• சகோ. காந்தன் •
(ஜனவரி – பிப்ரவரி 2024)
ஒரு உடைந்துபோன மனித வாழ்க்கையை தேவன் எப்படி உருவாக்குகிறார் என்பதைக் குறித்து இப்போது நாம் சிந்திப்போம்.
இன்றைய மனித வாழ்க்கை ஒரு அவசர அவசரமாக ஓடுகின்றது. பலருடைய வாழ்க்கை ஒரு குப்பைபோல எல்லாவற்றினாலும் நிறைந்து போயிருப்பதோடு. உடைந்துபோன ஒரு வாழ்க்கையாக, தோல்வியுற்ற நபராக காணப்படுவதை நாம் காணலாம். வேதாகமத்திலே, யோவான் 8ம் அதிகாரத்திலே இவ்விதமாக வாழ்ந்த ஒரு பெண் ணைக்குறித்து காண்கிறோம். அவள் ஒருநாள் விபசாரத்தில் கையும் மெய்யுமாக பிடிப்பட்டாள். அன்றைய யூத கலாச்சாரத்தில் ஒரு பெண் விபசாரத்தில் பிடிபட்டால், ஆண்கள் சிறுவர்கள் மதத் தலைவர்கள் என எல்லோருக்கும் மத்தியில் கொண்டுவரப்பட்டு முடிவில் கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என்பதே சட்டமாயிருந்தது.
அப்படிப்பட்ட நிலையில், இப்பெண் விபசாரம் செய்தாள் என்று எல்லாராலும் குற்றஞ்சாட்டப்பட்டு, அவளுக்கு ஒரு மிகக் கொடூரமான முடிவு தரப்பட வேண்டுமென்று பலர் சுற்றி வளைத்து நிற்கின்ற கூட்டத்தினர் அந்தப் பெண்ணை இயேசுவிடம் கொண்டு வருகின்றனர். சற்று சிந்தித்துப் பாருங்கள். அவளுக்கு எவ்வளவு வேதனைகள் இருந்திருக்கும்? எவ்வளவு அவமானங்கள் இருந்திருக்கும்? எவ்வளவு காயங்கள் அந்த பெண்ணுடைய வாழ்க்கையில் இருந்திருக்கும்?
அவளது வாழ்க்கை இப்போது ஒரு மரணத் தருவாயிலே வாழ்க்கை முடிவடையும் நிலையில் இருக்கின்றது, அவளை கர்த்தர் எப்படி பார்த்தார்? அந்தப் பெண்ணுக்கு ஒரு வாழ்வை எப்படிக் கொடுத்தார்? இன்று நீங்களும்கூட ஒருவேளை இதேவிதமாக நம்பிக்கை இழந்துபோய் இருக்கலாம். தோல்விகளோடு இருக்கலாம். அவமானங்களோடு இருக்கலாம். வாழ்வில் எல்லாராலும் ஏமாற்றப்பட்ட நிலையில் வாழலாம். இயேசு உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்ப விரும்புகின்றார் என்பதை மறந்துவிட வேண்டாம்.
என் சிறுவயதில் ஊரிலே நான் கண்ட ஒரு சம்பவம் என் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு தடவை, ஒரு அழகான பறவையைக் கண்டேன். அதன் கால் ஒரு கண்ணியிலே மாட்டிக்கொண்டிருந்தது. அது ஒரு குறிப்பிட்டளவு தூரத்திற்கு எழும்பினாலும், மறுபடியும் கீழே விழுந்தது. வலையில் அகப்பட்டிருந்த தன் காலை விடுவிக்க இயலாமல் பறவை துள்ளியது, தள்ளாடியது. அதன் மெல்லிய நூலானது காலில் இரத்தத்தை வரச்செய்தது. மேலே எழுந்த பறவை பறக்க இயலாமல் கீழே விழும்போது அதன் நெஞ்சு பகுதி அடிபட்டு வீங்க ஆரம்பித்தது. அதன் இரண்டு இறக்கைகளும் அடிபட்டு இரத்தம் வர துடித்துக் கொண்டிருந்தது. காலில் இரத்தம், நெஞ்சிலே நோவு. இறக்கைகள் உடைவு என பலவித வேதனையில் துடித்த அந்த பறவையைப் போன்று இன்று அநேக மனிதர்கள் இருப்பதை நீங்களும் காணலாம். ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் நான் வெளியிலே வந்துட்டேன் என்று, ஆனால், உங்களுக்குள்ளே காணப்படுகின்ற அந்த வேதனை, கடந்தகால அனுபவங்கள், மறக்க நினைக்கிற காரியங்கள். வாழ்வில் வேதனை தந்த சம்பவங்கள்; துக்கம் துயரமென ஒரு உடைந்த பாத்திரம் போல இன்று அநேகரது வாழ்க்கை காணப்படுகின்றது.
