• Dr.தியோடர் எச்.எஃப். •
(செப்டம்பர் – அக்டோபர் 2023)

6. திருச்சபையின் காலம் அல்லது கிருபையின் காலம் – பகுதி 1

திருச்சபைக்கான இரகசிய வருகை:

Dr.தியோடர் எச்.எஃப்.

i. இரகசிய வருகையின் (Rapture) அர்த்தம் மிகவும் முக்கியமானது.

a) Rapture என்ற இரகசிய வருகையில் விசுவாசிகள், திடீரென்று எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அதுதான் கிறிஸ்து ஆகாயத்தில் வரும்பொழுது இருக்கக்கூடிய திருச்சபையாகும் (1தெச.4:16,17; 1கொரி.15:51,52).

b) இரகசிய வருகை இரு வகைப்படும் (1தெச. 4:13-18).

i. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், ii. விசுவாசிகளின் மறுரூபமாகுதல்.

2. அவருடைய இரகசிய வருகை உலகிற்கு ஆச்சரியமாக இருக்கும்.

தேவனுடைய பிள்ளைகள் இருளின் பிள்ளைகள் அல்ல. ஆகவே அவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்காது (மத்.24:42-45; 1 தெச. 5:1-6).

3. இரகசிய வருகை மரித்திருந்தாலும், உயிரோடு இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, உயிர்த்தெழுதல் இரட்சிக்கப் படாதவர்களுக்குரியது. இது கிறிஸ்து வந்து ஆயிரம் வருஷ அரசாட்சி செய்த பின்தான் நடைபெறும் (வெளி. 20:5,6).

4. இரகசிய வருகை என்பது இரண்டாம் வருகையின் ஒரு கட்டமாகும்.

அ) சபை யுகத்தின் இறுதியில் அல்லது உபத்திரவ காலத்திற்கு சற்று முன்பு, கிறிஸ்து, அவருடையவர்களை எடுத்துக்கொள்ளும்படி மேகங்கள்மீது தோன்றுவார் (1தெச.4:13-18).

ஆ) உபத்திரவகாலத்திற்கு பின்பு பூமியிலே அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க அவருடைய பரிசுத்தவான்களோடுங்கூட கிறிஸ்து பூமிக்கு திரும்ப வருவார்.

5. இரகசிய வருகை உபத்திரவ காலத்திற்கு முன்பு நிகழும்.

அ) உபத்திரவத்திற்காக காத்திருக்காமல் கர்த்தரின் வருகைக்குக் காத்திருக்கச் சொல்லும் ஒவ்வொரு கட்டளையும் அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஆ) உபத்திரவம் என்பது சபையின் கரிசனை அல்ல. அது “யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்” என அழைக்கப்படுகிறது (எரேமி.30:7).

இ) சபை இரட்சிப்புக்காகவேயன்றி தேவகோபத்திற்காக நியமிக்கப்படவில்லை (1தெச. 5:9).

ஈ) வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில், அதிகாரம் 1 முதல் 3 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள சபை அதிகாரம் 19 வரை மீண்டும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் வாசிக்கும்போது அறியலாம். உபத்திரவகாலத்தில் அது பூமியில் இருக்காது.

உ) உபத்திரவம் என்பது இஸ்ரவேல் மற்றும் உலகத்தின்மீது வரவிருப்பதால், சபைக்கு நியாயத் தீர்ப்பில் எந்த பங்குமில்லை. ஏனென்றால் சபை இந்த பூமியைச் சார்ந்ததல்ல.

ஊ) கிறிஸ்து சபையோடு அல்லது சபைக்காக (பரிசுத்தவான்கள்) வருகிறார் என வேதத்தின் பல பகுதிகளில் நாம் காணலாம். அவருடைய பரிசுத்தவான்களுக்காக அவர் வரும்வரை, பரிசுத்தவான்களோடு அவர் வரஇயலாது. அவருடைய இராஜ்யத்தை அவர் நிறுவ வரும்போது, சபை முதலாவது எடுத்துக்கொள்ளப்பட்டு பின்பு அவரோடு திரும்ப வரும் என்பதை இது குறிக்கிறது (சகரி.14:5; கொலோ.3:4; 1தெச.4:14; யூதா 1:14).

