• Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி – பிப்ரவரி 2024)

4. முன் ஆயிரம் ஆண்டு கொள்கை:

வரப்போகும் நிகழ்வுகள் உண்டா? பகுதி 1

Dr.உட்ரோ குரோல்

எதிர்காலத்தைப் பற்றிய அநேக நம்பிக்கைகள் பழங்காலந்தொட்டு நிலவி வருகின்றன. அவற்றில் சிலவற்றை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அதில் ஒன்று, ஒரு பகுதி விசுவாசிகள் மாத்திரம் எடுத்துக்கொள்ளப்படுதல் அல்லது மறுரூபமாக்கப்படுதல் பற்றிய கண்ணோட்டம் (Partial Rapture).

இதன் அடிப்படையென்னவென்றால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கி காத்திருக்கும் ஆவிக்குரிய விசுவாசிகள் மாத்திரம் மறுரூபமடைந்து, அவர் வரும்பொழுது அவருடன் அழைத்துச் செல்லப்படுவர் என்பதாகும். ஒருவேளை நீங்கள் ஆயத்தமாகவில்லையென்றால், அல்லது ஆவிக்குரிய கிறிஸ்தவராக இல்லையென்றால், அல்லது நீங்கள் அவரது வருகையை எதிர்பார்த்து ஆயத்தமாகவில்லை யென்றால், நீங்கள் காத்திருக்கவேண்டும். அப்படியானால் நீங்கள் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? கிறிஸ்து திரும்பி வந்து உங்களை அழைத்துச் செல்வதற்கு ஏற்றவாறு உங்களைத் தூய்மைப்படுத்துகிற உபத்திரவ காலத்தின் ஒரு பகுதியைக் கடந்துசெல்ல நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த பார்வையானது மத்தேயு 24:13 ஆம் வசனத்தின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. பிலிப்பியர் 3:20, 2 தீமோத்தேயு 4:8 மற்றும் லூக்கா 21:36 ஆகிய வசனங்களின் விளக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் அனைவரும் அவர்கள் அதைக் கடைப்பிடிப்பதற்கான காரணங்கள் உள்ளன.

நான் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணத்தை நான் கீழே தருகிறேன். பகுதியளவு மறுரூபமாக்கப்படுதலின் நோக்கமானது (Partial Rapture), பரலோகத்திற்குச் செல்வதற்கு நீங்கள் தொடர்ந்து தயாராக இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பாக்கியத்தை நிபந்தனை செய்கிறது. மேலும் இந்த கண்ணோட்ட மானது கிறிஸ்துவின் பாவபரிகாரத்தின் தன்மையைப் புறக்கணிக்கிறது. மேலும் இது கிறிஸ்துவின் சரீரத்தின் ஐக்கியத்தின் கொள்கையை மீறுவதாக நான் எண்ணுகிறேன்.

நாம் அனைவரும் தேவையான அளவு முதிர்ச்சியடைந்தவர்கள் அல்ல. வான்ஸ் ஹேவ்னர் என்பவர் (1901 -1986) திரும்பத்திரும்ப ஒரு மேற்கோளைக் காட்டுவார். அதனை நான் அதிகமாக விரும்புவேன். அவர், “ஒரு கிறிஸ்தவராக எவ்வளவு காலம் இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல; நீங்கள் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளீர்கள் என்பதை அது கூறாது”. நீண்டகாலமாக பயணித்த கிறிஸ்தவர்கள் அநேகர் உண்டு; ஆனால், அவர்கள் வெகுதூரம் வரவில்லை. நீண்ட தூரம் சென்று ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்தவர்கள் மாத்திரமே ஆகாயத்தில் ஆண்டவரை சந்திப்பார்கள். அது எஞ்சியிருப்பவர்களுக்கு எந்த பயனையும் தராது. அது சிதைந்துபோன சரீரமான சபை. எனவே பகுதி மறுரூபக் கொள்கை சரியானது என நான் நினைக்கவில்லை.

