வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்தவர் சிமியோன்

சகோ.ஆ.பிரேம் குமார்
(நவம்பர்-டிசம்பர் 2012)

உங்கள் வாழ்வின் ஓட்டத்தை நீங்கள் எப்படி முடிக்கவிரும்புகிறீர்கள்? உங்கள் வாழ்வில் எதனை சாதிக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் மரிக்கும்போது தேவன் என் வாழ்வில் வைத்திருந்த இலக்கை அடைந்தேன், என் பணியை நிறைவுசெய்தேன், இனி நான் மரிக்கத் தயார் என்று கூறும்விதமாக இவ்வுலக வாழ்வை முடிக்க விரும்புகிறீர்களா? சிமியோனின் வாழ்வில் உங்களுக்கும் ஓர் செய்தியுண்டு.

நான் ஆண்டவருக்காக காரியங்களை செய்ய ஆசையுண்டு. ஆனால் எனக்கு வயது போய்விட்டது. உடல் பெலவீனமாகிவிட்டது. இனி என்னால் ஏது செய்யமுடியும் என்கிறீர்களா? உங்களுக்கும் சிமியோனின் வாழ்விலிருந்து ஒரு செய்தியுண்டு.

1. ஆண்டவரின் ஆவியினால் நடத்தப்பட்டவர்

“அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார்” (லூக். 2:25).

“கேட்டல்” என்ற அர்த்தமுடைய பெயரைக் கொண்ட சிமியோன் என்ற மனிதர் எருசலேமில் இருந்தார். அவர்மேல் பரிசுத்த ஆவி இருந்தார். புதிய ஏற்பாட்டில் பெந்தெகொஸ்தே நாளின் பின்பு பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் நிரந்தரமாகத் தங்கும்படி வந்திறங்கினார் (யோவா.14:14, அப்.2, எபே.1:13). ஆனால் அதற்கு முன்பும் பழைய ஏற்பாட்டிலும் பரிசுத்த ஆவியானவர் தமது சில குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக குறிப்பிட்ட சிலர்மேல் வந்திறங்கினார் (ஆதி.41:38, எண்.11:25), யோசுவா (உபா.34:9), பெசலெயேல் (யாத்.31:1-5), தானியேல் (தானி.1:17), ஒத்னியேல் (நியா.3:10), கிதியோன் (நியா.5:31-35), யெப்தா (நியா.11:29), சிம்சோன் (நியா.13:25, 14:19, 15:14), சவுல் (1சாமு.10:9-10), சவுலின் சேவகர்கள் (1சாமு.19:23), தாவீது (1சாமு.16:13), அமாசா (1நாளா.12:18), தீர்க்கதரிசிகள் (எசேக்.2:2, 3:12,14, 8:3, 11:24) மேல் பரிசுத்தாவியானவர் வந்து இறங்கியதைக் காண்கிறோம். தேவன் தனது குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட சிலர்மேல் வந்திறங்கினார். பெசலெயேல் என்பவன்மேல் சித்திர வேலை செய்யும் ஞானத்தை அருளும்படி இறங்கினார் (யாத்.31:1-5). யுத்தத்தை நடத்த வல்லமை கொடுக்கும்படி யெப்தாவின் மேலும் (நியா. 11:29), நியாயம் விசாரிக்கவும், யுத்தத்தை நடத்தவும் ஒத்னியேலின் மேலும் (நியா.3:10), ஆளுகைச் செய்யும்படி (வழிநடத்தும்படி) தாவீதின் மேலும் (1சாமு.16:13), அதிகாரப் பூர்வமாக தீர்க்கதரிசன வசனங்களை அறிவிக்க சகரியாவின் மேலும் (2நாளா.24:20) இறங்கினார். பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக குறிப்பிட்ட சிலர்மேல் இறங்கினார். பரிசுத்த ஆவியானவர் ஒருவனை விட்டு எடுபடும் சாத்தியமும் பழைய ஏற்பாட்டில் இருந்தது (சங். 51:11), (1சாமு.16:14).