எ) உபத்திரவத்திற்கு முன்பதாக இரகசிய வருகை நிகழும் என்ற உண்மைக்கு ஆதாரமாக மாதிரிகளும் சாட்சி பகர்கின்றன.

1) எகிப்து மற்றும் இஸ்ரவேல் மீது ஏழு ஆண்டுகள் உபத்திரவம் வருவதற்கு முன்பதாக, கிறிஸ்து வின் மாதிரியாக இருக்கிற யோசேப்பு புறஜாதி மணவாட்டியினைப் பெற்றான்.

2) எகிப்தில் உபத்திரவம் வருவதற்கு முன்பாக கிறிஸ்துவின் மாதிரியாக இருந்த மோசேயும் புற ஜாதி மணவாட்டியினைப் பெற்றான்.

3) சபைக்கு மாதிரியாக இருக்கிற ஏனோக்கு, ஜலப்பிரளய நியாயத்தீர்ப்புக்கு முன்பதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டான்.

ஏ) தேவனுடைய பரிசுத்தவான்கள் ஏற்கனவே மரணத்திலிருந்து கடந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருப்பதால், கிறிஸ்துவின் நியாயாசனத்தில் பரீட்சிக்கப்பட்டு, சிட்சிக்கப்பட்ட பின்பு, வேறொரு நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு கிடையாது. வரப்போகும் கோபத்திலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் (ரோமர்1:18; 5:9; 1தெச.1:10).

ஐ) சபையின் மூலமாக தேவஆவியானவர், அக்கிரமக்காரன் வெளிப்படும் முன்பு, அகற்றப்பட பிசாசு முழு வல்லமை பெறாதபடி தடைபண்ணுவார் (2 தெச.2:7,8). இது பரிசுத்தாவியானவர் ஒட்டு மொத்தமாக உலகத்தினின்று அகற்றப்படுவார் என்பது பொருளல்ல. தடுக்கும் சக்தியாக இருப்பதிலிருந்து அவர் எடுத்துக்கொள்ளப்படுவார். ஆனால், ஆத்துமாக்கள் இரட்சிப்பில் செயலாற்றுவார்.

ஒ) அந்த நாளுக்கு தப்பும்படி, ஜெபம்பண்ணி விழித்திருக்குமாறு நமக்கு சொல்லப்படுகிறது (லூக்கா 21:34-36). தேவன் அவர் நமக்கு கொடுக்க விரும்பாத ஒன்றிற்காக ஜெபிக்குமாறு நம்மை கேட்கவில்லை.

ஓ) தேவன் நம்மை விடுவிப்பார் என்று அது உணர்த்துகிறது (2 பேதுரு 2:9).

ஒள) நாம் இருளின் பிள்ளைகளாக இராமல், ஒளியின் பிள்ளைகளாக இருக்கிறோம் என்று சொல்லப்பட்டுள்ளது. இருள் என்பது உபத்திரவ காலத்தின் “இரவு”க்கு ஒரு மாதிரியாக உள்ளது. கிருபையின் காலத்தில் நாம் “இரவுக்குரியவர் களாக இல்லாதிருந்தால்” உபத்திரவகாலத்தில் நாம் வாழமுடியாது (1தெச.5:1-5).

ஃ) உபத்திரவத்திலிருந்து சபையினை காப்பாற்று வதற்கு கர்த்தர் உறுதியாக தம்மை அர்ப்பணித் துள்ளார் (வெளி.3:10).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் சபை எடுத்துக்கொள்ளப்படுதலில் (இரகசிய வருகை) நம்பிக்கையுள்ள யாராக இருந்தாலும் தன்னைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு அவரது வருகைக்கு ஆயத்தப்படவேண்டும் (1யோவான். 3:2,3).

