Dr.தியோடர்.எச்.எஃப்
(ஜனவரி-பிப்ரவரி 2013)

மகா பரிசுத்த ஸ்தலம்

உடன்படிக்கைப் பெட்டியின் உள்ளே இருந்த பொருட்கள்

உடன்படிக்கைப் பெட்டியின் உள்ளே இருந்த பொருட்கள் உண்மையில் கிறிஸ்து யார்? என்பதைக் காட்டிற்று. அவர் யார்? என்பதன் மூலமாகத்தான் அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் தரமுடிகிறது. அவர் நமக்குப் பல ஆசீர்வாதங்களைத் தருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அவரே நமக்கு ஆசீர்வாதமாகவும் இருக்கிறார்.

உதாரணமாக விசுவாசிக்குக் கிறிஸ்து நீதியைத் தருவது மட்டுமல்ல, அவரே நீதியாகவும் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று விசுவாசித்தவர்களை தேவன் பார்க்கும்போது, அவர்கள் கிறிஸ்துவில் நீதியாயிருப்பதை தேவன் காண்கிறார். மேலும் கிறிஸ்து விசுவாசிக்குச் சமாதானம் தருவது மட்டுமல்ல, அவரே சமாதானமாகவும் இருக்கிறார். அவர் ஜீவ அப்பத்தைத் தருவது மட்டுமல்ல, அவரே ஜீவ அப்பமாகவும் இருக்கிறார்.

அவர் ஞானத்தைத் தருவது மட்டுமல்ல, அவரே ஞானமாகவும் இருக்கிறார். இவற்றிலிருந்து கிறிஸ்து நமக்குத் தருபவை பிரிக்க முடியாதபடி அவரிலேயே அமைந்திருக்கின்றன என்பதை அறிகிறோம். கிறிஸ்துவின் ஆளத்துவத்தைக் குறிக்கும் உடன்படிக்கைப் பெட்டியினுள் மூன்று பொருட்கள் இருந்தன.

  • மன்னா இருந்த பொன் கிண்ணம்.
  • துளிர்த்த ஆரோனின் கோல்.
  • உடையாத கற்பனைப் பலகைகள்.

இஸ்ரவேலர் மன்னாவைச் சேகரித்து ஒரு நாளைவிடக் கூடுதலான நேரம் வைத்திருந்தபோது அது கெட்டுவிட்டது. ஆனால் உடன்படிக்கைப் பெட்டியில் ஒரு பொன் கிண்ணத்தில் வைக்கப்படும் மன்னா கெட்டுப்போகாதபடி தேவன் செய்தார். “கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி, ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்” (யாத்.16:34). “அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன” (எபி.9:4).

மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம்

வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் உயிரைக் காக்க உணவாக மன்னா பயன்பட்டது. அது போலவே உலகில் நமது மாம்ச சரீரம் காக்கப்படும்படி கிறிஸ்து நமக்கு மன்னாவாக இருக்கிறார். தமக்குச் சொந்தமானவர்களைப் பாதுகாக்கும் கிறிஸ்துவின் தன்மையை இது காட்டுகிறது. யோவான் 6ஆம் அதிகாரத்தில் இயேசு “ஜீவஅப்பம் நானே” என்று வலியுறுத்தினார். வனாந்தரத்தில் வானத்திலிருந்து கொடுக்கப்பட்ட மன்னாவைப் புசித்த அனைவரும் மரித்துப்போனார்கள். ஆனால், இயேசு என்னும் அப்பத்தைப் புசித்தவர்கள் ஒருபோதும் மரிப்பதில்லை. அதுபோலவே, உடன்படிக்கைப் பெட்டியிலிருந்த மன்னாவும், ‘கிறிஸ்து ஜீவன் கொடுப்பவரும், பாதுகாப்பவரும்’ என்று காட்டுகிறது. இயேசுகிறிஸ்து ஒரு தீர்க்கதரிசி, ஆசாரியர், இராஜா என்று அறிவோம். இவற்றில் உடன்படிக்கைப் பெட்டியில் இருக்கும் மன்னா ‘இயேசு ஒரு தீர்க்கதரிசி’ என்பதைக் காட்டுகிறது. ஒரு தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதை மக்களுக்குத் தெரிவிப்பவர். யோவான் 6ஆம் அதிகாரத்தில் இயேசு சாப்பிடப் படவேண்டிய வார்த்தை என்று கூறப்பட்டுள்ளது. மன்னா சாப்பிடுவதைப் போல் வார்த்தையாகிய கிறிஸ்துவும் சாப்பிடப் படவேண்டும். மன்னாவானது மாம்ச சரீரத்தைப் பாதுகாக்கப் புசிக்கப்பட்டது. ஆனால் நித்தியஜீவனைப் பாதுகாப்பவர் கிறிஸ்து (வச.58,63).

