆணிலிருந்து “ஒரு பகுதியை” எடுத்து அதைப் பெண்ணாக உருவாக்கியுள்ளார். எனினும், வேதாகமத்தை மொழி பெயர்த்தவர்கள் ஆணிலிருந்து “ஒரு விலா எலும்பு” எடுக்கப்பட்டதாகவே குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மூல மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ட்சேலா” (tsela) என்னும் எபிரெயச் சொல் பழைய ஏற்பாட்டில் நாற்பது தடவைகள் இடம்பெற்றாலும் இவ்வசனத்தில் மட்டுமே இச்சொல் “விலா எலும்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், எபிரெய மொழியில் இது கட்டடத்தின் ஒரு பகுதியை அல்லது வீட்டின் ஒரு அறையைக் குறிப்பிடும் சொல்லாகும். எனினும், அக்காடிய மொழியில் இச்சொல் மானிடசரீரத்தின் பகுதியைக் குறித்தாலும், அம்மொழியில் இச்சொல், தனியாக ஒரு எலும்பை மட்டுமல்ல, பல எலும்புகளையும் அவற்றோடு சேர்ந்துள்ள மாம்சத்தையும் குறிப்பிடும் சொல்லாகவே இருந்தது. எனவே, தேவன் ஆதாமின் “விலா எலும்பை” மட்டுமல்ல, மூல மொழியின்படி “ஆதாமின் ஒரு பகுதியை” அதாவது, ஒருபக்கத்தையே எடுத்துள்ளார்.

தன்னிலிருந்து எடுக்கப்பட்ட ஒருபகுதியிலிருந்து சிருஷ்டிக்கப்பட்ட பெண்ணைக் கண்டவுடன் “இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமுமாயிருக்கிறாள்” (ஆதி.2:23) என்று ஆதாம் கூறுவதனால், தேவன் அவனுடைய சரீரத்திலிருந்து ஒரு எலும்பை மாத்திரமல்ல, ஒரு பகுதியையே எடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது. இதனால், ஆதாமின் சரீரத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பகுதியை தேவன் ஏவாளாக சிருஷ்டித்தார் என்றும் சிலர் எண்ணுகின்றனர். ஆனால், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஆதாமின் சரீரத்திலிருந்து ஒருபகுதியை தேவன் எடுத்துள்ளதாகவே கூறுகின்றனர். இதனால், பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழி பெயர்ப்பிலும் தேவனுடைய செயல் இவ்விதமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஆதாமின் சரீரத்திலிருந்து தேவன் எப்பகுதியை எடுத்தார் என்பதையும் அறியமுடியாதவிதத்திலேயே மூலமொழியில் இவ்வாக்கியம் உள்ளது. ஆனால், நாம் ஏற்கனவே பார்த்த விதமாக பல விஷயங்களில் ஆணைவிட பெண் சிறப்பானவளாக இருப்பதனால், ஆணின் சிறந்த பகுதியையே தேவன் எடுத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும், ஆண் தன்னிலிருந்து ஒருபகுதியை இழந்தாலும், அதைவிட மேலானதும், எப்பொழுதும் தன்னோடு இருப்பதும், தன்னில் ஏற்பட்ட குறைவைப் பூர்த்தி செய்வதுமான ஏற்றதொரு துணையைப் பெற்றுக்கொண்டான். இதனால், தன்னுடைய கணவன் அல்லது மனைவி, தன்னைவிட வித்தியாசமான தன்மைகளுடனும், தன்னுடைய வாழ்வின் குறைவுகளை நிறைவு செய்து மகிழ்விக்கும் ஆற்றலுடனும் இருக்கின்றார் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும்போது, தேவனால் அருளப்படும் ஏற்ற துணை ஒருபோதும் ஏமாற்ற துணையாகத் தென்படாது.

(தொடரும்)