உபத்திரவ காலத்தின் இறுதியில் சபை எடுத்து கொள்ளப்படுதல் – அதாவது, பிந்தைய உபத்திரவ கால கொள்கை (Post Tribulational Rapture)

ஒருசிலர் இல்லை, இல்லை ஒரு உபத்திரவ காலம் வரப்போகிறது என்றும், அந்த உபத்திரவத்தின் முடிவில் தேவன் தம்முடைய குமாரனை அனுப்புவார் என்றும் கூறுகிறார்கள். ஆண்டவர் திரும்பிவருவார், தமது சபையை எடுத்துக்கொள்வார். அதனை உபத்திரவ காலத்தின் இறுதியில் செய்வார். இந்த கண்ணோட்டமானது உபத்திரவ காலத்தின் இறுதியில் நடைபெறும் இரகசிய வருகை என்று அழைக்கப்படுகிறது. அடிப்படையில் இது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திரும்பவும் வருவார்; தமது சபையை எடுத்துக் கொள்வார். அவர் உபத்திரவ காலத்தின் முடிவில், கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகைக்கு சற்று முன்பு, அர்மகெதோன் போரில் இதை நிகழ்த்துவார். இக்கருத்து மத்தேயு 24:24-30ன் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், இந்த பார்வையானது மனிதனின் விரோதத்தினால் சபை அனுபவிக்கும் துன்பத்தையும் இந்த பூமியில் வரப்போகும் தேவனின் கோபாக்கினையையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டது என்று நான் நினைக்கிறேன். நாம் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாவதில்லை என்று சத்தியவேதம் தெளிவாகக் கூறியுள்ளது. அதன் விளைவாக, வெளிப்படுத்துதல் 19இல் உயிர்த்தெழுதல் நிகழ்வு இல்லாததை இது கவனிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே உபத்திரவத்திற்குப் பிந்தைய பார்வை யானது வேதம் விளக்க வந்த காரியத்தை அநேகருக்கு மறைத்துவிடுகிறது. எனவே நான் இந்தக் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை.

உபத்திரவ காலத்தின் மத்தியில் சபை எடுத்து கொள்ளப்படுதல் – மத்திய உபத்திரவகால கொள்கை (Mid Tribulational Rapture)

மற்றொரு குழுவினர் இது உபத்திரவ காலத்தின் முடிவில் இல்லை; உபத்திரவத்தின் நடுவில் உள்ளது. எனவே எங்களிடம் பகுதி மறுரூபமாதல் பார்வையும் பிந்தைய உபத்திரவகால பார்வையும் உள்ளது. எனவே இது எங்களது நடுநிலைப் பார்வையாகும் என்கின்றனர். இது ஒரு வகையான புத்திசாலித்தனமான பார்வையாகும். அதாவது, உபத்திரவகாலத்தில் முதல் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனால் இரண்டாவது மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

உபத்திரவ காலம் ஏழு ஆண்டுகள். முதல் பாதி மூன்றரை வருடங்களில் மோசமான காரியங்களும் இரண்டாம் பாதியில் அதைவிட மிக மோசமான காரியங்களும் நடக்கும். எனவே சபை பரிசுத்தவான்கள் தேவனின் கோபத்திற்கு ஆளாக மாட்டார்கள் என நம்புகின்றனர். அதாவது, உபத்திரவ காலத்தின் இரண்டாம் பாதிக்குக் கடந்து செல்லமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் தேவனின் கோபகலசத்திலிருந்து உலகிற்கு வரும் நியாயத்தீர்ப்புகளுக்கு முன்னரே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறுகின்றனர். அதாவது வெளிப்படுத்தல் 16ஆம் அதிகாரத்தின்படி அடிப்படையாக அவர்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பது இவர்களது கொள்கை.

