Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2013)
சத்தியவசன வாசகர்கள் அனைவருக்கும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலே நாம் அநேக புதிய காரியங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அல்லவா? ஆனால் நேற்றும் இன்றும் என்றும் மாறாத நமது ஆண்டவருக்கு எதுவுமே புதியது அல்ல. ஏனெனில் அவை யாவும் ஆதிமுதலே நமக்காகத் திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ளன. சாத்தானுடன் உள்ள நமது பழைய உறவை விட்டுவிட்டு, நாம் தேவனுடன் புது உறவைக் கொண்டுள்ளோம். இது நமக்கு புதியது; ஆனால் தேவனுக்குப் புதியதல்ல.
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28) என்ற வசனம் இன்று அநேகரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது அல்லது தவறாக விமர்சிக்கப்படுகிறது.
உங்களுடைய இழப்பு நேரத்தில் அல்லது துன்ப நேரங்களில் உங்கள் நண்பர்கள் ‘வேதம் கூறுகிறது’ என்று இவ்வசனத்தைச் சொல்லி ஆறுதல்படுத்துவார்கள். இதனை யோபுவின் நண்பர்கள் அவரை ஆறுதல்படுத்தியதற்கு ஒப்பிடலாம். வேதவசனத்தைப் புரிந்து கொள்ளுவதற்கு அது எந்தச் சூழலில், யாருக்கு, யாருக்காகக் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவ்வசனத்திற்கு முன்பும் பின்பும் கூறப்பட்டுள்ளவற்றை நாம் வாசிக்க வேண்டும். அநேகர் ரோமர் 8:28ஆம் வசனத்தை அவ்வதிகாரத்திலிருந்து தனியாகப் பிரித்து எடுத்து தவறான அர்த்தம் கொள்ளுகிறார்கள்.
ரோமர் 8ஆம் அதிகாரம் தேவனுடன் உள்ள நம்முடைய புது உறவைப் பற்றியும், கிறிஸ்து இயேசுவுக்குள்ளான நமது புதிய நிலையையும், அவர் தரும் புதிய சிந்தையையும் விளக்குகிறது. மேலும் அவர் ஒரு புதிய வாக்குத்தத்தத்தையும் நமக்கு அளிக்கிறார். இதனை இவ்வதிகாரத்தின் மையப்பகுதியில் நாம் வாசிக்கிறோம். இது புது சிந்தையை உடையவர்களுக்கே அளிக்கப்படுகிறது. தேவனுடன் புது உறவைக் கொண்டவர்களுக்கும், கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாயிருப்பவர்களுக்கும், தரப்பட்ட வாக்குத்தத்தமாகும். இது யாவருக்கும் பொதுவானதொரு வாக்குத்தத்தமல்ல. அதற்குரிய தகுதியைப் பெற்றவர்களே இவ்வசனத்தை உரிமை கோரலாம்.
இவ்வசனத்தை நாம் இன்னும் ஆழ்ந்து வாசிப்போமானால், முதலாவதாக இதனை அப்.பவுல் தனிமையாகக் கூறவில்லை. ரோமர் நிருபத்தில் கூறப்பட்டுள்ள பல காரியங்களுக்கு மத்தியிலே இவ்வசனத்தைக் கூறியுள்ளார். இரண்டாவதாக, இது ஆறுதலைத் தரும் ஓர் ஊன்றுகோல் அல்ல, மாறாக இது ஒரு வாக்குத்தத்தம். தேவன் நம்முடைய வாழ்வில் செய்யும் காரியங்களுக்கான வாக்குத்தத்தம் இது. நம்முடைய நம்பிக்கையற்ற சூழலிலோ, அனைத்துக் காரியங்களும் நம்முடைய விருப்பப்படி நடவாமலிருக்கும் பொழுதோ, இவ்வசனத்தைக் கையாளாதீர்கள். ரோமர் 8:28 ஓர் ஆதரவு கோல் அல்ல. இது ஜீவனுள்ள தேவனுடைய வாக்குத்தத்தம். அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நாம் அறிந்துள்ளோம் என்பதே இதன் மைய சாராம்சமும் பொருத்தமுடையதுமாகும். இது மறுபடியும் பிறந்தவர்களுக்குக் கிடைக்கிற நன்மைகளில் ஒன்றாகும்.
