• கே.ப.ஆபிரகாம் •
(செப்டம்பர் – அக்டோபர் 2023)

கே.ப.ஆபிரகாம்

இருதயமானது மனித சரீரத்தின் இன்றியமையாத அங்கமாகும். மனிதனுடைய வாழ்வின் ஆரோக்கியமானது இருதயத்தைச் சார்ந்துள்ளது. இருதயம் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளுமாயின் மனிதனுடைய வாழ்வும் இவ்வுலகில் முடிவடையும். இதினாலே குறிப்பிட்ட வயதைத் தாண்டும்போது மனிதன் அவனது இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளவும் பரிசோதிக்கவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கட்டுப்பாடுற்ற உணவு பழக்கமும் மிதமிஞ்சிய போஜனமும் ஒரு மனிதருடைய இருதயத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இதைப்போன்றுதான் ஆவிக்குரிய வாழ்விற்கும் இருதயம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வும் இருதயத்தை சார்ந்தே அமைந்துள்ளது. வேதாகமம் அநேக இடங்களில் இருதயத்தைக் குறித்தும் அதன் செயல்பாடைக் குறித்தும் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். வேதாகமம் இருதயத்தை உருவக நிலையிலேயே குறிப்பிடுகிறது. அதாவது, மனிதனின் ஆளுமை மற்றும் ஆன்மீக வாழ்வு ஆகியவற்றின் மையமாக இருதயம் விளங்குகிறது. இருதயத்தை அறிவு, உணர்வு, சித்தம், மனசாட்சி ஆகியவற்றின் இருப்பிடமாக வேதாகமம் குறிப்பிடுகிறது. பொதுவாக இருதயத்தை மனம் என்றும் நாம் குறிப்பிடலாம்.

நமது இருதயத்தைக்குறித்து வேதாகமம் கூறும் சில காரியங்களை பார்த்துவிட்டு நமது இருதயத்தை காத்துக்கொள்வதைக் குறித்து தியானிப்போம்.

முதலாவது, தேவன் மனிதனுடைய முகத்தையோ புறத்தோற்றத்தையோ பார்ப்பதில்லை, இருதயத்தைப் பார்த்தே மதீப்பிடு செய்கிறார். இஸ்ரவேலின் ராஜாவாக சவுலுக்குப் பதிலாக ஈசாயினுடைய பிள்ளைகள் ஒருவனை அபிஷேகிக்கும்படியாக தேவன் சாமுவேலை அவனிடத்திற்கு அனுப்புகிறார். அப்பொழுது சாமுவேல் ஈசாயினுடைய மகன் எலியாபைப் பார்த்தவுடன், “கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தானாக்கும்” என்று கூறி அவனை அபிஷேகிக்க எத்தனித்தார். ஆனால் தேவன் உடனே சாமுவேலிடம் இடைபடுகிறார். “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (1சாமு.16:7). இவ்வாறு ஈசாயின் ஏழு பிள்ளைகளும் கடந்துசென்றனர். இறுதியில், வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது வரவழைக்கப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்டார். தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று ஆண்டவரால் சாட்சி பெற்றார் (அப்.13:22).

இரண்டாவதாக, தேவன் மனிதனுடைய இருதயத்தை சோதித்துபார்த்து பலனளிக்கிறார். இதைக் குறித்து எரேமியா 17:9,10 ஆகிய வசனங்களில் பார்க்கிறோம். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்” என்று ஆண்டவர் கூறுகிறார். நமது இருதயத்தை அறியத்தக்கவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை என்பது உண்மை யென்றாலும் நம் ஆண்டவர் திருக்குள்ள நமது இருதயத்தையும் உள்ளந்திரியங்களையும்கூட ஆராய்ந்து அறிகிறவராக இருக்கிறார் என்பதை நாம் அறியவேண்டும்.

