கடவுள் நமக்காகவே மனிதன் ஆனார்!

சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2012)

கடந்த ஆண்டிலே, 19வயது மாத்திரமே நிரம்பிய ஒரு அழகான வாலிபனுடைய சாவு பல கேள்விகளை எழுப்பிவிட்டிருந்தது. அந்தப் பையன் சாத்தானைத் தொழுது கொள்ளுகின்ற ஒருவன் என்றும், அவனுடைய நடவடிக்கைகளும் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றும், சாத்தானைத் தொழுது கொள்ளும் ஒரு கூட்டம் மக்களும், தொழுகைக்கான இடமும் நமது தேசத்திலேயே இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலும் அந்த மரணவீட்டிலே நாங்கள் அறிந்த தகவல்கள்.

இன்று வீதிவிபத்திலே கொல்லப்படுகிறவர்களைக் குறித்தும், கொலைசெய்யப்படுவதால் இறந்துபோகிறவர்களைக் குறித்தும், தீமைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்ற கும்பல்களைக் குறித்தும், இன்னும் பல வேதனையான சம்பவங்களைக் குறித்தும் தினமும் கேள்விப்படுகிறோம். இவர்கள் எல்லோரும் யார்? மனுஷரல்லவா! பாவ இருளில் வாழுகின்ற இவர்களை நாம் எப்போது அடையாளம் காணப்போகிறோம்? குடும்பங்களிலே, திருச்சபையிலே, சுற்றியிருக்கிற சமூகத்திலே வாழுகின்ற இவர்களுக்காகவும் இயேசு பிறந்தாரே! கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நமக்காக மாத்திரமல்ல, இவர்களுடைய பாவங்களுக்காகவும் இயேசு மரித்தாரே! இவர்களுக்கும் விடுதலை உண்டே! இதை யார் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவது! இவை எதையும் அறியாமலே அனுதினமும் செத்து மடிந்துகொண்டிருக்கும் பெருங்கூட்ட மக்களைக் குறித்த பொறுப்பு, கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுகிற கிறிஸ்தவர்களாகிய நம்முடையதுதான் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

“இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்.2:10). அன்று தேவதூதரால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்ட இந்த செய்தி இன்று நமக்குச் சொந்தமாயிருக்கிறது. அந்த மேய்ப்பர்கள் உடனே எழுந்துபோய் அந்த நற்செய்தியைக் கண்ணாரக் கண்டு, பின்னர் அந்த செய்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள் என்றும், மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் என்றும் வாசிக்கிறோம் (லூக். 2:15-18). அந்த சுவிசேஷத்தை அறிந்து ஏற்று வாழ்வில் அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் இன்று அந்த சுவிசேஷத்தை என்ன செய்கிறோம்?

சோதனையெல்லாம் முடிந்தபின்பு, நாசரேத்துக்கு வந்த இயேசுவானவர், ஓய்வு நாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, எழுந்து நின்று ஏசாயா தீர்க்கனுடைய புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்தார். ஏசாயா 61:1-3 வசனங்கள் அடங்கிய இந்தப் பகுதியைப் பார்க்கும் போது, இருதயம் நொறுங்குண்டவர்கள், சிறைப்பட்டவர்கள், கட்டுண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், எல்லாவற்றையும் சேர்த்து முதலாம் வசனத்தில், ‘சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்’ என்றே எழுதப்பட்டுள்ளது. இந்த சுவிசேஷம் என்பது என்ன? அந்த சுவிசேஷம்தான் ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்து’.

ஆக, இந்த சுவிசேஷம் இன்று சிறுமைப்பட்டவர்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. தேவன் தமது பிள்ளைகளை எழுப்பி, யுத்த பிரதேசங்களிலும், சிறைக்கூடங்களிலும், கவனிப்பாரற்றுக் கிடக்கிற கிராமங்களிலும், தள்ளப்பட்ட ஜனங்கள் மத்தியிலும் சுவிசேஷத்தை அனுப்பி, ஏராளமான மக்களை விடுவித்துக்கொண்டே இருக்கிறார். இந்தப் பிரதேசங்களில் தங்கள் உயிரையும் பாராமல் தேவனுக்காய் உண்மையாய் உழைக்கின்ற தேவஊழியருக்காய் ஆண்டவரைத் துதிப்போமாக. ஆனால், இந்த சுவிசேஷத்தை நாம் என்ன செய்கிறோம் என்பதே கேள்வி?