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் சிலரைப்போலவே சிமியோன்மேலும் பரிசுத்த ஆவியானவர் இருந்தார். அவர் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தேவாலயத்திற்கு வந்திருந்ததாக 27ஆம் வசனத்தில் காண்கிறோம். அது மட்டுமல்ல, “கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது” (லூக்.2:26). ஆவியானவர் அவர்மேல் இருந்தார், அவருக்கு வார்த்தை கொடுத்தார். ஆலயத்திற்கு வரும்படி ஏவினார். ஆம், சிமியோன் ஆண்டவரின் ஆவியானவரால் நடத்தப்பட்டார். ஆவியானவரிடமிருந்து வார்த்தையைப் பெற்றார். ஆவியானவர் நம்மை சொகுசான, பசுமையான பாதையில்தான் வழிநடத்துவாரென்றில்லை. இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது ஆவியானவரால் வனாந்திரத்திற்கு நடத்தப்பட்டார், அங்கு பிசாசினாலே சோதிக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் நம்மை வனாந்தரவழியாக, கரடுமுரடான கடினமான பாதைக்கூடாக, வேதனைக்கூடாகக்கூட வழிநடத்தலாம்.

“ஆம், நீண்டகால செயற்திறன் மிக்க ஊழியமானது ஆவியின் நிறைவினால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையின் பிரதிபலனே. உண்மைத்துவமிக்க ஊழியத்திற்கு ஊற்றாயிருக்கும் ஆவியின் நிறைவை இழந்து விடுவேனோ என்பதே எனது அச்சம். நான் மாம்சத்தில் ஊழியத்தை செய்கிறேன் என்பதை ஜனங்கள் ஆரம்பத்தில் கவனிக்கமாட்டார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு எனது அறிவு, அனுபவம், திறமைகளைக் கொண்டு ஜனங்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றோம். ஆனால் தேவனுடைய இராஜ்ஜியத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் செயற்திறன் மிக்கவர்களுக்கான விதிமுறைகளிலிருந்து நான் தள்ளிவிடப்படுவதோடு, தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறும் சேவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன்” என்கிறார். இந்தப்பகுதி என் உள்ளத்திலும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.

இதனை வாசிக்கும் சகோதரனே! சகோதரியே! உங்கள் வாழ்வு ஆவியானவரின் ஆளுகைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட வாழ்வாயிருக்கிறதா? ஆவியானவரால் நடத்தப்படும் வாழ்வாயிருக்கிறதா? வழிநடத்துதலுக்கும் முழுவதும் விட்டுக்கொடுத்த வாழ்க்கையாயிருக்கிறதா? அல்லது மாம்சத்தினால் நடத்தப்படும் வாழ்வாயிருக்கிறதா? நீங்கள் செய்யும் ஊழியம் ஆண்டவரின் ஆவியின் பெலத்தால் செய்யப்படுவதா? அல்லது மாம்ச பெலத்தால் செய்யப்படுவதா?

இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் தேவ ஊழியர் அஜித் பெர்னாந்து பின்வருமாறு எழுதுகிறார்: “என்னுடைய வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் மாம்சத்தால் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருந்ததையும் மாம்ச பெலத்தில் ஊழியம் செய்ய நினைத்த சந்தர்ப்பங்களும் இருந்திருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்” என்று எழுதியிருந்தார்.

ஆவியானவரின் ஆளுகைக்குள் ஜீவித்த சிமியோனுடைய வாழ்வில் காணப்பட்ட இரண்டு குணாதிசயங்களை லூக்கா எழுதுகிறார்: “அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும்…” (லூக்.2:25).

அ. அவர் நீதியுள்ளவர்

அவர் நீதியுள்ளவராயிருந்தார். ஆண்டவர் நியமித்த நியமங்களின்படி நடந்தவர் (உபா. 6:25) ஆண்டவரின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு ஏற்றவிதமாக ஆண்டவரின் கட்டளைப்படி நடந்து ஆண்டவரோடு சரியான உறவில் இருந்தவர். புதிய ஏற்பாட்டில் நாம் கிறிஸ்துவின் கிருபாதாரபலியை (எமக்குப் பதிலாக பிராயச்சித்த பலி) அடிப்படையாகக் கொண்டு மனந்திரும்பி விசுவாசிக்கும் பாவியை தேவன் மன்னித்து, தனது நீதியை அவனிலே போட்டு அவனை ‘குற்றமற்றவன்’ ‘நீதிமான்’ என்று அறிவிக்கிறார். அவன் பாவத்தை அவர் சுமந்து அவனை நீதிமானாய் ஆக்குகிறார். பவுல் ரோமருக்கெழுதுகையில் “நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:24-25). “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:8,9).

நாம் நீதிமான்களாக வேண்டுமானால் நான் நல்லவன், ஒழுங்காக ஆலயத்திற்கு செல்கிறேன், குடிப்பதில்லை, களவு செய்வதில்லை, விபசாரம் செய்வது இல்லை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. எனவே நான் நீதிமான் என்று எண்ணுவதை நிறுத்தி, நமது நீதியெல்லாம் அழுக்கான கந்தை என்றும், நான் என்னை மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்த்து நான் நல்லவன், அவனைப் போலல்ல என்று மற்றவரோடு ஒப்பிட்டல்ல; கிறிஸ்துவோடு ஒப்பிட்டுப்பார்த்து நாம் பாவி என்று ஒப்புக் கொண்டு பாவத்தைவிட்டு மனந்திரும்பி, (பாவத்தை விட்டுவிடத் தீர்மானத்துடன்) ஆண்டவர் எனக்காக சிலுவையில் மரித்தார், எனது பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்தார் என விசுவாசித்து அவரை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது ஆண்டவர் நம்மை மன்னித்து நீதிமானாக்குகிறார். இதனை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே இந்த அனுபவம் உங்களுக்குண்டா? இல்லாவிடில் மேற்குறிப்பிட்ட விதமாக ஆண்டவரிடம் வருவீர்களா? நமது தேவன் நீதியுள்ளவராயிருப்பதால் அவருடைய ஜனங்களும் நீதி நேர்மையுள்ளவர்களாய், மற்றவர்களுக்கு நீதியும் செவ்வையுமானதை செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறார். நீதிமான் நீதியின் கிரியைகளை நடப்பிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார். வியாபாரச் செயல்களில் உண்மையாயிருக்க, நமக்குக்கீழ் வேலை செய்பவர்களை நீதியாக நியாயமாய் நடத்த, கொடுக்கல் வாங்கல்களில் பிறனுக்கு அநியாயம் செய்யாமலிருக்க ஆண்டவர் எதிர்பார்க்கிறார் (லேவி.25:14).

ஆ. அவர் தேவ பக்தியுள்ளவர்

சிமியோன் நீதிமானாய் மாத்திரமல்ல, தேவ பக்தியுள்ளவருமாயிருந்தார். தேவபக்தியுள்ளவராயிருந்தார் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேக்கச்சொல் நற்பெயருள்ள, நன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட என்ற அர்த்தம் தருகிறது. எனவே சிமியோன் நற்சாட்சியுள்ளவராயிருந்தார். இன்று கிறிஸ்தவர்கள் பலர் நற்சாட்சியை இழந்து காணப்படுவது வேதனைக்குரியது. கடன் வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில்லை, பக்கத்து வீட்டுக்காரர்களோடு அல்லது அலுவலகத்தில் பக்கத்து இருக்கையில் இருப்பவரோடு எப்பொழுதுமே சண்டை, போட்டி பொறாமை, திருமணத்திற்குப் புறம்பான தவறான உறவுகள், உத்தியோகத்தில் உண்மையில்லை. இப்படி நற்பெயரை இழந்து சாட்சிகெட்டு வாழ்பவர்கள் பலர். நாம் நற்கிரியையுள்ளவர்களாக இருக்கவேண்டும். நமக்குத் தேவனோடுள்ள உறவு, தேவ பக்தி மற்ற உறவுகளில் வெளிப் பட வேண்டும். சிமியோன் நம்பியதை நடத்தையில் காட்ட முற்பட்டவர். மற்றவர் முன்னிலையில் தேவமனிதனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

2. ஆண்டவரின் வார்த்தையை பெற்றவர்.

“கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது” (லூக்.2:26). தேவ ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை முற்றிலும் விட்டுக் கொடுத்து, திறந்த மனதோடிருக்கையில் ஆண்டவர் தமது வார்த்தையை அம்மனிதனுக்குக் கொடுக்கிறார். ஆண்டவர் இன்று நம்மோடு எப்படி பேசுகிறார்? சபை மக்களுக்கூடாக, தேவ மனிதருக்கூடாக, சூழ்நிலைகளுக்கூடாக, ஜெபத்தில் காத்திருக்கும்போது, வேத வசனங்களை வாசிக்கும்போது கேட்கும்போது அவர் பேசுகிறார். சிலவேளைகளில் ஆவியானவர் மனதில் ஒரு பாரத்தை ஏற்படுத்தி அதற்கூடாகப் பேசலாம். ஆனால் இவை அனைத்தையும் நாம் தேவ வசனத்தைக்கொண்டு சோதித்துப்பார்க்க வேண்டும். மனிதர்கள் தவறுவிடக்கூடியவர்கள், சூழ்நிலைகள்கூட நம்மை ஏமாற்றலாம். எனவே தேவ வசனத்தில் தங்கியிருப்பது அவசியம். தேவசித்தத்திற்கு கீழ்ப்படிய மனதாய், தேவ வசனத்தைக் கேட்கும்போது, வாசிக்கும்போது ஆண்டவர் பேசுவதை நாம் உணர்கிறோம். வசனத்தை வாசிக்கும்போது திடீரென ஒரு குறித்த வசனம் நம் கவனத்தை ஈர்க்கலாம். அதனூடாக ஆண்டவர் பேசலாம்.

ஹேன்றி பிலக்கபி என்பவர் ஆண்டவர் பேசுவது குறித்து எழுதுகையில் பின்வருமாறு எழுதுகிறார்: “ஆண்டவர் நம்மோடு பேச வேண்டும் என நாம் எதிர்பார்க்கையில், நம்மை ஊக்கப்படுத்தக்கூடிய, நாள் முழுவதும் நமக்கு நம்மைக்குறித்த நல்ல உணர்வைத் தருகிற தான ஒரு சிந்தனைக்குரிய தியானமாக இருக்க வேண்டுமென்றே நாம் எதிர்பார்க்கிறோம். அண்டசராசரத்தின் தேவன் உங்களோடு பேசவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கையில், நீங்கள் இருக்கிற இடத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஆண்டவர் பேசும்போது அவர் ஒரு நோக்கத்தோடு பேசுகிறார் என்றும் நீங்கள் சுயநலமாக செய்ய விரும்புகிறதை வேத வசனங்களும் கூறுகின்ற தென வேதாகமத்தில் அதற்கேற்ற வசனங்களைத் தேடி அதை தேவசித்தமாக எடுக்க வேண்டாம். அது ஆபத்தானது” என்கிறார்.

3. அசையாத ஒரே இலட்சியத்தோடு வாழ்ந்தவர்

சிமியோனின் ஒரே இலட்சியம், கனவு ஆண்டவர் வாக்குப்பண்ணிய கிறிஸ்துவைக் காண்பது, மேசியாவைக் காண்பது என்பதேயாகும். ஆண்டவரின் இந்த வாக்குத்தத்தம் நிறைவேற சிமியோன் பல வருடங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார். அவரது சரீரம் செத்துக் கொண்டிருந்தாலும் அவர் நம்பிக்கை செழித்துக் கொண்டிருந்தது. அந்த இலட்சியத்திற்காகவே அவர் வாழ்ந்தார். அதில் மாத்திரமே கண்ணோக்கமாயிருந்தார்.

இதனை வாசிக்கும் சகோதரனே! சகோதரியே! உங்கள் வாழ்வின் இலட்சியமென்ன? கனவென்ன? அது உங்கள் மாம்சத்தின் இலட்சியமா? அல்லது தேவனால் கொடுக்கப்பட்ட இலட்சியமா, கனவா? இது வெறுமனே பணம், பதவி, பட்டம் சார்ந்ததோ அல்லது இவற்றிலும் மேன்மையானதா? நிலையானதா? உங்கள் சுயநலத்தைச் சார்ந்ததா அல்லது தேவனை மையமாகக் கொண்டதா? ஆண்டவர் கொடுத்த இலட்சியத்தில் முழுமனதையும் செலுத்துவோமா?

இன்று நம்மில் பலர் ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் உடனேயே நிறைவேற வேண்டும் அல்லது சீக்கிரமே நிறைவேற வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை தமது காலத்தில் நிறைவேற்றுவார். பொறுமையோடு நம்பிக்கை யோடு சிமியோனைப் போல காத்திருப்போமா?