அடுத்ததாக, நமது ஆவிக்குரிய வாழ்விலும் சாத்தான் முதன்மையாக தாக்குவது நமது இருதயத்தைத்தான். அதாவது, நமது இருதயத்தை தாக்குவதன் மூலமாக அவன் நம்மை தேவனுடைய ஐக்கியத்திலிருந்து பிரிப்பதுதான் அவனது நோக்கமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷனான யூதாஸ்காரியோத்தின் இருதயத்தை, அவரைக் காட்டிக்கொடுக்கும்படியாக தூண்டினான். அதன் பிறகு யூதாஸ் இயேசுவுடனும் அவரது சீஷர்களுடனுமான ஐக்கியத்திலிருந்து விலகி இயேசுவைக் காட்டிக் கொடுத்ததினிமித்தம் பின்வாங்கி போய் ஆக்கினையடைந்தான். எனவேதான் நமது இருதயத்தைக் காத்துக்கொள்வதில் நாம் கவனத்தோடும் எச்சரிப்போடும் இருப்பது அவசியமாக இருக்கிறது. நமது இருதயத்தை காத்துக்கொள்ளும் விதங்களைக் குறித்து இனி தியானிப்போம்.

1. பாவத்திலிருந்து நமது இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

பாவத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் தேவன் நம்மை விடுவித்திருக்கிறார். இனி நாம் பாவம் செய்யாதிருக்கவும் கறைபடாமலிருக்கவும் தேவன் அழைத்திருக்கிறார். எனவேதான் பேதுரு தனது நிருபத்தில் இவ்வாறு எழுதுகிறார். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே (1பேதுரு 1:14-16). தேவன் தாம் பரிசுத்தராக இருக்கிறபடியால் நாமும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டுமென விரும்புகிறார். பாவமானது நமது இருதயத்தைக் கறைப்படுத்தி நம்மை ஆண்டவரிடமிருந்து பிரித்துவிடுகிறது. எனவேதான் இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தின் போது, “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத்.5: 8) என்றார்.

தாவீது பாவத்தில் விழுந்தபோது அவரால் தேவனைத் தரிசிக்க முடியவில்லை. ஏனென்றால் அவருடைய இருதயம் பாவத்தினால் கறைப்பட்டிருந்தது. தேவன் தமது தீர்க்கதரிசியின் வாயிலாக அவருக்கு அதை உணர்த்தினார். அந்தவேளையில் தாவீது பாவ உணர்வடைந்தவராக தேவனிடம், “சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தைவிட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (சங்.51:10-12) என்று மன்றாடுகிறார். பரிசுத்தாவியானவருடைய உதவியில்லாமல் நாம் பரிசுத்தமாக வாழ இயலாது.

நாம் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருப்போமானால் நமது ஜெபம் கேட்கப்படாது. இதனால்தான் நாம் அநேக நேரங்களில் தேவனிடமிருந்து பதிலைப் பெற்றுக்கொள்ள இயலாமலிருக்கிறோம் (1யோவா.3:21,22).

நமது இருதயத்தைத் தீட்டுப்படுத்தும் காரியங்களையெல்லாம் அனுதினமும் களைந்து அவைகளின்மேல் ஜெயமெடுத்து நமது இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் (மத்.15:16-20). பரிசுத்தாவியானவர் இவ்வாறு ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு உதவி செய்கிறார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1 யோ.1:7).

மேலும் சங்கீதக்காரன் 119:11இல் நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்று கூறுவதைப் பார்க்கிறோம். வேதாகமத்தை வாசிப்பதும் தியானிப்பதும் மாத்திரமல்ல, அந்த வசனங்களை நம் இருதயத்தில் வைத்துவைக்க வேண்டும். அப்பொழுது நமது இருதயத்தை பாவத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும். தேவன் இஸ்ரவேல் புத்திரரிடத்தில், நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்துக்கொள் என்று கூறினார் (உபா.11: 19 – 20).

2. கவலையிலிருந்து நமது இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

கவலையானது ஒரு மனுஷனுடைய இருத யத்தை ஒடுக்குகிறதாக நீதிமொழிகள் 12:25இல் வாசிக்கிறோம். நமது பெலவீனங்களுக்கும் வியாதிகளுக்கும் சாமாதானமின்மைக்கும் காரணமாக இருப்பது நமது இருதயத்தில் கவலையை பேணி வைப்பதாகும். கவலையானது கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் மிகவும் தடை கல்லாக இருக்கிறது. ஆகவேதான் இயேசுகிறிஸ்து கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக் கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? (லூக்.12:25,26) என்று கேட்டார். கவலை ஒரு மனிதனை முன்னேறி செல்வதற்கு அனுமதிக்காது. அது அவனை அதே இடத்தில் வைத்திருக்கும்.