செய்தி இதுதான்:

மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு ‘இயேசு’ என்று பேரிடுவாயாக; ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று கர்த்தருடைய தூதன் யோசேப்புக்குச் சொப்பனத்திலே சொன்னபோது, ‘இயேசு’ என்ற பெயர் மரியாளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்குச் சூட்டவேண்டிய பெயராயிற்று. ஆனால், தேவதூதர் வயல்வெளியிலே மேய்ப்பருக்குப் பகிரங்கமாக அறிவித்தபோது, ‘கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்’ தாவீதின் ஊரிலே உங்களுக்குப் பிறந்திருக்கிறார் என்று அறிவித்தனர். நம்மை விடுவிப்பதற்கென்று அபிஷேகம்பண்ணப்பட்டவர் பிறந்தார் என்ற செய்தியை, விடுவிக்கப்படவேண்டிய மக்களுக்குக் கூறி அறிவிக்கவேண்டிய அவசியம் இன்று கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமது கரங்களில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

‘கர்த்தராகிய கிறிஸ்து’ – ஆண்டவராகிய தேவன் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாய்,

‘என்னும் இரட்சகர்’ – மனுக்குலத்தின் மீட்புக்காக,

‘தாவீதின் ஊரிலே’ – வாக்குப்பண்ணப்பட்ட படி, தீர்க்கர்களால் உரைக்கப்பட்டபடி,

‘உங்களுக்காக’ – பாவத்திலே உழலுகின்ற மனிதராகிய நமக்காகப் பிறந்திருக்கிறார்.

ஆம், எல்லாவற்றையும் கடந்து நிற்கிற தேவாதி தேவன், தம்மைவிட்டுப் பிரிந்துவிட்ட மனிதனுக்காக, அவனைத் தம்மைவிட்டுப் பிரித்துப்போட்ட பாவத்தைப் பரிகரிப்பதற்காக மனிதனாகவே பிறந்தார். இது ஆச்சரியமல்லவா! ‘இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.’ (ரோமர் 1:4,5)

நம்மைப்போலவே மனிதனாய் வந்து பிறந்து, தமது இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்டு, தமது பிள்ளையாக்கி, நமக்குள்ளே வாசம்பண்ணுமளவுக்கு நம்மை நேசிக்கிற ஒரு ஆண்டவர் நமக்கிருக்கிறார். அதாவது, ‘கடவுள் மனிதனாகி நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார்’. இந்த சத்தியம் எந்தளவுக்கு நமது வாழ்வைப் பாதித்திருக்கிறது? உண்மையாகவே இது நம்மைப் பாதிக்குமானால், இதுவே நமது சுவாசக்காற்றாக நமது வாழ்வில் மாறுமானால் பல காரியங்கள் மாற்றமடையும்.

தேவனுடனான நமது உறவு:

தேவன் எனக்காக மனிதனானார் என்று உளமார சிந்திக்கும்போது முதலாவது தேவனுடனான உறவு நிச்சயம் மாற்றமடையும். பிறப்பது வாழுவதற்கு என்று சொல்லுவோம். ஆனால், இயேசு பிறந்ததே மனுக்குலத்திற்காக மரிப்பதற்கே என்ற உண்மை நாம் அறிந்ததே. அப்படியே மரித்தார், உயிர்த்தார், வானத்துக்கு ஏறினார். திரும்பவும் நம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி திரும்பவும் வருவார். அவருடைய மரணத்தினால் தேவனுடைய கிருபாசனத்தண்டை சேரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். அந்த சுதந்தரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

தேவனோடு ஐக்கியம்கொள்ளக்கூடிய ஒரே பாலம் ஜெபமும் வேதமும்தான். இவை இரண்டும் நம் வாழ்வில் எவ்வளவுதூரம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இது இரண்டும் இல்லாமல் தேவனுடன் நல்லுறவில் நாம் வளரவே முடியாது. எனக்காகவா இயேசு வந்தார் என்று நம்மை நாமே கேட்டுப்பார்க்கவேண்டும். அவ்வளவாய் நம்மில் தேவன் அன்புகூர நாம் எம்மாத்திரம்! அவர் சாதாரண மனிதனாக வரவில்லை. கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக வந்து நமக்குள்ளே வாசம்பண்ணினார். (யோவா. 1:14) நமது வாழ்வில் கிருபையும் சத்தியமும் நிறைந்திருக்குமாயின் நம்மைப் பாவம் ஆட்கொள்வது எப்படி? பாவத்துக்கு இடமளித்துக்கொண்டு நாம் கிருபைபெற்றோம் என்று சொல்லுவது எப்படி?