4. ஆண்டவரின் சந்தோஷத்தால் நிறைந்தவர்.

பல வருடங்களாக ஒரு காரியத்திற்காக ஜெபித்து இருபது முப்பது அல்லது நாற்பது வருடங்கள் காத்திருப்புக்குப் பின்பு அது நிறைவேறும்போது உங்களுக்கு எத்தகைய மகிழ்ச்சி உண்டாகும். சிமியோன் பலவருடங்கள் காத்திருந்த காரியம் கைகூடியது. இஸ்ரவேலர் பல நூற்றாண்டுகளாக மேசியாவை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பலர் அவரை அரசியல் ரீதியான மேசியாவாக தங்களை அந்நிய நாட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் அரசியல் ரீதியான மேசியாவாகவே நோக்கினார்கள். ஆனால் சிமியோன் போன்ற சிலர் மேசியாவின் உண்மையான நோக்கமறிந்து பொறுமையோடு நம்பிக்கையோடே காத்திருந்தனர்.

சிமியோன் ஆவியானவரால் நடத்தப்பட்டு ஆண்டவரின் வார்த்தையை பெற்றுக்கொண்டது மட்டுமல்ல, அந்த வார்த்தையை மற்றவருக்கும் அறிவித்தார். சிமியோன் பல வருடங்களாக காத்திருந்த மேசியாவைக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” (லூக்.2:28,29).

சிமியோன் தன் வாழ்வின் இலட்சியத்தை அடைந்த மகிழ்ச்சியில் இப்பொழுது மரணத்தைக்கூட சமாதானத்தோடு சந்திக்க ஆயத்தத்தோடு ஆண்டவரை புகழ்ந்து பாடுகிறார். “புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்” (லூக்.2:30-32).

சிமியோனின் இந்த புகழ்ச்சிப் பாடல் “Nunc Dimittis” என்று இன்று அழைக்கப்படுகிறது. அப்பாடலிலே தேவன் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணிய தேவனுடைய இரட்சிப்பைத் தனது கண்கள் கண்டதென்றும் அவர் இஸ்ரவேலருக்கு மகிமை மட்டுமல்ல, புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி என்றும் கூறுகிறார். இது பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் அடிப்படையில் அமைந்த காரியமாகும் (வாசிக்க: ஏசா. 49:6, சங்.98:3, மல்.4:2). ஆம் மேசியாவின் வருகை இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும்தான். அவர் இஸ்ரவேலின் இரட்சகர் மட்டுமல்ல முழு உலகத்தினதும் இரட்சகர்.

இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றில் குறிப்பிடப்படும் ஐந்து பெண்களில் நான்கு பேர் புறஜாதிகள். வேதாகமத்தில் யோனா, பேதுரு போன்றவர்கள்கூட தம் சொந்த இனத்திற்கு அல்லது நாட்டிற்கு வெளியேயுள்ள மக்களை நேசிக்க, தேவ செய்தியை கொடுக்க விரும்பவில்லை. ஆனால் தேவன் நினிவேக்காகவும் மற்ற ஜாதிகளுக்காகவும் பரிதபிக்கிற தேவன். அவர் இஸ்ரவேலரைத் தெரிந்ததின் நோக்கம் அவர்கள் சிறந்தவர்கள் என்றோ அவர்களில் விசேஷ அன்பு கொண்டதனால் அல்ல. அவர் தமது திட்டத்தை நிறைவேற்ற ஒரு ஜாதியை தெரிவுசெய்ய வேண்டியிருந்தது. அந்த ஜாதிக்கு தன்னை வெளிப்படுத்தி அந்த ஜாதிக்கூடாக மற்ற ஜாதிகளை ஆதாயப்படுத்துவதும் உலக இரட்சகரை அந்த ஜாதிக் கூடாக அனுப்புவதும் அவர் நோக்கமாயிருந்தது. யாத்.19:6 முழு இஸ்ரவேலரும் ஆசாரியர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் யாருக்கு ஆசாரியர்கள் மற்ற ஜாதிகளுக்கு ஆசாரியர்கள். ஆசாரியர்களின் பணி என்ன? மற்றவர்களுக்காக தேவனிடம் பரிந்து பேசுவதும், தேவசித்தத்தை வார்த்தையை மக்களுக்குக் கொடுப்பதுமாகும். எனவே இஸ்ரவேலர் மற்ற ஜாதிகளுக்குத் தேவனை அறிவிக்கும் மிஷனெரி தேசமாகத் தெரிவுசெய்யப்பட்டது. மற்ற ஜாதிகளுக்காக ஜெபிக்கிற, தேவவார்த்தையை கொடுக்கிற ஆசாரியராக அழைக்கப்பட்டனர். ஆனால் அதில் அவர்கள் தவறிவிட்டனர்.

இதனை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, நீங்கள் மற்ற இனங்களுக்காக (உ.ம் இஸ்லாமியர்கள்) மற்ற தேசங்களுக்காக (பாகிஸ்தான், மாலத்தீவு, பூட்டான், பங்களா தேஷ்) ஜெபிப்பதுண்டா? அந்த தேசத்தார்கள் கர்த்தரின் இரட்சிப்பைக் காணும்படி ஏதாவது செய்ததுண்டா? இருளில் வாழும் அந்நிய தேச மக்கள் கிறிஸ்துவாகிய ஒளியைக் கண்டு கொள்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று ஆண்டவரிடம் கேட்பீர்களா?

5. ஆண்டவரின் வார்த்தையை அறிவித்தவர்.

“பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்” (லூக்.2:34,35).

சிமியோன் தீர்க்கதரிசனமாக அறிவித்த காரியங்களை மேற்குறிப்பிட்ட வசனங்களில் காண்கிறோம். அநேகர் கிறிஸ்துவைக் குறித்து இடறலடைவார்கள், விழுவார்கள், மற்றவர்கள் எழுவார்கள். ஒரு பட்டயம் மரியாளின் ஆத்துமாவை ஊடுருவும் என்கிறார். இங்கு கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி சிமியோன் முன்னறிவிக்கிறார். அந்த கொடிய மரணத்தை மரியாள் கண்ணால் காணும் கொடிய வேதனையைப் பற்றியே, அவர் இப்படி ஒரு பட்டயம் ஆத்துமாவை ஊடுருவும் எனக் கூறுகிறார். சிமியோன் மேசியாவைப் பற்றியும் அவரது மரணம் பற்றியும், புறஜாதிகள் மேசியாவினால் ஆசீர்வாதமடைவது பற்றியும் அறிவிக்கிறார்.

சிமியோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்

1. ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் கொடுத்த வாக்கை அவர் நிறைவேற்றுவார். எனவே நம்பிக்கையை தளரவிடாமல் விசுவாசத்தோடே காத்திருக்க வேண்டும்.

2. ஆண்டவர் பயன்படுத்துவதற்கு வயது ஒரு தடையல்ல. யோசேப்பு எகிப்தின் அதிபதியானபோது அவருக்கு வயது முப்பது. நாகமானை தேவஊழியனிடம் வழிநடத்தியது ஒரு சிறுமி. மோசே தேவ ஊழியத்திற்கு அழைக்கப்பட்டது 80 வயதில். காலேப் மலைப்பிரதேசத்தை கேட்டபோது அவரது வயது 85. வயது முதிர்ந்த சிமியோன் தாத்தாவை அந்த வயதிலும் ஆண்டவர் பயன்படுத்தினார். அவர் உங்களையும் பயன்படுத்துவார்.

3. பரிசுத்த ஆவியினால் நாம் வழிநடத்தப் படும்படி நம்மை முற்றிலும் அவர் ஆளுகைக்கு விட்டுக்கொடுப்பது அவசியம்.

4. ஆண்டவர் கொடுத்த தரிசனத்தோடு இலட்சியத்தோடு வாழ்வோம். அதற்கென்றே அர்ப்பணமாயிருப்போம். ஒருவேளை ஆண்டவர் உங்கள் வாழ்வில் வைத்திருக்கும் திட்டத்தை இலட்சியத்தை நீங்கள் இன்னும் அறியவில்லையென்றால் அதனை அவர் வெளிப்படுத்தும்படி முழுமையான விட்டுக் கொடுத்தலோடே ஜெபியுங்கள்.

5. இருளில் வாழும் ஜாதிகள் தேசங்கள் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டு கொள்ளும்படி நாம் ஏதாவது செய்யவேண்டும்.

சத்தியவசனம்