கர்னல்.N.பிரசாத் ரெட்டி

(ஜனவரி-பிப்ரவரி 2013)

அன்புள்ள விசுவாசப் பங்காளரே, நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்தக் கடிதத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இத்தருணத்தில் சத்தியவசனம், Back to the Bible-ன் சார்பாகவும், Board of Director என்கிற முறையிலே Board of Directors சார்பாகவும் உங்களுக்கும் உங்களுக்கு அன்பானவர்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். மக்களை வேதாகமத்திற்கு நேராகத் திருப்பி, தேவனுடைய பெரிதான கட்டளையை நிறைவேற்றும்படி கிறிஸ்துவுக்கென்று சீஷர்களை உருவாக்குவது, எங்களோடுகூட இணைந்து, மனம் உவந்து நீங்கள் பங்காளர்களாக இருப்பதில் நான் தேவனுக்கு எந்நாளும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.

கிறிஸ்துமஸ் காலங்களிலே நமது சத்திய வசனம் சார்பாக மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனையில் கலந்து கொண்ட விசுவாச பங்காளர்கள் கூடுகையிலே அவர்களோடுகூட பகிர்ந்துகொண்ட தேவ செய்தியை வாசகர்களாகிய உங்களுக்கு எழுத்து வடிவத்தில் இந்தப் புதுவருடத்தில் நுழையும்வேளையில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

அதரிசனமான தேவனை தரிசித்தல் (எபி.11:27).

நாம் பொருள்மயமான உலகத்தில் வாழுகின்றோம். இந்தக் காலங்களைக் கடைசிகாலம் என்று தேவனுடைய வார்த்தை விளக்குகிறது. கடைசி காலங்களில் காணப்படும் பல்வேறு பண்புகளில் ஒன்று “…மனுஷர்கள் …தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும்…” (2தீமோத்.3:4) இருக்கிறார்கள். சுகபோக இன்பங்கள் பழக்க வழக்கங்களை உருவாக்குகிறது. நம்முடைய வசதிகள் கூடக்கூட நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்று நம்பத்தொடங்குகின்றோம். நம் நம்பிக்கை இப்படி இருப்பதால் நம் வசதிகள் தேவைப்படுகிறதோ இல்லையோ பெருக்கிக்கொள்ள நம் வாழ்நாளைச் செலவிடுகிறோம். தேவைகளையும் வசதிகளையும் ஆடம்பரங்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க நாம் தவறிவிடுகிறோம். பொருள்மயமான உலகத்தில் மிக இன்றியமையாத காரியம் பொருள். இம்மைக்குரிய பொருளாதார ஆசீர்வாதங்களும் தேவனிடத்தில் இருந்தே வருகிறது. நாம் அனுபவிக்கும்படியாக அவர் நமக்கு மிகுதியாகத் தருகிறார். தேவனுடைய வல்லமையினாலேயே நாம் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுகிறோம்.

2 பேதுரு 1:3ன் படி “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது…” என்று அறிகிறோம். தேவனை அறிகிற அறிவினாலே எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு அவரில் நிறைவு பெற்று திருப்தியாக அவரோடு வாழ்வதே இதன் முக்கிய நோக்கமாகும். பொருள் ஈட்டுவதையும் செளகரியங்களை அடைவதுமே வாழ்வியலின் நோக்கமானால் அது தவறானதாகும். நற்சாட்சி பெற்ற பாராட்டுக்குரிய தலைவர்களை விளக்கிக் கூறும்போது எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் மோசேயைப் பற்றி “விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரை தரிசிக்கிறதுபோல உறுதியாய் இருந்து…” என்று குறிப்பிடுகிறார்.