பண்டிகைக் கொண்டாட்டங்கள்:

மீட்பர் என்னை மீட்கவே பிறந்தார் என்று உண்மையாகவே உணருவோமானால், நமது பண்டிகைக் கொண்டாட்டங்கள் மாறும். பண்டிகைகள் கொண்டாடுவது தவறல்ல; தேவனே அதை விரும்பினார் என்று பழைய ஏற்பாட்டிலே காண்கிறோம். ஆனால், அவற்றை என்ன நோக்கத்தோடு கொண்டாடுகிறோம், எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதே கேள்வி. ஓடுகின்ற நீரோடையிலே ஒற்றைக் காலை ஊன்றி நின்றுகொண்டு நீரில் துள்ளிக் குதிக்கும் மீன்களைக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்குவை அந்த மீன்களால் தடுக்கமுடியுமா? கொக்கு பார்க்கும், அது அதன் சுதந்திரம். தனக்கு இசைந்த நேரத்தில் தன் இரையைக் கவ்வும். அதை யார் தடுப்பது. கொக்குவின் குறிக்குத் தப்பும்படிக்கு மீன்கள்தான் தங்களைப் பாது காத்துக்கொள்ள வேண்டும்.

நம்மை உலகம் கவனிக்கிறது. அதை நம்மால் தடுக்கமுடியாது. அந்த உலகத்திற்கு சாட்சியாக நிறுத்தப்பட்டிருக்கிற நாமேதான் அந்த சாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டும். நமது பண்டிகைகளும் தேவனுக்கே சாட்சியாக அமையவேண்டும் என்பது மிக முக்கியம்.

பண்டிகை என்பது குறிப்பிட்ட காரியங்களை நினைத்து குறிப்பிட்ட காலத்திலே கொண்டாடப்படுவது. ஆனால், ஆராதனை என்பது எப்பொழுதும் ஏறெடுக்கப்பட வேண்டியது. நமது வாழ்க்கைமுறையே ஆராதனையாக மாறவேண்டிய அவசியத்தை நாம் உணரவேண்டும். அந்த ஆராதனை சீர்ப்படுமானால், நாம் ஏறெடுக்கும் சிலமணி நேர ஆராதனைகளும், நாம் கொண்டாடும் பண்டிகைகளும் தேவனுக்குச் சாட்சியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்ரவேல் கொண்டாடவேண்டிய பண்டிகைகளை ஒழுங்குசெய்து கொடுத்த கர்த்தர் தாமே, பின்னர், ஆமோஸ் தீர்க்கன் மூலம் தன் வெறுப்புகளைக் கொட்டுகிறார். (ஆமோஸ் 5:21-23; 8:10) ‘உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்’. பண்டிகைகளைத் துக்கிப்பாக மாற்றுவேன் என்றார். ஏன்? அவர்கள் தங்கள் இருதயத்தைத் தேவனைவிட்டு, தேவனுடைய வார்த்தையைவிட்டு, தேவ நோக் கத்தைவிட்டு விலக்கிப்போட்டார்கள்.

இன்று கிறிஸ்துமஸ் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் கிறிஸ்து இருக்கிறாரா? இல்லை. கரோல் பாட்டுப் போட்டி, கிறிஸ்மஸ் மரம் வைக்கும் போட்டி, கேக் போட்டி என்று எத்தனை! இது யாரால் ஏற்பட்டது. கிறிஸ்தவர்களாகிய நாமே கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்திருக்கிறோம். இந்த நிலைமை மாறவேண்டும். நாம் புத்துணர்வு பெற்று இந்தக் கொண்டாட்டங்களை தேவனுக்கு மகிமையாக மாற்றவேண்டும்.