உபத்திரவம்

“உபத்திரவம்” என்ற வார்த்தை சபை யுகத்திற்கும் இராஜ்யத்தின் யுகத்திற்கும் இடைப்பட்ட ஏழு ஆண்டுகள் காலத்தைக் குறிப்பதற்கு பயன் படுத்தப்படுகிறது. இந்தக் காலம் இஸ்ரவேல் சுத்திகரிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்ட காலமாகும். தேவன் மீண்டும் ஒருமுறை இஸ்ரவேல் மக்களோடு, ஒரு தேசமாக இடைபடுவார். புறஜாதி மக்களின் தேசங்கள் இந்த நியாயத்தீர்ப்பினால் நேரடியாக பாதிக்கப்படும். ஆயினும் இக்காலத்தில் சபை சென்றிருக்கும். அது கிறிஸ்துவோடு இருக்கும்.

உபத்திரவத்தின் உண்மை:

வேதத்தின் பலபகுதிகளில் இந்த பொருள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது (எரே.30:4-7; எசே.20:34 -38; 22:19-22; தானி.12:1; சகரியா 13:9; மல்கியா 3:1-3). இந்த உபத்திரவத்தைப்பற்றி, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துதாமே தெளிவான விளக்கம் தந்துள்ளார் (மத்.24:19-22). இந்த காலத்தில் என்ன நிகழும் என்று விரிவான குறிப்பு வெளிப்படுத்தல் 6-19 அதிகாரங்களில் நாம் காண்கிறோம்.

இந்த உபத்திரவ காலம் இரண்டு பகுதிகளாக தெளிவாய் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் கவனிப்பது நலமாகும். மொத்தத்தில் இது, “உபத்திரவ காலம்” என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் கடைசிப் பாதிபகுதி கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது:

  • மிகுந்த உபத்திரவகாலம்
  • யாக்கோபின் இடுக்கத்தின் காலம்
  • கோலின் கீழ் கடந்து செல்லுதல்
  • வெள்ளியை உருக்கும் குகை (Furnace)
  • அவரின் ஜனத்தின் உபத்திரகாலம் மற்றும்
  • கர்த்தரின் பெரிதும் பயங்கரமுமான நாள்

இதுதவிர மற்ற அநேக வேதபகுதிகள் இக் காலத்தின் உண்மையினைக் காட்டுகிறது.

உபத்திரவத்தின் நேரமும் காலமும்:

தானியேல் 9:20-27இல் தேவன், அவருடைய மக்கள் இஸ்ரவேலுடன், எழுபது வாரக்காலம் அல்லது ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுடைய 70 காலங்கள் இடைப்படுவதைக் குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த எழுபது வார காலம் என்பது எருசலேம் மீண்டும் கட்டப்படவேண்டும் என்ற கட்டளையின் தொடக்கமாயிருக்கும், “மீளக் கட்டப்பட வேண்டும் என்ற கட்டளை புறப்பட்டது” முதல் “மேசியா வருகை” வரை என்ற மொத்த காலம் என்பது கிறிஸ்துவின் வெற்றி பிரவேசங்களை 69 வார ஆண்டுகள் அல்லது 483 ஆண்டுகளை அர்த்தப்படுத்துகிறது. இஸ்ரவேல் மேசியாவை புறக்கணித்தது. இஸ்ரவேலுக்கான தேவனின் “கடிகாரம்” தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது. அதின் பிறகு தேவனின் கவனமெல்லாம் கிறிஸ்துவின் சரீரமாகிய அவருடைய சபையின் பக்கம் திரும்பியது. சபை எடுத்துக்கொள்ளப்பட்டு சபையின் காலம் முடிவில் “உபத்திரவம்” என அழைக்கப்படும் எழுவதாவது வாரம் தேவன் மீண்டும் இஸ்ரவேலரோடு இடைபடுவார் (ரோமர் 11:25; 2தெச.2: 7,8). இந்த கடைசி 7 ஆண்டு காலம் பூமியில் மிகப் பெரிய சோதனை மற்றும் உபத்திரவத்தின் நாட்களாக இருக்கும். அந்திக்கிறிஸ்து ஆட்சியில் அப்போது இருப்பான் (2 தெச. 2). தமது ஜனமாகிய இஸ்ரவேலைப் பரிசுத்தப்படுவதற்கான தேவனின் இறுதி முயற்சியாகும்.

