• Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர் – அக்டோபர் 2023)

2. தேவன் ஏன் எதிர்காலத்தை வெளிப்படுத்தினார்?

Dr.உட்ரோ குரோல்

நிகழ்கால வாழ்வே நமக்கு நிலையற்றதாகவும் கடினமாகவும் இருக்கிறதல்லவா? இப்படியிருக்க, ஏன் எதிர்காலத்தைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்? ஆனால், எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள அநேகருக்கு ஆர்வமும் அதைத் தெரிவிக்க ஏராளமான வழிகளும் இடங்களும் உள்ளன. எதிர்காலத்தைப் பற்றிக்கூறும் சில பத்திரிகைகள் சிறந்த இடம் என நான் கூறமாட்டேன். அவை எதிர்காலத்தில் நிகழப்போவதை நமக்கு முழுமையாக உணர்த்தாது. ஆனால், இவைகள் யாவற்றுக்கும் உறுதியான பதிலை பரிசுத்த வேதாகமத்தில் தேடுவதே உகந்தது.

மற்ற மதப்புத்தகங்களிலிருந்து நமது பரிசுத்த வேதாகமம் வேறுபடுகிறது; ஏனெனில் மற்ற புத்தகங்கள் நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் விவரிக்கும்; ஆனால், எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் கூறாது. ஆனால். நமது பரிசுத்த வேதாகமம் அப்படியல்ல; அது எதிர்காலத்தைப் பற்றி அமைதியாயிருக்கவில்லை.

வெளிப்படுத்தல் 1:18-19 வசனங்களைக் காண்போம். அவை இயேசுகிறிஸ்து அருளின வார்த்தைகள்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது” என்றார்.

அநேக ஆன்மீக நூல்கள் கடந்தகாலத்தையோ அல்லது நிகழ்காலத்தையோ பற்றி அறிவிக்கின்றன. ஒருசில நூல்கள்மட்டுமே எதிர்காலத்தைப் பற்றி ஆராய்கின்றன. ஆனால், வேதாகமத்தை நீங்கள் ஆராயும் பொழுது மூன்று காலங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

வெளிப்படுத்தல் புத்தகத்தை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்வீர்களானால், அது ஒன்றிணைந்த நோக்கோடு தீர்க்கதரிசன கருத்தை நமக்கு அளிக்கிறது. உதாரணமாக, கடந்த காலத்தைப்பற்றி தானியேல் புத்தகத்தில் அறிந்துகொள்ளலாம். அது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில காரியங்களையும் முன்னறிவித்துள்ளது. ஆனால், அவைகளை நீங்கள் வெளிப்படுத்தின புத்தகத்தை வாசித்தால்மட்டுமே முழுவதையும் அறிந்துகொள்ள முடியும். கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களையும் இணைக்கும் வேறு புத்தகம் உண்டா என நான் அறியேன். கடந்தகாலத்தை தானியேலும், எதிர்காலத்தை வெளிப்படுத்தலும் ஒன்றிணைக்கின்றன. பரி.வேதாகமம் மட்டுமே இதனை நமக்கு அறிவித்துள்ளது. நாம் தீர்க்கதரிசனங்களைத் தெரிந்துகொள்வதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் உண்டு.

1. வேதாகமமே தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தும் ஓர் அதிகாரபூர்வமான புத்தகமாகும்.

தான் கூறுவது என்னவென்று இப்புத்தகம் தெளிவாகவும் நன்றாகவும் அறியும். தீர்க்கதரிசனத்தை கடந்தகாலத்தின் நிறைவேறுதலாகவும். வரலாற்றின் எதிர்காலத்தைப்பற்றிய பயமுறுத்தல் இல்லாமலும் அறிவிக்கிறது. அதுமட்டுமல்ல; மனுக்குலத்தின் அறிவுக்கு தேவனுடைய தொடர்ச்சியான முழுமையான வெளிப்படுத்தலை வேதாகமத்தில் மாத்திரமே நாம் காணமுடியும். வேதாகமத்தின் கடைசி புத்தகத்திலிருந்து சில வசனங்களை நாம் வாசிக்கலாம். இவையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அருளின வார்த்தைகளாகும்.