மனித நேயர்:

உண்மையாகவே, எனக்காகவே, கிறிஸ்து பிறந்தார், மரித்து உயிர்த்து என்னை மீட்டுக்கொண்டார் என்று விசுவாசித்து வாழுகிற ஒருவனுடைய வாழ்வில், பிறரைக் குறித்ததான அன்பும் கரிசனையும் தானாகவே ஊற்றெடுக்கும். கிறிஸ்துமஸ் என்றதும் மனித நேயம் இன்று அதிகமாக பேசப்படுகிறதைக் காண்கிறோம். மனித நேயம் என்பதற்கு உலகம் கொடுக்கின்ற விளக்கம் உரிமைகளைப் பாதுகாத்தல், தேவைகளைச் சந்தித்தல் என்பதாகும். ஆனால், கிறிஸ்துவின் அன்பினால் நிறையப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் நமக்கோ இந்த மனிதநேயம் என்பது மிகவும் உயர்நிலையில் வைத்து நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். தேவன் நம்மீது வைத்த அன்பைப் புரிந்துகொண்டு, அந்த அன்பை நாம் பிறருக்குக் கொடுக்கவேண்டும். அங்கே நாம் அல்ல, தேவனே மகிமைப்படுகிறார். முன்பகுதி இல்லையானால் பின்பகுதி சுயத்திற்குரியதாக மாறிவிடும். ஆனால், இன்று, முன்பகுதி தெரிந்திருந்தாலும், அதை விடுத்து, மக்களின் உரிமைக்காகவும், தேவைகளைச் சந்திப்பதற்காகவும் பலர் பாடுபடுகின்றனர். அது அவசியம்தான்; ஆனால் அதிலே தேவநாமம் மகிமைப்படுகிறதா?

மனிதநேயத்தின் மொத்த உருவமே இயேசுகிறிஸ்துதான். இது பண்டிகைகள்போல குறித்த காலத்தில் மாத்திரம் காட்டப்படுவது அல்ல. எல்லாக் காலத்திலும் எல்லா மக்கள் மத்தியிலும் இதை நாம் வெளிப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். மக்களுக்கு அன்றாட தேவைகள் பல உண்டு. அவை சந்திக்கப்படவேண்டிய அவசியங்களும் உண்டு. ஆனால் அதிலும் மேலாக அவர்களுடைய இருதயம் அன்புக்காக, ஒரு அரவணைப்புக்காக, ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆண்டவர் நமக்கு வாழ்ந்து காட்டிய ஒரு முன் மாதிரியை நாம் இந்நாட்களிலே சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஆம், ஆண்டவர், பாவிகளோடு, பரிதவிக்கும் மக்களோடு, அக்கிரமக்காரரோடு, வியாதிப்பட்டவரோடு, சிறைப்பட்டவரோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் பாவத்திற்கு விரோதி; ஆனால், அதே பாவத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு இருளுக்குள் வாழுகின்ற மக்களுக்கோ அவரே ஒளியாக இருக்கிறார். மனிதனை மீட்கும்படிக்குத் தம்மையே பலியாக்கினவர் ஆண்டவர்.

இந்த இயேசுவை இன்று, விசேஷமாக இந்த கிறிஸ்துமஸ் நாட்களில், பிறர் முன்னிலையில் நாம் பிரதிபலிக்கிறோமா என்பதை சிந்திப்போம். ‘கடவுள் எனக்காகவே மனிதனானார்’ என்பதை அமர்ந்திருந்து சிந்தித்துப் பார்த்தால், நமது வாழ்வின் நோக்கம், பண்டிகைகளின் நோக்கம், நாம் வெளிக்காட்டும் மனித நேயம் எல்லாமே நிச்சயம் மாற்றமடையும். நாம் இருக்கும் இடங்களை விட்டு எழுந்து, வாழ்வின் இருளுக்குள் தடுமாறி நிற்கும் மக்களை நாடிச் செல்லுவோமாக. வெறும் மெழுகுவர்த்திகளை ஏற்றிப் பலனில்லை. வாழ்வுகளில் வெளிச்சம் பிரகாசிக்க, நாம் முதலில் பிரகாசிக்கவேண்டும். ‘கிறிஸ்து உனக்காகவே பிறந்தார்’ என்ற நல்ல செய்தியை எடுத்துச் சொல்லுவோமாக. நாம் கிறிஸ்து மூலமாகப் பெற்ற கிருபையும் சத்தியமும் எல்லோருக்கும் கிடைக்கும்படி நம்மை அர்ப்பணிப்போமாக.

சத்தியவசன சஞ்சிகை வாசகர்கள் யாவருக்கும் என் அன்பின் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

சத்தியவசனம்