• சகோதரி சாந்தி பொன்னு •
(ஜனவரி – பிப்ரவரி 2024)
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக் கடவோம் (எபிரெயர் 12:28).
புதிய ஆண்டின் மகிழ்ச்சி மங்கிவிட்டது. வருடத்தின் ஆரம்பத்திலேயே, இந்த ஆண்டு மிகவும் கடினமாகவே இருக்கப்போகிறது என்ற மனநிலை ஏராளமானபேர் மனதில் தோன்றாமல் இல்லை. உண்மைதான்! நாட்டு நடப்புகள், இயற்கை அனர்த்தங்கள் அப்படிப்பட்ட ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால். தேவபிள்ளைகள், தேவனை சார்ந்திருக்கிற பிள்ளைகள் இந்தப் பயமுறுத்தல்களினால் கலங்கவேண்டியதில்லை. கர்த்தர் யாவையும் பார்த்துக்கொள்வார்; நாம் செய்ய வேண்டியதை உத்தமத்துடன் செய்வோமாக.
இது கடைசிக்காலத்தின் கடைசி நிமிடங்கள் என்ற வார்த்தைகள் சமய பேதமின்றி யாவரினதும் பேச்சாகவே இருக்கிறது. யாருக்கு, எதற்குக் கடைசிக்காலம்? ஆம்! இந்த உலக ராஜ்யத்தின் முடிவு சமீபித்துவிட்டதை மறுக்கமுடியாது. அதை உணர்ந்தும் நாம் உணர்வற்றிருப்பது எப்படி? ஓவ்வொரு தடவையும் பரமண்டல ஜெபத்தைக் கூறும்போது, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிக்கின்றோம்; அந்த ராஜ்யத்தைக் குறித்தும், அந்த ராஜ்யம் இந்த உலகில் கட்டப்படுவதைக் குறித்தும், நாம் அதன் பிரஜைகளாக வளரவேண்டும் என்பதைக் குறித்தும் நாம் எவ்வளவாக பாரப்படுகிறோம்?
பரலோகம் வேறு, பரலோக ராஜ்யம் வேறு. தேவன் வாழும் பரலோகத்தைக் குறித்து நாம் அறியமாட்டோம், ஏனெனில் அங்கே போன ஒரேயொருவர் இயேசு, அவர் இன்னமும் திரும்பி வரவில்லை. ஆனால், உலகில் வந்துதித்த இயேசுவானவர், தேவனுடைய ராஜ்யத்தின் எதிராளியான சாத்தானின் சோதனைகளை முறியடித்த பின்னர் செய்த முதல் பிரசங்கம்: “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்பதுவேயாகும்.
ஆம், ஆண்டவர் இயேசுவோடுகூட பரலோக ராஜ்யமும் பூமியில் வந்துவிட்டது. ஆக, ஒரு கேள்வி: உமது ராஜ்யம் வருவதாக என்று ஜெபிக்கிறோம்; இயேசுவோ சமீபித்துவிட்டது என்கிறார். அதேசமயம், தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்ட போது, “இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்று அவர் பதிலளித்தார்.
அப்போ பரலோக ராஜ்யம் வந்துவிட்டதா? அல் லது இனிமேல்தான் வர இருக்கிறதா? உண்மை என்னவெனில், அது வந்துவிட்டது, ஆனால், நாம் அதில் பிரவேசித்திருக்கிறோமா, அதன் பிரஜைகளாக ஜீவிக்கிறோமா என்பதே கேள்வி.
