விசுவாசித்தவளே பாக்கியவதி!

திருமதி.மெடோஸ்
(நவம்பர்-டிசம்பர் 2012)

அநேக கல்விமான்கள், ஞானிகள், ராஜாக்களின் பிறப்பின் வரலாற்றைச் சரித்திரமாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்பின் வரலாறோ மற்றெல்லா சரித்திர சம்பவங்களையும்விட வித்தியாசமும், அற்புதமுமானதொன்றாகும். ஆகவேதான் கடந்த 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் அவரின் பிறப்பை ஞாபகார்த்தமாக, வருடா வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அவரவர் தங்கள் திராணிக்கத்தக்கதாக ஆசரித்து வருகின்றனர்.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் சரித்திரத்தில் அற்புதமான அம்சம் யாதெனில், அவர் ஓர் கன்னிகையின் வயிற்றில் உற்பத்தியாகி பிறந்ததேயாகும். இதைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசி பின்வருமாறு கூறியுள்ளார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசா.7:14). இத்தீர்க்கதரிசனம் 2000 ஆண்டுகளுக்கு முன் நிறைவேறியது.

நம் ஆதித்தாயான ஏவாளின் கீழ்ப்படியாமையே, மனுக்குலத்தின் மீதான சாபத்திற்கு காரணமாய் அமைந்தது. ஏவாள் தேவ கட்டளையை மீறி பாவம் செய்தாள். “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோம.6:23). இந்த மரணத்தை ஒழித்து நித்திய ஜீவனை மனுக் குலத்திற்குக் கொடுப்பதற்காக தேவ குமாரன் ஒரு கன்னிகையின் வயிற்றில் உருவாகுவதற்கு மரியாள் தேவவார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னை ஒப்புக்கொடுத்தாள்.

ஒருநாள் மரியாள் இருந்த வீட்டிற்குள் தேவதூதன் பிரவேசித்து: “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” (லூக்.1:28-33) என்று கூறியபோது, “இது எப்படி யாகும்? புருஷனை அறியேனே” என்றாள் (வச.34) மரியாள்.

“தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.. .. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். உடனே மரியாள்: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்” (லூக்.2:35-37).

புதிய ஏற்பாட்டு பெண்ணான மரியாளுடன் பழைய ஏற்பாட்டு பெண்ணான சாராளை ஒப்பிட்டுப் பார்ப்போமாயின் அநேக வித்தியாசங்களை நம்மால் கவனிக்க முடியும். சாராள் கணவனை அறிந்தவள். ஆனால் மரியாளோ கணவனை அறியாதவள். தேவ வார்த்தையைக் கேட்டபோது சாராள் நகைத்தாள். ஆனால் மரியாளோ விசுவாசித்தாள். “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” என கர்த்தர் அவளிடத்தில் கேட்குமளவிற்கு சாராள் சந்தேகமும் அவிசுவாசமும் உடையவளாய் இருந்தாள். முதலிலேயே தன் அடிமைப் பெண்ணான ஆகாரைத் தன் கணவனாகிய ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்து, அவனது விசுவாசத்துக்கும் இடறலாக இருந்தாள். ஆனால் மரியாளோ தேவனுடைய வார்த்தையை முற்றிலுமாய் நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, ஏவாளின் கீழ்ப் படியாமையினால் வந்த சாபத்தைப் போக்கும் தேவ குமாரனைப் பெற்றெடுத்தாள்.

கன்னிகையாகிய மரியாள் யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கும்போதே கர்ப்பவதியானாள். கணவன் சந்தேகப்படுவான், உற்றார், உறவினர் நிந்திப்பார்கள், பரிகாசத்தையும், அவமானத்தையும் சந்திக்க நேரிடும் என்பதைப் பற்றியெல்லாம் பொருட் படுத்தாது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தன்னை முற்றிலுமாய் ஒப்புக் கொடுத்தாள். “உமது வார்த்தையின்படி ஆகக் கடவது” என்றாள். மரியாள் இவ்விதமாக தன்னை ஒப்புக்கொடுத்து தேவனின் வார்த்தையை விசுவாசித்தபடியினாலேயே “விசுவாசித்தவளே பாக்கியவதி” என்றும், “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று ஒரு முறை தேவதூதனாலும், மறுமுறை எலிசபெத்தினாலும் வாழ்த்துதல் பெறும் சிலாக்கியத்தைப் பெற்றாள்.

கர்த்தருடைய வார்த்தை செவியில் தொனிக்கும்போது சாராளைப்போல நகைத்து, இருதயத்திலே சந்தேகிக்காது, மரியாளைப் போன்று “உம் வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று முற்றிலுமான கீழ்ப்படிதலுடனும், விசுவாசத்துடனும் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலகனாகப் பிறந்த இயேசுகிறிஸ்துவை, இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் விசுவாசித்து ஏற்றுக்கொள்வோம். அவரே நம்முடைய பாவங்களை கல்வாரியில் சுமந்து தீர்த்து நமக்காக இரத்தம் சிந்தி நம்மை மீட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் பற்பல ஆயத்தங்களைச் செய்வது வழக்கம். வீட்டை அலங்கரிப்பதும், பல்சுவை உணவுகளைத் தயாரிப்பதும், புதிய ஆடைகளை அணிவதும், சிலர் குடித்து வெறித்து பண்டிகையை ரசிப்பதும் வழக்கம். ஆனால் நாம் இவ்விதமான உலகப்பிரகாரமாக அல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக கொண்டாட வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

இயேசுவின் பிறப்பின் அர்த்தத்தை உண்மையாக உணர்ந்து பண்டிகையை ஆசரிப்பதே மேன்மை. அப்போது மட்டுமே நாம் பண்டிகையின் உண்மையான இன்பத்தை அனுபவித்து மகிழக்கூடியதாக இருக்கும்.

அதுமட்டுமல்ல, நமது கொண்டாட்டம் புறமதஸ்தருக்கு சாட்சியாகவும் அமையும். இவ்விதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தேவன்தாமே உங்களுக்கு அருள்புரிவாராக!

(மறுபதிப்பு)
சத்தியவசனம்