2013: புதிய வருஷத்தை மேன்மையாக்குங்கள்!

(நவம்பர்-டிசம்பர் 2012)

உங்கள் ஜீவியத்தில் கர்த்தருக்கு முதலிடம் கொடுங்கள். “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி.3:6). இந்த வசனம் ஒரு அழைப்பு இல்லை, ஆலோசனையுமில்லை, வாக்குத்தத்தமுமில்லை, மாறாக இது ஒரு கட்டளையாகும். உங்களை கர்த்தர் சுய சித்தத்துடன் சிருஷ்டித்திருக்கிறார். அவருக்கு முதலிடம் கொடுப்பதை நீங்கள் தெரிந்துகொள்ளமாட்டீர்களா? ஒரு மேன்மையான வருடத்தைத் துவங்குவதற்கு எடுக்க வேண்டிய முதல் அடி தேவனுக்கு முதலிடம் கொடுப்பதாகும்.

உங்களுடைய பாவங்களையும் தோல்விகளையும் மூடி வைக்காமல் அவைகளை வெளியே கொண்டுவந்து அவைகளை உற்று நோக்கிப் பாருங்கள். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி,28:13). தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் என்பது ஆவிக்குரிய பிரமாணம். இந்தப் பிரமாணம் எப்பொழுதும் உண்மையே, இது மீறுவதற்கில்லை. தாவீது ராஜா பத்சேபாளுடன் பாவத்தில் ஈடுபட்டுவிட்டு இந்தப் பிரமாணத்திலிருந்து தப்பிக்கொள்ள முயன்றான். ஆனால் அவன் அதில் வெற்றி பெற முடியாமல், “நான் அடக்கிவைத்தமட்டும் நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று” என்று சங்.32:3 இல் தன் குற்றத்தை அறிக்கை செய்கிறான். பின்னர் தாவீது தன் பாவத்தை உணர்ந்து அறிக்கை செய்து பாவத்தைவிட்டு விட்டபொழுது, கர்த்தர் அவனுக்கு இரங்கி முழு மன்னிப்பை அருளிச்செய்தார்.

ஆகவே தேவனிடம் உங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து மன்னிப்பு கேளுங்கள். அவருடைய இரக்கத்தைத் தேடுங்கள், அப்பாவங்களை புறக்கணித்துவிட்டு, இனிமேல் அவ்வித பாவங்களில் திரும்பவும் விழவேகூடாது, என்று தீர்மானம் எடுங்கள். விஷம் என்று அவைகளிலிருந்து திரும்பி விடுங்கள், அப்பொழுது உங்கள் மனம் சாந்தமடையும், இவ்விதம் செய்வது புதிய வருஷத்தை மேன்மையாக்குவதற்கு எடுக்க வேண்டிய இன்னொரு அடியாகும்.

உங்களுடைய நாவிற்கு திடமான காவல் வையுங்கள். “ஆரோக்கியமுள்ள நாவு ஜீவ விருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்” (நீதி. 15:4) என்ற வசனம் எவ்வளவு எளிய நடையில் ஆணித்தரமாகக் கூறுகிறது. ஆம், நம் நாவுகளை அடக்கி ஆளுகிறவர்களாயிருக்கவேண்டும். சிலர் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசிவிட்டு “ஐயோ என்னால் சொல்லாமல் இருக்க முடியாமல் போயிற்று. என் நாவை அடக்க முடிகிறதில்லையே,” என்று சாதாரணமாய்க் கூறுவார்கள். இது சரியல்ல; நம்முடைய நாவுகளை அடக்கமுடியும். கிறிஸ்துவினுடைய பெலத்தினால் விசுவாசி எல்லாக்காரியங்களையும் செய்யமுடியும். தன்னடக்கம் ஆவியின் கனி என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோமாக. தேவன் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்து நிறுத்த முடியுமானால், தீய வார்த்தைகளின் வெள்ளப் பெருக்கை அடக்கி வைத்துக்கொள்ளக்கூடிய சக்தியையும் அவரால் அருளமுடியும். நம் வீடுகளிலும், பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் புண்படுத்தும், வேதனையுண்டாக்கும், மனதை வெட்டிப் பிளக்கும் வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்த முடியும். நாம் உண்மையாய் விரும்பும்போது தேவன் நம் நாவுகளை அடக்க உதவிசெய்வார்.

