தேவன் நம்மை நடத்தும்விதம்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(நவம்பர்-டிசம்பர் 2012)

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய வாழ்விலே மறக்கமுடியாத ஒரு காரியமாகும். கிறிஸ்து பிறந்த இந்த பண்டிகை காலங்களை நாம் கொண்டாடும்போது நம்முடைய வாழ்க்கையிலே சந்தோஷமும், மனநிறைவும் ஏற்படுகின்றது. இந்த நாட்களிலே நம் ஆண்டவர் மனிதனை எவ்வாறு வழிநடத்துகிறார், அவர் வழிநடத்துவதற்கு என்னென்ன ஏதுவான காரியங்களை பயன்படுத்துகிறார் என்பதை இச் செய்தியில் நான் கூற விரும்புகிறேன். மத்தேயு 2 ஆம் அதிகாரத்திலே நான்கு காரியங்கள் மூலமாக மனுமக்களுக்கு தம்முடைய சித்தத்தை திட்டத்தை ஆண்டவர் வெளிப்படுத்தி நடத்துகிறதை நாம் பார்க்கலாம்.

நட்சத்திரம்:

“யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்.2:2). அருமையானவர்களே, சாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டு அங்கு யூதருக்கு இராஜா பிறந்திருக்கிறார் என்று, எருசலேமை நோக்கிக் கடந்துவருகிறார்கள். ஆகவே, ஆண்டவர் இயற்கை மூலமாகவும் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறார். பாருங்கள்; படைப்பாளரைக் குறித்து படைப்புகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நானும் நீங்களும் நற்செய்தி ஊழியத்தை செய்கிறோமோ, செய்யவில்லையோ இன்று வானமும் பூமியும் அவருடைய வல்லமையை அதிகாரத்தை ஞானத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் படைப்புகளை நாம் ஆராதித்துவிடக்கூடாது. நட்சத்திரங்களை நாம் ஆராதித்துவிடக்கூடாது. படைப்புகள் வழியாக ஆண்டவர் தான் எண்ணுகிற திட்டத்தை, செய்தியை மனுமக்களுக்கு அவர் சொல்லிக்கொண்டே வருகிறார்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவானவர் பிறக்கும்போது ஒரு நட்சத்திரம் அங்கு தோன்றியது. அந்த நட்சத்திரத்தை கணித்தவர்கள் “யூதருக்கு இராஜா பிறந்திருக்கிறார்” என்று அறிந்தார்கள். பின்பு அவர்கள் அந்த நட்சத்திரத்தை பின் பற்றியே கடந்து வருகிறார்கள். ஆனால் நடந்தது என்ன? அவர்களுடைய தவறான கணிப்பு இராஜா அரண்மனையில் பிறந்திருப்பார் என்று எண்ணி விட்டார்கள். ஆகவே அரண்மனையிலே போய் தேடினார்கள். ஆனால் இயேசுபாலகன் அங்கு இல்லை. அப்போது இராஜாவாக இருந்த ஏரோது கலங்க ஆரம்பித்தான். அவன் குழப்பமடைய ஆரம்பித்தான். மறுபடியுமாக அந்த சாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டு சந்தோஷமடைந்தனர். “..இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது. .. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, .. அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” (மத்.2:11).

அருமையானவர்களே, ஆண்டவர் நட்சத்திரத்தின் மூலமாக இயற்கையின் படைப்புகள் மூலமாகவும் தம் சித்தத்தை வெளிப்படுத்த முடியும்.

சொப்பனங்கள்:

இரண்டாவது, ஆண்டவர் சொப்பனங்களின் மூலமாகவும் அல்லது தரிசனங்களின் மூலமாகவும் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தமுடியும். மத்தேயு1 மற்றும் 2ஆம் அதிகாரங்களை வாசிப்பீர்களானால் அங்கு சொப்பனங்கள் மூலமாக ஆண்டவர் தம்முடைய திட்டத்தை வெளிப்படுத்துகிறார். யோசேப்புக்கு சொப்பனத்தின் மூலமாக அவர் திட்டத்தை வெளிப்படுத்தினார். அருமையானவர்களே இந்த சொப்பனங்கள் எல்லாருக்கும் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. சொப்பனங்கள் எங்கிருந்து வருகிறது, எவைகளிலிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்கவே நமக்கு அநேக நேரங்கள் ஆகிவிடுகின்றன.

