• Dr.தியோடர் எச்.எஃப். •
(ஜனவரி – பிப்ரவரி 2024)

6. திருச்சபையின் காலம் அல்லது கிருபையின் காலம் – பகுதி 1

திருச்சபைக்கான இரகசிய வருகை:

Dr.தியோடர் எச்.எஃப்.

1. உபத்திரவத்தின் முதல் பாதிப்பகுதி:

உபத்திரவ காலத்திலும் தேவனுக்கு சாட்சி இல்லாமல் இல்லை. உபத்திரவகால தொடக்கத்தில் அவருக்குச் சிறந்த சாட்சிகளாக இருக்கும்படியாக இரண்டு மனிதர்களை அவர் அனுப்புவார் (வெளி. 11:1-14). ஆயினும் உபத்திரவ காலத்தின் பாதி இறுதியில் அந்த இரண்டு சாட்சிகளும் தங்களின் எதிரியினால் மரிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் (வெளி.11:7). ஆனால், மூன்றரை நாட்களுக்குப் பின்பு தேவன் அவர்களை மீண்டும் உயிர்ப்பித்து, பரலோகத்தில் தன்னோடு இருக்குமாறு எடுத்துக்கொள்வார் (வெளி. 1:9-12). இந்த ஏழு ஆண்டு காலத்தின் முதல் பாதி பகுதியில் இரண்டு பெரிய சோதனைகள் இருக்கும். அவைகளைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 6:1 முதல் 11;11 வரையான வேதபகுதியில் எழுதப்பட்டுள்ளன.

முத்திரைகள்:

1. முதலாவது முத்திரை உடைக்கப்படுகிறது.

வெள்ளைக்குதிரையில் ஏறியிருப்பவன் அந்திக்கிறிஸ்துவே அன்றி வேறு யாருமில்லை. குறைந்தபட்சம் பத்து நாடுகளின் முடிசூடா இளவரசனாக தொடக்கத்தில் அவன் தோன்றுகிறான். அவன் தானியேல் 9: 26, 27இல் சொல்லப்பட்டுள்ள “பிரபு” ஆவான். அவன் ஏழு ஆண்டு காலத்திற்கு யூதர்களோடு ஒரு உடன்படிக்கை செய்து உறுதிப்படுத்துவான். பின்பதாகத் தோன்றும் உண்மையான கிறிஸ்து வெள்ளைக்குதிரையில் வர இருப்பதைப்போல் போலியாக வெள்ளைக்குதிரையினைப் பயன்படுத்துகிறான். உண்மையான கிறிஸ்துவைப்போல் நடிக்கும், சாத்தானின் அவதாரம்தான் அந்திக்கிறிஸ்து என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

2. இரண்டாம் முத்திரை உடைக்கப்படுகிறது.

சிவப்புகுதிரை என்பது யுத்தங்களையும் யுத்த வதந்திகளையும் பற்றிப் பேசுகிறது (மத்.24:6,7).

இந்த யுத்தமுடிவின் விளைவாக 10 நாடுகள் கொண்ட கூட்டாச்சி மலரும்.

3. மூன்றாம் முத்திரை உடைக்கப்படுகிறது.

கருப்புக்குதிரை என்பது, மிகப்பெரிய யுத்தத்தின் விளைவாக உருவாகும் பஞ்சத்தைக் குறிக்கிறது.

4. நான்காம் முத்திரை உடைக்கப்படுகிறது.

மங்கின நிறமுள்ள குதிரை யுத்தம், பஞ்சத்தின் விளைவாக உண்டாகும் மரணத்தை சுட்டிக்காட் டுகிறது. பூமியில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் உத்தேசமாக கொல்லப்படுவார்கள்.

5. ஜந்தாவது முத்திரை உடைக்கப்படுகிறது.