தேவனுடைய ராஜ்யம்
ஒரு ராஜ்யம் என்னும்போது அங்கே அரசாள ஒரு ராஜா, ராஜ்யத்தின் பிரஜைகள், மற்றும் முக்கியமாக அதற்கான சட்ட திட்டங்கள் இவை அனைத்தும் இருக்கும். ஆக, தேவனுடைய ராஜ்யம் என்பது தேவனால் ஆளப்படுகின்ற ராஜ்யம். அதன் பிரஜைகள் அவருடைய பிள்ளைகள், அவருடைய சட்டதிட்டங்கள் வேதவாக்கியங்கள். உலகில் ராஜ்யங்கள் மாறிமாறி வருகின்றன. எகிப்து, பாபிலோன் விழ பெர்சியா மேதியா எழும்ப, அப்படியே பின்னர் கிரேக்கம் ஆளுகை செய்ய, பின்னர் வரிசையாக ரோம ராஜ்யம் உலகை ஆள, அந்த சமயத்தில்தான் இயேசு வந்து பிறந்தார். இன்று அந்த ரோம ராஜ்யம் எங்கே? கிரேக்கம்தான் எங்கே? இங்கிலாந்து தேசம்தான் எங்கே? உலக ராஜ்யங்கள் யாவும் மாறிப்போகும்; ஆனால், மாறிப்போகாத அசைக்கப்படாத ஒரு ராஜ்யம் உண்டு. எபி.12:26-28ல் அசையாதவைகள் அசைவுள்ளவைகள் என்று இரு காரியங்களை எபிரெயர் ஆசிரியர் விளக்குகிறார். ஆகாய் 2:6,7 லும் இதை வாசிக்கலாம். ஆம், சகல ஆளுகைகளும் ராஜ்யங்களும் நிச்சயம் அசைக்கப்படுகின்ற ஒருநாள் உண்டு. ஆனால், அசைவில்லாத ராஜ்யம் ஒன்று உண்டு. அதுதான் தேவனுடைய ராஜ்யம்! “ஆதலால் அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்” (எபி.12:28).
இந்த அசைக்கப்படாத ராஜ்யத்திற்கு சாட்சிகளாக, தேவனால் ஆளப்படுகிறவர்களாக இஸ்ரவேலர் ஏற்படுத்தப்பட்டும், ஆபிரகாமின் உடன்படிக்கை இவர்கள் சந்ததியில் நிறைவேற்றப்பட்டும், இவர்களோ தங்கள் ராஜாவைப் பிரதிபலிப்பதில் தோற்றுவிட்டார்கள். இன்று இந்த ராஜ்யத்தின் ஆசீர்வாதத்தை, அதன் பிரதிபலிப்பை உலகிற்குள் கொண்டுவர, அந்த ராஜ்யத்தை உலகில் கட்டியெழுப்பவும் தேவன் நம்மையே தெரிந்தெடுத்திருக்கிறார்.
ஆக, ஒன்று, முதலில் நாம் தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக பிள்ளைகளாக ஆக வேண்டும்; அதாவது முதலில் நாம் அதில் பிரவேசிக்கவேண்டும்; இல்லையானால் அந்த ராஜ்யத்தை நம்மால் உலகில் கட்டியெழுப்பமுடியாது. அடுத்தது, அதன்படி வாழ்ந்து ராஜ்யத்தின் வெளிச்சத்தை இந்த இருண்ட பிரபஞ்சத்துள் வீசவேண்டும். இது இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பொறுப்பு. இந்த உணர்வு இல்லையேல், இதற்கு நம்மை அர்ப்பணிக்கவில்லையெனில் பரலோகம் போகவேண்டும் என்ற சிந்தனை எப்படி நிறைவேறும்?
இரண்டு படிகள்
தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டபோது, அவர் கொடுத்த பதிலில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று, அது பிரத்தியட்சமாக வராது என்பதாகும். முதலாவது அது ஆரவாரத்தோடும், அறிவித்தலோடும் வராது. ஆக, அது அமைதலாக அடுத்தவனால் புரிந்துகொள்ளமுடியாதபடி வருகிறது என்பதே அர்த்தமல்லவா!