ஆனால் இங்கே ஒரு பிரச்சனையை நான் பார்க்கிறேன். நடுஉபத்திரவகால கொள்கையாளர் 1கொரிந்தியர் 15இல் ஊதப்படும் கடைசி எக்காளத்தை வெளிப்படுத்தல் 11இல் ஊதப்படும் ஏழாவது எக்காளத்துடன் ஒப்பிடுகின்றனர். ஆனால், இரு நிகழ்வுகளும் முற்றிலும் வேறுபட்டவை. அவைகளில் ஒன்று பரிசுத்தவான்களை பரலோகத்துக்கு அழைக்கும் தொனி, மற்றொன்று உலகத்தின் நியாயத்தீர்ப்புக்கான அழைப்பு. இவர்கள் இவை இரண்டையும் கவனிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். வெளிப்படுத்தல் 15:1இல் கூறப்பட்ட தேவ நியாயத்தீர்ப்பு முடிந்தது என்ற கருத்தையும் அவர்கள் கவனிக்கவில்லை. இது தேவனுடைய கோபத்தின் காலம் என்றும் தீர்ப்பு வரும் காலம் என்றும் கருதி அதற்கு முன்னர் சபை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் சொல்லுகின்றனர்.

ஆனால், தேவனுடைய கோபம் ஏற்கனவே மூன்றரை ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஆனால், அது எதிர்காலத்தில் இருக்கப்போவது போல் கடுமையாக இருக்காது. மத்திய உபத்திரவ காலத்தின் பார்வையானது, எதிர்காலத்தில் வரவிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை எக்காளங்கள் குறிக்கின்றன என்பதைப் புறக்கணிக்கிறது. அவர்கள் அனைத்தையும் இணைத்து, நியாயத் தீர்ப்பின் ஏழு எக்காளங்கள் ஊதப்படும்பொழுது தேவன் தம்முடைய மக்களை பரலோகத்திற்கு எடுத்துச்செல்வார். ஆனால், நாம் அத்தீவிர கோபத்துக்கு முன் சில சிறிய கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்று கருதுகின்றனர்.

இது மற்றொரு எதிர்காலவாத கண்ணோட்டத்திற்கு இட்டு செல்கிறது. அதாவது, உபத்திரவ காலத்துக்கு முந்தின இரகசிய வருகைக்கான கண்ணோட்டம். இது பல ஆண்டுகளாக பிரபலமாக இருந்த ஒரு கொள்கையாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது குறைந்து வருகின்றது. இது Left behind என்ற புத்தகங்களின் தொடரினால் எழும்பின ஒரு கருத்தாகும். சிலவேளைகளில் இது பரியாசம் செய்யப்பட்டது. சீர்திருத்த இறையியலாரும் நடந்து முடிந்துவிட்டது என்ற கண்ணோட்டத்தை உடையவர்களும் உபத்திரவ காலத்துக்கு முற்பட்டக் கொள்கையாளர்களும் இதனைக் கடந்த சில ஆண்டுகளாக தாக்கி வருகின்றனர்.

நான் உபத்திரவகாலத்திற்கு முன்பதாக சபை எடுத்துக்கொள்ளப்படும் என்ற கண்ணோட்டமுடையவன் (Pretribulationalal view). இன்று முன் மில்லினிய கொள்கையாளன் (Premillennialist). ஏனெனில் என்னுடைய சூழ்நிலைகளையும், பயிற்சிகளையும் சார்ந்ததால் அல்ல; இதுவே வேதாகம உண்மைகளுக்கு மிகவும் பொருந்துகிறது. முன்உபத்திரவகால கொள்கையாளர்கள், பூமியில் உபத்திரவ காலத்துக்கு முன்பதாக தேவனுடைய சபை முழுவதுமாக, தானியேல் கூறிய எழுபதாவது வாரத்துக்கு முன்பதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர். “அந்நேரத்திலிருந்து உன்னை நான் காப்பாற்றினேன்” என்று தேவன் கூறுகிறார்.