ஆரோனின் தளிர்த்த கோல்

உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அடுத்தபொருள் “ஆரோனின் தளிர்த்த கோல்” (எபி.9:4) ஆரோன் ஒரு பிரதான ஆசாரியனாய் இருந்தபடியால், அவர் மக்களின் பிரதிநிதியாக தேவனிடத்தில் செல்வார். இந்தக் கோல் கிறிஸ்துவைக் குறிக்கிறது. கிறிஸ்து நமது பிரதான ஆசாரியர். அவர் நமக்குப் பிரதிநிதியாகப் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நிற்கிறார்.

எண்ணாகமம் 17ஆம் அதிகாரத்தில் ஆரோனின் அதிகாரம் குறித்து சர்ச்சை ஏற்பட்டபோது, தேவன் ஆரோனின் கோலைத் துளிர்த்து பூக்கச் செய்தார். இதன்மூலம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர், அதிகாரம் பொருந்தியவர் ஆரோனும், அவனுடைய சந்ததியாரும் என்பது நிரூபிக்கப்பட்டது. ‘கிறிஸ்து நமது பிரதான ஆசாரியர்’ என்று காட்டும் இந்தக் கோல் உடன்படிக்கைப் பெட்டியினுள் வைக்கப்பட்டது.

உடைக்கப்படாத கற்பனைப் பலகைகள்

உடன்படிக்கைப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த இன்னொரு பொருள் கற்பனைப் பலகைகள் இரண்டு. மோசே முதலில் தேவனிடமிருந்து பெற்ற கற்பனைப் பலகைகள் இரண்டையும், கீழே இஸ்ரவேல் மக்கள் விக்கிரகாராதனை செய்துகொண்டிருப்பதைக் கண்டதும், தூக்கி எறிந்து உடைத்துப் போட்டார் (யாத்.32:19). எனினும் தேவன் மோசேயிடம், “நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக” என்றார் (உபா.10:2).

முதலில் உடைக்கப்பட்ட கற்பனைப் பலகைகள் மனிதன் திரும்பத்திரும்ப கற்பனைகளை மீறுவதைக் குறிக்கிறது. மனித இனம் தேவனுடைய பார்வையில் முற்றிலும் பாவிகளே. ரோம.3:23 “எல்லாரும் பாவஞ் செய்து, தேவ மகிமையற்றவர்களாகி…..” என்று பார்க்கிறோம். மேலும் வேதம் கூறுவது, “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை” (வச.10,11,12).

மோசே செய்த இரண்டாவது ஜோடி கற்பனைப் பலகைகளும் கிறிஸ்துவைக் குறிக்கின்றன. இவர் உலகத்துக்கு வந்தபோது நியாயப்பிரமாணத்தை மீறவில்லை. கற்பனைகள் எதையும் மீறவில்லை. அவர் உலகில் மக்கள் மத்தியில் வாழ வந்தார். அவர் எல்லாவற்றுக்கும் ஆண்டவராய் இருக்கிறபடியால், இவைகள் அவரை இராஜாவாக்கின.

இந்த இரண்டாவது கற்பனைப் பலகைகள் தவறுகள் செய்துகொண்டிருக்கும் மக்கள் மத்தியில் உடைக்கப்படாத, மீறப்படாத கற்பனையாயிருக்கின்றன. தேவனுடைய நீதியான கட்டளைகள் அவைகளில் காணப்படுகின்றன. தேவனுடைய கட்டளைகள் சற்றேனும் தளர்த்தப்பட முடியாதவை. எனவே அவை உடன்படிக்கைப் பெட்டியினுள் வைக்கப்பட்டன. இது இஸ்ரவேலருக்கு ஒரு நினைவுச் சின்னம். மேலும் இந்தக் கற்பனைப் பலகைகள் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப் பட்டிருக்கிறது என்பது தேவனுடைய நீதியை தேவன் பாதுகாக்கிறார் என்று காட்டுகிறது.