எனவே பிரியமானவர்களே, நமது வாழ்வில் கவலை அடைய நேரிடும்போது நாம் ஒருபோதும் அதை நமது இருதயத்தில் பேணி வைக்கக்கூடாது. அது நமது ஆவிக்குரிய வாழ்வை கொன்றுவிடும். எனவேதான் பரி.பேதுரு, “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேது. 5:7) என நமக்கு நம்பிக்கை அளிக்கிறார். இதைத்தான் அன்னாள் அன்றைக்கு செய்தாள். தன்னுடைய பாரத்தையெல்லாம் தேவசமுகத்தில் ஊற்றி விட்டு, அதன்பிறகு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை. இதைப்போலவே நமக்கும் ஆண்டவர் இவ்வாறான பாக்கியத்தை தந்திருக்கிறார். நமது கவலையை நாம் தூக்கி சுமந்துகொண்டு அலையத் தேவையில்லை. அதை அவர்மேல் வைத்து விடும்படி இயேசு இன்று நம்மை அழைக்கிறார்.

கவலையானது நமது இருதயத்தை ஆண்டு நம்மை ஒடுக்காதபடிக்கு இருக்க பரி.பவுல் பிலிப்பியர் 4:6,7இல் நமக்கு ஒரு வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”

3. இச்சையிலிருந்து நம் இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

“அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்” (ரோம.1:24).

தங்களது இருதயத்திலுள்ள இச்சைகளினால் இன்று அநேகர் தவறான வழியில் நடத்தப்படுகிறதை பார்க்கிறோம். இன்றைக்கு தவறான போதனைகளினால் ஆசை இச்சைகளெல்லாம் ஊக்குவிக்கபட்டு பொருளாதார ஆசீர்வாதங்களை அடைவதற்கு மக்கள் வழிநடத்தப்படுகின்றனர். ஆனால் வேதம் கூறுவது என்னவென்றால், “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”

தனது சுயஇச்சையினால் இழுக்கப்படுகிற ஒரு மனிதன் பாவத்திற்கு நேராக நடத்தப்பட்டு இறுதியில் ஆவிக்குரிய மரணத்தை அடைகிறான் என யாக்கோபு 1:14-15 கூறுகிறது. அதனால்தான் யாக்கோபு மேலும் கூறும்போது, “என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்” என்றார். அப்படியென்றால் இந்த இச்சையை எவ்வாறு மேற்கொள்வது? பரி.பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது, “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசைஇச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” என்கிறார். எனவே இதிலிருந்து நாம் விடுதலை பெறவும் இச்சையை மேற்கொள்ளவும் சிலுவை ஒன்றுதான் வழி! நமது ஆசை இச்சைகளை சிலுவையில் அறையும்போதுதான் நாம் இச்சையடக்கத்தைக் கற்றுகொள்ள முடியும்.

4. அவிசுவாசத்திலிருந்து நமது இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.

சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் (எபிரெயர் 3:12).

அவிசுவாசம் நம் இருதயத்தை பொல்லாத தாக்கி நம்மை தேவனைவிட்டு விலகசெய்கிறது. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டு அவரது பிள்ளைகளாக இந்த கிறிஸ்தவ வாழ்க்கையை ஆரம்பித்தோம். இன்று நம்முடைய விசுவாச வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது? எனவேதான் பவுல், நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரி. 13:5) என்று கூறுகிறார்.

நமது அவிசுவாச வாழ்க்கைக்கு காரணமாயிருக்கிற உலகத்தோடும் அவிசுவாசிகளோடு முள்ள ஐக்கியமானது நம்மை தேவனிடமிருந்து பின்வாங்க செய்கிறது. சாலொமோன் ராஜாவினுடைய வாழ்க்கை இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. அவன் பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள் மேலும் ஆசைவைத்தான். தேவன் வெறுத்த இந்த தேசத்தாரோடும் அந்த ஸ்திரீகளிடத்திலும் ஐக்கியம் கொண்டான். அந்த ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போக செய்தனர்.