இரண்டாவதாக, “இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்றார் இயேசு (லூக்.17:21). ஆக, தேவனுடைய ராஜ்யம் ஏற்கனவே வந்துவிட்டது என்பதை அறியாமலேயே பரிசேயர் இந்தக் கேள்வியைக் கேட்டனர். தேவனுடைய ராஜ்யம் புவியியல் எல்லைகளுக்குள் உட்பட்டதல்ல; மாறாக, இது மனிதனுடைய வாழ்விலும் உறவிலும் தேவனுடைய ஆவியானவரின் கிரியையிலிருந்து ஆரம்பிக்கிறது. நாமோ இன்றும் தேவனுடைய ராஜ்யத்திற்கான சாட்சிகளைத் தனிப்பட்டவர்களினதும் ஸ்தாபனங்களினதும் பணிகளில் காண முயலுகிறோம். இது தவறு. அது மனிதனுடைய இருதயத்தில் ஆரம்பிக்கிறது.
ஆகவேதான் இயேசுவானவர், “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” (மாற்.1:15) என்று ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.
தேவனுடைய ராஜ்யத்தின் முதற் பிரவேசம்
யூத அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் இயேசுவிடம் வந்து, இயேசுவிடம் தான் கண்டதைச் சொல்லி, “உம்முடனே தேவன் இருக்கிறார்” என்று அறிக்கையிட்டான். ஆனால் ஆண்டவரோ அவனுடைய உள்ளிந்திரியங்களை அறிந்தவராய், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவா. 3:3). ஆண்டவர் நிக்கொதேமுவின் உள்ளான இருதயத்தின் தேடுதலை அறிந்திருந்தார்.
ஆக, தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளையாக ஆகவேண்டுமென்றால், முதலாவது நாம் மறுபடியும் பிறக்கவேண்டும். அந்த அற்புத மீட்பைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியாது என்பதல்ல, அதைக் காணவே முடியாது. ஆக, ஒருவன் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியம்; இதுவே தேவராஜ்யம் ஒருவனுக்குள் வருகின்ற அமைதலான வருகை; அவனுடைய முதற் பிரவேசம். ஒருவனுடைய இரட்சிப்பு, மறுபிறப்பு என்பது அவன் இருதயம் சம்பந்தப்பட்ட விஷயம். அது பிறருக்குத் தெரியாது. அதாவது, அது நமது உள்ளான மனிதனுக்குள் ஆரம்பிக்கிறது. எப்பொழுது ஒருவன் பாவி என்று தன்னை உணர்ந்து, அறிக்கையிட்டு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தன் பாவத்திலிருந்து மீட்படைந்து, கிறிஸ்துவின் பிள்ளையாகிறானோ, அப்பொழுதே பரிசுத்த ஆவியானவின் ஆளுகை அவனுக்குள் வந்துவிடுகிறது என்பதே சத்தியம். இதனை அடுத்தவர் அறியமுடியாது, நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவின் ஆரம்பமே இது. என் முழுமையையும் தேவனின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுக்கும்போது தேவராஜ்யத்தின் பிரஜையாகிறேன்.
ஆனால் இது ஆரம்பம் மாத்திரமே; இந்த ஆரம்பித்திலிருந்து அவன் வளரவேண்டும். அவன் வளரவளர அவன் தான் பிரவேசித்திருக்கிற ராஜ்யத்தின் பிரஜையாக உலகிற்கு சாட்சியாக, உலகில் தேவராஜ்யத்தைக் கட்டியெழுப்புகிறவனாகவே வளருகிறான். இதைக் குறித்து வேதாகமத்திலே பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பரலோகராஜ்யம் ஆவியில் எளிமை உள்ளவர்களுடையது; பரலோகராஜ்யம் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுடையது என்று பல காரியங்களைப் பார்க்கிறோம். ஒரு சிலவற்றை இந்தக் கட்டுரையில் சிந்திப்போம்.