மனிதன் தேவனுடைய நீதிநெறியைத் தன்னுடைய நீதியோடு பொருந்துமாறு மாற்றுவதுண்டு. ஆனால் அது வேலை செய்வதில்லை. தேவனுடைய கட்டளைகள் யாவும் புதிய கற்பனைகளில் உள்ளன. அவர் அவைகளை எப்பொழுதுமே மாற்றவிடுவதில்லை. கற்பனைகளை அனுசரிப்பதால்மட்டும் எவனுமே இரட்சிக்கப்படுவதில்லை. ஏனெனில் எவராலும் கற்பனைகளைப் பூரணமாகப் பின்பற்ற முடிவதில்லை. யாக்கோபு 2:10 இல், “…ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்” என்று கூறப்பட்டுள்ளது.

எனவே கற்பனைகள், தேவனுடைய பரிபூரணமான நீதியைக் குறிக்கின்றன. அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பையும், ஆளுகையையும் காட்டுகின்றன. கிறிஸ்துவே தேவனுடைய நீதியாய் இருக்கிறார்.

எபி.12:14 இல் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது என்று பார்க்கிறோம். எந்த ஒரு மனிதனாலும் தன் சுய முயற்சியினால் தேவனுடைய பரிசுத்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவன் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம், அவரைத் தன் இரட்சகராய் ஏற்றுக் கொள்வதன் மூலம் தேவனுடைய பரிசுத்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்விதமாக ஒரு மனுஷன் மறுபிறப்படைவதன் மூலம் தேவனுடைய பரிசுத்தத்தை அடைந்து, ஒருநாளில் தேவனுடைய சமுகத்தை அடைய முடியும்.

கிருபாசனம்

மகாபரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் உடன் படிக்கைப் பெட்டியின் மேல்பாகத்தில் கிருபாசனம் அமைந்துள்ளது. தேவன் மோசேயிடம் இது குறித்து இவ்வாறு கூறினார்: “பசும் பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக” (யாத்.25:17,18).

மேலும் தேவன் தொடர்ந்து கூறியது: “கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின் மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்” (வச. 21, 22).

சுத்தப் பொன்னினால் செய்யப்பட்ட கிருபாசனம் தேவனுடைய சிங்காசனத்தைக் காட்டிற்று. பாவிகளான மக்கள் மத்தியில் தேவன் வாசம் செய்யப்போகிறார். உடன்படிக்கைப் பெட்டியின் மீது இந்தக் கிருபாசனம் வைக்கப்பட்டிருப்பது, தேவனுடைய நீதியும், கட்டளைகளும் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும். உடன்படிக்கைப் பெட்டியை மூடத் தம்மால் ஆகும் என்பதே. அங்கிருந்து தேவன் இரக்கம் காட்டுவார்.

மனிதன் தேவனுடைய கட்டளையை மீறிய இந்தப் பெரிய பாவத்தை மூட தேவனால் முடியும். அதன்மூலம் அவரால் நம்மீது இரக்கம் காட்டவும் முடியும். தேவன் நீதியுள்ளவரும், நியாயம் உள்ளவருமாய் இருக்கவேண்டும். ஆனால் அவர்தம் கட்டளையினின்று இறங்கவும் கூடாது. கிருபாசனத்தின்மீது பலியின் இரத்தம் தெளிக்கப்படும் போது அவரால் இரக்கம் காட்ட முடியும்.

வருடத்துக்கு ஒருமுறை, ஈடேற்ற நாளில், பிரதான ஆசாரியன், மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசித்து, பலியின் இரத்தத்தைக் கிருபாசனத்தின் மீது தெளிப்பார். இதன்மூலம் மக்கள் அனைவருடைய பாவமும் ஒருவருட காலத்துக்கு மூடிவைக்கப்பட முடியும்.

புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுகிறது. “அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்ய மாட்டாதே”. “இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாத படியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்” (எபிரெயர் 10:3,4,12,13).

இரத்தஞ் சிந்துதலும், இரத்தம் தெளித்தலும் தேவன் நீதியுள்ளவராயிருக்கத் தேவையாயிருந்தது. “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:26).

இரத்தஞ் சிந்துதலின் முக்கியத்துவமும், அவசியமும் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது. யாத்திராகமம் 12 ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேலர் விடுதலை யாவதற்கு முந்தின இரவு தங்கள் வாசல் நிலைகளில் இரத்தத்தைப் பூசிக்கொண்டு சங்காரத் தூதன் கடந்து செல்வதற்காகப் படபடப்புடன் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களுடைய வீட்டு நிலைகளில் தெளிக்கப்பட்டிருந்தது. இதனால் இஸ்ரவேலர் மீட்கப்பட்டார்கள். “இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22).