இந்த அந்நிய ஸ்திரீகளைப் பிரியப்படுத்துவதற்காக சாலொமோன் அவர்களுடைய தேவர்களுக்கு தூபம் காட்டினான். எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். இதை 1இராஜாக்கள் 11:1-8 வேதபகுதியில் நாம் பார்க்கிறோம். ஆனால் கர்த்தர் அவனை அதிகம் நேசித்தபடியால் அவனை எச்சரித்தார். அவன் இருதயத்தில் குடிகொண்ட அவிசுவாசம் கர்த்தரை விட்டு அவன் இருதயத்தைத் திருப்பிப்போட்டது. “ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரைவிட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன் மேல் கோபமானார் (1இராஜா.11:9-10). இதினாலே எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள விசுவாச வீரர்களின் பட்டியலில் சாலொமோனுடைய பேர் இடம்பெறாததைப் பார்க்கிறோம்.

அருமையானவர்களே, பரி.பவுல், கிறிஸ்து வுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? என்று நம்மை எச்சரிக்கிறார். எனவே எல்லா காவலோடும் நம் இருதயத்தைக் காத்துக்கொள்வோம்.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம் (எபி.10:38-39).

5. பொருளாசையிலிருந்து நமது இருதயத்தை காத்துக்கொள்வோம்.

என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும் (சங்.119: 36). இன்றைய உலகில் பொருளாசையானது எவ்வளவாக மக்களின் இருதயத்தில் நிறைந்திருப்பதை என்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பொருளாசை ஒரு மனிதனை எந்த தவறையும் செய்யத் தூண்டும். இன்றைய நாட்களில் நாம் அசைப்படும் எந்தப் பொருளையும் வாங்குவதற்கு காத்திருக்கத் தேவையில்லை. இருந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும். கையிலே பண மில்லாவிட்டாலும் உடனே கடன்பெற்று அதை வாங்குவதற்கான வசதிவாய்ப்புகளும் இன்று பெருகிவிட்டன. ஒருவனிடத்திலிருக்கும் பொருளாசை அவன் அதை அடைவதற்கு எந்த தவறான வழியிலும் அவனை இட்டுச் செல்லும். பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும் என்று நீதிமொழிகள் 1:19 கூறுகிறது.

இந்த தவறைத்தான் எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனாகிய கேயாசி செய்வதைப் பார்க்கிறோம். நாகமானிடமிருந்து எலிசா தீர்க்கதரிசி வாங்க மறுத்ததை கேயாசி ஓடோடிச்சென்று பெற்றுக்கொள்கிறான். அவனது இருதயத்திலிருந்த பொருளாசையே இந்தப் பொல்லாப்பை செய்ய வைத்தது. இதினால் அவன் தனது ஸ்தானத்தை இழந்து குஷ்டரோகியாக மாறுகிறான்.

தேவபிள்ளையே, நம் தேவன் நமது தேவைகள் இன்னதென்று அறிந்திருக்கிறார். அவைகள் அனைத்தையும் அவர் அற்புதமாக சந்திக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளை பரிபூரணமான ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிக்கிறார். ஆனால், பொருளாசை நிறைந்த நமது இருதயத்தை தேவன் வெறுக்கிறார். பொருளாசைக்காரன் தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை என்று வேதம் நம்மை எச்சரிக்கிறதைப் பார்க்கிறோம். மேலும் பொருளாசையில் பழகின இருதயத்தையுடையவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என பேதுரு கடிந்துகொள்கிறார் (2 பேதுரு 2:14).

இதிலிருந்து நாம் விடுபடுவதற்கான வழி என்னவென்றால் போதுமென்கிற மனதை நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுகொள்வதுதான். பரி. பவுல் இதை 1 தீமோத்தேயு 6:6-10இல் நமக்கு இவ்வாறு விளக்குகிறார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். …பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்”. எனவே பொருளாசை நம் இருதயத்தை ஆண்டுகொள்ளாதபடிக்கு நம் இருதயத்தைக் காத்துக்கொள்வோம்.

நம்முடைய இருதயத்தை காத்துக்கொள்வதற்கான மேலும் பல வழிகளை வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம். அவைகளை நாம் கற்றுக்கொள்வதற்கு தேவன் நம்மை வழிநடத்துவாராக!