இவ்வசனத்தை எதிர்காலத்தில் நடக்க விருக்கும் காரியங்களுக்கென நாம் கருதுகிறோம். நம்முடைய வாழ்வில் தோல்விகள் ஏற்படும்பொழுது மட்டுமே இது நிறைவேறும் என நினைக்கிறோம். ஆனால் அப்.பவுலோ, நம்முடைய சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும், வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் எப்படிப்பட்டதாயிருந்தாலும் தேவனுடைய வாக்குத்தத்தம் எப்பொழுதுமே உண்டு என்று சொல்லுகிறார்.
“நினைக்கிறோம்” என்ற சொல்லை அவர் இவ்விடத்தில் பயன்படுத்தவில்லை; மாறாக “அறிந்திருக்கிறோம்” என்றே எழுதியுள்ளார். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”. இந்த அறிவு புத்தகங்களைப் படிப்பதாலோ, நமது உள்ளுணர்வாலோ வருவது அல்ல. அது உங்களுடைய வாழ்வில் உண்மையென்று கண்டுகொள்வதாகும். ஏனெனில் தேவன் உங்களுடைய வாழ்வில் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
நம்முடைய வாழ்வில் காரியங்கள் யாவும் சீராக, தேவன் விரும்பும் விதமாகவேதான் நடக்கும். ஏனெனில் தேவன் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தேவனே ஆளுகை செய்கிறவர்.
தேவன் அனைத்து காரியங்களையும் நமது நன்மைக்கே செய்கிறார் என்பதை நாம் அறிவோம். நீங்கள் அறிந்தாலும், உணராவிட்டாலும் நமது வாழ்வில் நிகழும் செயல்கள் அதை வெளிப்படுத்தும். தேவன் மாறாதவர்!
இவ்வசனம் ஆதரவைத் தரும் ஓர் ஊன்று கோல் அல்ல; இது ஒரு வாக்குத்தத்தம். தேவன் ஒரு சில காரியங்களை மாத்திரம் எனது நன்மைக்காகவும் அவரது மகிமைக்காகவும் செய்கிறாரா அல்லது அனைத்தையும் செய்கிறாரா? எனக்கு அறியாத காரியங்களைச் செய்கிறாரா? இக்கேள்விகளுக்கெல்லாம் விடை: தேவன் சகலத்தையும் செய்கிறார் என்பதேயாகும். சகலத்தையும் என்பது உங்களுடைய வாழ்வின் அனைத்து காரியங்களையும், ஒவ்வொரு நிகழ்வுகளையும் தேவன் உங்களுக்கு மிகச் சிறந்ததாக உடனடியாக மாற்றித் தருகிறார். மேலும் உங்களுக்கு நிகழும் அனைத்தையும் தேவன் நன்மையாகத் தந்துள்ளார் என்பதை நீங்கள் உடனடியாக அறிந்துகொள்வீர்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படவில்லை. அவர் அவ்வாறு வாக்கு தரவில்லை; எனவே அதனை எதிர்பார்க்காதீர்கள். நமக்கு நன்மையாகத் தோன்றாத காரியங்கள் யாவையும் காலப்போக்கில் நன்மையாக மாற்றித் தருவார் என்றே அவர் வாக்களித் திருக்கிறார்.
சகலத்தையும் என்ற சொல், தேவனுடைய ஆளுகைக்கு உட்படாத எதுவுமே இல்லை என்று பொருள்படும். எனவே சகலத்தையும் என்பதை நாம் ஒரு வாக்குத்தத்தமாகக் கொள்ளலாம். தேவன் தம்முடைய காவலை விட்டு அகலவில்லை. செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பொழுது தேவன் ஆச்சரியப்படவில்லை. உங்களுடைய அன்புத்தாயார் இறந்தபொழுதும் அவர் உங்களைக் கைவிடவில்லை. மருத்துவரின் அறிக்கை வந்தபொழுது, நீங்கள் கேள்விப்பட விரும்பாத காரியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டபொழுது, உங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் தேவனுக்கு அது அதிர்ச்சியல்ல. அதை அவர் முன்னதாகவே அறிந்திருந்தார்.