முன்உபத்திரவகால கொள்கையாளர் இந் நிகழ்வுகள் நிறைவேறுமுன்னர், நம்மை தம்முடன் அழைத்துச்செல்ல, இயேசுகிறிஸ்து திரும்பி வருவார், எந்நேரத்திலும் அவர் வருவார் என்று அர்த்தம் சொல்லுகின்றனர். மற்றும் சிலர் இந்த அடையாளங்கள் யாவும் சபை மறுரூபமாவதற்குப் பின் நடக்கும் அடையாளங்களுடன் தொடர்புடையன. இயேசுவின் வருகையின்போது என்ன நிகழ்வுகளை நான் எதிர்பார்க்கவேண்டும்? அதிகரிக்கும் பூமியதிர்ச்சிகள், வியாதிகள், கொள்ளை நோய்கள், அந்திகிறிஸ்துவின் எழுச்சி போன்றவையா? இல்லை, இவை எதுவுமில்லை. இவை யாவும் எதிர்கால அறிகுறிகளே. ஆனால், அவை உடனடியாக நிகழப்போவதில்லை. நாம் இறுதிக் காலத்தில் இருக்கிறோம் என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அதைவிட வலிமையான குறிப்புகள் உண்டு. மனிதர்களின் ஒழுக்கக் கேடான செயல்கள், வன்முறைகள், தீவிரவாதங் களின் எழுச்சி, மனித உயிருக்கு மரியாதை இல்லாதது, அது கருவில் இருக்கும் கருவின் உயிராக இருந்தாலும் சரி அல்லது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படும் சிறுவனின் உயிராக இருந்தாலும் சரி; மதபோதனை அற்றவை போன்றவை நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

1 தெசலோனிக்கேயர் 5:9இல் நாம் தேவனுடைய கோபத்திலிருந்து காக்கப்படுவோம் என்று உறுதியளிக்கிறது. வெளிப்படுத்தல் புத்தகத்தின் மைய அதிகாரங்களில் அதிகமான தேவகோபம் வெளிப்படுகிறது. நாம் ஏற்கனவே பரலோகத்தில் ஆண்டவருடன் இருந்தால் கீழ்ப்படியாத உலகின் மீது அவர் ஊற்றும் நியாயத்தீர்ப்புக்கு நாம் நீங்கலாகியிருப்போம். எனவே இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு விசுவாசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவேண்டும். ஏனெனில் இரட்சகராகிய இயேசு இல்லையெனில் இவ்வுலகில் பயங்கரமான நியாயத்தீர்ப்பு நடப்பது உறுதி. இது பயமுறுத்துதல் அல்ல; இதுதான் சத்தியம். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப் பற்றி தேவன் உரைத்த பதிவுகள்.

“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று மத்தேயு 24:14 கூறுகிறது. இது ஒரு நம்பகமான ஆதாரம். ஏனெனில் இது இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள். உலகத்தின் கடைசிபரியந்தமும் நற்செய்தி கூறப்படும், கடைசி காலத்துக்கு முன்னர் உலகம் முழுவதும் நற்செய்தியைக் கேள்விப்படுவார்கள், ஆனால் கி.பி. 70இல் கடைசி காலம் வந்துவிட்டது என்றால் அக்காலத்தில் பூர்வீக அமெரிக்கர்கள், எஸ்கிமோக்கள், தூரகிழக்கு நாட்டு மக்கள் ஆகியோர்களுக்கும் உலகின் ஏனைய மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவில்லையே!

எனவே இன்னும் சில காரியங்கள் நிறைவேற வேண்டியதாய் உள்ளது. இந்த தலைமுறையில் இயேசு திரும்பி வருவாரா என எனக்குத் தெரியாது. “Jesus” என்ற திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நமது தலைமுறையில் மெல் கிப்சன் என்பவர் வெளியிட்ட “The passion of the Christ” என்ற திரைப்படமும் அமெரிக்கா, மேற்கத்திய உலகம் மட்டுமல்லாது உலகமுழுவதும் சென்றடைந்தது. நெப்ரஸ்கா இடத்திலிருந்து பேசும் என் உரையை உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆப்பரிக்கா, இங்கிலாந்து, தென் அமெரிக்கா இந்தியா மற்றும் உலக முழுவதும் கேட்பீர்கள் என்பது சென்ற தலைமுறைவரை சாத்தியமாகவில்லை. இணையதள ஊழியங்கள், அலைபேசி ஊழியங்கள் இவை யாவும் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது.