பொருள் மயமான உலகத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், பொருட்களைப் பார்த்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும். உலகமானது காணப்படுபவைகளைப் பார்க்க நம்மை ஊக்குவிக்கிறது. இதற்கு எதிர்மாறாகவே தேவனுடைய வசனம் நம்மைத் தூண்டுகிறது. காணப்படுபவைகள் எல்லாம் அநித்தியமானது. நம்முடைய கண்கள் நமக்கு இடறல் உண்டாக்கினால் அவைகளைப் பிடுங்கி எறிந்துபோடு என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மை எச்சரித்திருக்கிறார். இந்த மாயையான உலகத்தில் நாம் காண்பவைகளை எல்லாம் நம்பாதபடி இருக்க நம்மை நாமே வலுக்கட்டாயமாகவும், விருப்பத்துடனும் செயல்பட வேண்டும் என்று இந்த வார்த்தை பொருள்படுகிறது. “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2கொரிந்தியர் 4:18). இப்பூலோகப் பயணத்தில் மக்களையும், சூழ்நிலைகளையும் நம்மையும் பாவக்கறையுடைய கண்கள், இருதயம் மனம் கொண்டு பார்க்கவே நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் கடிதம் உங்களை இதற்கு எதிர்மறையாகச் சிந்திக்கத் தூண்டுவதற் காகவே எழுதப்படுகிறது.

நாம் சூழ்நிலைகளைப் பார்க்கிறோமா?

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கக் கூடிய சூழ்நிலைதான் என்ன? (ரோ. 8:35). மோசேயின் பெற்றோர்கள் மோசேயைக் கண்ட பொழுது அதரிசனமான தேவனையும், அவர்களுடைய குழந்தைக்கு தேவன் வைத்திருந்த மேலான அதிசயமான நோக்கங்களையும் கண்டனர். அவர்கள் “காணப்படுபவைகளை” கண்ணோக்கியிருந்தால், எல்லா எபிரெய குழந்தைகளுக்கும் வைக்கப்பட்டிருந்த மரணத்துக்கே தங்களையும் ஒப்புக்கொடுத்திருப்பார்கள். அவர்கள் காணப்படாதவைகளை கண்டார்கள். ஒரு புதிதாய் பிறந்த குழந்தையினிடத்தில் அவர்களால் என்ன காண முடியும்? …இயலாமை, சமுதாயத்தை நெருக்குகிற அதிகப்படியான துன்பம், மற்றும் மனித உயிருக்கு கொஞ்சமும் மரியாதையில்லாத நிலைமையுமேயாகும். அவர்களுடைய விசுவாசமே அவர்களை விடுவிக்கிறவரை,.. தலைவரை,.. தேவனுடைய மனுஷனை… காணச் செய்தது. இந்த விசுவாசமே அவர்கள் மோசேயை மூன்று மாதங்கள் ஒளித்துவைக்கும்படி விசுவாசத்தின் முதல் அடியை எடுத்துவைக்க உதவியது (அப்.7:20). அதன்பிறகு தேவன் மற்ற எல்லா காரியங்களையும் பொறுப் பெடுத்துக் கொண்டார்.

உங்களுடைய காணக்கூடிய பிரச்சனைகள், வியாதி, பொருளாதார நெருக்கடி, அன்பானவர்களை இழக்கக் கொடுத்த சூழ்நிலை, எப்பொழுதும் நச்சரித்துக்கொண்டிருக்கும் அயலான், குடிகாரக் கணவன் இவற்றின் மத்தியில் காணப்படாதவைகளை காண விரும்புகிறீர்களா? காண்கிற உண்மை நிலையை உண்மையென்று கணக்கிடக் கூடாது, யெகோவாயீரேவாகிய நம் தேவன் மாத்திரமே நம்முடைய உண்மையாகும். அப் போஸ்தலனாகிய பேதுரு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் தன்னுடைய கவனத்தை வைத்திருக்கும்வரை அலைகளை கடந்துசென்றார். தன்னுடைய கவனத்தை எப்பொழுது சூறாவளிக் காற்றின்மேல் திருப்பினாரோ அந்த நேரமே பயந்து, மூழ்கத் தொடங்கினார் (மத். 14:30).

நேபுகாத்நேச்சாரின் கட்டளையையோ, எரிகிற சூளையையோ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் காணவில்லை. சூழ்நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. “உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?” என்று நேபுகாத்நேச்சார் பரியாசம் பண்ணினான் (தானி. 3:15). “தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்” (தானி. 11:32). அவர்களை காக்க ஆயத்தமாயிருக்கிற அதரிசனமான தேவனை அறிந்து, அவரை தேவையானபொழுது தேவையான இடத்திலே பிரத்தியட்சமாய் கண்டார்கள். இராணுவங்களும், இரதங்களும், குதிரைகளும் உங்களை சூழ நிற்பதை கண்டுக்கொண்டு, நாங்கள் என்ன செய்வோம் என்று கூக்குரலிடு கிறது என்ன? (2 இரா.6:15-17).

நாம் மக்களை காண்கிறோமா?

(மனிதன் என்ன செய்வான்? (சங்.118:6,7) கோலியாத்துக்களாய் தோன்றும் மக்களையும், சூழ்நிலைகளையும் பார்த்து பயந்து தவிக்கிறோம். பொதுவாக, நாம் மனிதனுடைய வெளித் தோற்றத்தைப் பார்க்கவே பழக்கப்பட்டிருப்பதால், மனிதர்களை வெளித்தோற்றத்தைப் பார்த்தே மதிப்பிடுகிறோம். அதை நம்மால் தவிர்க்க முடியாது. ஒரு மனிதனுள் இருக்கிற உள்ளான தோற்றத்தை மிக அரிதாகவே காண்கிறோம். ஆண்டவராகிய பரிசுத்த ஆவியானவரே நமக்கு அதை காண்பிக்கக்கூடும். விளைவு என்னவென்றால் நாம் கலங்கி மிகவும் பயப்படுகிறோம் (1சாமு.17:11). இஸ்ரவேலின் தேவன் உண்டென்று நாம் உறுதியாய் நம்புவோமென்றால், நாமும் தாவீதைப் போல செயல்படக்கூடும். “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்” என்றான் தாவீது (1 சாமு. 17:37). உலகத்திலிருப்ப வனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்பதை உணர்ந்து, நம்முடைய எதிரியை தாழ்வாக மதிப்பிட நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் சொந்த பலவீனங்களினால் அலைக் கழிக்கப்படுகிறீர்களா?

நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோ.7:24). நமது போராட்டமானது ஆவிக்குரிய போராட்டமாகும். மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, மாறாக நமது அணுகுமுறைகள் தேவனின் அறிவுக்கு எதிராக இருக்கிறது. தோமா சொன்னதைப்போல நாம் காண்கிறதை விசுவாசிக்கிறோம். ஆனால் “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என (யோவான் 20:29) இல் தேவன் சொல்லுகிறார். நமது மனக்கண்கள் காணாதவைகளை காணும்படியாக தேவன் விரும்புகிறார் (எபே.1;18). அவரது வசனம் நம் ஒவ்வொருவருடைய நினைவுகளையும் கிறிஸ்துவுக்குள்ளாக கொண்டுவர நம்மை ஊக்கப்படுத்துகிறது (2கொரி.10:3-6). அதனால் விடா முயற்சியுடன் அதரிசனமான கடவுள் மீது உள்ள நம்முடைய பற்று வீணாய்ப் போகாது. கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைக் குறித்தும் நாம் மேன்மை பாராட்டக்கூடாது. நாம் இந்த உலகத்துக்குச் சிலுவையிலே அறையப்பட்டிருக்கிறோம். இந்த உலகமானது தேவன் நமக்கு உண்மையில் வைத்திருக்கிறதான ஆசீர்வாதங்களை புரிந்துகொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் நாம் உலகம் உண்மையென்று கருதுபவற்றை தள்ளி விடுவது அவசியம். கலா.2:20 கூறுகிறது என்ன வெனில், “…தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்”. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின, ஒப்பில்லாத பலத்த தேவனுடைய வல்லமை உங்களில் கிரியைச் செய்கிற தை நீங்கள் காண்கிறீர்களா? (எபே. 1:19,20).

இந்த உலகத்திலும், இனிவரும் உலகத் திலும் மிகவும் அற்புதமாக பலனளிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால், நீங்கள் தரிசித்து நடவா மல் விசுவாசித்து சந்தோஷத்தோடு நடக்கும் படி உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கர்னல் N.பிரசாத் ரெட்டி (Retd)