தேவனுடைய அறிவுக்கும், ஆதிக்கத் துக்கும் அப்பாற்பட்டது எதுவுமில்லை. அவர் அனைத்தையும் உங்களுடைய நன்மைக் கென்றே மாற்றுவார் – உடல்நலக்குறைவு – பொருளாதாரச் சரிவு – அன்புடையவர்களின் மரணம் இவை யாவும், அவரது அனுமதிக்குட்பட்டதே. “உன்னுடைய நன்மைக்கும் என்னுடைய மகிமைக்கும் ஏதுவாக சகலத்தையும் நான் மாற்றித் தருவேன்” என்று தேவன் வாக்களிக்கிறார்.
அடுத்ததாக, “நாம் அறிந்திருக்கிறோம்” என்ற சொல்லை கவனிப்போம். தேவன் யாவையும், நமது நன்மைக்கு செய்கிறார் என்பதை அறிந்தோம். நன்மையானது அல்ல என்று தோன்றுபவற்றையும் நன்மையாகத் தோன்றுபவற்றையும் அவர் கலந்து, அதனுடைய முன்னிலையைவிட சிறப்பானதாக மாற்றுகிறார்.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டைத் தர விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியராக இருந்தேன். இளந்தம்பதியினருக்கும் வகுப்புகள் எடுத்தேன். அந்த வகுப்பில் சுமார் 300 பேர் இருந்தனர். அவர்கள் ஒரு குடும்ப ஐக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ண விரும்பினர். அவ்வாறே சுமார் 1500 பேர் பங்கெடுத்தனர். அனைவரும் சேர்ந்து ஒரு பானம் தயாரிக்க விரும்பினோம். ஒரு பெரிய பாத்திரத்தில் கோழி சூப், கறி சூப், சில காய்கறிகள், கலந்துகொண்ட தம்பதிகள் கொண்டுவந்த பானங்கள், குளிர்பானங்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு துடுப்பினால் ஒன்றாகக் கலந்தபொழுது, அது ஒரு கஞ்சி போல இருந்தது. பழுப்பு நிறமுடையதாயும், மோசமான சுவையுடையதாயும் இருந்தது. ஆனால் அடுத்த வருடம் அந்த கூடுகையில் மக்கள் தங்களுடன் அநேகப் பொருட்களை எடுத்து வந்திருந்தனர். எல்லாவற்றையும் கலந்து ஒரு உணவைத் தயாரித்தோம். ஒரு சிலருக்கு பிரியமில்லாத பட்டாணி, பீன்ஸ் முதலியன இதில் கலந்திருந்தாலும் அதன் மொத்த சுவை நன்றாக இருந்தது. அநேகர் அதனை ருசித்து உண்டனர். ஒவ்வொரு முறையும் இவ்வசனத்தை நான் வாசிக்கும்பொழுது, இந்த நிகழ்வு என் நினைவுக்கு வரும். தேவன் அனைத்து காரியங்களையும் நமது நன்மைக்காகவே செய்கிறார்.
உடல் ஊனமுற்ற உங்கள் பிள்ளையை தேவன் எடுத்துக்கொள்ளுகிறார். உங்களுடைய தாயாருக்கோ, தகப்பனுக்கோ புற்று நோயை அனுமதிக்கிறார். உங்களுக்கு கடன் தொல்லை – கடினமான சூழ்நிலை, விடை காணமுடியாத பிரச்சனைகள் இவை யாவையும் தேவன் ஒன்றாகக் கலந்து, “என்னுடைய வாக்குத்தத்தத்திற்கு வெளியே எதுவும் இல்லை. உன் வாழ்க்கையை நான் கலக்கும் பொழுது, அது முடிவில் அற்புதமாக மாறும்” என்று கூறுவார். உங்களுடைய வாழ்வில் யாரேனும் நீங்கள் விரும்பாத எதையாவது, கொண்டு வருவதை நீங்கள் காண்பீர்கள் எனில், அவை அனைத்தையும் உங்களுக்கு நன்மையாகவே தேவன் மாற்றித் தருவார் என்பதே அவர் அளிக்கும் வாக்குத்தத்தம். இதையே ரோமர் 8:18 கூறுகிறது.