உபத்திரவத்தின் தன்மை:

உபத்திரவ காலத்தின் தன்மை பற்றிய பொதுவான சுருக்கு வருணனை மத்தேயு 24:9-22லும், ஏழு ஆண்டுகள் நிகழ்வுகள் பற்றிய விரிவான குறிப்புகள் வெளிப்படுத்தல் 6-19லும் தரப்பட்டுள்ளது. இந்த காலம் ஒவ்வொன்றும் மூன்றரை ஆண்டுகளாக இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கடைசி அரைப்பகுதி மிகக் கொடுமையானதும் “மகா உபத்திரவகாலம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏழு ஆண்டு காலத்தில் தேவன் மனிதர்களை மூன்று வித்தியாசமான முறைகளில் சோதிக்கிறார் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். மனிதன் தான் கண்டுபிடித்துள்ள விஞ்ஞான கருவிகள்மூலம் அவனையே நியாயந்தீர்க்குமாறு தேவன் அனுமதிக்கிறார். யுத்தங்களின் பயங்கரங்களே உபத்திரவகாலத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

அதன்பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, சாத்தானை தேவன் கட்டவழித்து, சாத்தானின் உபாயங்களால் தேவன் மனிதனை சோதிக்கிறார். இறுதியில் தேவனே தமது கோபாக்கினியினை மனிதர்மேல் ஊற்றுகிறார். மனிதர்மேல் தேவன் கொணரும் மூன்று வகையான சோதனைகளும், மூன்று பிரிவு ஏழு சோதனைகளில் ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், இறுதியில் தேவகோபாக்கினையின் ஏழு கலசங்கள்மூலம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. வெளிப்படுத்தின விசேஷபுத்தகத்தில், நமக்கு காண்பிக்கப்பட்டவாறு, ஏழு வருட உபத்திரவ காலத்தின் நிகழ்வுகள் கீழ்க்கண்டவாறு கோடிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

1. உபத்திரவத்தின் முதல் பாதிப்பகுதி:

உபத்திரவ காலத்திலும் தேவனுக்கு சாட்சி இல்லாமல் இல்லை. உபத்திரவகால தொடக்கத்தில் அவருக்குச் சிறந்த சாட்சிகளாக இருக்கும்படியாக இரண்டு மனிதர்களை அவர் அனுப்புவார் (வெளி. 11:1-14). ஆயினும் உபத்திரவ காலத்தின் பாதி இறுதியில் அந்த இரண்டு சாட்சிகளும் தங்களின் எதிரியினால் மரிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் (வெளி. 11:7). ஆனால், மூன்றரை நாட்களுக்குப் பின்பு தேவன் அவர்களை மீண்டும் உயிர்ப்பித்து, பரலோகத்தில் தன்னோடு இருக்குமாறு எடுத்துக்கொள்வார் (வெளி. 1:9-12). இந்த ஏழு ஆண்டு காலத்தின் முதல் பாதி பகுதியில் இரண்டு பெரிய சோதனைகள் இருக்கும். அவைகளைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 6:1 முதல் 11:11 வரையான வேதபகுதியில் எழுதப்பட்டுள்ளன.

(தொடரும்)

மொழியாக்கம்: Bro. A.Manuel