தேவனுடைய சிங்காசனத்தின் கீழே இரத்த சாட்சிகளின் ஆத்துமாக்களை நாம் காண்கிறோம். அந்திக் கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கு எதிராக அமையவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்தினைப்பற்றிய சாட்சியினிமித்தம் அவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்துள்ளனர் என்பதில் ஐயமேதுமில்லை (மத்.24:9-24 பார்க்கவும்). இந்த முதல் ஐந்து முத்திரைகளிலும் மனிதன் தன்னையே நியாயந்தீர்த்து அவனுடைய சொந்த கண்டுபிடிப்புகளாலே, பூமியின் மூன்றில் ஒருபங்கு மக்களை கொல்வதற்கு அனுமதிக்கப்படுகிறான் என்பதை நாம் காண்கிறோம்.

6. ஆறாவது முத்திரை உடைக்கப்படுகிறது

உடனடியாக பூமியில் ஒரு மிகப்பெரிய பெளதீக மாற்றங்கள் திடீரென ஏற்படுவதை நாம் காண்கிறோம். பயத்தின் நிமித்தமாக மலைகளையும் குன்றுகளையும் தங்கள்மீது விழுந்து மூடுமாறு மனிதர்கள் புலம்புவார்கள். மனிதரின் கோபத்திற்கு தேவனின் பதில் இதுதான் (ஏசாயா 13:9-11; யோவேல் 2:30; மத்தேயு 24:29).

7. ஏழாம் முத்திரை உடைக்கப்படுகிறது:

புயலுக்குப் பின் அமைதி போன்று பரலோகத்தில் மிகுந்த அமைதல் உண்டாகிறது. சாத்தானின் கோபத்தை முன்னறிவிக்க ஏழு எக்காளங்கள் ஊதப்படுவதற்கு இது வழியினைத் திறக்கிறது.

எக்காளங்கள்

1) முதலாம் எக்காளம் ஊதப்படுகிறது.

கல்மழையும் அக்கினியும் இரத்தமும் கலந்து பூமியில் விழுந்து மூன்றில் ஒருபங்கு மரங்கள் செடிகள் எரிக்கப்படுகின்றன.

2) இரண்டாம் எக்காளம் ஊதப்படுகிறது.

எரிநட்சத்திரம் போன்ற எரிமலை சமுத்திரத்தில் விழுந்து, சமுத்திரத்தில் உள்ள ஜீவசிருஷ்டிகளில் மூன்றிலொரு பங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று, சமுத்திரத்திலே மூன்றிலொரு பங்கு இரத்தமாக மாறிற்று.

3) மூன்றாம் எக்காளம் ஊதப்படுகிறது.

அப்பொழுது ஒரு நட்சத்திரம் தீவட்டியைப் போல எரிந்து (வேறொரு எரிநட்சத்திரம்) விழுகிறது. அதினால் நீரூற்றின் தண்ணீர் விஷமாக மாறி, அதனைக் குடிக்கும் அனைவரும் மரித்து போகிறார்கள்.

4) நான்காவது எக்காளம் ஊதப்படுகிறது.

அப்போது சூரிய, சந்திர நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கு சேதப்பட்டு அதினிமித்தம் மூன்றில் ஒருபங்கு வெளிச்சமில்லாமல் இருளடைந்தது (லூக்கா 21:25,26).

5) ஐந்தாவது எக்காளம் ஊதப்படுகிறது.

முதலாம் ஆபத்து இங்கு காணப்படுகிறது. பாதாளக்குழி திறக்கப்படுகிறது. தேள்களின் கொடுக்கினைக் கொண்ட வெட்டுக்கிளிகள் தோன்றுகின்றன. அவைகள் மனிதர்களை வேதனைப்படுத்துகிறது. ஆனால், அவர்களை கொல்லுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது துன்மார்க்கர் மாத்திரமே அவைகளால் கொட்டப்படுவார்கள். இந்தப் பயங்கரங்கள் சாத்தானால் இயக்கப்படும் பொல்லாத ஆவிகளின் கிரியைகளினால் ஏற்படும் விளைவுகளாகும். இக்காலத்தின் பயங்கரங்கள், வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வார்த்தைகளால் விவரித்து கூறமுடியாதவாறு அவ்வளவு பெரிதாக இருக்கும். பூமியில் இதுவரை நடந்திராத அளவுக்கு அந்நாட்களில் இருக்கும் என்று கர்த்தர் சொல்கிறார்.

6) ஆறாவது எக்காளம் ஊதப்படுகிறது.

இங்கே இரண்டாவது ஆபத்தை நாம் காண்கிறோம், இயற்கைக்கு அப்பாற்பட்ட இராணுவ சேனையின் தலையில் உள்ள நான்கு தீய தூதர்கள் கட்டவிழ்க்கப்பட்டு, பிசாசின் வல்லமையோடு, பூமியில் மூன்றில் ஒருபங்கு மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.

7) ஏழாம் எக்காளம் ஊதப்படுகிறது.

இப்போது, ஏழு ஆண்டுகால மத்தியில் இந்த மூன்றாம் ஆபத்து வருகிறது.

2.உபத்திரவகாலம் ஏழு ஆண்டுகளின் மத்தியபகுதி

மூன்றரை ஆண்டுகளின் உபத்திரவம், முடிவுக்கு வந்துள்ளது. முதலாவது மற்றும் இரண்டாம் அரைவருட ஏழாண்டு காலத்தின் சிறிய இடைவெளியில் அநேக சம்பவங்கள் நிகழ்வதை நாம் காண்கிறோம்.

i) சாத்தான் வானத்திலிருந்து ஒரேயடியாக பூமிக்கு தள்ளப்படுகிறான் (வெளி.12:7-12) இது பர லோகத்தில் மிகுந்த சந்தோஷத்தையும் பூமியில் மிகுந்த வேதனையையும் ஏற்படுத்துகிறது.

ii) சாத்தானின் தாக்குதலிருந்து இஸ்ரவேலரில் 1.44,000 பேருக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு, இக்காலத்தில் அவர்கள் முத்திரை போடப்படுகிறார்கள் (வெளி.7, 12:13-16).

iii) இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தி கிறிஸ்துவால் யூதருடன் ஏற்படுத்தப்பட்ட உடன் படிக்கை முறிக்கப்படுகிறது (தானி.9:27).

3. உபத்திரவகாலத்தின் கடைசி அரைப்பகுதி

இஸ்ரவேலில் மீந்திருப்பவர்கள் இந்த மிகப் பெரிய உபத்திரவத்தினை வெற்றிகரமாக மேற்கொள்கின்றனர் (வெளி.12:17). அந்திகிறிஸ்துவின் தன்மையும் அவனது நோக்கமும் முற்றிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. அவன் அனைத்து அதிகாரத்தையும் அடைகிறான். அவனது வெற்றிக்குக் காரணம், சாத்தான் மனித உருவமெடுத்து வந்ததுதான். இப்போது தேவனின் கோபகலசம் எதிர்த்து நிற்கும் மனிதர்கள் மேல் ஊற்றப்படுகிறது (வெளி.16:1-21).

i. முதலாம் கலசம்: மிருகத்தின் அடையாளம் தரித்த மனிதர்கள்மேல் கொடிய கொப்புளங்கள் உண்டாகிறது.

ii. இரண்டாம் கலசம்: சமுத்திரம் மனித இரத்தமாக மாறுகிறது. சமுத்திரத்தின் மச்சங் களில் அனைத்தும் மாண்டுபோகிறது.

iii. மூன்றாவது கலசம்: ஆறுகளும் நீரூற்றுகளும் இரத்தமாக மாறுகின்றன. அந்த நாளில் தாகத்தைத் தீர்ப்பதற்கு இரத்தம் தவிர வேறொன்றுமில்லை. இரத்தம் சிந்த தாகமாயிருந்தவர்களுக்குக் குடிப்பதற்கு இரத்தமே உள்ளது.

iv. நான்காம் கலசம்: மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினால் தகிக்கப்பட்டு இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு துன்புற்றதால் முன்பைவிட அதிகமாக தேவனைத் தூஷித்தார்கள்.

v. ஐந்தாம் கலசம்: மிருகத்தின் இராஜ்யம் மற்றும் மனிதர்கள்மேல் இருள் சூழ்ந்தது. சூரியனின் மிகுந்த வெப்பத்தினால் ஏற்பட்ட புண்களின் வேதனையால் தங்கள் நாவுகளை கடித்துக் கொள்வார்கள். (இது எப்படி இருக்கும் என்பதின் இது தோற்றத்தினை அணுகுண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட பயங்கரங்களில் கண்டுள்ளோம்) இந்நாட்களில் வேதனை அதிகரிக்கிறது.

vi. ஆறாம் கலசம்: ஐபிராத் நதி வற்றி போயிற்று. அது அர்மகெதோன் யுத்தத்திற்கு கிழக்கிலிருந்து ஆற்றைக் கடக்க ஆயத்தமாவதற்கு வழி ஏற்படுத்துகிறது (ஏசாயா 11:15,16 பார்க்கவும்).

vii. ஏழாம் கலசம்: பூமியில் மிகப்பெரிய அதிர்ச்சியுண்டானது. சுமார் 100 பவுண்டு எடையுள்ள கல்மழையும் புயலும் வந்தது. பழைய ஏற்பாட்டில் தேவனுடைய பிரமாணத்தின்படி தேவ தூஷணம் செய்தவர்கள் எவ்வாறு கல்லெறியப்படுவர் என்பதை அது நமக்கு நினைப்பூட்டுகிறது. இங்கே தேவனே வந்து பரலோகத்தின் கற்களால் கல்லெறிகிறார்.

4. ஏழு தண்டனைகளும் அர்மகெதோன் யுத்தமும்

கிறிஸ்துவும் அவருடைய பரலோக சேனையும் வரும்போது, பெரிய அர்மகெதோன் யுத்தமும் அதின் விளைவுகளையும் நாம் சந்திப்போம்.

அ) பாபிலோனுக்கான தண்டனை (வெளி.17,18)

1.புறஜாதிகளின் உலக வல்லமைகளின் அழிவு (தானியேல் 2:35,36,44,45).

2.கிறிஸ்தவத்திற்கெதிரான கடைசிவடிவ துரோகம் அழிக்கப்படுதல் (வெளி.3:14-18; 18:1-8).

3.தேசங்களுக்கான நியாயத்தீர்ப்பு(மத்.25:3-46: மாற்கு 13:24-27).

ஆ) மிருகத்திற்கான தண்டனை (அந்திகிறிஸ்து)

அக்கினிக்கடலிலே அவன் தள்ளப்படுகிறான் (வெளி.19:20).

இ) கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கான தண்டனை:

அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்படுகிறான் (வசனம் 20).

ஈ) பூமியின் இராஜாக்களுக்கான தண்டனை:

அவர்கள் பட்டயத்தால் கொல்லப்பட்டு ஆகாயத்து பறவைகள் பெரிய விருந்திற்காக கூடிவருகின்றன. (வச.18)

உ) கோகு மற்றும் மாகோகுக்கான தண்டனை: (20:7-9)

ஊ) சாத்தானுக்கான தண்டனை:

அவன் கட்டப்பட்டு ஆயிரம் வருட காலம் பாதாளக்குழியில் தள்ளப்படுகிறான், இது நிச்சயமாகவே உபத்திரவ காலத்திற்கு முடிவினை கொடுக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சாத்தான் கொஞ்சக் காலம் விடுவிக்கப்படுகிறான் (வச.20).

எ) மரித்த அவிசுவாசிகளுக்கான தண்டனை: (வச.11-15).

(தொடரும்)

மொழியாக்கம்: Bro. A.Manuel