அன்றும்… இன்றும்…

Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2012)

சத்தியவசன வாசகர்களுக்கு இறைமகன் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என்னுடைய அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இவ் வருடமும் கிறிஸ்து பிறந்த பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்து பிறப்பு எப்படி இருந்ததோ, அதுபோலவே இவ்வருடமும் இருக்க நான் விரும்புகிறேன்.

காலங்கள் கடந்தோடும்பொழுது நாகரிகம் மாறுகிறது; தொழில் நுட்பம் மாறுகிறது; பல காரியங்கள் மாறுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடும் முறைமைகளும் மாறுகின்றன. வீட்டை அலங்கரிக்கும் முறை வேறுபடுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மாறுபடுகின்றன. ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிறந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் மாறாமல் இருக்கும் காரியம் எது? என நான் வியந்ததுண்டு.

வேதாகமத்தில் பரி.லூக்கா என்பவரது நற் செய்தி நூலின் இரண்டாவது அதிகாரத்தில் கிறிஸ்துவின் பிறப்பினைக் குறித்து வாசிக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி இது. கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் இதனை நான் வாசித்து மகிழ்வதுண்டு. அன்றிலிருந்து இன்றுவரை மாறாத காரியங்கள் எவை என்பதை லூக்கா 2:1-11 வேதபகுதியின் துணையுடன் நாம் ஆராய்வோம். இதில் 10 மற்றும் 11 ஆகிய வசனங்களை வேதாகமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வசனங்களில் ஒன்றாகக் கருதலாம்.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படா திருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லுக்.2:10-11).

இவ்வசனம் மாத்திரம் நமக்கு தரப்படாவிட்டால் – தேவன் நமக்கு ஓர் இரட்சகரை தந்தருளாவிட்டால், நம் மனுக் குலத்தின் நிலை என்ன என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! எனவே இவ்வசனத்தை சக்தி வாய்ந்த ஒரு வசனம் என நான் கருதுகிறேன். மேலும் கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

“பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள் (லூக்.2:12-14).

தேவதூதன் மேய்ப்பர்களுக்கு இரட்சகரின் பிறப்பின் செய்தியை அறிவிக்கிறார். மேய்ப்பர்கள் அத்தூதனுக்கு மறுமொழி அளிக்குமுன் பரம சேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றினர். அவ்விடம் முழுவதும் தூதர் கூட்டங்களால் நிறைந்தது. திரளான தேவ தூதர்கள் தேவனைத் துதித்தார்கள். காலப் போக்கில் இத்தூதர்களின் செய்தியை வைத்து அநேக கிறிஸ்மஸ் கீதங்களும் இயற்றப்பட்டன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் கிறிஸ்துவின் பிறப்பு மாந்தர் அனைவருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. விழாக்கால பரிசுகளோ, விருந்துகளோ மகிழ்வைத் தருவதில்லை. ஆம், “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்ற செய்தியே மகிழ்ச்சியைத் தருவதாகும்.

மனுக்குலத்துக்கு மீட்பை அளிக்கவந்த இரட்சகரின் பிறப்பு அன்றும் இன்றும் என்றென்றும் மகிழ்வினைத் தரும் நற்செய்தியாகும். அம்மகிழ்ச்சியினைக் கீதங்களாக்கி நாம் பாடி மகிழ்கின்றோம். அவ்வாறான பாரம்பரிய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே சிந்திப்போம். இங்கிலாந்து தேசத்தின் பிரைட்டன் நகரில் உள்ள தூய மாற்கு ஆங்கிலிக்கன் ஆலயப் போதகரின் மகள் எமிலி எலியட் என்பவர். இவர் சிறுவர்களுக்கு கிறிஸ்து பிறப்பின் உண்மையைப் போதிக்க ஒருபாடலை இயற்றினார். அதன் பொருளாவது:

“விண்லோகம் துறந்து, இராஜ கிரீடம் இழந்து
மண்ணில் மகவாய் வந்தீர் ஏழைப் பாலகனாக,
பெத்தலையின் சத்திரத்திலும் உமக்கு இடமில்லையே!
விண்தூதர் தோன்றி, தூதர்சேனை துதித்திட
உம்வருகை அறிவிக்கப்பட்டாலும், நீரோ
தாழ்மைக் கோலத்தில் முன்னணையில் எனக்காய்ப் பிறந்தீரே!
வெற்றி வேந்தராய் மீண்டும் மேகங்கள் மீது
கோடா கோடி தூதர் ஆர்ப்பரித்திட மகிமையுடன்
வரும்வேளை, ” என்னிடத்தில் இடமுண்டு
வா” என்றே என்னையும் அன்புடனே அழைத்திடுமே!”

இப்பாடலுக்கு பல்லவியாக:

“எந்தன் இதயத்தில் உமக்கு இடமுண்டு இயேசுநாதா
அங்கே நீர் தங்கிடுமே என் ஆண்டவா!” என்று எழுதியுள்ளார்.

பெத்லெகேம் சத்திரத்தின் முன்னணையில் பிறந்த இயேசு ஒரு சாதாரண மகவு அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு தலைவரும் அல்லர். எமிலி எலியட் பாடியது போல “என் இதயத்தில் உமக்கு இடமுண்டு” என்று நீங்கள் சொல்வீர்கள் எனில், அன்று திரளான தூதர்கள் கூடி, உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமா தானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று பாடின அந்த மகிழ்ச்சி இன்று உங்களையும் நிரப்பும்.

கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுகள், கிறிஸ்துமஸ் தாத்தா, விடுமுறை, குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் என்றே பலர் எண்ணுகின்றனர். ஆனால் இவைகள் உண்மையான மகிழ்ச்சியைத் தராது. தாவீதின் ஊரிலே பிறந்த இயேசுகிறிஸ்துவை உங்களுடைய இரட்சகர் என்று ஏற்றுக்கொள்வதே மெய்யான சந்தோஷம்.