1. லூக்கா 18:15-17
குழந்தைகளைத் தொடும்படிக்கு அவர்களை இயேசுவினிடத்தில் மக்கள் கொண்டுவந்தனர். சீஷர்களோ கொண்டுவந்தவர்களை அதட்டியபோது இயேசு பேச ஆரம்பிக்கிறார். ஒன்று, தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்கிறார்; அடுத்தது, எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஒரு சிறு பிள்ளை சகலவற்றுக்கும் எப்படி தன் பெற்றோரையே சார்ந்திருக்கிறதோ, பெற்றோரில் தங்கியிருக்கிறதோ, தன் பெற்றோரின் அரவணைப்பையும் அதேசமயம் கண்டிப்பையும் ஏற்றுக்கொண்டு தன் பெற்றோரின் பிள்ளையாக தன்னை அர்ப்பணிக்கிறதோ, நாமும் அப்படியே முற்றிலுமாக தேவனைச் சார்ந்திருக்கவேண்டும். தேவனையே சார்ந்து, அவரிலே நிலைத்திருந்து, அவருடைய அன்பிலும் அரவணைப்பிலும் தன்னை முற்றிலும் ஊற்றிவிடுகிற ஒருவனே தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜையாக அதைச் சுதந்தரித்துக்கொள்கிறான்.
இப்படியிருக்க, கபடான திருக்கான இருதயத்துடன், சுயஇச்சைகளும் கொண்டு சுயத்திலே வாழுகிறவனால் எப்படி தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்து வாழமுடியும் என்பதை நாமே சிந்திப்போமாக.
2. மத்தேயு 7 : 21-27
இந்த வேதபகுதி நம் யாவருக்கும் ஒரு சவாலா கவும் எச்சரிக்கையாகவும் அமைந்திருப்பதை மறுக்கமுடியாது. “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்” என்பதிலிருந்து பிதாவின் சித்தம் செய்யாதவனுக்குப் பிரவேசம் இல்லை என்பது தெளிவு. நாம் கிறிஸ்தவர்களாய் இருப்பதால், பல பணிகளில் ஈடுபட்டிருப்பதால், பல அற்புத அடையாளங்களை நடப்பிப்பதால், வல்லமையான பிரசங்கங்களைச் செய்வதால் இன்னும் பல…… பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியாது. கடைசி நாளில் ஆண்டவர் இவர்களைப் பார்த்து, “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்கிறார்.
ஆக, பிதாவின் சித்தம் செய்வது என்பது என்ன? அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்வதே தேவசித்தம் செய்வதாகும். இவனை, கன்மலையில் தன் வீட்டைக் கட்டினவனுக்கு ஆண்டவர் ஒப்பிடுகிறார். அவன் உடைக்கப்பட்டு, நொருக்கப்பட்டு, ஆழத்திலே, தேவனுடைய வசனத்தின்மீது அஸ்திபாரமிட்டு தன் வாழ்வைக் கட்டி எழுப்புகிறான். அவனுக்கும் புயல் அடிக்கும், பெருங்காற்று மோதும். ஆனால் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்.
3.மத்தேயு 25 : 31-46
இப்பகுதியிலே மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவராகக் காண்கிறோம். அவரே மேய்ப்பராய் நின்று, ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதுபோல மக்களைப் பிரிக்கிறார். வலது பக்கத்தில் நிற்பவர்களை அவர் நோக்கி, “பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்கிறார். அதாவது, இவர்கள் தேவராஜ்யத்தில் பிரவேசிக்கிறவர்கள் ஆகும். ஆனால் இது எப்படியாகும்? ஆண்டவர் சொன்னவற்றைக் கேட்டு இவர்களே ஆச்சரியப்படுகிறார்கள். பசியுள்ளவராக, தாகமுள்ளவராக, வஸ்திரமில்லாதவராக, வியாதிப்பட்டவராக, காவலில் வைக்கப்பட்டவராக உம்மை நாங்கள் எங்கே கண்டோம் என்று அவர்கள் திகைக்கிறார்கள். அதற்கு ஆண்டவர், “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்கிறார். இடதுபக்கம் நின்றவர்களுக்கு என்னவானது என்பதை 41-45 வரை நாம் படிக்கலாம்.