நல்ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனது உடையவர்களாயிருங்கள். “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்” (நீதி.15:22). எக்காரியத்தைக் குறித்தும் ஒருவர் சிந்தித்துத் தீர்மானிப்பதைவிட இரண்டு தலைகள் கலந்து யோசித்துத் தீர்மானிப்பதே மேல் என்று பெரியோர் கூறுவதுண்டு.

சாலமோனுடைய குமாரன் ரெகோபெயாம் முதியவர்கள் கொடுத்த ஞானமான ஆலோசனையைத் தள்ளிவிட்டு தன் புத்தியீன சகாக்களின் வார்த்தைகளைக் கேட்டு இஸ்ரவேலவரின் நுகத்தை அதிக பாரமாக்கினான். அதனால் பாதி இராஜ்யத்தை இழந்தான். ஆகையால், அவ்விதம் நடந்துகொள்ளாமல் ஞானமுள்ள தேவபிள்ளைகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க ஆயத்தமாயிருப்பீர்களானால் புதிய வருஷம் உங்களுக்கு மேன்மை யானதாயிருக்கும்.

எந்தப் பணியைச் செய்ய நேரிட்டாலும் அதை நேர்மையுடன் செய்யுங்கள். ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும், சோம்பேறியோ பகுதி கட்டுவான்” (நீதி.12:24) என்று வசனம் கூறுகிறது. நம் ஆண்டவர் கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத் தின்மேல் அதிகாரியாக வைப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே; ஆகையால் நீங்கள் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அதை விட்டு விடாமல் நேர்மையாய்ச் செய்து வாருங்கள்.

உங்கள் நெருங்கின உறவினர்களையோ, மிகவும் நேசித்த நண்பர்களையோ காரணமின்றி பகைத்து அவர்களது உறவை துண்டித்து விட எண்ணுகிறீர்களா? ஒரு கெட்டப் பழக்கத்தை மேற்கொள்ள நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளை விட்டுவிட நினைக்கிறீர்களா? ஆலயத்தில் போதகருடனோ, சபையாருடனோ வித்தியாசம் ஏற்பட்டால் ஆலய ஆராதனைக்கு ஒழுங்காகச் செல்வதை நிறுத்திவிட நிச்சயிக்கிறீர்களா? இவ்விதமான அநேக தவறான எண்ணங்களுக்கு இடங்கொடாதீர்கள். விடாமல் தொடர்ந்து நேர்மையான வழியைக் கடைப்பிடியுங்கள். கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்!

உங்களையே ஆராய்ந்து கீழ்வரும் கேள்வி களைச் சற்று சிந்தியுங்கள்:

என்னுடைய ஜீவியத்தில் தேவனுக்கு முதலிடம் கொடுத்திருக்கிறேனா?

பாவத்தை எதிர்த்து அதை முழுவதுமாய் விட்டுவிட விரும்புகிறேனா?

என் நாவை இறுகக் கட்டி அடைத்து வைக்கிறேனா?

மற்றவர்களது நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள எனக்கு மனமுண்டா?

சீரான ஒரு பணியை ஏற்று அதில் நேர்மையாயிருப்பது என் நோக்கமா?

இக்கேள்விகளுக்கு பதில் ஆம், என்றால் நல்லது. இல்லையென்றால் அவற்றைக் கடைபிடிப்பேன் என்று தீர்மானம் எடுங்கள்.

அப்பொழுது ஆண்டவர் இப்புதிய வருஷத்தில் உங்கள் பாதைகளை செவ்வைப்படுத்தி, உங்களை மேன்மையாக்கி ஆசீர்வதிப்பார்.

சத்தியவசனம்