சத்தியவசனம் பங்காளர் மடல்
ஜனவரி-பிப்ரவரி 2013
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,
மீட்பர் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
தேவனுடைய பெரிதான கிருபையால் 2013ஆம் ஆண்டிற்குள் நம்மை பிரவேசிக்கச் செய்தபடியால் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். சத்தியவசன ஊழியப் பணிகள் வாயிலாக அநேகர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைந்துவருகிறபடியால் தேவனை துதிக்கிறோம். தாங்கள் பெற்ற நன்மைகளை எங்களுக்கு எழுதித் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
2013-ஆம் ஆண்டிலும் சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம். SMS வாயிலாக வேத வசனங்களை அனுப்பும் ஊழியத்தை ஆரம்பித்துள்ளோம். SMS மூலம் வசனங்களை பெற விரும்புவோர் உங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
இலவச அஞ்சல் வழி வேத பாட பயிற்சியில் அநேகர் இணைந்து வருகின்றனர். தங்கள் பெயர்களை பதிவு செய்தவர்களுக்கு முதல் பாடத்தை அனுப்பி வைத்திருந்தோம். அதிலுள்ள தேர்வு தாள்களை நிரப்பி அநேகர் அனுப்பி வைத்துள்ளனர். விடைத் தாள்கள் திருத்தப்பட்டு இரண்டாவது பாடத்தோடு தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இரண்டாவது பாடம் பிரிண்ட் பண்ணுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் உடன் அனுப்பி வைக்க இயலவில்லை. கூடிய விரைவில் அனுப்பி வைக்க முயற்சிக்கிறோம். இவ்வேதபாட பயிற்சியின் வாயிலாக அநேகர் பிரயோஜனமடைய வேண்டுதல் செய்கிறோம். 2012 ஆம் ஆண்டில் வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை மார்ச்-ஏப்ரல் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம் என்பதை அன்புடன் தெரிவிக்கிறோம்.
இவ்விதழில் தேவன் நமக்கு அருளியுள்ள விசேஷித்த வாக்குத்தத்தத்தைக் குறித்து டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் விளக்கியுள்ளார்கள். புதிய வருடத்திற்குள் பிரவேசித்துள்ள நம் அனைவருக்கும் நல் ஆலோசனைகளை என்னை ஆராய்ந்துபாரும் என்ற செய்தியில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் வழங்கியுள்ளார்கள். அதரிசனமான தெய்வத்தை மோசே விசுவாசத்தோடு நோக்கிப் பார்த்ததைக் குறித்த சிறப்பு செய்தியை கர்னல் பிரசாத் ரெட்டி அவர்கள் வழங்கியுள்ளார்கள். வழக்கம்போல் வெளிவரும் தொடர்செய்திகளான இயேசுகிறிஸ்து அருளிய உவமைகள், ஆசரிப்புக் கூடாரம், நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள் ஆகிய செய்திகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் உங்கள் யாவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.