எமிலி எலியட்டின் பாடல் மற்ற கிறிஸ்து மஸ் கீதங்களிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மாத்திரமல்ல, அவருடைய வாழ்வு, பாடுகள், மரணம் மற்றும் அவருடைய இரண்டாம் வருகையைப் பற்றியும் தெரிவிக்கிறது. இவ்வுலகில் கிறிஸ்து பாலகனாகப் பிறப்பது மாத்திரம் செய்தி அல்ல; அவர் மறுபடியும் இராஜாதி இராஜனாக வருவார் என்பதையும் அறிவிக்கிறார். இயேசு கிறிஸ்து நித்தியர் என்ற சத்தியம் தரும் மகிழ்ச்சியை இப்பாடல் எடுத்துரைப்பதால் இது இன்றும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகூம் டாதே என்பவர் டப்ளின் திரித்துவக் கல்லூரியில் படித்தார். வில்லியம் அரசர், மேரி அரசி காலத்தில் பிரிட்டன் தேசத்து அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவான காலத்திலிருந்து இவர் எழுதிய இப்பாடல் இன்றும் உலகம் அனைத்தும் பாடப்படுகிறது.

அப்பாடல் இதோ:

“இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க விண்ஜோதி கண்டனர்.
அவர்கள் அச்சம் கொள்ளவும் விண்தூதன்:
திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம் நற்செய்தி கூறுவேன்.’
மாஉன்னதத்தில், ஆண்டவா, நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும் நல்லோர்க்கு ஈகுவீர்.”

நீங்களும் நானும் கிறிஸ்துமஸ் காலத்தில் பல புதிய கீதங்களையும் பழைய கீதங் களையும் பாடுகிறோம். இவை அனைத்தும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிறந்ததால் உண்டாகும் மகிழ்ச்சியையே அறிவிப்பதாய் உள்ளன.

“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்”. ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை நியாயந்தீர்க்க அல்ல, இரட்சிப்பதற்காகவே முதன்முறை இவ்வுலகில் வந்தார் என்று லூக்கா 2ஆம் அதிகாரத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளுகிறோம். இக்கருத்தை நாம் தவறவிடுவோமானால் இயேசுகிறிஸ்து இரட்சகர் என்பதையும் நாம் அறியாதுபோகிறோம்.

ஒரு குழந்தைக்கு ஒரு பரிசினை அளிக்கும் போது அது இன்பமடைகிறது (happiness). ஆனால் பரிசுகளோ பணமோ எதுவுமே இல்லாதபொழுதும் இயேசுவை நம்பி வாழுவதே மகிழ்ச்சி (joy).

வெளிப்படையான ஒரு பரிசுப்பொருளைப் பெறும்பொழுது இன்பமுண்டாகிறது. ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்களது உறவினைப் பொறுத்து மகிழ்ச்சி உண்டாகிறது. இன்பமானது இறுதிவரை இருக்காது; அது அழிந்துவிடக் கூடியது. நம்முடைய உடைமைகள் அனைத்தும் ஒரு நிலையில் இழந்து போகக்கூடியதே. ஆனால் மகிழ்ச்சி நிலைத்து நிற்கக் கூடியது. கிறிஸ்து ஒருவரே மாறாத சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறவர். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் கிறிஸ்துமஸ் எவ்வாறு மகிழ்ச்சியைத் தருகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.

எட்மண்ட் சீயர்ஸ் என்பவர் எழுதிய மற்றொரு கீதத்தை நாம் ஆராய்வோம். விண் தூதர்களின் சந்தோஷத்தை மையப்படுத்தி இப்பாடலை அழகாக விவரித்துள்ளார்.

நள்ளிரவில் மா தெளிவாய் மாண் பூர்வகீதமே
விண்தூதர் வந்தே பாடினார் பொன் வீணை மீட்டியே;
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம் ஸ்வாமி அருளாலே”
அமர்ந்தே பூமி கேட்டதாம் விண்தூதர் கீதமே.

அன்று உலகம் தூதர்கள் பாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான்காவது சரணத்தில்,

பார் வாழ்க்கையின் மா பாரத்தால் நைந்து தவிப்போரே,
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து தள்ளாடிடு வோரே
நோக்கும், இதோ உதித்ததே மாநற் பொற்காலமே!
நோவை மறந்து கேட்டிடும் விண்தூதர் கீதமே.

என்று எழுதியுள்ளார்.வாழ்க்கையின் மாபாரம் என்பது, சரீர நோயாகவோ, மனக்கவலையாகவோ, குடும்பப் பிரச்சனையாகவோ, பொருளாதார இழப்பாகவோ, உங்களுக்கு அன்பானவர்களை இழந்த வருத்தமாகவோ இருந்தாலும், இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நீங்கள் உங்கள் நோவுகளை மறந்து தூதர்களின் பாடலை கேளுங்கள் என்கிறார்.

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று தூதர்கள் பாடின பாடலை மீண்டும் கவனியுங்கள். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று தேவன் அம்மேய்ப்பர்களுக்கு அறிவித்தார். நீங்கள் இந்த காலங்களிலே கவலைகளில் அமிழ்ந்து இருப்பீர்கள் எனில், தேவதூதன் கூறின அந்த சந்தோஷ செய்தியை ஆராய்ந்துபாருங்கள். கிறிஸ்து பிறப்பின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். இரட்சகருடனான உறவில்தான் நித்திய மகிழ்ச்சி நமக்கு உண்டு.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்