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக் காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடி வெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக் கடவன்” (வெளி. 22:12-17).

இவை நற்செய்தி நூலில் யோவான் எழுதினதையோ அல்லது பழைய ஏற்பாட்டில் ஏசாயா புத்தகத்தின் பகுதியையோ வாசிப்பது போன்று இருக்கிறதல்லவா? வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களும் ஒரே கருத்தினை உரைக்கின்றன. சில கருத்துக்களை புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் அவர்களது காலத்தில் இருந்த கருத்துக்களை எழுதியுள்ளனர். அதுவே யோவானின் நற்செய்தி நூல். சில காரியங்கள் கடந்தகாலத்தைச் சார்ந்தவையாகும். அதில் ஒன்று, பழைய ஏற்பாட்டின் ஏசாயாவின் புத்தகமாகும். சில கருத்துக்கள் எதிர் காலத்துக்குரியவை; அது வெளிப்படுத்தல் புத்தகமாகும். எனவே கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் வேதாகமம் தெளிவாகக் கணித்து அழகாக கூறுகிறது.

ஒரு தீர்க்கதரிசனம் அது நிறைவேறுதலைப் பொறுத்தது. நான் கூறும் ஒரு கணிப்பு நிறை வேறாவிட்டால் அது எப்படி சிறந்ததாகும்? வேதாகமம் கூறியுள்ள காரியங்களில் சில ஏற்கனவே நிறைவேறிவிட்டன அல்லது வரப்போகும் ஒரு நாளில் உண்மையாகும் என்று நீங்கள் புரிந்திருப்பது மிக முக்கியம்.

தீர்க்கதரிசனங்களை அறிவிப்பதில் வேதாகமமே அதிகாரப்பூர்வமுடையது என்பதை நாம் கற்றுக்கொள்வோம்.

ஜார்ஜ் ஸ்வீட்டிங் என்ற என் நண்பர் வேதாகமத்தில் எத்தனை தீர்க்கதரிசனங்கள் உண்டென கணக்கெடுத்து எழுதியுள்ளார். “பழைய ஏற்பாட்டில் 1800 குறிப்புகளுக்கு மேல் உள்ளன. 17 பழைய ஏற்பாட்டு நூல்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பழைய ஏற்பாட்டில் 1800 வசன குறிப்புகள் இயேசுகிறிஸ்துவின் வருகையைத் தந்துள்ளன.

“புதிய ஏற்பாட்டில் 260 அதிகாரங்களும் 300க்கும் மேலான குறிப்புகளும் ஆண்டவரின் வருகையைப் பற்றியதாகும். அதாவது 30 வசனங்களுக்கு ஒன்று. புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் 23 புத்தகங்கள் இப்பெரிய நிகழ்வை அறிவிக்கின்றன. பெத்லெகேமில் இயேசு பிறந்த முதல் வருகையைப்பற்றிய தீர்க்கதரிசனம் ஒவ்வொன்றுக்கும் அவருடைய இரண்டாம் வருகையைப் பற்றி 8 வசனங்கள் உண்டு”.

வேதாகமம் எழுதப்பட்டபொழுது அதில் கால் பகுதி முன் கணிப்பாகவே இருந்தது. தற்பொழுது அவற்றில் சில நிறைவேறிவிட்டன. நம்முடைய வேதபாடத்தில் அவ்வாறு நிறைவேறின தீர்க்க தரிசனங்களையும் இனி எதிர்காலத்தில் நிறை வேற இருப்பதையும் நாம் ஆராய்வோம்.

2. தேவனுடைய வல்லமையையும் அவருடைய ஞானத்தையும் வெளிப்படுத்துகிறது.

பழைய ஏற்பாட்டு நூலில் இராஜாக்களின் இரண்டாம் புத்தகத்தில் யூதாவின் அரசரான ஆகாஸைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இவரைப்பற்றி 2 நாளாகமம் 28லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகாஸ் அரசர் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். யூதா நாட்டை எதிரிகள் முற்றுக்கை போட்டிருந்தனர். சீரியாவின் அரசரும் இஸ்ரவேலின் அரசரும் யூதா நாட்டுக்கு விரோதமாக படையெடுத்து வந்தனர்.

