ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

நமது பாவங்களை போக்கி நம்மை இரட்சிக்கும்படியாக இவ்வுலகில் வந்த இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடம் முழுவதும் நம்மை வழிநடத்தின அன்பின் தேவனுக்கு மகிமை உண்டாவதாக! வருகிற புதிய ஆண்டு நமது குடும்பத்திற்கும் நமது ஊழியத்திற்கும் ஒரு ஆசீர்வாதமான ஆண்டாய் அமைய வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன ஊழியப்பணிக்கு உதாரத்துவமான காணிக்கையை அனுப்பிவைத்த அன்பர்களுக்கும், வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியத்தை Sponsor செய்த அன்பு ஆதரவாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இவ்வருடத்தில் அட்டவணைப்படி வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்கவும். உங்கள் பெயர்களைத் தியானபுஸ்தகத்தில் பிரசுரிப்போம். புதிய வருடத்தில் வேதாகமத்தை வாசிப்பதற்கு இன்னும் அநேகர் தீர்மானிக்க வேண்டுதல் செய்கிறோம். 2013 ஆம் ஆண்டு காலண்டர் அச்சுப்பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பங்காளர்களுக்கு காலண்டர் அனுப்பிவைக்கப்படும்.

சத்தியவசன கீத ஆராதனை வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மதுரையிலுள்ள மேலவாசல் ஆலயத்தில் நடத்த ஒழுங்கு செய்துள்ளோம். மதுரையிலும் சுற்றுப்புறத்திலுமுள்ள பங்காளர்கள் தவறாமல் கலந்துகொள்ள அன்பாய் அழைக்கிறோம்.

இவ்விதழில் “விசுவாசித்தவளே பாக்கியவதி” என்ற தலைப்பில் மரியாளின் வாழ்க்கையிலுள்ள அருமையான சத்தியங்களை திருமதி மெடோஸ் எழுதியுள்ளார்கள். டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் “அன்றும்.. இன்றும்..” என்ற தலைப்பில் கிறிஸ்துமஸ் பாடல்கள் உருவான சம்பவங்களோடு உள்ள செய்தியை அளித்துள்ளார்கள். ‘சிமியோனின் வாழ்க்கையிலிருந்து’ அருமையான சத்தியங்களை சகோ.பிரேம்குமார் அவர்களும், ‘கடவுள் நமக்காகவே மனிதனானார்’ என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கட்டுரையும். ‘ராஜாவை வழிபட்டார்கள்’ என்ற தலைப்பில் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் அளித்த செய்தியும், ‘தேவன் நம்மை நடத்தும் விதத்தை’ப்பற்றி சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த செய்தியும் மேலும் புதுவருட செய்தியும் இடம்பெற்றுள்ளது, இச்செய்திகள் யாவும் தங்களுக்கு ஆசீர்வாதமாகவும் பயனுள்ளதாகவும் இருக்க ஜெபிக்கிறோம், பங்காளர்கள் நேயர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்