• சகோ. சாம்சன் •
(ஜனவரி – பிப்ரவரி 2024)

ஆண்டவரை நேசிக்கும் அளவுக்கு என்னுள்ளத்தில் அன்பு நிறைந்து காணப்படுகின்றதா? யாக்கோபு 2:26இன் படி கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. அதாவது, இவ் வசனத்தின்படி செயல்வடிவில் காட்டப்படாத விசுவாசமானது பலனற்றது. ஏன் கிறிஸ்தவர்கள் தமது விசுவாசத்தை செயலில் காட்டவேண்டும்? தேவன் மீதான நமது அன்பை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து இன்று கவனிப்போம்.

நாம் அறிந்த மார்த்தாள் மரியாள் கதா பாத்திரங்கள் குறிந்த சம்பவமானது லூக்கா 10:38-42 இல் காணப்படுகின்றது. கிறிஸ்துவுடனான இம் முதல் சந்திப்பானது பின்பு கிறிஸ்துவின் பரமேறுதல் வரை நீண்டு செல்கின்றது. இங்கு இயேசுவானவர் மரியாளைப் பற்றி கூறிய ஒரு கூற்று கவனிக்கத்தக்கது. மத்தேயு 26:13. மாற்கு 14:9 வசனங்களின்படி மரியாள் செய்த சாதனைதான் என்ன? கிறிஸ்து இப்பெண்ணுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்? இது உங்க ளையும் சிந்திக்க வைக்கிறதல்லவா!

லூக்கா 7:36:50, 10:38-–42, மத்தேயு 26: 6-9, யோவான் 11.12 அதிகார வசனங்களை தொகுத்து நோக்குகையில் லூக்கா 10:38-42 பகுதியே முதல் பகுதியென கொள்ளமுடியும். பெத்தானியா கிராமிய வீட்டு சந்திப்புகளுக்காக கிறிஸ்துவும் சீஷர்களும் வழமையான சாதாரண சந்திப்பின் முதல் நாளே “நல்ல பங்கை தெரிந்துக்கொண்டவள்” என கிறிஸ்து மரியாளைப்பற்றி கூறிய விஷயம் மகத்தானது. அவள் இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டதுமட்டுமல்ல, அதை தனக்குள் உள்வாங்கிக்கொண்டாள் என்பதை ஆண்டவர் உறுதிப்படுத்தினார் அல்லவா? இக் குடும்பத்தைப்பற்றி யோவான் 11ஆம் அதிகாரத்தில் பார்க்கையில் கிறிஸ்துவின் நண்பனான லாசரு எனும் சகோதரனை சந்திக்கின்றோம். இரண்டு சகோதரிகளும் இந்த சகோதரனும் கிறிஸ்துவின் வீட்டு சந்திப்பின்போது நடந்த போதனைகளில் லாசருவும் நிச்சயம் கலந்து கொண்டார் என்பது தெரிகின்றது.

லாசரு நோய்வாய்ப்பட்டு இருக்கும் செய்தியை ஆண்டவர் கேள்விப்படுகிறார். கிறிஸ்து நினைத்திருந்தால் உடனே பெத்தானியாவுக்கு சென்று லாசருவை குணமாக்கியிருக்கலாம். காரணம் இரண்டு மைல் தூரம்கூட இல்லை (யோவா. 11:18), ஆனால் அவர் அப்படி செய்யாது அவன் மரணித்து அடக்கம் செய்யப்படும்வரை பொறுத்திருந்தே அங்கு செல்கிறார். மரியாள் அச் சந்தர்ப்பத்தில் கூட ஆண்டவருக்கு இடம்கொடுத்து வீட்டிலேயே இருந்தாள் (யோவான் 11:20).

யோவான் 11:21-27ல் கிறிஸ்து மார்த்தாளுடன் இங்கு உரையாடலில் ஈடுபடும்போது, மரணம், உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு மற்றும் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆக, இவர்கள் ஆவிக்குரிய குடும்பமாக யூதமத நம்பிக்கைகளை உடையவர்களாக இருந்துள்ளனர். லாசருவின் மரணம், உயிர்ப்பித்தல் மூலம் யூத சமூகத்துக்கு தான் தேவனுடைய மேசியா என்பதைக் காண்பிக்க, இயேசு லாசருவினுடைய வாழ்க்கையை பயன்படுத்தியவிதம் மகத்தானதாக அமைகின்றது.

உண்மையில், விசுவாசம் பெரிய காரியங்களை நம் வாழ்வில் சாதிக்கும், உலகத்து மக்கள் நினைக்கும் முடிவு அல்ல நமது முடிவு, அத்துடன் நாம் உயிர் வாழும்போதே தேவ மகிமையை காணமுடியும் என்பதையும் தமக்குக் கீழ்ப்படிவோரை தேவதிட்டத்துக்குள் பயன்படுத்த முடியும் என்பதையும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இச்சம்பவம் இத்துடன் முடியவில்லை. யோவான் 12 ஆம் அதிகாரத்தில், சில நாட்களுக்கு பின் மீண்டும் கிறிஸ்துவும் சீஷர்களும் பெத்தானியாவுக்கு வருகைத் தருகின்றனர். இவ் வருகையே கிறிஸ்துவின் கடைசி வருகையாக அமைந்தது.