மற்றவர்களும்கூட, இவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என நினைக்கிறார்கள், தீமை செய்கிறார்கள். பாருங்கள்! இயேசு அந்தப் பெண்ணிடம் கூறுகிறார். “இங்கே உன்மேல் குற்றஞ்சாட்டின ஒருவராயினும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கவில்லையா” என்று. அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே! என்கிறாள். இயேசு அவளை நோக்கி: “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கவில்லை. நீ போ இனி பாவம் செய்யாதே” என்றார்.
விபசாரத்தில் கையும் களவுமாக அகப்பட்டது போல், மற்றவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டு, காயப்படுத்தப்பட்டு தனிமையிலே நீங்கள் அழுது கொண்டிருப்பீர்கள் என்றால் தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களை மன்னிக்கிற தெய்வம், உங்கள் காயங்களைக் கட்டுகின்ற தெய்வம். இஸ்ரேல் வீட்டாரை குயவன் செய்ததுபோல மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகின்ற தெய்வம், “கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரையே நம்பிக்கையாகக் கொண்டிருக்கும் மனுஷன் பாக்கியவான்” என்று திருவசனம் கூறுகின்றது.
திரும்ப உருவாக்க, மறுபடியும் கட்டியெழுப்ப விரும்புவது எத்தனை ஆச்சரியமான காரியம்! ஒரு மனிதன் தனிமையில் நடந்து செல்வதை கனவில் கண்டானாம். இரண்டு ஜோடி கால் பாதங்களை கண்ட அவன், “ஆண்டவரே, இது என்ன?” என கேட்டபோது, “அது சந்தோஷமாக மகிழ்ச்சியோடு நீ என்னுடன் நடந்துவந்த நமது கால் பாதங்கள்” என்று பதில் வந்ததாம். கொஞ்ச நேரம் சென்ற பின்பு, மீண்டும் ஒரு ஜோடி கால் பாதங்களைக்கண்ட போது, “ஆண்டவரே இது என்ன?” என்று கேட்டபோது, அது “நீ கடினமான துக்கம் நிறைந்த மிகவும் போராட்டமான காலங்களில் உன்னுடன் நடந்துவந்த கால் பாதங்கள்” என பதில் வந்ததாம். “ஐயோ ஆண்டவரே, எனது கால் பாதங்கள் மட்டும்தான் இங்கே இருக்கிறது. நீர் எங்கே போய்விட்டீர்?” என்று அவன் கேட்ட போது, “மகனே. இது உன்னுடைய கால் பாதங்கள் அல்ல, இது என்னுடைய கால் பாதங்கள். நீ நடக்க முடியாது, கவலை சோர்வினால் நிறைந்து காணப்பட்டபோது, உன்னை சுமந்துகொண்டு வந்த எனது பாதங்கள்” என்று ஆண்டவர் பதில் அளித்தாராம்.
பிரியமானவர்களே, தேவன் உங்களை இதுவரை சுமந்துகொண்டு வந்ததை நினைவிற் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையிலே தனிப்பட்ட வாழ்விலே விசுவாசத்தில் வளருங்கள். இயேசுவோடுள்ள தனிப்பட்ட உறவிலே சந்தோஷப்படுங்கள். ஆண்டவருக்கு எப்பொழுதும் நன்றி செலுத்தி ஸ்தோத்திரியுங்கள். தொடர்ச்சியாக, காத்தருடைய வார்த்தையில் பெலப்படுங்கள். வேதாகமத்திலே அநேக சந்தர்ப்பங்களில் அநேக தேவ பிள்ளைகளை தேற்றியது தேவனுடைய வார்த்தை மட்டும்தான். வாழ்ந்தால் இப்படித்தான் நாம் வாழவேண்டும் என்று நமக்கு பாதை காட்டுவது தேவ வசனம் மட்டும்தான்.
இன்றைக்கு உங்களுக்கு நம்பிக்கை தரும் தேவனுடைய வார்த்தையினால் உலகத்தை ஜெயித்திடுங்கள். நித்தியமான நம்பிக்கை தரும் ஜீவவசனத்தை பிடித்துக்கொண்டு வாழ்வில் முன்னேற்றமடையுங்கள். அப்படியே கர்த்தர் உங்களையும் வாழ்ந்திருக்கச் செய்வாராக. தேவ கிருபை உங்களோடு இருப்பதாக.
சிந்தியுங்கள்!
உங்கள் சிறிய தவறுகளைத் திருத்திக்கொண்டே இருங்கள். ஏனென்றால் யாரும் மலைகளால் தடுக்கி கீழே விழுவதில்லை, ஆனால் சிறிய கற்களால் … !!!