இப்போது நாம் எப்பக்கம் நிற்போம் என்பதை நிதானிப்போம்.
போதனையின்படி வாழ்ந்து காட்டிய இயேசு
1.சிறுபிள்ளையைப் போல இயேசு.. ..
எப்பொழுதும் பிதாவின் முகப்பிரசன்னத்தில் வாழ்ந்திருந்த இயேசு சிலுவைக்குப் போகுமுன்னர் கெத்சமெனேயில் வியாகுலத்துடன் ஜெபித்தபோது அவர் தம் பிதாவிடம், அந்தப் பாத்திரத்தை நீக்கும் படிக்கே ஜெபித்தார். ஆனால் அடுத்த விநாடியே, பிதாவின் சித்தத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டார். உலகின் பாவம் தம்மில் சுமத்தப்படும் போது, நிச்சயம் பிதாவின் பிரசன்னம், அவரது முகம் தமக்கு மறைக்கப்படும் என்பதே இயேசுவானவரின் வேதனையாக இருந்தது. அப்படியே சிலுவையிலே தொங்கியபோது, முதலில் “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று ஜெபித்தபோது பிதாவின் சமுகத்தை உணர்ந்தவர், பின்னர் “என் தேவனே என் தேவனே” என்று கதறினாரே, “என்னைவிட்டு எங்கே போனீர், என்னை ஏன் கைவிட்டீர்” என்று இயேசு கதறிய அந்தக் கணம், ஒரு சிறு பிள்ளை தன் தகப்பனைக் காணாது கதறியதுபோல இருந்திருக்கும் அல்லவா. ஒரு கணமேனும் தம் பிதாவைவிட்டு விலகிட ஆண்டவர் இயேசு விரும்பவேயில்லை.
இன்று நாமோ, துணிகரமாக தேவனுக்குப் பிரியமற்ற காரியங்களைச் செய்கிறோம். ஒரு சிறு பொய் கூறும்போதுகூட தேவனுடைய பிரசன்னத்தைவிட்டு நாம் பிரிக்கப்படுகிறோம் என்பதை ஏனோ நாம் உணருவதேயில்லை.
2.செய்வதில் இயேசு
ஆம், தேவசித்தம் செய்வதையே இயேசு தம் வாழ்வில் ஒரே நோக்காகக் கொண்டிருந்ததை நாம் அறிகிறோம். சமாரியப் பெண்ணை இயேசு சந்தித்த சம்பவத்திலே, “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்றார் (யோவான் 4:34). மேலும், “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை” என்றார் (யோவான் 8: 29). இன்னும், “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” என்றும் சொல்லி (யோவான் 18:11) அப்படியே தேவனுடைய சித்தத்தை ஆண்டவர் நிறைவேற்றினார். அது, தமது ஒரேபேறான குமாரனில் பிதா கொண்டிருந்த அநாதி திட்டம். இன்று நம் ஒவ்வொருவர் பேரிலும் நமது பிதா ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். அவருடைய வேதவாக்கியம் நமக்கு அதை உணர்த்துகிறது. அந்த வாக்கியத்தில் நாம் நமது வாழ்வைக் கட்டியெழுப்பவேண்டும். இல்லையானால் தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகள் என்று நம்மைக் கூறுவது எப்படி?