லூக்கா 21:21-24 வேதபகுதியும் எதிர்காலத்தைப் பற்றியே கூறுகிறது. “அப்பொழுது யூதேயா விலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கண்ணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.

பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புற ஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புற ஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும”; புறஜாதிகளின் காலம் இன்னும் நிறைவேறவில்லை; எரு சலேம் நகரம் தலைமுறை தலைமுறையாக நசுக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டில் யூதமக்கள் எருசலேம் நகரத்தை ஆறு நாள் போரில் மீட்டனர். அத்துடன் புறஜாதிகளின் காலம் முடிவடைந்தது. புற ஜாதிகள் இன்னும் எருசலேமில் இருக்கின்றனரா?

ஆம், எருசலேம் நகரத்தில் இன்னும் புறஜாதிகள் வசிக்கின்றனர். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தபடி அவர்கள் அந்த நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை. கி.பி.70இல் நடந்த புறஜாதிகளின் நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்க இருப்பவை; ஏன் விரைவில் கூட நிகழலாம்.

2பேதுரு 3ஆம் அதிகாரமும் எதிர்காலத்தைப் பற்றியே கூறுகிறது.

“பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவு கூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து: அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்ற முதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது”

நிறைவேறிவிட்டது என்ற கொள்கையாளர் இந்த வசனங்களில் கூறப்பட்டவையெல்லாம் கி.பி.70 நடந்தது என்று சொல்லுவர். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஏனெனில் ஆதியாகமம்1:1இல் வரையறுக்கப்பட்ட நோவா காலத்து வானமும் பூமியும் தலைமுறை தலைமுறையாக இருக்கும் என்பதை நீங்கள் மறந்து விடுவீர்கள் என்று பேதுரு முன்னுரைத்தார்.

பழைய வானங்கள் பழைய உடன்படிக்கையையும் புதிய வானங்கள் புதிய உடன்படிக்கையையும் குறிக்கின்றன என்று சிலர் சொல்லுகின்றனர். பழைய வானங்கள் கடந்துசென்றதுபோல் பழைய உடன்படிக்கையும் முறிந்துவிட்டது என்றும் புதிய வானங்கள் வந்துவிட்டதுபோல புதிய உடன்படிக்கையும் வந்துவிட்டது என்றும் கருதுகின்றனர். அதாவது, “நிறைவேறிவிட்டது” என்று கருதும் கொள்கையாளர்கள் நாம் புதிய உடன்படிக்கை காலத்தில் வாழ்கிறோம் என்றால் நாம் புதிய வானத்தில் வசிக்கிறோம், இனி எதிர்காலம் என்பது கிடையாது, இதுதான் தேவனுடைய இராஜ்யம், இதுவே நித்தியம், வெளிப்படுத்தல் புத்தகத்தில் வாக்களிக்கப்பட்ட புதிய வானம் இதுதான் என்று கூறுகின்றனர். இது புதிய வானம் என்று கூறும் “நிறைவேறிவிட்டது” என்ற கொள்கையாளர்களே, நான் இந்த புதிய வானத்தால் திருப்தியடையவில்லை. வரவிருக்கிற புதிய வானம் இதைவிட மேலானது. அங்கே நாம் வரிகட்ட வேண்டாம்; எனது அனைத்து உறவினர்களும் என்னை அதிகமாய் நேசிப்பார்கள்.

இக்காரியங்கள் யாவும் கடந்தகாலத்தைச் சுற்றிக்காட்டும் ஆற்றலையுடையது. எனினும் எதிர்காலத்தையும் காட்டும் ஆற்றலையுடையது என்பதையும் நான் வரும் பாடங்களில் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை