ராஜாவை வழிபட்டார்கள்!

Dr.தியோடர் வில்லியம்ஸ்

(நவம்பர்-டிசம்பர் 2012)

மத்தேயு எழுதின நற்செய்தி நூலின் இரண்டாவது அதிகாரம் முதல் பன்னிரண்டு வசனங்களிலே ராஜாவைத் தொழுது கொண்டவர்களைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அவர்களை சாஸ்திரிகள் என்று மத்தேயு அழைக்கிறார். இந்தச் சம்பவம் மத்தேயு எழுதின நற்செய்தி நூலிலே மட்டும் கூறப்பட்டிருக்கிறது. சாஸ்திரிகளைப் பற்றி அநேக கதைகள் உண்டு. மூன்று சாஸ்திரிகள் என்று நாம் சாதாரணமாய் கூறுகிறோம். ஆனால் திருமறையிலே எத்தனை சாஸ்திரிகள் என்று கூறப்படவில்லை. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” என்று மட்டும் முதல் வசனத்திலே குறிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் பாரசீகராய் இருக்கவேண்டும் என்று அநேக வேத அறிஞர்கள் கருதுகிறார்கள். பாரசீகர்கள் அந்த நாட்களிலே பலவிதமான மார்க்க ஆசாரங்களிலே ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிலே சாஸ்திரிகள் என்று அழைக்கப்படுகிறவர்கள் ஆசாரியர்களாய் இருந்திருக்க வேண்டும். சாஸ்திரிகள் தத்துவ சாஸ்திரத்திலும் இன்னும் பலவிதமான விஞ்ஞானக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்தார்கள். கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பதும், எதிர்காலத்தை முன்னறிவிப்பதும் அவர்களுடைய பணியாய் இருந்தது. வானத்தை ஆராய்ந்துபார்த்து, நட்சத்திரங்களைக் கண்காணிப்பதிலும், அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தங்களுடைய நாட்களைக் கழித்தார்கள். வான சாஸ்திரத்திலே அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்தார்கள். வானத்திலுள்ள நட்சத்திரங்கள் மனிதர்களுடைய வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றும் வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் படித்தால் பூமியில் நடக்கும் சம்பவங்களை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பினார்கள். அந்த சாஸ்திரிகள் உண்மையான கடவுளைத் தேடினவர்களாய் இருந்திருக்கவேண்டும். ஆகையினால்தான் கடவுள் இவ்விதமான ஒரு வெளிப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். திருமறையிலே யூத குலத்தைச் சேராத மக்களும் உண்மையான கடவுளைத் தேடி நம்பினார்கள் என்று நாம் பார்க்கிறோம். மெல்கிசேதேக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவன்; பிலேயாமும் ஒருவன். அதேபோல அந்த சாஸ்திரிகளும் அவ்விதமான விசுவாசமுள்ளவர்களாய் இருந்திருக்க வேண்டும். அவர்களைப்பற்றி இந்த வேத பகுதியிலே ஏழு காரியங்களைத் திட்டவட்டமாக நாம் காணலாம்.

1. நட்சத்திரத்தைக் கண்டார்கள்

முதலாவது, அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டார்கள். அவர்கள் தேவன் மூலமாக வழி நடத்தப்பட்டார்கள். ஆகையினாலே கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அந்த நட்சத்திரத்தைக் கண்டார்கள். வானத்தை ஆராய்ந்து பார்த்து நட்சத்திரங்களைப் படிப்பதன் மூலமாய் மனித வாழ்வின் இரகசியங்களை அறிந்து கொள்ள எண்ணியிருந்த சமயத்திலே அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டார்கள். மனித வாழ்வின் இரகசியங்கள் வானத்திலேதான் இருக்கின்றன என்பதை அவர்கள் திட்டவட்டமாய் நம்பினார்கள். தேவனைப் பற்றி அறிய அவர்கள் வாஞ்சையுள்ளவர்களாய் இருந்தபடியினாலே, அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த சித்தங்கொண்டார். மற்ற மார்க்கங்களிலே இயேசுகிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட முடியாத நிலையில் இருக்கிறவர்களுக்குத் தம் சொந்த வழியிலே தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார்.

வடநாட்டிலே ஒரு வாலிபன் சிறுவயதிலேயே பாவ மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தான். தன் பள்ளிக்கூட ஆசிரியர்களிடத்திலெல்லாம் அதைப்பற்றிக் கேட்டான். அவர்கள் தங்களுடைய மத நூல்களிலே அதைக் காணும்படி அவனுக்குப் புத்தி சொன்னார்கள். ஆனால் அவற்றில் அவனால் பாவ மன்னிப்பைக் கண்டு கொள்ள முடியவில்லை. அங்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் ஒருவரும் கிடையாது, ஒரு கிறிஸ்தவனும் இல்லை. இப்பேர்பட்ட நிலையிலே ஒருநாள் அவன் சிலுவைக் காட்சியைத் தரிசனமாகக் கண்டான். குழப்பமுற்றவனாய் அதைத் தன் நண்பன் ஒருவனிடத்தில் கூறி விளக்கம் கேட்டபோது அந்த நண்பன், “ஐம்பது மைல் தூரத்தில் கிறிஸ்தவ பிரசங்கிமார் இருக்கிறார்கள், நீ போய் அவர்களைக் கேட்டால் விளக்கம் கூறுவார்கள்” என்று கூறினான். அவன் ஐம்பது மைல் கடந்துவந்து இந்தியன் இவாஞ்சலிக்கல் மிஷனைச் சேர்ந்த எங்களுடைய மிஷனெரிகளைச் சந்தித்தான். அவர்கள் மூலமாக கிறிஸ்துவைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரை நம்பினான். உண்மையான வாஞ்சையோடு தேடுகிறவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார் தேவன்.

கி.மு. பதினோராவது ஆண்டு, கி.மு. ஏழாவது ஆண்டு, கி.மு. ஐந்தாவது ஆண்டு இப்படிப் பல தடவைகள் வானத்திலே அடையாளங்கள் காணப்பட்டன. வால் நட்சத்திரம் காணப்பட்டது என்று அந்நாட்களில் வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையினாலே வானத்திலே ஏதோ ஒரு அடையாளம் அந்த சமயத்திலே ஏற்பட்டது என்பது நிச்சயமாகிறது. அது நட்சத்திரமாயிருந்திருக்க முடியாது. வால் நட்சத்திரமாயிருந்திருக்கலாம். அற்புதமான ஒரு அடையாளம் வானத்தில் காணப்பட்டது. அது அந்த சாஸ்திரிகளை வழிநடத்திற்று. கடவுள் அதன்மூலமாய் அவர்களோடு பேசினார். தேவன் நம்மைத் தம்முடைய வசனத்தின் மூலமாகவும் சூழ்நிலைகளின் மூலமாகவும் சம்பவங்களின் மூலமாகவும் மற்ற மனிதர் மூலமாகவும் நடத்துகிறார். அந்த சாஸ்திரிகள் வேத வசனங்களை அறிந்திராதபடியினாலே அவர்களுக்குத் தெரிந்த ஒருமுறையின் மூலமாய் அவர்களை நடத்துகிறார். அவர்கள் அறிந்ததெல்லாம் வானத்திலுள்ள நட்சத்திரங்கள்தான். ஆகையினாலே வானத்திலுள்ள ஒரு அடையாளத்தின் மூலமாய் அவர்களை அவர் நடத்துகிறார். ஒரு அதிசய ராஜா பிறந்து விட்டார். கடவுள் மனித உருவாய் தோன்றிவிட்டார் என்பதை அவர்கள் உணர்ந்து அவரைக் காண்பதற்காகப் புறப்பட்டார்கள். நம்முடைய ஆவிக்குரிய நிலைக்கேற்றபடியும் நமக்குக் கிடைத்த வெளிச்சத்திற்கு ஏற்ற படியும் தேவன் நம்மை நடத்துகிறார். ஆனால் நமக்குக் கிடைத்த வெளிச்சத்திலே நாம் நடக்கவேண்டும். தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்திலே சாஸ்திரிகள் நடந்தார்கள்.