இதனையறிந்த பெத்தானியா கிராம மக்கள் லாசருவை உயிர்ப்பித்த மகிழ்ச்சிக்கும் அவர் செய்த அநேகக் காரியங்களைக் குறித்து நன்றி தெரிவிக்கவும், அவரை கனப்படுத்தவும் நினைத்து குஷ்டரோகியாக இருந்து குண மடைந்த சீமோன் வீட்டில் பெரிய விருந்தொன்றை கொடுத்தனர். அங்கு கிறிஸ்துவினால் உயிர்த்தெழுந்த லாசருவும் அவருடன் பந்தியில் அமர்ந்திருந்தான்.

சீமோன் வீட்டில் பரிசேயனான யூதர் அனேகர் கூடியிருந்தனர். அவ்வேளையில்தான் மரியாள், நளதம் எனும் விலையுயர்ந்த வாசனை திரவியத்தை கொண்டுவந்து கிறிஸ்துவின் தலையிலும் பாதத்திலும் ஊற்றி கண்ணீரால் நனைத்து தன் தலைமயிரால் பாதத்தை துடைக்கின்ற சம்பவம் இடம் பெறுகின்றது. மரியாள் கிறிஸ்துவை சந்தித்த முதல் சந்திப்பின்போதே தன் பாவஇயல்பை விட்டுவிட்டாள். அத்துடன் தனது விசுவாச வாழ்வை படிப்படியாக வளர்த்துக் கொண்டாள்.

ஆனால், அதை இரகசிய பொக்கிஷமாக மறைத்துவைக்க அவள் மனம் கொள்ளாது வெளிப்படுத்த சித்தம் கொண்டாள். கிறிஸ்துவின் அன்பை யாரால் மறைக்கமுடியும்?

பலர் முன்னிலையில் அவள் தேவன் மீதான தனது, 1.தைரியத்தை, 2.விசுவாசத்தை, 3.அன்பை வெளிப்படுத்தினாள்.

இங்கு மரியாள் முழுமையான தனது உள்ளத்தை தேவபாதத்தில் ஊற்றிவிட்டாள் என்பதே அவளது செயல் காட்டுகின்றது. அத்துடன் அவளைப்பற்றி அவதூறாக பேசுவதை அறிந்த கிறிஸ்து (லூக்கா 7:39-43) சீமோனிடம் ஒரு உவமையைக் கூறினார்.

கடன்பட்ட இருவரில் கடனை மன்னித்த எஜமானிடம் அதிக அன்பாக இருப்பவன் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறார். இதிலிருந்து ஆண்டவருடைய உள்ளம் தமது அடியவர்களின் அன்பை அதிகமாக எதிர்பார்க்கின்றார் என்பது வெளிப்படையாய் தெரிகிறது. லூக்கா 7:47இல் “இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே” என தெளிவாக எல்லாரும் அறியும்படி கூறினாரே!!!

இன்று நாமும்கூட ஆண்டவருக்காக விசுவாசத்துடனும் தைரியத்துடனும் எத்தனையோ பலவித காரியங்களை செய்கின்றோம். ஆனால் ஆண்டவர் உள்ளத்தை நேசிக்கும் அளவுக்கு நமது உள்ளம் காணப்படுகின்றதா? பரபரப்பான இந்த உலக காரியங்களில் ஈடுபடும் நாம் அமைதியாக அமர்ந்து ஆண்டவரை நினைத்து அன்பு செய்கின்றோமா?

தன்னைச்சுற்றி எத்தனைபேர் இருந்தாலும் தன்னையறிந்து அன்பு செய்யும் உள்ளத்தை தேவன் மரியாளிடம் கண்டார். அப்படிப்பட்ட அன்பு நமக்கு இன்னும் தேவை அல்லவா?

இச்சம்பவத்தினூடாக நமக்கு ஆண்டவர் சொல்வது. ஆண்டவர் உங்களிடத்தில் அன்பை எதிர்பார்ப்பது உங்களுக்கு கேட்கின்றதா?

படைப்புகள் கர்த்தரைத் துதிக்கும்!

காலையெழுந்ததும் காக்கைக்குருவிகள்
கர்த்தரைத் தோத்தரிக்கும் – என்றும்
காத்தவனை யின்பக் கானமிசைத்தவை
காலமெல்லாம் துதிக்கும்
பொன்னுடல் மேனியின் புள்ளினம்பாடிப்
புகழ்ந்து பறந்துவரும் – புதுப்
பண்ணிசைத்தே தமைப் போஷித்த தேவனைப்
போற்றித் துதித்து வரும்
காட்டினில் வாழ்ந்து களிக்கும் விலங்கினம்
கர்த்தரைத் தோத்தரிக்கும் – தம்மைக்
கண்ணுங்கருத்துமாய்க் காப்பவரையங்கே
காணவிரைந்து நிற்கும்
ஆழக்கடலினை ஆளும் உயிரினம்
ஆண்டவனைப் பாடும் – அவர்
அன்பை நினைந்தவை அல்லும் பகலுமாய்
ஆடிப்புனல் குளிக்கும்
தேமலர் சிந்திச் சிலிர்க்கும் செடிகொடி
தேவனைத் தோத்தரிக்கும் -திருத்
தாழிற்சொரிந்து நிரழ்மணம் வீசிநற்
தூய்மை விருந்தளிக்கும்
வானின் கிரகங்கள் வாழ்த்தி வலம் வந்து
வானவனை வணங்கும் – அவை
வாழும்வரை வண்ண ஜாலங்கள் காட்டி
வகுத்தவனைத் துதிக்கும்

– கே.ஜே. வேலுப்பிள்ளை

உங்களுக்குத் தெரியுமா?

மனரம்மியம் என்பது உணர்ச்சியில் எழுகின்றதல்ல; அது நாம் எடுக்கின்ற தீர்மானத்தில் தங்கியிருக்கிறது!