இது ஒரு வரலாற்றின் நிகழ்வை விளக்குகிறது. உண்மையில் இது நடந்த ஒரு நிகழ்ச்சியாகும்; இது வேதாகமத்தில் மாத்திரமல்ல; வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை 2 இராஜாக்கள் 16 மற்றும் 2 நாளாகமம் 28 இலும் காணலாம். இந்த நிகழ்வு வேதாகமத்தில் மூன்று முறை எழுதப்பட்டுள்ளது. அதனை ஏசாயா 7ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம்.

ஏசாயா ஒரு தீர்க்கதரிசி. ஆகாஸ் அரசருக்கு நேரிடுவதை முன்னறிவிக்க வந்த அவர் எதிர்கால வரலாற்றின் காரியங்களையும் அறிவித்தார். அது முற்றுமாக நிறைவேறியது. இது மிக ஆச்சரியம் அல்லவா! ஏசாயா 7ஆம் அதிகாரத்தில், “பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: இவ்விரண்டு அரசர்களும் என் மக்களாகிய யூதாவை அழிக்காமல் இருப்பதற்கு கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்” என்றார். ஆனால் ஆகாசோ, “நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான். மேலும் “கர்த்தர் ஆகாசை நோக்கி: நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.” ஆனால் ஆகாசோ, “நான் கேட்க மாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான்.

கர்த்தரே அடையாளத்தைக் கேட்கக்கூறினார். “அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?”

“ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசாயா 7:13-14).

ஏசாயா தீர்க்கர் கூறிய முன்னறிவிப்பு இயேசு கிறிஸ்து பிறந்தபொழுது நிறைவேறியது. எனவே பழைய ஏற்பாட்டின் சில தீர்க்கதரிசனங்கள் தேவனுடைய வல்லமையையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. அத்தீர்க்கதரிசனம் நிறைவேறியபொழுது நாம் பின்னோக்கிப் பார்த்து பிரமிப்படைகிறோம். சில நிறைவேறாதபொழுது நாம் நம்பவில்லை என்பதல்ல, அது நிறைவேற தேவனுக்கு சிலகாலம் கொடுக்கவேண்டும்.

3. தேவனுடைய திட்டத்தையும், அவருடைய ஞானத்தையும் வெளிப்படுத்துகிறது.

அதனை அறிந்துகொள்ள வேதாகமத்தின் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்தால் போதாது. முழு வேதாகமத்தையும் நீங்கள் படிக்கவேண்டும்.

அநேக மக்கள் எந்த ஒரு நோக்கமும், கொள்கையுமின்றி மனம்போன வாழ்வை வாழ்கின்றனர். ஆனால் வேதாகமம் மாத்திரமே வாழ்வின் சரியான நோக்கத்தையும், வாழ்வின் வழியையும் காட்டுகிறது.

நிகழும் காரியங்களையும், சிருஷ்டிகர் நம்மை படைத்ததன் நோக்கத்தையும், தவறாகத் தோன்றும் காரியங்களைத் திருத்துவதற்கு அவர் செய்யும் திட்டங்கள் யாவற்றையும் தீர்க்கதரிசனங்களை நாம் வாசிக்கும்பொழுது அறிந்துகொள்ள முடியும்.

இதுவரை வேதாகமத்தை முழுமையாக நீங்கள் வாசித்திராவிட்டால், இனியாவது வாசியுங்கள். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை வாசிக்க 72 மணி நேரம் மாத்திரமே ஆகும். அதனைச் செய்ய உங்களுக்கு விருப்பமா?

தேவனுடைய திட்டத்தையும் காலங்களையும் அதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். நமக்காக அவர் வைத்திருக்கும் வாக்குறுதியை வாசித்து மகிழலாம். வேதத்தை வாசிக்கும்பொழுது அதைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையைக் கேளுங்கள்.