2. புறப்பட்டார்கள்

அவர்களைப்பற்றிக் கூறப்பட்டிருக்கிற இரண்டாவது காரியம் நட்சத்திரத்தின் மூலமாய் முன்னறிவிக்கப்பட்ட ராஜாவைப் பார்ப்பதற்குப் புறப்பட்டார்கள். எருசலேமுக்கு வந்தார்கள். மத்தேயு 2:1-2இல் “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? …அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்” என்று கேட்டுக்கொண்டு வந்தார்கள். இந்தப் பிரயாணமானது ஒரு எளிதான பிரயாணமல்ல. எத்தனையோ இடையூறுகள் உண்டு. கள்ளர்கள் மூலமாக இடையூறுகள் உண்டு. பல ஆறுகளைத் தாண்டி வரவேண்டும். இன்னும் பல மைல்கள் பாலைவனத்திலே பிரயாணஞ் செய்யவேண்டும். அதை யெல்லாம் அறிந்தும் அந்த நூற்றுக்கணக்கான மைல் பிரயாணஞ்செய்ய அவர்கள் ஆயத்தமாகிப் புறப்பட்டு வந்தார்கள்.

அவர்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தேடிவந்த ராஜா யார் என்று எருசலேமில் யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை தவறாக வந்துவிட்டோமோ, தவறான ஒரு காரியத்தை நாடி வந்துவிட்டோமோ என்றெல்லாம் அவர்கள் சந்தேகப்பட்டிருக்கலாம். ஒரு மனிதன் உண்மையான இரட்சகரைத் தேடி புறப்பட்டுச் செல்லும்போது அவனுடைய அனுபவத்தில் பல குழப்பங்களும் சோர்வுகளும் ஏற்படலாம். சாத்தான் அவனைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பான். சாஸ்திரிகளின் அனுபவத்தில் இதைப் பார்க்கிறோம்.

ஏன் அவர்கள் தங்கள் வழியிலிருந்து தவறினார்கள்? கடவுளின் வழிநடத்தலுக்கு முழுவதும் தங்களை ஒப்புக்கொடுக்காமல் தங்கள் சுய புத்தியைச் சார்ந்துவிட்டார்கள். யூதருக்கு ராஜா பிறந்தால் எருசலேமில்தானே பிறந்திருக்க வேண்டும் என்று யூகித்து, தங்கள் யூகத்தின்படி எருசலேமுக்கு வந்தார்கள். தொடர்ந்து அந்த நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றிருந்தால் ஒருவேளை நேராக பெத்லகேமுக்குச் சென்றிருக்கலாம். நாமும் ஆண்டவரைப் பின்பற்றிச் செல்லும்பொழுது சிலசமயங்களில் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்காதபடி நம்முடைய சுய புத்தியை நம்பிவிடுகிறோம். இது தவறாகும். தேவன் அவர்களுடைய தவறுகளைத் திருத்தி மறுபடியும் அவர்களைச் சரியான வழியிலே கொண்டுவந்து சேர்க்கிறார். அது மிகவும் ஆறுதலான ஒரு காரியம். நாம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும். அவர் சித்தத்தைச் செய்யவேண்டும் என்கிற உள்ளான வாஞ்சையிலே, அவருடைய பாதையிலே நடக்கும்போது சிலசமயம் தவறு செய்துவிடக்கூடும். அப்படித் தவறினாலும் நம்முடைய உள்ளான வாஞ்சையை அறிந்த தேவன் நம்மை மறுபடியும் திருப்பி சரியான பாதைக்குக் கொண்டு வருகிறார். ஆகையினாலே தீர்மானங்கள் செய்ய நாம் தயங்கக்கூடாது. தவறான தீர்மானத்தைச் செய்துவிடுவோமோ என்று சொல்லித் தயங்கி நிற்கக்கூடாது. நம்முடைய உள்ளத்தின் நோக்கமும் ஒப்புக்கொடுத்தலும் சரியாயிருந்தால், அவர் நம்முடைய தீர்மானத்தின் தவறுகளைத் திருத்தி நம்மைச் சரியான வழியிலே நடத்துவார். சாஸ்திரிகளின் வாழ்க்கையிலே இதைப் பார்க்கிறோம்.

எருசலேமுக்குப் போன சாஸ்திரிகள் ஏரோதினிடத்திலே, தாங்கள் எதற்காக வந்தோம் என்று கூறுகிறார்கள். ஏரோது உடனே பழைய ஏற்பாட்டு வசனங்களை அறிந்த பிரதான ஆசாரியர்களையும், வேதபாரகர்களையும் அழைத்து அவர்களிடத்தில் விசாரிக்கிறான். அவர்கள் மூலமாய் திருமறையிலிருந்து பெத்லகேமிலே யூதருக்கு ராஜா பிறப்பார் என்று கண்டுகொள்ளுகிறார்கள். இப்படி சாஸ்திரிகள் மறுபடியும் தங்களுடைய வழியைக் கண்டுபிடித்தார்கள். அவர்களால் வேத வசனங்களை அறியமுடிய வில்லையானாலும், பிரதான ஆசாரியர்கள் மூலமாகவும், வேதபாரகர்கள் மூலமாகவும் வேதம் அவர்களுக்கு விளக்கப்படுகிறது. கடவுள் நம்மை அற்புதமான வழிகளில் நடத்துகிறார். படிப்படியாக நடத்துகிறார்.

3. மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்

மத்தேயு இரண்டாம் அதிகாரம் பத்தாவது வசனத்திலே “மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்” என்று பார்க்கிறோம். தேவனால் அவருடைய சித்தத்தில் வழி நடத்தப்படுகிறவர்கள் நிச்சயமாக வாழ்க்கையிலே மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

4. வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்

“வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்” என்று மத்தேயு இரண்டாவது அதிகாரம் பதினோராவது வசனத்திலே பார்க்கிறோம். “வீடு” என்று கூறப்பட்டிருக்கிறது. இயேசு பிறந்தது மாட்டுத் தொழுவத்திலே. ஆனால் இப்பொழுது மரியாளுக்கும், யோசேப்புக்கும், குழந்தை இயேசுவுக்கும் ஒரு வீடு கிடைத்துவிட்டது. ஆகையினாலே இயேசு பிறந்து சில மாதங்களாகியிருக்க வேண்டும். சாஸ்திரிகளை வழிநடத்திக் கொண்டுவந்த அந்த அற்புத நட்சத்திரம் அங்கே நின்றுவிட்டபடியினாலே அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்.

5. குழந்தையைப் பணிந்துகொண்டார்கள்

வீட்டில் பிள்ளையையும், அதன் தாயையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டார்கள். பதினோராவது வசனத்தை நன்றாகக் கவனியுங்கள். மரியாளை அவர்கள் பணிந்துகொண்டார்கள் என்று கூறவில்லை. மரியாளை யாராவது வணங்கினார்கள் என்று புதிய ஏற்பாட்டிலே நாம் வாசிப்பது கிடையாது. மரியாளை வணங்குவது சரியானதல்ல. மரியாளை வணங்காதபடி பிள்ளையை வணங்குகிறார்கள். இதிலிருந்து இயேசு மாத்திரமே தேவன் என்பது தெளிவாகிறது.

இயேசுகிறிஸ்துவைக் கடவுளல்ல எனக் கூறுவது வேதபுரட்டு. கிறிஸ்துவைத் தெய்வம் என்று ஏற்றுக்கொண்டு சாஸ்திரிகள் பணிந்து கொண்டார்கள். அவரைப் பணிந்துகொள்வது மட்டுமல்ல. அவரிலே தங்களுடைய உள்ளத்தின் தேவை தீர்க்கப்படுமென்பதை உணர்ந்துகொள்ளுகிறார்கள். அவரே போது மானவர் என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள்.

அந்தக் குழந்தை தேவனானபடியினாலே அவரைத் தொழுதுகொண்டனர். கிறிஸ்துமஸ் நாட்களிலே நம்முடைய வாழ்க்கையிலே தொழுகை இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். எத்தனை விசுவாசிகள் இயேசுவை ஆராதிக்கத் தவறிவிடுகிறார்கள்! காலையில் எழுந்தவுடன் அவருடைய சமுகத்தில் தரித்திருந்து அவரை நீ ஆராதிக்கிறாயா? ஆலயத்திற்குப்போய் மற்ற விசுவாசிகளோடு ஆராதிக்கிறாயா? அவரைத் தனியாக ஆராதிக்கவேண்டும். நம்முடைய ஆராதனைக்கு உரியவர் அவர். வெளிப்படுத்தின விசேஷத்திலே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை இருபத்து நான்கு மூப்பர்களும், சகல சிருஷ்டிகளும் பணிந்து கொள்ளுவதை நாம் பார்க்கிறோம்.

6. பொக்கிஷங்களைத் திறந்து காணிக்கை படைத்தார்கள்

சாஸ்திரிகள் தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். அவர்கள் கொடுத்தவை விலையேறப்பெற்ற பொருட்கள், அவர்களால் கொண்டுவரக்கூடிய பொருட்கள். அவர்கள் தங்களாலானதைச் செய்தார்கள். கிரயம் செலுத்தி விலையுயர்ந்த பொருட்களை இயேசுவுக்கு ஈவாக அவர்கள் கொடுத்தார்கள். பொக்கிஷங்களைத் திறந்தார்கள் என்று பார்க்கிறோம். நாமும் கிறிஸ்துவுக்குக் காணிக்கை படைக்கும்போது பொக்கிஷங்களைத் திறக்கவேண்டும். எது நமக்கு விலையுயர்ந்ததாகக் காணப்படுகிறதோ, எதை அதிகமாய்ப் பேணி வைத்திருக்கிறோமோ அதை அவருக்குக் கொடுக்கவேண்டும். ஏமி கார் மைக்கேல் அம்மையார் அடிக்கடி “இயேசுவை விட எதுவும் விலையுயர்ந்ததாயிருக்கக் கூடாது” என்று கூறுவார்கள். இயேசுவைவிட எதற்காவது நாம் அதிகமான மதிப்பு கொடுத்திருக்கிறோமா? நம்முடைய வாழ்க்கையைத் திறந்து முழுவதுமாய் அவருக்கு ஒப்புக்கொடுப்போம். உள்ளத்தின் ஆழத்திலே நாம் பேணி வைத்திருக்கும் காரியங்களை ஒப்புக்கொடுப்போம். அவர் நம் முடைய அர்ப்பணத்திற்கும் ஆராதனைக்கும் தகுதியுள்ளவர்.

7. வேறுவழியாய்த் திரும்பிப்போனார்கள்

மத்தேயு 2:12இல் “பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள்” என்று எழுதியிருக்கிறது.

அவர்கள் வந்த வழியே செல்லக்கூடாது, வேறுவழியாகச் செல்லவேண்டுமென்று கடவுள் அவர்களோடு பேசினார். தேவன் அவர்களோடு நட்சத்திரத்தின் மூலமாகவும், வேதவசனங்களின் மூலமாகவும், பிரதான ஆசாரியர்கள் வேதபாரகர்கள் மூலமாகவும் பேசினார். இப்பொழுது சொப்பனத்தின் மூலமாய்ப் பேசினார். நம்மோடு எப்படிப் பேசினாலும் கேட்பதற்கும் கீழ்ப்படிகிறதற்கும் ஆயத்தமுள்ளவர்களாய் நாம் இருக்க வேண்டும். சாஸ்திரிகள் கீழ்ப்படிந்து வேறு வழியாய்ப் போய்விட்டார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் மாறுதல்கள் இருக்க வேண்டும். அவரைத் தொழுதுகொண்டு, அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்ததன் பலனாய் நாம் வேறு வழியிலே செல்லவேண்டும். சுய சித்தத்தின் பாதையிலே சென்றவர்கள் கடவுளின் சித்தத்திலே செல்லவேண்டும். சுய இன்பத்தையும், இச்சையையும் நாடிச் சென்றவர்கள் அவருக்காக வாழவேண்டும். பொய்யைப் பின்பற்றி நடந்தவர்கள் சத்தியத்தின் பாதையிலே நடக்கவேண்டும். அசுத்தத்திலே ஜீவித்தவர்கள் பரிசுத்தத்திலே செல்லவேண்டும்.

சத்தியவசனம்