இந்த வாக்குத்தத்தம் யாவருக்கும் பொதுவானது அல்ல; ரோமர் 8:28ஐ வாசிக்கும் அனைவரும் இந்த வாக்குத்தத்தத்தை உரிமை கொண்டாட முடியாது. இது அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? ஆம்! முதலாவது தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களும் இரண்டாவதாக அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களும் இவ்வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ளுகின்றனர். இவ்விரண்டு காரியங்களும் ஒன்றல்ல; வெவ்வேறானவை, ஆனால் ஒவ்வொன்றும் முக்கியமானதாகும். தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கே இவ்வாக்குத்தத்தம் உரிமையாகும்.
“தேவன் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவரை நான் நேசிக்கிறேன்” என்று சொல்லும் ஒரு அயலார் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ள விரும்பிய ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்தக் காரியத்தைக் கூறுகிறார். அவர்களுடைய கிரியைகளிலிருந்து அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். தேவனை நேசிக்கிறதும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதும் வெவ்வேறு காரியங்கள். உங்களுடைய கணவனை நேசிப்பதும், அவருக்கு உண்மையாயிருப்பதும் வித்தியாசமான காரியங்கள். “பிரியமானவர்களே, தேவன் உங்களை நேசிக்கிறார், அவர் உங்களை கவனித்துக் கொள்ளுவார்; எனவே நடப்பதைப் பற்றி கவலைப்படாதிருங்கள்” என்று ரோமர் 8:28 கூறவில்லை. தேவன் அவர்களை நேசிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் தேவனை நேசிக்கிறார்களா? என்பது முக்கியமான காரியம். இந்த வரையறை நமக்கு எழுத்தில் அச்சிடப்பட்டு தரப்பட்டுள்ளது. “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”.
தேவனை அறியாதவன் அவரிடத்தில் அன்பு கூரமாட்டான். இதைத்தான் 1 யோவான் 4ஆம் அதிகாரம் கூறுகிறது. “நீங்கள் என்னை அறிந்தீர்களெனில், என்னில் அன்புகூருவீர்கள். நீங்கள் என்னில் அன்புகூர்ந்தால் உங்கள் சகோதரனிடத்திலும் அன்பு கூருவீர்கள்” என்று அப்பகுதி கூறுகிறது. “நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் அன்புகூராவிட்டால் நீங்கள் தேவனிடத்திலும் அன்பு கூரவில்லை. தேவனிடம் உங்களுக்கு அன்பில்லை எனில் நீங்கள் அவரை அறியவில்லை” என்று வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது. எனவே தேவனை நேசிக்கிறவர்களுக்காக மாத்திரமே, ரோமர் 8:28 உரித்தாகிறது. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுவதால் அவரை நேசிக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்கிறோம்.
தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி “அழைக்கப்பட்டவர்களுக்கு” மட்டுமே உரியது என்று இந்த வாக்குத்தத்தம் மேலும் ஒரு நிபந்தனையை விதிக்கிறது. “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்று வேதம் கூறுகிறதே என சிலர் கூறுவர். இதன் பொருள் என்ன? நாம் யாவரும் சில செயல்களைச் செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
‘தேவனை நேசிக்கிறவர்களுக்கும், அவரால் அழைக்கப்பட்டவர்களுக்கும் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும்’ என்று அவ்வசனம் கூறவில்லை. இது அழைக்கப்பட்டவர்களுக்கு தரப்பட்ட வாக்குத்தத்தம். அப்படியாயின் “அழைக்கப்பட்டவர்கள்” யார்? இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று அவரை அண்டினோர்களே அழைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கிறிஸ்துவுடன் ஒரு புதிய உறவு உண்டு; ஒரு புதிய நிலை உண்டு; கிறிஸ்துவுக்குள்ளாக ஒரு புதிய சிந்தை உண்டு. ஏனெனில் தேவனே உலகத் தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார் என எபேசியர் முதலாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்.
“தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்” என்பது ஒரு சிறப்பான மக்கள் கூட்டம். முழு உலகமும் தேவனுக்குக் கீழ்ப்படியாததினால், அகில உலக மக்களுக்கும் தேவனுடைய வாக்குத் தத்தம் சொந்தமாகாது. இந்த வாக்குத்தத் தங்கள் நமக்காகவே தரப்பட்டுள்ளன. நாம் தேவனை நேசிக்கும்பொழுது, அழைக்கப்பட்டவர்களின் குழுவின் அங்கத்தினராகிறோம்.
இனி ரோமர் 8:28 என்ற வசனத்தின் வாக்குத்தத்தத்தை நமது வாழ்வில் எவ்வாறு செயல்படுத்தமுடியும் என்பதை ஆராய்வோம். வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை நீங்களும் நானும் எதிர்கொண்டுள்ளோம். நமக்கு மாத்திரமே உள்ள சில அனுபவங்களையும், பொதுவான சில அனுபவங்களையும் நாம் கூர்ந்து கவனிப்போம்.
உலகின் பொதுவான ஒரு பிரச்சனை புற்று நோயாகும். இது உண்மையல்லவா? புற்று நோயால் பாதிக்கப்படாத குடும்பம் என்று இவ்வுலகில் ஒன்றுமில்லை. இப்புற்று நோயால் என்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் நினைக்கலாம். அது அதிகமான வலியையும், சில வேளையில் மரணத்தையுமே கொண்டுவரும். ஆனால் இந்நோய் இல்லாவிட்டால் வாழ்வில் சில வாய்ப்புகளை நாம் இழந்திருப்போம். நல்ல ஆரோக்கியம் இருந்திருந்தால், தேவனுடைய உண்மைக்கு சாட்சி கூற வாய்ப்பு இல்லாதிருந்திருக்கும். உடல் நலம் பாதிக்கப்பட்டதால்தான் அந்த வாய்ப்பு கிட்டியது. ஒருசில காரணங்களால், சிதறிப் போயிருந்த குடும்பங்கள், இப்புற்று நோய் பாதிக்கப்பட்டவரால் மீண்டும் இணைய வாய்ப்பளித்திருக்கும். பயங்கரமான நோய் ஒரு நபரைப் பாதிக்கும்பொழுது, அக்குடும்பத்தினர் ஒன்றாக ஒட்டிக்கொள்ளுவர். தேவனை நெருங்கிச் சேரவும் அவருக்கு சாட்சி பகரவும் அந்நோய் ஒரு காரணியாக மாறிவிடலாம். புற்று நோய் வேண்டும் என்று யாருமே தேவனிடத்தில் கேட்கமாட்டோம். ஆனால் அந்த நோய் மற்ற காரியங்களுடன் சேர்ந்து நமக்கு நன்மையைக் கொண்டுவர தேவன் செயல்படுவார்.
நாசம் விளைவிக்கும், பயங்கரமாகத் தோன்றும் சில காரியங்களில்கூட, “நீங்கள் என்னிடத்தில் கிட்டி சேருங்கள், நீங்கள் என்னுடைய பிள்ளைகளாயிருப்பதாலும், என்னை நேசிப்பதாலும் நான் அவற்றை உங்களுடைய நன்மையாக மாற்றித் தருவேன்” என்று தேவன் சொல்லுவார்.
“பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின; எல்லாம் புதிதாயின” கிறிஸ்துவுக்குள் நாம் புது சிருஷ்டியாயிருக்கிறோம். நமக்கு புதிய சிந்தனைகள் உண்டு. பழைய எண்ணங்கள் நமக்குத் தோன்றாது. இதற்கு முன் நாம் கிறிஸ்துவுக்கு வெளியே இருந்தோம். ஆனால் இப்பொழுதோ நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்கிறோம். கிறிஸ்துவுடன் நமக்கு ஒரு புதிய உறவு உண்டு. புது நம்பிக்கை, புது நிச்சயம் உண்டு. இப்புத்தாண்டிலும் தேவனுடைய புதிய வாக்குத்தத்தத்தை நமக்கு உரித்தாகும்படி நாம் தேவனிடம் நெருங்கி ஜீவிப்போமாக.