ஒரு சிலர் தீர்க்கதரிசனங்களை வாசிக்காமல் ஒதுக்கிவிடுகின்றனர். அவை பிளவுபடுத்தும் என நினைக்கின்றனர். சில சபைகளுமே தீர்க்கதரிசனங்களின் கருத்துக்களில் பிரிந்துள்ளனர். அவ்வாறு நிகழக்கூடாது. ஆனால், சில நேரங்களில் அது நடந்துவிடுகிறது.

4. தேவனுடைய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

உலக வரலாற்றின் ஒவ்வொரு காரியத்தை நடப்பிப்பதிலும் அவருக்கு உன்னதமான நோக்கமுண்டு. கடந்தகாலத்தில் மாத்திரமல்ல; எதிர்காலத்திற்கும் அவருடைய நோக்கம் உண்டு.

ஆதியாகமத்தில் தேவன் தம்முடைய நோக்கத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார். சோதோம் கொமோரா பட்டணங்களின் கொடிய பாவத்துக்காக அவைகளை அழிக்க எண்ணினார். அந்த பாவங்களுக்கான நியாயத்தீர்ப்பு அது. ஆகவே அந்த நோக்கத்தை ஆபிரகாமுக்கு அவர் வெளிப்படுத்தினார்.

நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? (ஆதி.18:17). தேவன் தான் செய்யப்போகும் யாவற்றையும் அவர் எனக்கு வெளிப்படுத்தவில்லை. தன்னுடைய திட்டங்கள் யாவற்றையும் அவர் வேதாகமத்தில் எழுதித்தரவுமில்லை. ஆனால், “சோதோம் கொமோரா பட்டணங்களுக்குச் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? இல்லை. நான் அவனுக்கு வெளிப்படுத்துவேன்; அதற்கு எவ்வாறு செயல்படுவது என்பதும் அவருக்குத் தெரியும்” என்பது ஆச்சரியமே!

அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார் (ஆதி.18:17-19).

தேவன் சோதோம் கொமோரா பட்டணத்தை அழிக்கப்போவதை ஆபிரகாமுக்கு ஏன் வெளிப்படுத்தினார்? ஆபிரகாம் அங்கு வசிக்காததால் அது அவரை பாதிக்காது. ஆனால், ஆபிரகாமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து அங்கே வாழ்ந்து வந்தார். எனவேதான் தேவன், “நான் ஆபிரகாமை நம்பி, நான் செய்யவிருப்பதை அவனுக்கு வெளிப்படுத்துவேன். அது அவனும் அவனுடைய சந்ததியும் என்னுடைய திட்டத்தை அறிந்து, என்னைப் பிரியப்படுத்தும் காரியங்களையும் நான் வெறுக்கும் காரியங்களையும் அறிந்துகொள்ள உதவும்” என்றார்.

ஆபிரகாமின் காலத்தில் தேவனுடைய திட்டத்தை நாம் அறிந்தால் இந்த 21ம் நூற்றாண்டிலும் அவரது நியாயத்தீர்ப்பைப் பற்றி நாம் அதிகமாய் கற்றுக்கொள்ளலாம். தீர்க்கதரிசனங்கள் தேவனுடைய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. தேவன் தம்முடைய நோக்கத்தை மாற்றுபவரல்லர்.

தேவன் தம்முடைய திட்டத்தை நம்முடைய வாழ்வில் நிறைவேற்றும் முறையை மாற்றலாம். ஆனால் அவருடைய திட்டம் உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது. அது என்றும் மாறாதது.

5. தேவனுடைய மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவருகின்றன.

எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி அநேக பைத்தியக்காரத்தனமான புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். அவை யாவும் அனுமானங்களே. அவை மக்களை சில வேளைகளில் மரணபயத்துக்கு நேராக வழி நடத்துகிறது. வெளிப்படுத்தல் புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்பொழுதும் அநேக காரியங்கள் உங்களை பயமுறுத்தலாம். ஆனால் தேவனுடைய பிள்ளைகள் அவைகளால் அச்சமடையக் கூடாது.

“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்.

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:1-3).

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை