சுவி.சுசி பிரபாகரதாஸ்
இயேசுகிறிஸ்து விளம்பின உவமை #7
(ஜனவரி-பிப்ரவரி 2013)

கோதுமை மணியும் களைகளும்

இயேசுகிறிஸ்து அருளிய உவமைகளைக் குறித்து நாம் கற்றுவருகிறோம். இவ்விதழில் தன் நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையைக் குறித்து கற்றுக்கொள்ளப் போகிறோம். மத்தேயு 13:24-30 வரையிலான வேத பகுதியில் இவ்வுவமையைக் குறித்து வாசிக்கிறோம்.

“வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்”. இந்த உவமையிலே மூன்று காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.

நிலம்

முதலாவது இங்கு நிலத்தின் பிரச்சனையைக் குறித்து பார்க்கிறோம். ஆண்டவர் இதை தானாகவே விளக்குகிறார். நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள் (மத்.13:38,39). ஆண்டவர் தமது வேலைக்காரரை வைத்து பரலோக இராஜ்ஜியத்தின் விதைகளை விதைத்து நல்ல மனிதர்களை எழுப்புகிறார். சத்துருவான பிசாசானவனும் தன்னுடைய விதையை விதைத்து பொல்லாங்கனை எழுப்புகிறான். ஆண்டவர் எவ்வாறு விதைக்கிறாரோ அதே போல சத்துருவாகிய பிசாசானவனும் விதைக்கிறான். ஆண்டவர் எவ்வாறு கிரியை செய்கிறாரோ அதேபோல பிசாசானவனும் கிரியை செய்கிறான். ஆண்டவர் எவ்வாறு தமது பணியை துரிதப்படுத்துகிறாரோ அதேபோல பிசாசானவனும் செய்கிறான். இந்த நிலமாகிய இவ்வுலகிலே நாம் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஆண்டவருக்காக நாம் பணிசெய்யும்போது அருட்பணியிலே நாம் ஈடுபடும்போது ஊழியத்திலே நல்ல விளைவுகள் ஏற்பட்டு ஏராளமான பிள்ளைகள் எழும்புவார்கள். அதேவேளையில் சத்துருவானவன் தனது கிரியைகளைச் செய்து அநேக பொல்லாங்கானவர்களையும் அவர்களுக்குள்ளே விதைத்து விடுகிறான். இது திருமறையிலே ஏற்றுக் கொள்ளப்படுகிறதும் ஆண்டவர் சொன்ன போதனையுமாயிருக்கிறது.

இரண்டாவதாக, சத்துருவானவன் எப்பொழுது இதைச் செய்கிறானென்றால், அவர்கள் அறியாதவேளையில் செய்கிறான். நல்ல விதைகளை விதைத்த வேலைக்காரர்கள் விழித்திருக்கும்போது சத்துரு இந்தக் காரியத்தை செய்வதில்லை. அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது சத்துருவானவன் களைகளை விதைக்கிறான். நாம் சிந்திக்க வேண்டிய ஒரு உண்மை இதிலிருக்கிறது. நாம் அறியாத நேரத்திலே மறைமுகமாக அநேக எதிர்ப்பாளர்களையும் நிந்திக்கிறவர்களையும் சதி செய்கிறவர்களையும் சத்துரு எழுப்பிவிடுகிறான். சங்கீதக்காரன் தனக்கு மறைவாக வைக்கப்பட்ட குழிகள், சதிகள், சுருக்குகள், கண்ணிகள் குறித்து அநேக சங்கீதங்களில் குறிப்பிடுவதை வாசிக்கிறோம். இப்படிப்பட்ட மறைவானவைகளுக்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று சங்கீதக்காரன் அநேக வேளைகளில் வேண்டுதல் செய்கிறார். இதைப்போலவே சத்துருவானவன் அநேக தீங்கான காரியங்களை மறைவிலே இராஜ்ஜியத்தின் புத்திரருக்கு விரோதமாக செய்கிறான்.

மூன்றாவதாக, விளைச்சலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிற விதத்திலே களைகளை அவன் விதைக்கிறான். கோதுமை மணியானது விதைக்கப்பட்டது. அது நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. கோதுமை மணி தேவனுடைய புத்திரர்களைக் குறிக்கிறது. அதின் மத்தியில் சத்துரு களைகளை விதைத்து விடுகிறான். அதுவும் எழும்பி விடுகிறது. இது பொல்லாங்கனுடைய புத்திரரைக் குறிக்கிறது. ஒரே நிலத்திலே கோதுமையும் களைகளும் வளருகிறதுபோல இவ்வுலகிலே இரண்டுவிதமான மக்களும் சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகியுள்ளது. கோதுமைக்கு வரக்கூடிய தண்ணீர், உரம் ஆகிய எல்லாவற்றிலும் பொல்லாங்கனுடைய புத்திரரும் பங்கடைகின்றனர். நாம் பணிசெய்வது போலவும் வேகமாய் செயல்படுவது போலவும் சத்துருவானவனும் அவனது புத்திரர்களும் செயல்படுகின்றனர். இதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய அருட்பணியிலே அவரது ஊழியத்திலே இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும் என்பதை இயேசுகிறிஸ்து தனது போதனையிலே உணர்த்துகிறார்.

ஆண்டவரின் பணிசெய்தால் எதிர்ப்புகளோ நிந்தைகளோ வராது என்றும் சத்துருவானவன் அமைதியாய் இருப்பான் என்று நினைக்கிறோம். நாம் செயல்படுவதைக்காட்டிலும் அவனும் வேகமாய் செயல்படுகிறான். ஆனால் அவனைவிட நமது தேவன் பெரியவர்! அவனை ஜெயங்கொண்ட இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கிறார்!!

சத்துருவின் கிரியை

சத்துரு கிரியை செய்யும்பொழுது கர்த்தர் என்ன செய்கிறார்? சத்துருவின் தடைகள் நமக்கு வரும்போதும் இவ்வாறு நாம் கேள்வி எழுப்புகிறோம். ஆண்டவர் ஏன் இவ்வாறான சத்துருவின் கிரியைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? ஆண்டவருக்குத் தெரியாமல் இவைகள் நடைபெறுமா? அவர் கிரியை செய்யாமல் அமைதியாயிருக்கிறாரா? என்று பலவிதமான எண்ணங்கள் நம் உள்ளங்களில் எழும்புவது உண்டு.

சத்துரு களைகளை விதைப்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். தேவ மனிதர்கள் மத்தியில் பொல்லாங்கனான மனிதர்கள் எழும்பும்போது அதையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறியாமல் எதுவும் நடைபெறுவதில்லை. அவர் சகலவற்றையும் அறிந்தவர். இதிலே நாம் உறுதியான விசுவாசம் உள்ளவர்களாய் இருக்கவேண்டும். இந்த உறுதியிலிருந்து தவறும்போது நமது விசுவாசத்திலே பின்னடைவு ஏற்படும். பிசாசானவன் பொல்லாத மனிதர்களை எழுப்பும்போது தேவன் அதை அனுமதிக்கிறார். தோட்டத்தின் வேலைக்காரர்கள் எஜமானிடம் வந்து, “ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்” என்றார். ஆண்டவர் அதை அனுமதிக்கிறார்.

பொல்லாத மனிதர்கள் பச்சை மரத்தைப்போல செழிக்கும் போதும், அவர்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்போதும் மற்றவர்களுக்கு பொல்லாங்கும் கெடுதலும் செய்கிறவர்களுக்கு தீங்கு எதுவும் நேரிடாதபோதும் நாம் ஆண்டவரிடம் கேள்வி கேட்கிறோம். ஆனால் ஆண்டவர் களைகள் முழுமையாக வளரும்வரைக்கும் அனுமதிக்கிறார். தேவ நியாயத்தீர்ப்பு வரும்போது நீதிமான் சமாதானத்துடன் இருக்கிறான். அப்பொழுது பொல்லாங்கனை தேடினாலும் காணப்பட மாட்டான். இதை அறிந்த ஆண்டவர் களைகளை முழுமையாக வளரும்படி அனுமதிக்கிறார்.

இன்னொரு காரணமென்னவெனில், ஒரே நிலத்தில் வளரும் கோதுமை செடியின் வேரும் களையின் வேரும் மண்ணிற்கடியில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கும். களைகளைப் பிடுங்க நாம் முற்படும் போது ஒருவேளை கோதுமை செடியின் வேர்களும் அறுந்துவிட வாய்ப்புகள் உண்டு. அதினால்தான், வேலைக்காரர்களிடம் அந்த எஜமான்: “களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான்”. ஆகவே துன்மார்க்கரை நியாயம் தீர்க்கிற ஒரு காலமுண்டு. ராஜ்ஜியத்தில் சகல இடறல்களையும் அக்கிரமத்தையும் செய்கிற அனைவரையும் அக்கினிசூளையில் போடும் காலம் வரப்போகிறது. அங்கே அவர்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

இந்த முடிவு எப்போது சம்பவிக்கும் என்று நாம் கேட்கலாம். அவரின் வருகையின்போது இவைகள் சம்பவிக்கும். இதை இயேசுகிறிஸ்து இந்த உவமையை விளக்கும்போது இவ்வாறு விளக்கினார்:

“ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்.

இதை வாசிக்கும் அருமையானவர்களே, ஒரு முடிவு உண்டு, ஒரு நியாயத்தீர்ப்பு உண்டு, ஆளுகைக்குரிய ஒரு திட்டமும் அவரிடத்தில் உண்டு.

தோட்டத்து வேலைக்காரர்கள்

தோட்டத்து வேலைக்காரரிடத்திலும் சில குறைபாடுகளைப் பார்க்கிறோம். இவ்வாறு களைகள் வளருவதற்கு இவர்களும் காரணமாயிருந்தனர். முதலாவது, நிலத்திலே நல்ல விதைகளை விதைத்த வேலைக்காரர்கள் விழித்திருந்து நிலத்தைப் பாதுகாக்க தவறி அயர்ந்து நித்திரை செய்துகொண்டிருந்தார்கள். அந்த தருணத்தை சத்துருவாகிய பிசாசானவன் பயன்படுத்தி நல்ல விதைகள் விதைக்கப்பட்ட அந்த நிலத்திலே தனது களைகளை விதைத்துவிட்டான். இதை அவர்கள் அறியாதிருந்தார்கள். இதே தவறை நாமும் செய்கிறோமல்லவா? அநேகவேளைகளில் விழித்திருக்க வேண்டிய நாம் ஜாக்கிரதையாயிராமல் அசதியாக இருந்துவிடுகிறோம். அந்த வேளையில்தான் சத்துரு நமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ நமது குடும்பங்களிலோ ஆண்டவருடைய பணியிலோ பல பொல்லாத பிரச்சனைகளை கொண்டுவருகிறான். “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” (எபே.5:14).

இரண்டாவது, அந்த வேலைக்காரர்கள் அங்கலாய்க்கிறவர்களாயிருந்தார்கள். “நாம் நல்ல விதையைத் தான் விதைத்தோம், ஆனால் களைகள் எப்படி உண்டானது” என்று அங்கலாய்த்தார்கள். இதைப்போலவே நாமும் அங்கலாய்க்கிறோம், கேள்வி கேட்கிறோம். நான் உண்மையாய் வாழ்ந்தேன், திட்டமிட்டேன், எப்படி இந்த இழப்புகளும் கஷ்டங்களும் வேதனைகளும் வந்தது என்று அங்கலாய்கிறோம் அல்லவா. அருமையானவர்களே, நாம் தூங்கும்போது சத்துரு இதை செய்தான்.

நமது அங்கலாய்ப்பையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். எனவே நாம் ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்க வேண்டும். “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்” (மத்.26:41).

மூன்றாவதாக, இந்த வேலைக்காரர்கள் அவசரப்படுகிறவர்களாய் இருந்தார்கள். எப்படியாயினும் அந்த களைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று விரும்பினர். ஆனால் அந்த எஜமானோ அவர்களிடம், அறுப்பு மட்டும் களைகளும் சேர்ந்து வளரட்டும், அதுவரைக்கும் காத்திருங்கள் என்று புத்திமதி சொல்லுகிறார். நாமும் இதைப்போலவே உடனடியாகவே நியாயத்தீர்ப்பு வேண்டும், உடனடியாக தீமையைச் சரிகட்ட வேண்டும் என்று நினைக்கிறோம். அநேக வேளைகளில் நமது நிதானத்தை இழந்து அவசரப்படுகிறோம். வெளித்தோற்றத்தின்படி தீர்ப்புச் சொல்ல முற்படுகிறோம்.

“நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்” (நீதி.14:2) என்று வேதத்தில் வாசிக்கிறோம். எனவே நாமும் அறுப்பு காலம்வரைக்கும் காத்திருப்போம்.