தேவதூதர்கள்:

மூன்றாவதாக, ஆண்டவர் தம்முடைய வேலைக்காரர்களாகிய தம்முடைய தூதர்களை அனுப்பி தன் சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். “பகலில் ஏறக்குறைய ஒன்பதாம் மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங் கண்டு…” (அப்.10:3) கொர்நேலியுவுக்கு ஆண்டவர் அதை வெளிப்படுத்தினார். அதேபோல யோவான் ஸ்நானகனுடைய தகப்பன் சகரியாவுக்கு (லூக்.1:11-13) வெளிப்படுத்தினார். மரியாளுக்கு அங்கு வெளிப்படுத்தப்பட்டது(லூக்.1:28).

திருவசனம்:

இந்த மூன்றைக் காட்டிலும் இன்னொரு முக்கியமான காரியத்தின் மூலமாக ஆண்டவர் நம்மை வழிநடத்துகிறார். மத்தேயு 2ஆம் அதிகாரத்திலே அப்பொழுது கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அந்த இராஜா விசாரிக்கிறார். அப்பொழுது மதப் பெரியவர்கள், வேதபாரகர்கள் எல்லாரும் வேதத்தை எடுத்துக்கொண்டுவந்து வேதத்தை ஆராய்ந்து பார்த்தபோது, கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று கண்டுபிடித்தார்கள். “யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்” (மத்.2:6). அப்படியானால் எழுதப்பட்ட வார்த்தைகளின் மூலமாக ஆண்டவர் தம்முடைய திட்டத்தை, நோக்கத்தை சரியாக மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். இவைகளுக்கெல்லாம் மேலாக நம்முடைய கையிலே பரிசுத்த வேதாகமத்தை தேவன் தந்துள்ளார். இந்த எழுதப்பட்ட வேதாகமத்திற்கு மிஞ்சின ஒரு வெளிப்படுத்தல் இந்த உலகத்திலே எங்கும் கிடையாது. இதற்குள்ளேதான் ஆண்டவர் தம்மையும், தம்முடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். இந்த பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இந்த வசனத்தின் மூலமாக ஆண்டவரின் திட்டத்தைப் புரிந்து கொள்கிறோம். வேத வசனத்தினூடாக ஆண்டவர் தமது நோக்கத்தை, சித்தத்தை, திட்டத்தை இன்றைக்கும் மக்களுக்கு வெளிப்படுத்த வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

அருமையானவர்களே, தேவன் நம் கையில் தந்துள்ள எழுதப்பட்ட வேதாகமத்தை உதறிவிட்டு, வேறு எந்த வகையினாலும் தேவனுடைய வெளிப்பாட்டை நீங்கள் அறிந்துகொள்ளவே முடியாது. மனிதன் மூலமாய் வருகிற வெளிப்படுத்தல்கள், வழிநடத்துதல்கள் எல்லாம் குறைவுள்ளது. ஆனால், சத்தியவேதத்தின் மூலமாய் வருகிற வழிநடத்துதல்கள் குறைவற்றது. என்னுடைய 30 ஆண்டுகள் ஊழியத்திலே நான் கற்றுக் கொண்ட பாடம் என்ன தெரியுமா? வசனத்தின் மூலமாக நாம் வழிநடத்தப்பட வேண்டும். வசனத்தை கற்றுக்கொள்ள வேண்டும். வசனத்திற்குள்ளாக சென்று ஆண்டவரின் நோக்கத்தை இருதய துடிப்பை புரிந்துகொள்ள வேண்டும். மத்தேயு 1 மற்றும் 2 ஆம் அதிகாரத்திலே இவ்வளவையும் எழுதி வைத்துவிட்டு, அங்கே வசனத்தை ஆண்டவர் முக்கியப்படுத்துகிறார். வசனத்தின் மூலமாக அவர் தெளிவாக நடத்துகிறார். நட்சத்திரங்களைக் காட்டிலும், சொப்பனங்களைக் காட்டிலும், தூதர்களைக் காட்டிலும் திருமறை வசனமே முக்கியமானது.

சத்தியவசனம்