தேவன் பாவியாகிய ஒரு மனிதனைத் தம்முடைய பரிபூரண நீதி, பரிபூரண கிருபை இவற்றின் அடிப்படையில்தான் சந்திக்க முடியும். இவை இரண்டும் சாதாரணமாகச் சந்திக்கக்கூடிய ஒரு பொது இடம் வேண்டும். இவை இரண்டும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் சந்தித்தன. பழைய ஏற்பாட்டுக்காலக் காணிக்கைகள் கிறிஸ்துவின் சிலுவையைச் சுட்டிக்காட்டின. பழைய ஏற்பாட்டுக் காணிக்கைகளும், பலிகளும் மனிதனுடைய பாவங்களைத் தற்காலிகமாகத்தான் மூடி மறைக்க முடிந்தது. தேவன் மனிதர்களைக் கவனிக்க, அவை சிலுவையைச் சுட்டிக் காட்டின. இயேசுகிறிஸ்து சிலுவையில் பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்து, இரத்தம் சிந்தி, மரணத்தை அனுபவித்ததன் மூலம் பாவம் மனிதனைவிட்டு தூர விரட்டியடிக்கப் பட்டது. இது நிரந்தரமாக மனிதனுக்கு பாவத்திலிருந்து விடுதலையைத் தந்தது.

இயேசுகிறிஸ்து தமது வாழ்க்கையின்போது கற்பனைகளை உயர்த்திக்காட்டினார். அவற்றுக்குப் பூரணமாகக் கீழ்ப்படிந்து அவற்றைக் கனப்படுத்தினார். அவர் தமது மரணத்தின் மூலம் தேவன் மனிதகுலம் மீது இரக்கம்கொள்ள வைத்தார். இந்தக் கருத்தின்படி நம்முடைய கிருபாசனம் இயேசு கிறிஸ்துவே. ஏனெனில் நாம் அவருடைய நீதியையும், கிருபையையும் பெறவேண்டுமானால் சிலுவையின் வழியாக நாம் வர வேண்டும். இரட்சிக்கப்பட ஒரேஒரு வழி மட்டுமே உண்டு என்பதைச் சிலர் ஆட்சேபிப்பார்கள். ஆனால் உண்மையில் இரட்சிக்கப்பட ஒரேஒரு வழிதான் உண்டு. இயேசு கிறிஸ்துவே அந்த ஒரே வழி!

கிருபாசனம் சுத்தமான தங்கப்பாளத்திலிருந்து செய்யப்பட்டது. கிருபாசனம் ஒரு தனிப்பொருள். எனினும் அது உடன்படிக்கைப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டு, அதற்கு மூடியாக அமைந்தது. கிருபாசனத்தில் மரப் பாகமே இல்லை. அது தனியாகப் பொன்னினால் செய்யப்பட்டது. இது சர்வ வல்ல தேவனின் சிங்காசனமாகப் பயன்படுகிறது.

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மனிதர் மத்தியில் வாசம்செய்ய மாம்ச சரீரத்தை ஏற்குமுன் கிருபாசனம் கிறிஸ்துவைக் குறித்தது. யோவான் 1:1,2 வசனங்களில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் இருந்த அவரது நிலை கூறப்பட்டுள்ளது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்”. ‘வார்த்தை’ என்னும் சொல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்தது. “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” இந்த வசனத்திலிருந்து அந்த வார்த்தை இயேசுகிறிஸ்துவே என்பது தெளிவாகிறது.

கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும், இரண்டு கேருபீன்கள் உண்டு. அவை ஒரே பொன் தகட்டால் செய்யப்பட்டவை. இந்தக் கேருபீன்கள் தங்கள் இறக்கைகளை விரித்துக் கொண்டு, கிருபாசனத்தை மூடிக்கொண்டிருந்தன. அவை தேவனுடைய மாசு மருவற்ற பரிசுத்தத் தன்மையைப் பாதுகாக்கின்றன. கிருபாசனத்தின்மேல் தேவன் பாவிகளான மக்கள் மத்தியில் வாசமாயிருக்கிறார்.

மொழியாக்கம்: Mr.G.வில்சன்