3. சகலரையும் அரவணைத்த இயேசு
சமுகம் சிறியவர்கள் என்று தள்ளியவர்களையும், பாவிகளையும் ஆயக்காரரையும் நேசித்து, அவர்களையும் அரவணைத்த ஆண்டவருடைய அன்புக்கு முன் நம்மால் நிற்கத்தான் முடியுமா? யாரும் தொடக்கூட அருவருக்கின்ற குஷ்டரோகிகளையும், பிச்சை எடுத்த பார்வை இழந்தவர்களையும், விபசாரிகள் என்று தள்ளப்பட்டவர்களையும்கூட நேசித்த ஆண்டவர், தாம் எதைப் போதித்தாரோ அதையே வாழ்ந்தும் காட்டி நமக்கு மாதிரியை வைத்துப்போயுள்ளார்.
நாம் தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக ….
தேவனுடைய ராஜ்யத்திற்கு அடுத்த இன்னும் பல காரியங்களை வேதாகமம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தேவகிருபையால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல, தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக நாம் வாழ்ந்தும், அதில் நிலைத்தும் நிற்கவேண்டுமே! மொத்தத்தில் நாம் நமது இயேசுவைப்போல ஆக வேண்டும், மாறவேண்டும், நமது சுயம், பாவசுபாவம் நீங்கப்பெற்று ஆண்டவரைத் தரித்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்; இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம் (1யோவா.3:2).
இந்த ஆண்டிலும் நமது வாழ்நாட்கள் முழுவதிலும் நமது ஒரே இலக்கு இதுவாகவே இருக்கட்டும். இயேசுவை நமது வாழ்வில் தரித்துக்கொள்கிறவர்களாக, அவரைப்போல மாற, தேவராஜ்யத்தின் பிள்ளைகளாக அவருக்குள் வளர, தேவ நாமம் நம்மில் மகிமைப்பட தேவாவியானவர் தாமே நம்மை வழிநடத்துவாராக. ஆமென்.
நினைவுகூருங்கள்!
விசுவாசம் என்பது, தேவனுடைய குணாதிசயத்தில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையே!
நில்! உனக்குத் தருவதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது!!
பிரசித்திபெற்ற தேவஊழியர் ஜாண் வெஸ்லி அவர்கள் ஒருநாள் நடுஇரவைத் தாண்டி குதிரையில் சென்று கொண்டிருந்த போது ஒரு கடுமையான குரல் “நிறுத்து” என்று கூறுவதைக் கேட்டார். குதிரையை நிறுத்தியபோது ஒரு திருடன் கையிலிருக்கும் பணத்தை கேட்டான். பணத்தை கொடுக்காவிட்டால் உயிரை எடுப்பதாக கத்தியை காட்டி மிரட்டினான்.
வெஸ்லி தன் கையிலிருந்த சில காசுகளை அவனிடம் கொடுத்தார். அவன் அதிக பணத்தை வேறு எங்காவது ஒளித்து வைத்திருப்பாரென்று அந்த குதிரையில் தேடிய போது சில புத்தகங்களைமட்டும் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி ஓட ஆரம்பித்தான். வெஸ்லி அந்த திருடனை பார்த்து, “நில், உனக்கு தருவதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது” என்று கூறினார். வெஸ்லி கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவராக அவனிடம், “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உன்னை சுத்திகரிக்கும்” என்று கூறினார்.
சில வருடங்கள் கழித்து வெஸ்லி சாயங்கால ஆராதனைக் கூட்டத்தை முடித்து வெளிவரும்போது அநேகர் அவரை காணவேண்டும் என்று முந்தியடித்து கொண்டிருந்தவேளையில், அதில் ஒரு மனிதன் எப்படியாவது அவருடன் பேசவேண்டும் என்று காத்திருந்தான். தருணம் கிடைத்தபோது அவன், “அந்த திருடன் நான்தான்” என்றும் “இப்போது தான் ஒரு தொழிலதிபர்” என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக “தான் தேவனின் பிள்ளை” என்றும் கூறினான். பின்னும் அவன், “ஐயா நீங்கள் அன்று அந்த வார்த்தைகளை சொல்லாதிருந்தால் நான் இன்னும் திருடனாகவே இருந்திருப்பேன்” என்றும் கூறினான்.